மக்கள் மீது பாயும் திரிசூலம் - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020 11:00

உலகில் உள்ள எந்த நாட்டிலிருந்தும் வரும் யூதர்களுக்கு இஸ்ரேல் நாட்டில் குடியுரிமை அளிக்க வழிவகை செய்வதற்குரிய அலியாக் என்னும் சட்டத்தை  இசுரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

அதை அப்படியே பின்பற்றி உலக நாடுகள் எதிலிருந்தும் வரும் இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என பா.ச.க., தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதைத்தான் இப்போது  நாடாளுமன்றத்தில் தேசியக் குடியுரிமை திருத்தச் சட்டமாகக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவின் சமய சார்பற்றத் தன்மை பெரும் நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கும், உணர்வுக்கும் இது எதிரானது. இரண்டாவதாக, மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, திட்டமிட்டு மக்களைப் பாகுபடுத்துவதாகும். மூன்றாவதாக, நமது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மீதும், நமது அரசியல் அமைப்பின் மீதும் இந்துத்துவா தத்துவத்தைத் திணிப்பதுடன் இந்து தேசமாக இந்த நாட்டை மாற்றுவதற்குமான முயற்சியாகும்.
கடந்த 70ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டம் 120 முறைகளுக்கு மேல் திருத்தப்பட்டு மக்களின் உரிமைகள், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசிடம் மேலும் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மத்தியில் குவிக்கப்பட்ட இந்த அதிகாரத்தை இப்போது பா.ச.க. ஆட்சி பயன்படுத்துகிறது. வலிமையான தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்கள் உருவாகியிருந்தால் பா.ச.க.வின் எதேச்சதிகாரப் போக்குத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லாத காரணத்தினால் இந்து அரசை உருவாக்கும் முயற்சி தலையெடுத்துள்ளது.
நாட்டின் விடுதலை போராட்டத்தில் இந்துத்துவாவாதிகள் எந்த வகையிலும் பங்கெடுக்கவில்லை. ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். தலைவரான  எம்.எஸ். கோல்வால்கர், இந்து தேசியம் என்ற தத்துவத்தை முன் வைத்ததோடு, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படமாட்டாது என திட்ட வட்டமாகத் தெரிவித்தார். அவரின் இந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்காகத்தான் தேசிய மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்சா நாடாளுமன்றத்தில் பேசும்போது, ்இந்தியப் பிரிவினையின் போது நிறைவடையாத செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கான சட்டமே இது" என வெளிப்படையாகக் கூறினார். மேலும் அவர்  20&11&2019 அன்று கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போது பின்வருமாறு கூறினார்&தேசிய மக்கள் பதிவேட்டுப் பணி இந்தியா முழுவதும் நடத்தப்படும்.  07&09&2015இல் அசாமில் மேற்கொள்ளப்பட்ட இதே பணி இந்தியா முழுவதும் தொடரும்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பா.ச.கவின் தேர்தல் அறிக்கையில் தேசிய மக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் கூறுவது உண்மை?
்தடுப்புக் காவல் முகாம்கள் எதுவும் இந்தியாவில் இல்லை” என தலைமையமைச்சர் மோடி ஏற்கெனவே  நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால், மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்யானந்த் ராய் கேள்வி ஒன்றுக்கு 11&12&2019 அன்று நாடாளுமன்ற மேலவையில் பதிலளிக்கும் போது பின்வருமாறு கூறினார்& ்09&01&2019 அன்று மாநில மற்றும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதி அரசுகளுக்கு உள்துறையின் சார்பில் மாதிரி தடுப்புக் காவல் முகாம்கள் குறித்து  சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 22&11&2019 அன்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில்&அசாம் மாநிலத்தில் 6 தடுப்புக் காவல் முகாம்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் மொத்தம் 988அந்நியர்கள் அடைக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். சட்டத்திற்குப் புறம்பாக ஊடுருவியவர்களும், தண்டிக்கப்பட்ட அந்நியர்களும் அவரவர்கள் நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்படும் வரை தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இத்தகைய முகாம்களை அமைப்பதற்கு மாநில அரசுகள் முன் அனுமதி பெறவேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அசாமில் கோல்பரா என்னும் இடத்தில் உள்ள தடுப்புக் காவல் முகாம் 46.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் எந்த இடத்திலும் தடுப்புக் காவல் முகாம்கள் அமைக்கப் படவில்லை என தலைமையமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். ஆனால், மத்திய உள்துறை இணை அமைச்சரோ அதை முற்றிலுமாக பொய்யாக்கும் வகையில் அசாம் மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ள தடுப்புக் காவல் முகாம்கள் குறித்தும், அதில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைக் குறித்தும், தடுப்புக் காவல் முகாம்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவரங்களை வெளியிடுகிறார். அப்படியானால்,  தலைமையமைச்சர் கூறியது தவறான செய்தி என்பது வெளிப்பட்டுள்ளது.
