தீர்மானம்-1 புதிய அரசியல் யாப்பு அவை 1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு 70-ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்கிடையில் 125 முறை அரசியல் சட்டம் திருத்தப்பட்டு விட்டது. இன்னும் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இந்த திருத்தங்களின் மூலம் இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி முறையே முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது. மாநிலங்களின் உரிமைகள் பல பறிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மேலும் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி அரசு என்பது அடியோடு மாற்றப்பட்டு வலிமையான ஒற்றை அரசு என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. எனவே அனைத்து தேசிய இனங்களுக்கும் சம பிரதிநிதித்துவம் உள்ள வகையில் புதிய அரசியல் யாப்பு அவை ஒன்றினை அமைத்து கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தக் கூடிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம்-2 தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி உலகத்தமிழ் அறிஞர்களின் நீண்டகால கனவுத்திட்டமான தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு 38 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் எத்தகைய நோக்கத்திற்காக தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டுமென தமிழறிஞர்கள் விரும்பினார்களோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உருவாக வேண்டிய இப்பல்கலைக் கழகம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமாகச் சுருங்கிப்போயிற்று. இந்நிலை அடியோடு மாற்றப்பட வேண்டும். உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக இது செயல்படவேண்டும். உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அங்கம் வகிக்கும் வகையில் இதன் ஆட்சிக்குழு திருத்தியமைக்கப்படவேண்டும். இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர்கள் ஆகியோரின் தேர்விலும், நியமனத்திலும் உலகத் தமிழறிஞர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி முதல் பேராசிரியர் பதவி வரை பொறுப்பேற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது. அப்பொழுதுதான் உலகத் தமிழர்களுக்கு உரிமையான பல்கலைக்கழகமாக இது திகழமுடியும். தமிழுக்கு என்றே அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் பிற பல்கலைக்கழகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனவே, இதற்கு சிறப்புநிலைப் பல்கலைக்கழகம் என்ற உயர் தகுதி வழங்கப்படவேண்டும். அதற்கான வகையில் உரிய சட்டம் கொண்டுவரப்படவேண்டும். மேலும், இதற்கான நிதியினை தமிழக அரசு, இந்திய அரசு ஆகியவை அளிக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது. தீர்மானம்-3 தேசியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு இந்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கும் தேசியக் குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கே எதிரானதாகும். நாட்டின் குடிமக்களை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்துவதாகும். இதற்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்கு அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீவிரமாகப் போராடி வருகின்றனர். பாகிசுதான், வங்கதேசம், ஆப்கானிசுதான் ஆகிய மூன்று அண்டை மாநிலங்களிலிருந்து இந்தியாவில் குடியேற வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்கள், பார்சிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்திய குடியுரிமை அளிக்கப்படும். முசுலிம்களுக்கு அளிக்கப்படாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். உலகில் எந்த நாட்டிலிருந்தும் வரும் யூதர்களுக்கு இசுரேல் நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் உள்ளது. அதை அப்படியே பின்பற்றி பா.ஜ.க. அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து வரும் முசுலிம்களை தடுப்பது மட்டுமே இச்சட்டத்தின் நோக்கமல்ல. மாறாக, இந்திய குடிமக்களாக உள்ள முசுலிம்களையும் நாளடைவில் அந்நியப்படுத்துவதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக மாற்றி இந்துசுதான் என்ற பெயரைச் சூட்டவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கையாகும். அந்தக் கொள்கையை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தேசியக் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பல்வேறு மொழிவழித் தேசிய இன மக்கள், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கூடி வாழும் நாடாக இந்தியா திகழவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் அமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டது. அந்தச் சட்டத்தைத் தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை பா.ச.க. அரசு மேற்கொண்டு வருகிறது. காசுமீர் மாநிலத்தின் சிறப்பு உரிமைகளைப் பறித்த 370ஆவது பிரிவு திருத்தச் சட்டமும், அதைத் தொடர்ந்து இப்போது இந்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் இந்தச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் இணைந்துப் போராட முன்வருமாறு இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது. தீர்மானம்-4 ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் பல்வேறு காரணங்களினால் வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்திருப்பவர்கள் அகதிகள் என அழைக்கப்படுகிறார்கள். உயிர் தப்புவதற்காக இவ்வாறு வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுப்பது மனிதநேயமற்றது. இவ்வாறு வரும் அகதிகளைப் பேணவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கும் ஐ.