சனநாயகத்தின் ஆணிவேரை சந்தர்ப்பவாதம் அழிக்கும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2019 12:24

"நாட்டின் சனநாயகத்திற்கு அரசியல் சாசனமே வழிகாட்டியாக விளங்குகிறது. உலகின் மிகப்பெரும் சனநாயக நாடாக நமது நாடு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் அடிப்படைச் சட்டமாக அது திகழ்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் உயர் நெறிமுறைகளை வழுவாது நாம் பின்பற்றவேண்டும். ஒருபோதும் அதிலிருந்து விலகிச் செல்லக் கூடாது” என இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருக்கிறார்.
அதே கூட்டத்தில் உரையாற்றிய தலைமையமைச்சர் மோடி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்- "இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டின் புனித நூலாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் ஆகிய இரண்டுக்கும் சம அளவு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் யாப்பு அவையில் கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள்  இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம்  நாள் அரசியல் சாசன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவரும், தலைமையமைச்சரும் அரசியல் சட்டத்தின் மாண்புகளை விளக்கிக் கூறியதோடு அதிலிருந்து ஒருபோதும் நாம் விலகிச் செல்லக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நவம்பர் 22ஆம் தேதியன்று நள்ளிரவில் மராட்டிய மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மேற்கண்ட இருவரின் பேச்சுக்களுக்கு நேர் எதிரிடையாக அமைந்துவிட்டன. அம்மாநிலத்தில் 23ஆம் நாள் அன்று விடிவதற்கு முன் காலை 5.30 மணியளவில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் மிக விரைவாக நடைபெற்றன. அன்று காலை 7 மணிக்கு மிக இரகசியமான முறையில் பா.ஜ.க. தலைவர் பட்னாவிசை முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித்பவாரை துணை முதல்வராகவும் பதவியேற்பு நிகழ்ச்சியினை ஆளுநர் பகத்சிங் கோசியாரி நடத்தி வைக்கிறார்.
துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவார் கடந்த காலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் துணை முதல்வராக  இருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பட்னாவிஸ் அவர் மீது  அடுக்கடுக்கான ஊழல் புகார்களை எழுப்பி பதவி விலக வைத்தார்.
கடந்த காலத்தில் மராட்டியத்தில் காங்கிரசு - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித்பவார் துணை முதல்வராகவும், நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் இருந்தபோது, நீர்ப்பாசனத் துறையில் 30ஆயிரம் கோடிக்குமேல் ஊழல் செய்திருப்பதாக அஜித்பவார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க.வினால் எழுப்பப்பட்டன. அஜித்பவார் மீது 2 குற்ற வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மராட்டிய மாநிலக் கூட்டுறவு வங்கியில் 25ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டிருப்பதாக அஜித்பவார் மீதும், அந்த வங்கியின் 70க்கும்  மேற்பட்ட பொறுப்பாளர்கள் மீதும் மும்பை பொருளாதார குற்றங்களுக்காக காவல் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஆணையின்பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டது.
பதவியேற்ற முதல்வர் பட்னாவிஸ் தேசியவாத காங்கிரசின் 54 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், எனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகவும்  அறிவிக்கிறார். உடனடியாக அஜித்பவார் மீதுள்ள வழக்குகளும் கைவிடப்படுகின்றன.
நவம்பர் 22ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 23ஆம் தேதி அதிகாலையில் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு வரை ஆளுநரின் நடவடிக்கைகள் பெரும் ஐயத்திற்கு இடமாக உள்ளன. இந்த நடவடிக்கைகள் எதுவும் அரசியல் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றிச் செய்யப்படவில்லை. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர்  ஆட்சி அகற்றப்படவேண்டுமானால் மாநில ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் மூலம் அதைத்  தெரிவிக்க வேண்டும். அதற்குப் பின் மத்திய அமைச்சரவை கூடி குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்வதற்குரிய தீர்மானத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். அவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். அதற்குப் பின் அரசு கெசட்டில் அது அறிவிக்கப்பட வேண்டும். இத்தனை சடங்குகளும் நடைபெற்ற பிறகே குடியரசுத் தலைவர் ஆட்சி அம்மாநிலத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படவேண்டும். மேற்கண்ட அரசியல் சட்டப்பூர்வமான சனநாயகக் கடமைகளில் எதுவும் பின்பற்றப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  
இந்தப் பிரச்சனையைத் தனது பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் இவ்வாறு செய்தது அரசியல் சட்டத்தை மீறியதாகும் எனக் கண்டனம் செய்யுமானால், மிகப்பெரிய அரசியல் சட்டரீதியான நெருக்கடி உருவாகும். மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக் குரியதாகிவிடும். இவற்றையெல்லாம் பற்றி ஆளுநரோ, உள்துறை அமைச்சரோ, தலைமையமைச்சரோ சிந்தித்ததாகத் தெரியவில்லை.  அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்வதற்குப் பதில் அரசு நிர்வாக விதிமுறைகள் 12இன்கீழ் இந்த நடவடிக்கையை மத்திய அரசு  மேற்கொண்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் அரசியல் சட்ட விதிமுறைகளையும், சட்டமன்ற மரபுகளையும் புறக்கணித்துவிட்டு பா.ஜ.க. செயல்பட்டுள்ளது. இவ்வாறு செயல்படுவது இது முதன்முறையல்ல.பல மாநிலங்களில் இத்தகைய அரசியல் சட்டத்திற்குப் புறம்பான முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு சூலை 26ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகினார். கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த அமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீது எழுந்த ஊழல் புகார்களின் விளைவாக அவர் பதவி விலக மறுத்ததையொட்டி முதல்வர் பதவி விலகினார். இரவு 9.30 மணிக்கு பீகார் சட்டமன்ற பா.ஜ.க. கட்சித் தலைவரான சுசில் மோடி, நிதிஷ்குமாருக்கு ஆதரவு தருவதாகக் கடிதம் அளிக்கிறார். அதையேற்று அம்மாநில ஆளுநர் அதிகாலை 1.00 மணிக்கு முதல்வர் பதவி ஏற்கும்படி நிதிஷ்குமாரை அழைக்கிறார். பா.ஜ.க. கூட்டணியின் ஆதரவுடன் அவரின் ஆட்சி தொடர்கிறது. இதைப்போலவே கர்நாடகம், கோவா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது.  