வங்கதேசம், பாகிசுதான், ஆப்கானிசுதான் ஆகிய மூன்று முசுலிம் நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் இந்தியக் குடியுரிமையை அளிக்கும். இதில் மறைபொருளாகக் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், மேற்கண்ட நாடுகளிலிருந்து வரும்  முசுலிம்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை அளிக்கப்படமாட்டாது என்பதுதான். இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையே மீறுவதாகும். மத அடிப்படையில் இவ்வாறு வேறுபடுத்தி குடியுரிமை அளிப்பது நமது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.
பாகிசுதான், வங்கதேசம் ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் அங்கங்களாக விளங்கியவைதான். எனவே, இந்த இரண்டு நாடுகளிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் புக வருபவர்களுக்கு குடியுரிமை அளிப்போம் என்று கூறினால் ஓரளவு நியாயப்படுத்த முடியும். ஆனால், ஆப்கானிசுதான் ஒருபோதும் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததில்லை. அதை எப்படி இந்தப் பட்டியலில் இந்திய அரசு இணைத்தது என்பதற்கு விளக்கம் எதுவும் கூறப்படவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் ஒரு மாநிலமாக மியான்மர் (பர்மா) இருந்தது. 1937ஆண்டில்தான் பர்மா இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு தனி நாடானது. இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான ரோகிங்கியா முசுலிம்கள் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியாவிற்கு ஓடிவந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை ஏன்?
இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பூடான் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.  அந்நாடு புத்த மதத்தை தனது அதிகாரப்பூர்வமான மதமாக ஏற்றுக்கொண்டதாகும். அந்நாட்டிலுள்ள கிறித்தவர்கள் தங்களுக்கென்று தனியான தேவாலயத்தை அமைத்துக்கொள்ளவோ,  அங்கு சென்று வழிபடவோ   இயலாது. அவரவர்கள் வீட்டுக்குள்தான் வழிபாடு செய்துகொள்ளவேண்டும். எனவே, அவர்கள் மதரீதியான வழிபாட்டுச் சடங்குகளைச் செய்ய இந்தியாவில் எல்லைப்பகுதியிலுள்ள தேவாலயங்களுக்குத்தான் வரவேண்டிய நிலையிலும் மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுமுள்ளார்கள்.  அவர்களைப் பற்றி தேசியக் குடியுரிமைச் சட்டம் எதுவும் கூற  மறுத்துள்ளது.  
ஈழத் தமிழர் புறக்கணிப்பு ஏன்?
அதைபோல, மற்றொரு அண்டை நாடான இலங்கையிலிருந்து சிங்கள இனவெறித் தாக்குதலுக்குள்ளாகி தப்பி வந்து இந்தியாவில் கடந்த சுமார் 40 ஆண்டு காலமாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழர் ஏதிலிகளும் இப்பட்டியலில் சேர்க்கப்படாதது  ஏன்? அவர்களில் மிகப் பெரும்பாலோர் இந்துக்களாக இருந்தும் இப்பட்டியலில் சேர்க்கப்படாததற்கு காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. ஒருவேளை அவர்கள் தமிழர்கள் என்பதனால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கேள்வி நம்மைக் குடைகிறது.
பாகிசுதானில் வாழும் முசுலிம்களில் ஒரு பிரிவினரான சியா சமூகத்தினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை முசுலிம்கள் என பாகிசுதான் அரசு ஏற்றுக்கொள்வதில்லை. இசுலாம் மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மாற்றுவதற்கு முயல்கிறவர்களாக சியாக்கள் கருதப்படுகிறார்கள். எனவே, அவர்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் தர இந்திய அரசு முன்வராதது ஏன்?
கிழக்கிந்தியாவில் உள்ள அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் வாழ்கிற பகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து மாநிலங்களின் உள் கோட்டு அனுமதிப் பகுதிகளுக்கும் தேசிய குடியுரிமைச் சட்டத்திலிருந்து சிறப்பு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு இந்த விலக்கு அளிக்கப்படவில்லை. இது ஏன்? மேலும், இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கொதித்தெழுந்து  போராடுகிறார்கள். காசுமீரின் தனி உரிமை பறிக்கப்பட்டப் பிறகு அங்கு யார் வேண்டுமானாலும் குடியேறலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதை போல, தங்கள் மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் அம்மக்களுக்கு ஏற்பட்டதால்தான் அவர்கள் போராடுகிறார்கள்.