நா. அகதிகள் ஆணையகம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் இவ்வாறு தாய்நாட்டைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்களுக்குத் தேவையான குடியிருப்பு, வாழ்க்கைச் செலவு, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற எல்லாவற்றுக்கும் அகதிகள் ஆணையம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அவர்களுக்கான முழுச் செலவையும் அது செய்கிறது. ஆனால், ஐ.நா. அகதிகள் ஆணையப் பட்டயத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கக் கூடிய பல்வேறு நாட்டு அகதிகளைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரும் சுமையை தாங்க முடியாத நிலைமையில் பெயரளவுக்கு ஏதோ உதவியை இந்திய அரசு செய்கிறது. புலம்பெயர்ந்து வருபவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் வரையிலும் மட்டுமல்ல, மீண்டும் அவர்களின் தாய்நாட்டில் குடியேற்றுவதற்கும் ஐ.நா. அகதிகள் ஆணையம் உதவுகிறது. உலகெங்கும் உள்ள அகதிகள் அனைவருக்கும் இந்த அமைப்புதான் வேண்டுவனவற்றை செய்து உதவுகிறது. இந்த அமைப்பிடம் இவர்களை ஒப்படைத்தால் இந்திய அரசு செய்வதைவிட பல மடங்கு அதிகமான உதவியை செய்வதற்கு ஐ.நா. ஆணையம் தயாராக உள்ளது. ஆனால், இந்திய அரசு பிடிவாதமாக இதை ஏற்க மறுக்கிறது. அதைபோலவே, இரட்டைக் குடியுரிமை அளிக்கும் கோட்பாட்டினை ஏற்பதற்கும் இந்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது. உலகில் 70 நாடுகளுக்கு மேல் இரட்டைக் குடியுரிமை வழங்குகின்றன. மேலும், பல நாடுகள் வழங்க உள்ளன. 2002ஆம் ஆண்டில் தலைமையமைச்சராக இருந்த வாஜ்பாய் அவர்கள் "இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் தங்களின் தாய் நாட்டிற்கும், தஞ்சம் புகுந்த நாட்டிற்கும் உண்மையாக இருக்கக்கூடிய கோட்பாட்டினை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்று கூறினார். இது தொடர்பாக ஆராய்வதற்கு உயர்நிலைக் குழு ஒன்றினையும் அவர் அமைத்தார். இந்தியாவிலும் இரட்டைக் குடியுரிமை அளிக்கலாம் என அந்தக் குழுப் பரிந்துரை செய்தது. இதை ஏற்பதாக இந்திய அரசும் அறிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு என்ன ஆனது? என்பது இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் அகதிகளில் இருவகையினர் உண்டு. பாகிசுதான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்திருப்பவர்கள் இனி ஒருபோதும் அந்த நாடுகளுக்குத் திரும்பிப் போக முடியாது, அத்தகையவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம். மற்றொரு பிரிவினர் தங்கள் தாயகத்தில் உள்ள போர்ச் சூழல் நிலைமையில் இந்தியாவுக்குத் தப்பி வந்தவர்கள் குறிப்பாக, ஈழத் தமிழர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீண்டும் தங்கள் தாயகத்திற்குச் செல்ல விரும்புகிறவர்கள். எனவே இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும். மாறாக, இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் வழங்கப்படுமானால், சிங்கள அரசு இவர்களை ஒருபோதும் தனது நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்காது. இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழர்களின் நிலைமை இரங்கத்தக்கதாக உள்ளது. சிறை முகாம்களில் இருப்பது போன்ற அவல வாழ்வுதான் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களும், அவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கவோ, வேலை வாய்ப்புகளைப் பெறவோ, தொழில் புரியவோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்திய அரசு அளிக்கும் உதவி அவர்களுக்குப் போதுமானதல்ல. ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பில் அவர்களை ஒப்படைக்கவேண்டும்.இவ்வாறு செய்யாவிட்டால், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கி நமது குடிமக்களுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம்-5 உயர்நீதிமன்றத்தில் தமிழ் தமிழக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதிகளாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மட்டுமே பதவி வகித்தனர். தமிழே ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், ஆக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள் 1964-ஆம் ஆண்டு முதல் தொடங்கின. மாவட்ட நீதிமன்ற வரை தமிழ் நீதிமன்ற மொழியாகத் திகழ்கிறது. ஆனால் உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலமே நீதிமன்ற மொழியாக நீடிக்கிறது. உயர்நீதிமன்ற மொழியாக தமிழ் ஆக்கப்படவேண்டும் என தமிழக சட்டமன்றம் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியும், அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னமும் கிடைக்கவில்லை. 