அரசியல் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளும், சனநாயக மரபுகளும், அரசியல் கட்சிகளால் மதிக்கப்படாமல் துச்சமாகக் கருதப்பட்டு தூக்கியெறியப்படுமானால், சனநாயகம் நிலைக்காது. அதுமட்டுமல்ல, கொள்கை, கோட்பாடு ஆகியவற்றையும் கட்சிகள் மதித்துப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. மராட்டிய மாநிலத் தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனையும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து எதிர்த்துப் போட்டியிட்டன. இருதரப்பினரும் மக்களிடையே ஒருவரை மற்றொருவர் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்தனர்.  
ஆனால், முதல்வர் பதவியை பங்கிட்டுக்கொள்வதில் பா.ஜ.க.விற்கும், சிவசேனைக்கும் இடையே எழுந்த முரண்பாட்டின் விளைவாக அக்கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. கொள்கை  ரீதியாக எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தேசியவாத  காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேரம் பேசி புதிய கூட்டணி அமைக்கப்பட்டது. சட்டமன்ற தேசியவாத காங்கிரசின் தலைவர் அஜித்பவாரைத் தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்து அதற்கு ஆளுநரும், மத்திய அரசும், துணை நின்று ஆட்சி அமைக்க உதவினார்கள். மேலும், பல சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை நிலைநிறுத்த பா.ஜ.க. செய்த முயற்சிகள் உச்சநீதிமன்றத் தலையீட்டின் விளைவாக வெற்றிபெறவில்லை. பதவியேற்ற முதல்வரும், துணை முதல்வரும் இரண்டே நாட்களில் பதவி விலக நேர்ந்திருக்கிறது.
 சிவசேனை கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்த்துப் போராடிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைப்பது என்பது கொள்கை கோட்பாடு குறித்து இவர்களுக்குக் கவலை இல்லை என்பதையும், எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற பதவி வெறியையும் எடுத்துக்காட்டுகின்றன. பா.ஜ.க.வுடன் கொள்கை ரீதியாக கூட்டுச் சேர்ந்திருந்த சிவசேனை முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை முறித்துவிட்டு முற்றிலும் எதிரான கோட்பாடு கொண்ட கட்சிகளின் தயவுடன் முதலமைச்சராகியிருப்பது சனநாயக வெட்கக்கேடாகும்.
மராட்டிய மாநிலத்தில் இருதரப்பினருமே சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகிறார்கள் என்பது அம்பலமாகியிருக்கிறது. சனநாயகத்தின் ஆணிவேரையே சந்தர்ப்பவாதம் அழித்துவிடும். அங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் எல்லா கட்சிகளிலும் சந்தர்ப்பவாதம் தலைதூக்கி நிற்கிறது. பதவி பங்கீட்டுக் கூட்டணிகள் அமைக்கப் படுகின்றனவே தவிர, கொள்கை வழி கூட்டணிகள் ஒருபோதும் அமைக்கப்படுவதில்லை. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பின் மற்றொரு கூட்டணி என்ற தத்துவத்தையே கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. பதவி வெறிக் கட்சிகளை ஆட்டிப்படைக்கிறது.
சனநாயகத்தைக் கட்டிக் காக்கவும், நிலை நிறுத்தவுமே அரசியல் சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், கடந்த 70ஆண்டுகளில் எத்தனை கட்சிகள் இந்த உன்னதமான நோக்கத்தை நிலை நிறுத்துவதற்கு ஒத்துழைத்திருக்கின்றன என்பதை ஆராய்வோமானால் ஏமாற்றம்தான் நமக்கு மிஞ்சும். காங்கிரசு கட்சியும்,  ஜனதா தளமும் மத்திய  ஆட்சியில் அமர்ந்திருந்த போதும் தங்கள் கட்சிகளின் நலனுக்காக சனநாயகத்தின் கழுத்தை  நெறிக்க அவர்கள் தயங்கவில்லை. மாற்றுக் கட்சிகள் ஆண்ட மாநிலங்களில் அரசுகளை நீக்குவதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவுவதற்கும் அவர்கள் ஒருபோதும் தயங்கவில்லை. அக்கட்சிகளிலிருந்து முற்றிலும்  வேறுபட்ட கட்சியாகத் தன்னை கூறிக்கொள்ளும் பா.ஜ.க.வும் அதே பாதையைத்தான் பின்பற்றுகிறது. மாநிலக் கட்சிகளும் தங்களது ஆட்சிகளைக் காப்பாற்றுவதற்கு மேற்கண்ட அகில இந்திய கட்சிகளுடன் மாறிமாறி கூட்டுச் சேர்கின்றன. கொள்கை, கோட்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. சனநாயகப் பாதையிலிருந்து நாடு சிறிது சிறிதாகத் தடம்  புரண்டு சென்று கொண்டிருக்கிறது.   
- நன்றி - தினமணி.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.