தேசியக் குடியுரிமைச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் செய்துவருவதாகவும், யாரின் குடியுரிமையையும் இச்சட்டம் ஒருபோதும் பறிக்காது எனவும், இச்சட்டம் குறித்து அரசு மட்டத்தில் எத்தகைய விவாதமும் இன்னும் நடைபெறவில்லை எனவும் தலைமையமைச்சர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் குறித்து நடைபெற்ற விவாதத்தில்  உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்சா ்நாடெங்கும்  இச்சட்டம் செயல்படுத்தப்படும்” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மற்றும் பல அமைச்சர்களும் இவ்வாறே பேசினார்கள். இந்தியாவுக்குள் அனுமதியின்றி ஊடுருவி உள்ளவர்களுக்கும், அடைக்கலம் கேட்டு நுழைந்துள்ள அகதிகளுக்குமிடையே உள்ள வேறுபாட்டினை மத அடிப்படையில் கண்டறிய இந்தச் சட்டம் முயலுகிறது என்பதுதான் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.  இந்தக் கேள்விக்குரிய பதிலை இதுவரை இந்திய அரசின் சார்பில் யாரும் அளிக்கவில்லை.
ஆனால், இரு நாட்கள் கழித்து மத்திய  அமைச்சரவைக் கூடி தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை மேம்படுத்துவதற்காக 3941 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் வீடுதோறும் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேலையின் முதல் கட்டம் அனைத்து மாநிலங்களின் வருகிற ஏப்ரல் 1முதல் செப்டம்பர் 30க்குள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இவற்றின் மூலமாக மக்களிடமிருந்து நடுவண் அரசு மறைத்துள்ள செய்தி என்னவென்றால், தேசிய மக்கள் பதிவேட்டிற்காகப் புதிய சட்டம் எதுவும் தேவையில்லை என்பதும், அது குறித்து நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஆகும்.  தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கான வீடுதோறும் எடுக்கப்படும் கணக்கெடுப்பு முடிந்த பிறகு அப்பதிவேட்டை இறுதிப்படுத்துவது என்பது, நிர்வாக ரீதியான முடிவு மட்டுமே ஆகும்.  தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கான கணக்கெடுப்புகள் முடிந்த மறு வினாடியே தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகளும் முடிந்துவிடும். இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைக்கவேண்டிய அவசியம் என்ன?
நாடு இதுவரை கண்டிராத அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசுத் தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமையில் அவற்றை தனியாரிடம் விற்பனை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிராக இந்நிறுவனங்களின் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் ஏறியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஏழைகள் மேலும் ஏழைகளாகியுள்ளனர். ஊழல், லஞ்சம் பெருகியுள்ளது. இயற்கை வளத்தை அழிக்கும் முயற்சிகள் பெருகி வருகின்றன. இவை போன்ற மிக முதன்மை வாய்ந்த மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளை ஆராயாமல் தேசியக் குடியுரிமைச் சட்டத்தைச் செயற்படுத்துவதில் தீவிரம் காட்டுவது ஏன்? மேலே கண்ட பிரச்சனைகளிலிருந்து மக்களை திசைத் திருப்பவா? அல்லது இந்தியாவை ஒரு இந்து நாடு என அறிவிக்கும் முயற்சியா? இந்திய அரசியல் சட்டத்தின் எழுத்து, உணர்வு ஆகியவற்றுக்கு எதிரானதாக தேசியக் குடியுரிமைச் சட்டம் அமைந்துள்ளது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் இது அமைந்திருக்கிறது.
மும்முனைத் திட்டம்
பா.ச.க. அரசின் மிக முக்கிய திட்டங்களான தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு (National Citizen Register - N.C.R.) தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register - NPR) ஆகிய மூன்றும் இந்தியாவின் சமய சார்பற்ற சனநாயக அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகும் முயற்சிகளாகும். முதலில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இங்கு வாழும் மக்களின் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஒன்றும் தயாரிக்கப்படும். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வெறும் மக்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் வேலையல்ல இது. தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கான முன்னோடியாகும். இதன்படி நாட்டு மக்கள் குடியுரிமை உள்ளவர்கள், குடியுரிமையற்றவர்கள் என இரு கூறாகப் பிரிக்கப்படுவார்கள்.
