கோத்தாவின் கொடுமை ஆரம்பம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 07 பெப்ரவரி 2020 15:25

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் நடந்துவரும் நிகழ்வுகள் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் இருப்பிற்கு அச்சமூட்டுவதாக அமைந்து வருகின்றன.

இராணுவ முகாம்களுக்கான நில ஆக்கிரமிப்பு ஒருபுறம், பெளத்த  விகாரைகள் அமைப்பதில் தீவிரம் என அரசும், சிங்களக் கடும் போக்குவாதிகள் களமிறங்கியிருக்கும் அதேவேளை,  தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சி நடைபெறுவது போன்று இராணுவக் கெடுபிடிகளும் மீண்டும் அதிகரித்திருக்கின்றன. இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு வசதியாக விசேட வர்த்தமானி அறிவித்தலும் கோத்தபாய அறிவுறுத்தலுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சி நடைபெறும் நாட்டைப் போன்று முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கோத்தபாய ராஜபக்சவினால் இந்த சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதிக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த வர்த்தமானி அறிவித்தலை கோத்தபாய வெளியிட்டுள்ளார்
மக்களின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இடம்பெறும் ஏதேனும் குழப்ப நிலைமையின் போதே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்படும் போது நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறவேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ள முன்னிலை சோசலிச கட்சி, அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத வேளையில் இவ்வாறு காவல் துறையினருடைய அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கு வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவத்தினருக்கு காவல் துறையினருடைய அதிகாரத்தை வழங்குதல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்திஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
எலி முயல் வேடம் போட்டாலும் வால் காட்டிக் கொடுக்கும் என்பதுபோல், தன்னை ஒரு ஜனநாயகவாதியாக கோத்தபாய காண்பிக்க முயன்றாலும், கடத்தல்களும், படுகொலைகளும் கடத்திச் சென்று விசாரணைகளும் என மகிந்த குடும்பத்தின் முந்தைய வெள்ளை வாள் ஆட்சிக்கால நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பாம்பு விஷம் பல்லில், தேளுக்கு விஷம் கொடுக்கில், கோத்தபாய விசம் உடலெங்கும். முக்காலும் காகம் முழுகிக் குளிச்சாலும் கொக்காக முடியாது என்பதுபோல, கோத்தபாயவினாலும் தனது இரத்தவெறியையும், இனவெறியையும், மதவெறியையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை பதவிக்கு வந்து இரு வாரங்களுக்குள் காண்பிக்கத் தொடங்கிவிட்டார்.
கோத்தாவின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. அந்த ஆட்டத்தில் இருந்து சில விஷத்துளிகள் இங்கே...
சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள விகாரைக்கு புதிதாக பிரதிஷ்டை செய்ய 3.5அடி உயரமான புதிய புத்தர் சிலை ஒன்று கடந்த 30ஆம் தேதி கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெளத்த விகாரையில் எந்தவித கட்டுமான பணிகளும், மாற்றங்களை செய்ய முடியாத  அளவுக்கு  நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருக்கின்ற போதும், அதனையும் மீறி குறித்த மூலஸ்தானத்துக்கான புத்தர் சிலையை கொண்டுவந்து விசேட பூசை வழிபாடுகளின் பின் வைத்துள்ளனர். கோத்தா ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் தேடுதல்கள், விசாரணைகள், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று இலங்கை பத்திரிகையாளர்கள் கூறுகின்ற கரிசனைகளை தாங்கள் பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.  டெர்மினேட்டர் என அழைக்கப்படும் ராஜபக்ச சிறீலங்கா ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் ஊடக சுதந்திரம் குறித்து கவலை தரும் சமிக்ஞைகள் வெளிவந்துள்ளன என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பின் ஆசியா பசுபிக்கிற்கான தலைவர் டானியல் பாஸ்டார்ட் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம்  புத்த  விகாரை கட்டி வருகின்றது. கடும் எதிர்ப்புக் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணி, ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் குறித்த விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ். சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர்க்குற்ற விடயங்களை விமர்சிப்பதைவிட அந்த விடயங்களை மறக்குமாறு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு கோத்தபாய கூறியுள்ளார். இதை  பேசிக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயனில்லை. பெரும்பான்மை சமூகத்தின் மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விடயங்களை சிறுபான்மையினர் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை சிறுபான்மையினர் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் பிறந்த எல்லோரும் இலங்கை குடிமக்கள், அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், சிறுபான்மையினர்சில விடயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என இந்தியாவின் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்ய முடியாது என்று கோத்தபாய திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இனமக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றன என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குத்  தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது கி.பி. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டில். அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இலங்கையில் இருந்ததில்லை. வடகிழக்கில் இன்றும் நாமே பெரும்பான்மையினர். பின் எவ்வாறு சிங்களப் பெரும்பான்மையினர் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்ய முடியாது என்று எமது ஜனாதிபதி கூறலாம் என்றம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைகள்  பேரவையில் ஏற்றுக்கொண்ட விடயங்களை புதிய அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார் போர்க் குற்றங்கள் நிருபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாது வெறுமனே ஒரு சிலர் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதை போலவே,  2015ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின் 30/1பிரேரணைக்கு சிறீலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. இது சிறீங்கா அரசாங்கம் வழங்கியது என கூறுவதைவிடவும்,  அப்போதைய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட தீர்மானம் என்றே கூறமுடியும். அமைச்சரவை அங்கீாரம் இல்லாது, நாடாளுமன்றத்தில் இது குறித்த அனுமதியை பெற்றுக்கொள்ளாது தாமாக இணை அனுசரணை பிரேரணையை ஆதரித்தனர். எனினும் நாம் மீண்டும் இதனை பரிசீலிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
கோத்தபாய பதவிக்கு வந்தபின் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டு, சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இலங்கையில் மட்டுமல்ல, சுவிட்சர்லாந்து அரச மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவாணர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை சென்றபோது கொழும்பு வெள்ள வத்தையில் வைத்துக் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 26-11-2019 இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு வெள்ள வத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் தொடருந்துத் தண்டவாளங்களுக்கு இடையில் போடப் பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள்  அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.
கோத்தாவின் ஆட்டம் இத்துடன் முற்றுப்பெறவில்லை. இன்னும் அதிகமாகத் தொடரவே போகின்றது.
- நன்றி - ஈழ முரசு - டிசம்பர்-19.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.