1975-ஆம் ஆண்டு அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட போது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கிணங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவார் என்றும் மொத்தமுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. இதன் நோக்கம் மாநில மொழிகள் உயர்நீதிமன்ற மொழியாக வருவதைத் தடுத்து ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியை ஆக்குவதேயாகும். இந்த சட்ட திருத்தம் மாற்றப்படாவிட்டால் தமிழ் ஒருபோதும் உயர்நீதிமன்ற மொழியாகாது. எனவே இந்த சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்று தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளே உயர்நீதிமன்ற மொழிகளாகவும், தலைமை நீதிபதி முதல் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்பதை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம்-6 மாநிலப் பட்டியலில் கல்வி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாநிலத்திற்கு உட்பட்ட அதிகார வரம்பில் கல்வி இருந்தது. ஆனால், அதை ஒரு சட்ட திருத்தத்தின் மூலம் மத்திய&-மாநில பொது அதிகாரத்திற்கு உட்பட்டதாக மாற்றியதின் மூலம் கல்வித் துறையில் நடுவண் அரசின் தலையிடும் அதிகாரமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இதன் விளைவாக நீட் போன்ற தேர்வுகள் திணிக்கப்பட்டுள்ளன. எனவே கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம்-7 தமிழருக்கே வேலை வாய்ப்பு தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் முழுமையாக தமிழில் அமையவேண்டும். வேலை வாய்ப்புகளிலும் தமிழர்க்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். தமிழ்மொழி அறியாத பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இங்கு நியமிப்பது இவற்றின் நிர்வாகத்திற்கு சற்றும் பொருந்தாது. எனவே, தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டால்தான் தமிழ் மக்களுக்கு அவர்கள் தொண்டாற்ற முடியும் என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு நடுவண் அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களிலும், வணிக அமைப்புகளிலும் வேலை வாய்ப்புகள் தமிழர்க்கு மட்டுமே அளிக்கப்படவேண்டும் எனவும் பிற மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்காமல் இருக்கும்படி தனியார் நிறுவன உரிமையாளர்களையும் இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது. தீர்மானம்-8 தொழில் தொடங்க தமிழருக்கு முன்னுரிமை தமிழ்நாட்டில் தொழிற் சாலைகளைத் தொடங்குவதற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கும், அயலகத் தமிழர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அந்நிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தொழில் உரிமையில் 51% பங்குகள் தமிழர்க்கு உரிமையாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுக்கு உரிமையான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும்போது, அவற்றைத் தமிழக அரசே வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது. தீர்மானம்-9 சிதம்பரம் நடராசர் கோயில் – நீதி விசாரணை சிதம்பரம் நடராசர் கோயிலில் வழிபட வந்த பெண்மணியை தீட்சிதர் ஒருவர் தாக்கியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர் மீது எடுக்கப்பட்டுள்ள குற்ற நடவடிக்கையை விரைவுப்படுத்தி தக்க தண்டனையை அவருக்கு விதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழக அரசின் கடமையாகும். அத்துடன் மேற்படி தீட்சிதரை கோயில் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கவேண்டும். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் அத்துமீறிய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டும், கோயில் உண்டியல் பணம், நகைகள், சொத்துக்கள் ஆகியவற்றைக் கையாடல் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளும்படித் தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது. தீர்மானம்-10 தமிழ்வழியில் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு தமிழ்நாட்டரசின் வேலை வாய்ப்புகளில் 90% தமிழர்களுக்கே வழங்கப்படவேண்டும். தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு அரசு வேலைகளில் 50% வழங்கப்படவேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறது. தீர்மானம்-11 மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் இவற்றின் உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக நிறைவேற்றுவதில்லை. இதன் காரணமாக காவிரிப்படுகையில் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களும் நலிவுற்று வருகின்றன. இந்நிலையில் காவிரியில் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தினை நிறைவேற்றுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை இம்மாநாடு கண்டிக்கிறது. தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் காவிரியின் குறுக்கே எந்தவிதமான நீர்ப்பாசனத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நடுவண் அரசினையும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசினையும் இந்த மாநாடு வேண்டிக்கொள்கிறது. தீர்மானம்-12 கீழடி – விரிவாக ஆய்க பல்வேறு நெருக்கடிக்கிடையிலும், மனந்தளராது உழைத்து, கீழடி அகழாய்வுப் பணிகளை முன்னெடுத்து தமிழர் வரலாற்றுத் தொன்மையினை உலகறியச் செய்த நடுவண் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுகளை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. நடுவண் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை நிறுத்திவிட்ட நிலையில், நான்காம், ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழகத் தொல்லியல் துறை இயக்குநர் திரு. உதயச்சந்திரன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. மா.பா. பாண்டியராசன் அவர்களுக்கும் இம்மாநாடு பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், வைகை ஆற்றின் இரு கரைகளின் நெடுகிலும் கண்டறியப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட தொல்லியல் மேடுகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள பெருந்திட்டம் ஒன்றினை வகுத்து, வைகை ஆற்று நாகரிகத்தினை முழுமையாக வெளிக்கொண்டுவர வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
|