பெயர், வயது,பாலினம், குடும்பத்தில் உங்கள் வறவு, தேசிய இனம், கல்வித்  தகுதி, வேலை, பிறந்த தேதி, இருப்பிட முகவரி, தாய்மொழி ஆகிய வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளோடு கூடுதலாக, பெற்றோர்கள் எங்கே பிறந்தனர்? என்ற கேள்வியும் கேட்கப்படும். பெற்றோர்களைப் பற்றிய கேள்வியின் நோக்கமென்ன? ஒருவரை குறித்த அடையாளத்தை ஒப்பிட்டு, பெற்றோர் எந்த ஊரில்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற கேள்வி ஏன் எழுப்பப்படுகிறது? எழுதப் படிக்கத் தெரியாத ஏழை, எளிய மக்கள் தங்களின் பெற்றோர் எந்த ஊரில் பிறந்தவர்கள் என்பதற்கான சான்று எதுவும் உறுதியாக  வைத்திருக்க மாட்டார்கள். மருத்துவமனைகள் இல்லாத அந்தக் காலத்தில் வீடுகளிலேயே பிள்ளைப்பேறு நடந்த காலகட்டத்தில் சான்றிதழ் யார் கொடுப்பது?  எப்படி கொடுக்க முடியும்? அப்படி கொடுக்க முடியாதவர்களைப் பிடித்துச் சென்று தடுப்புக் காவல் முகாம்களில் அடைப்பதற்கான திட்டமே இதுவாகும்.
இந்த குடிமக்கள் பட்டியல் தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட, வட்ட, உள்ளூர் அளவிலும் தயாரிக்கப்படும். தேசிய அளவிலான பதிவேட்டிலிருந்து உள்ளூர் அளவிலான பதிவேட்டினை தயாரிக்கும்போது சரிபார்க்கும் நடைமுறை கையாளப்படும். அப்போது ஐயத்திற்குரிய குடிமக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனியாகப் பதிவு செய்யப்படுவார்கள். தேசிய குடிமக்கள் பட்டியலுக்கு இறுதி வடிவம் கொடுக்கும்போது இவ்வாறு ஐயத்திற்குரிய குடிமக்களாக அடையாளம் காணப்பட்டவர்கள், தாங்கள் இந்தியர்கள்தான் என்பதை நிறுவுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அவ்வாறு நிறுவுவதற்கான சான்று அளிக்க முடியாதவர்கள் சட்டத்திற்குப் புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட்டு நடவடிக்கைளுக்குள்ளாவார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சியில் அமர்ந்த மோடியின் அரசு, திட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக தனது இந்துத்துவா நோக்கங்களை நிறைவேற்றி வருகிறது.
1. காசுமீருக்குச் சிறப்புரிமை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவும், 35ஏ பிரிவும் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நீர்த்துப்போக வைக்கப்பட்டன. தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இராணுவமும், மத்திய காவல் படையும் குவிக்கப்பட்டன. ஏற்கெனவே, காசுமீரில் 7இலட்சத்து 50ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இப்போது  மேலும், 50ஆயிரம் படைவீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். காசுமீரத்தின் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் அனைவருமே தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டனர்.  5 மாதங்களுக்கு மேலாகியும் இந்த நிலையில் எத்தகைய மாற்றமும் செய்யப்படவில்லை. எப்போது இந்தத் தடைகள் நீக்கப்படும்? சிறை வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள்?  என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
2. காசுமீரின் மாநிலத்  தகுதி பறிக்கப்பட்டு நடுவண் ஆட்சிக்குட்பட்ட இரு பிரதேசங்களாகப்  பிரிக்கப்பட்டன.
3. முத்தலாக் முறை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
4. இராமர் கோயில் - பாபர் மசூதி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பையொட்டி கோவிலை உடனடியாகக் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
5. தேசியக்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டது.
அரசியல் சட்ட அவமதிப்பு
1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாளில் இந்திய அரசியல் யாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் பின்வருமாறு கூறப்பட்டது.
இந்திய மக்களாகிய நாங்கள் உறுதியுடன் முறைப்படி முடிவெடுத்து இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள சமத்துவ, சமய சார்பற்ற சனநாயகக் குடியரசாக கட்டமைத்திடவும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் -
1. சமூகப் பொருளாதார மற்றும்  அரசியல் நீதி
2. எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாட்டு தன்செயல் உரிமை.
3. படிநிலை மற்றும் வாய்ப்பு, சமத்துவம்  ஆகியவை கிடைத்திட உறுதி செய்தல்.
மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் உறுதிபடுத்துதல், அனைவரிடத்திலும் உடன் பிறப்புணர்வை ஊக்குவித்திடல்.
இந்த 1949 நவம்பர் 26ஆம் நாள் நம்முடைய அரசியல் யாப்பு அவையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு முறைமையை இதன்படி ஏற்றுச் சட்டமாக்கி நமக்கு நாமே  தருகிறோம்.
இவ்வாறு நமது அரசியல் சட்ட முகப்புரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல்  அமைப்பிற்கான முகப்புரை, அரசியல் அமைப்பின் ஏனைய பகுதிகளைப் போன்று இயற்றப்பட்டு அரசியல் யாப்பு அவையின் வாக்கெடுப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது, அது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெருபாரி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் உச்சநீதிமன்றம் முகப்புரை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாகமல்ல என கூறியது. பின்னர், கேசவானந்த பாரதி வழக்கில் முகப்புரை வரையப்பட்ட வரலாறும், அது இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதின் விளைவாக, உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரை இந்திய அரசியல் சட்டத்தின் உள்ளார்ந்த ஒரு பகுதியே ஆகும் எனத் தீர்ப்பளித்தது.
அரசியல் சட்டத்தின் கீழ்க்கண்டப் பிரிவுகள் குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம், உரிமைகள், மதங்களுக்கு  இடையே சமத்துவம், மொழி, மதச் சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதுகாப்பு ஆகியவைப் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக்கூறுகின்றன. இவைகள் மீறப்படுமானால், உச்சநீதிமன்றம் அதில் தலையிட முடியும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளன.
 அரசியல் சட்டத்தின் 14ஆவது பிரிவு நாட்டின் குடிமக்களுக்குப் பொருந்துவது மட்டுமல்ல, இந்திய நிலப்பகுதிக்குள் வாழும்  அனைவருக்கும் பொருந்துவதாகும் என கூறுகிறது-
'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-18 பின்வருமாறு கூறுகிறது - மரபினம், தேசிய இனம் மற்றும் நிற வேறுபாடின்றி இந்திய நாட்டில் வாழும் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமானவர்களே. மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையும் அரசு வேறுபடுத்தக் கூடாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே என்பதை நிலைநாட்டும் வகையில் மகளிர் மற்றும் சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கிய மக்கள், பட்டியல் இன சாதியினர், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு சிறப்புச் சலுகைகளை அரசு அளிக்கலாம்”.
அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 19-22
ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் குறித்து இப்பிரிவுகள் கூறுகின்றன. அத்துடன் தனிநபரின் சுதந்திரத்தை குறிப்பிட்ட நிலைமையில் அரசு கட்டுப்படுத்துவதற்குரிய நிபந்தனைகள் இப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. பேச்சுரிமை, கருத்துக்களை வெளியிடும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, அமைப்புகளை ஏற்படுத்தும் உரிமை, இயங்குவதற்கான உரிமை, வாழ்வதற்கும், தொழில், வணிகம் செய்வதற்கும் உரிய உரிமைகள் ஆகிய அத்தனைக்கும் சுதந்திர உரிமை வழங்குகிறது.
அரசியல் சட்டப்பிரிவு 21
மனித மேன்மையை சட்டரீதியாக வலுப்படுத்துவதற்கும், வாழ்தல், உடல்நலம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சிறைகளில் மனிதநேய அணுகுமுறை ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமும் ஆகும். அண்மையில்  தனி மனிதருக்குரிய உரிமையும் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டப் பிரிவுகள் -23-24
சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் குறித்து கூறுகிறது.
அரசியல் சட்டப்  பிரிவுகள் - 25-28
சமய சார்பற்ற அரசில் மத சுதந்திரம், அனைத்து மதங்களுக்கும் சமத்துவம் அளிக்கப்படும். மனசாட்சி சுதந்திரம், மதக் கோட்பாடுகளைக் கடைபிடிக்கவும், பரப்பவும் உள்ள உரிமை. பொது அமைதி,  ஒழுக்கம், மக்கள் நலம் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு மதச் சார்பான பிரச்சனைகளின் நிர்வாகம் அமையவேண்டுமென 26ஆம் பிரிவு கூறுகிறது. அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் மதப் பிரச்சாரம் செய்வதை பிரிவு 28 தடை செய்கிறது.
அரசியல் சட்டப் பிரிவுகள் - 29-30
மொழி, மத சிறுபான்மையினரின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
அரசியல் சட்டப் பிரிவுகள் - 32-35
 மேற்கண்ட  அரசியல்  சட்டப் பிரிவுகளில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்படும்போது, அதற்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து கூறுகிறது. உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்கும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளை காப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்பதையும் கூறுகிறது. அதேவேளையில் அரசியல் சட்டத்தின் கூறுகளை மாற்றவோ, பாதிக்கும் வகையிலோ நாடாளுமன்றம் சட்ட இயற்றக் கூடாது என்பதையும் எல்லா வகை சட்டத் திருத்தங்களும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்பதையும்  இந்தப் பிரிவுகள் விளக்கமாகக் கூறுகின்றன.  
கொதிந்தெழுந்த மாணவர்கள்
தேசியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் மூண்டெழுந்த போராட்டத்தின் முன்னணியில் மாணவர்கள் நின்று கொதிப்புணர்வுடன் போராடினர். குறிப்பாக, தில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம், பூனாவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிலையம், பரோடாவில் உள்ள மன்னர் சயாஜிராவ் பல்கலைக்கழகம், தில்லி சாமியா பல்கலைக்கழகம், உத்திரப்பிரதேச அலிகார் பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிலையம், மேற்குவங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், போன்றவற்றின் மாணவர்கள்  முதன்முதல் போர்க்கொடியை ஏற்றினர். அதைத் தொடர்ந்து காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள மாணவர்களும் இப்போராட்டத்தில் குதித்தனர். ஆனால், இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பா.ச.க. அரசு அதிர்ச்சி அடைந்தது.
'மாணவர்கள் கல்வியை விலைக்கு வாங்குபவர்களாகவும், தன்னலமிக்கவர்களாகவும், வேலை வாய்ப்புச் சந்தையில் போட்டியிடும் தொழிலாளிகளாகவும் இருக்கவேண்டுமே தவிர, சமூகக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவும், சனநாயக, சமய சார்பற்ற முற்போக்கு சிந்தனை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு தாங்கள் கற்ற கல்வியைப் பயன்படுத்துபவர்களாக இருக்கக் கூடாது” என பா.ச.க. அரசு கருதியது. தனது நோக்கத்தைச் செயல்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர் கட்டணங்களை உயர்த்தியது.  இதன்மூலம் வசதிப் படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே உயர் கல்விப் பெற முடியும்.  அவ்வாறு பெறுபவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்படுவார்களே தவிர, சமூகக் கண்ணோட்டத்துடன் செயற்படமாட்டார்கள் என அரசு நம்பியது. அதைபோலவே, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததின் மூலம் பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விப் பெறுவதைத் தடுத்து நிறுத்தவும், திட்டமிட்டுப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அரசால் நடத்தப்படும் உயர்கல்வித் துறையை தனியாரிடம் ஒப்படைத்தல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் போன்ற படிப்புகள் மாணவர்களை சிந்தனையாளர்களாக மாற்றுவதால் அவற்றை அறவே நீக்குதல், ஒடுக்கப்பட்டவர்கள், மகளிர், சிறுபான்மையினர், பிற்பட்டோர், மலைவாசிகள், ஏழைகள் ஆகியோருக்குக் கல்வி மறுத்தல், சுதந்திரமான பேச்சு, சிந்தனை, ஆட்சிக்கு எதிர்ப்பு, போர்க் குணம் ஆகிய அனைத்தையும் அடியோடு ஒழித்தல் போன்ற எதேச்சதிகாரத் திட்டங்களைக் கொண்ட அரசாக பா.ச.க. ஆட்சி செயல்படுகிறது.  
ஆர்.எஸ்.எஸ். முன்னோடி இட்லர்
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பா முழுவதிலும் இட்லரின் படை வீரர்களால் சுமார்60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதாவது, போரின் முடிவின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களில் மூன்றில் இரு பங்கினர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கெதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை இட்லரின் அரசு படிப்படியாக மேற்கொண்டது. முதலாவதாக, அனைத்து யூதர்களும்  தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு பதிவு செய்தவர்களின் சொத்துக்களையும், குடியுரிமைகளையும் பறிமுதல் செய்யும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  நாஜி அரசு மேற்கொண்ட இந்த கெடுபிடிகளின் விளைவாக 1933ஆம் ஆண்டில் மட்டும் 37,000 யூதர்கள் செர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். 1935ஆம் ஆண்டில் யூதர்கள் யார்? என்பதை வரையறை செய்யும் சட்டமும், செர்மனி குடியுரிமையைப் பெறுவதற்குரியவர்கள் யார் என்பதற்கான சட்டங்களும் இயற்றப்பட்டன. இவற்றிற்கிணங்க செர்மானியர்கள் - யூதர்கள் மணவினைத் தொடர்புகள் தடைசெய்யப்பட்டன.  யூதர்களின் வீடுகளில் 45 வயதிற்குட்பட்ட செர்மானியப் பெண்கள் வேலைக்கு அமர்த்துவது தடைசெய்யப்பட்டது. இத்தகைய சட்டங்களின் விளைவாக யூதர்கள் திட்டமிட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். 1938ஆம் ஆண்டு நவம்பரில் ஆயுதம் தாங்கிய நாஜிக் கட்சியினரும், செர்மானிய குண்டர்களும் யூதர்களின் வீடுகள்,  மருத்துவமனைகள்  மற்றும் குடியிருப்புகளில் புகுந்து தாக்குதல் நடத்தினர். செர்மானிய காவல்துறை கைகட்டி நின்றது. 1939ஆம் ஆண்டில் போலந்தின் மீது செர்மனி படையெடுத்தபோது, மிச்சமிருந்த யூதர்கள் அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனியான முகாம்களில் சிறை வைக்கப்பட்டனர். இழிந்த மனிதப் பிறவிகளாக யூதர்கள் கருதப்பட்டனர். இவ்வாறு படிப்படியாக யூதர்களின் மானுடம் சிதைக்கப்பட்டது. போலந்திலும், சோவியத் ஒன்றியத்திலும் வாழ்ந்த 13இலட்சம் யூதர்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். இவ்வாறு சுட்டுத் தள்ளுவதற்குப் பெரும் செலவான காரணத்தினால் புதிய கொலைத் தந்திரத்தை நாஜிக்கள் கைக் கொண்டனர். பெரும் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான யூதர்களை அடைத்து நச்சுக் காற்றை உள் செலுத்தி சில நொடிப் பொழுதில் அவர்களின் உயிர்களைப் பறித்தனர்.
இட்லரை, தனது வழிகாட்டியாகவும், அவரின் நாஜிக் கட்சியை முன் மாதிரியாகவும் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கேசவ பலிராம் ஹெட்கேவர் தொடங்கினார். இன்றளவும் இட்லரின் பாசிச  கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடிக்கிறது. எனவே எதிர்க் கருத்துக் கொண்டவர்களை ஒடுக்குவதற்கு வன்முறையை அந்த  அமைப்பு பயன்படுத்தத்  தயங்குவதில்லை.
போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர்களைத் தடுக்க அவர்களுக்கு மூளைச் சலவை செய்ய ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பைச் சேர்ந்த பலர் மாணவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தினர். அதனால் எவ்விதப் பயனும் விளையவில்லை. எனவே, போராடும் மாணவர்களை ஒடுக்குவதற்கு காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் புகுந்து மிகக் கடுமையாக மாணவர்களையும், மாணவிகளையும் தாக்கினார்கள். உத்திரப்பிரதேசத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. தில்லியில் உள்ள சாமியா பல்கலைக்கழக  மாணவர்கள் பேரணியாகச் சென்றபோது அவர்கள் மீது தனிநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதன் விளைவாக ஒரு மாணவர் படுகாயமடைந்தார். இத்தகைய ஒடுக்குமுறைகளின் மூலம் மாணவர்களை அச்சுறுத்திப் போராட்டங் களிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் எனக் கருதி செயல்பட்ட அரசின் நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. மாறாக, போராட்டக் களத்தில் மாணவர்கள் மேலும்  வீறுடன் குவிந்தனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன. காவல்துறையினர் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதை ஊடகங்கள் படம் பிடித்து ஒளிப் பரப்பின. இதைக்கண்டு பின்வாங்கிய அரசு பாசிஸ்ட்டுகளுக்கே உரிய போர்த் தந்திரத்தைக் கையிலெடுத்தது.
சவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மூகமூடி அணிந்த குண்டர்கள் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்தனரே தவிர, அவர்களை தடுக்கவோ, கைது செய்யவோ முன்வரவில்லை. மாணவர்களை தாக்கிய மூகமூடி குண்டர்கள் மிக நிதானமாக தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வளாகத்திற்குள்ளேயிருந்து பத்திரமாக வெளியேறிச் சென்றனர். செர்மனியில் இட்லரின் எஸ்.எஸ். படை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட குண்டர்கள் எதிர்க்கருத்துக் கொண்டவர்களையெல்லாம் தாக்கி ஒடுக்க வைக்கும் முறையை கையாண்டனர். அதே முறையை இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச்  சேர்ந்தவர்களும் பயன்படுத்தினர். இதன் விளைவாக நாடெங்கும் மக்களும் இந்தப் போராட்டத்தில் குதித்தார்கள்.
தொழில் நிறுவனங்கள் - இந்துத்துவா கூட்டணி
பெரும் தொழில் நிறுவனங்களின் குழுக்கள் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் ஆகிய இரண்டின் பிரதிநிதியாகவே பா.ச.க. அரசு செயல்படுகிறது. மேற்கண்ட இரு சக்திகளும்  சமய சார்பற்ற சனநாயக அரசியல்  அமைப்பினை அகற்றிவிட்டு இந்து ராஷ்டிராவை நோக்கி நாட்டை நகர்த்துவதே தங்களின் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் கருவியாக மட்டுமே பா.ச.க. அரசு செயல்படுகிறது என்பது தேசியக் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஆனால், மாணவர்கள் தங்களுடைய சமூக உணர்வை ஒருபோதும் கைவிடவில்லை. தேசியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை நாட்டின் சமய சார்பின்மையும், சனநாயகத்தையும் வேருடன் பறித்து எறியும் நோக்கம் கொண்டவை என்பதை மாணவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்து போராடினார். குறிப்பாக, முசுலிம் மாணவர்களுடன் மற்ற மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் தோளோடு தோள் நின்று போராடினர். அதைபோலவே, செல்வக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏழை, எளிய மாணவர்களுடன் கரம் கோர்த்து நின்று போராடினார்கள்.
மாணவர்களுக்கு எதிராக ஏவப்பட்ட அடக்குமுறைகளைப் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் மிகக் கடுமையாகக் கண்டித்தனர். மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் போராடும் மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பயன்படுத்தமாட்டோம் என அறிவித்தனர்.
போர்க் கொடியான மூவண்ணக்கொடி
மாணவர்களின் போராட்டம் என்பது மக்கள் சமுதாயத்தில் இயற்கையான எதிர்ப்புணர்வின் விளைவாகும். எந்த அரசியல் கட்சியும் மாணவர்களை தூண்டிவிடவோ, அதற்குப் பின்னணியில் செயல்படவோ இல்லை. சமுதாயத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டே மாணவர்கள் போராடுகிறார்கள். மாணவர்களின் போராட்டம் வரலாற்றுச் சுடரேந்திய போராட்டமாகும். அனைத்து இடங்களிலும் மாணவர்கள் தேசியக் கொடியையும், காந்தியடிகள், அறிஞர் அம்பேத்கர் ஆகியோர் படங்களையும் ஏந்திப் போராடுகிறார்கள்.
இதில் நகைமுரண் என்னவென்றால், கடந்த பல ஆண்டு காலமாக பா.ச.க.வும், இந்துத்துவா அமைப்புகளும் இதே மூவண்ணக் கொடியை முசுலிம்களுக்கு எதிராகவும், சமய சார்பற்றவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினார்கள். ஏதோ தாங்கள்தான் உண்மையான தேசியவாதிகள்  போலவும், மற்றவர்கள் தேச விரோதிகள் போலவும் சித்தரிப்பதற்கு மூவண்ணக் கொடியை அவர்கள் பயன்படுத்தினார்கள். பா.ச.க. தலைவராக முரளி மனோகர் ஜோசி இருந்தபோது, கன்னியாகுமரியிலிருந்து காசுமீர் வரையிலும் மூவண்ணக் கொடியைத் தாங்கி ஒரு பயணத்தை மேற்கொண்டார். அதன் நோக்கம் காசுமீர் மக்கள் மூவண்ணக் கொடியையும் மதிக்காமல் தங்களுக்கென்று தனியான ஒரு கொடியை வைத்திருக்கிறார்கள். அந்த கொடியை அகற்றிவிட்டு மூவண்ணக் கொடியை காசுமீர் தலைநகரான சிறீ நகரில் ஏற்றுவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம் என வழிநெடுக பரப்புரை செய்தவாறு சென்றார். காசுமீர் எல்லையை அவர் நெருங்கியபோது, இராணுவ அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர். காசுமீர் போராளிகள் அவரின் பயணத்திற்கு எதிராக இருப்பதால் தொடர்ந்து தரைவழிப் பயணத்தைத் தவிர்க்குமாறும், அவரை உலங்க வானூர்தி சிறீ நகருக்கு அழைத்துச்செல்வதுதான் பாதுகாப்பானதாகும் எனக் கூறினார்கள்.
்காவலர்களின் மூர்க்கத்தனமான தடியடிக்கு அஞ்சாமல் மூவண்ணக் கொடியைத் தூக்கிப் பிடித்து முழங்கிய வண்ணம் வீரத்துடன் முன்சென்ற திருப்பூர் குமரன் தனது உயிரை ஈகம் செய்தது போல, துணிந்து நான் தரைவழியில் மூவர்ணக் கொடியை ஏந்திதான் செல்வேன். எனக்கு எது நடந்தாலும் அஞ்சமாட்டேன்” என  முரளி மனோகர் ஜோசி கூறவில்லை. அதிகாரிகளின் பேச்சுக்குப் பணிந்து உலங்கு வானூர்தியில் வந்து சிறீ நகரில் இராணுவம் புடைசூழ்ந்து பாதுகாப்பு அளிக்க கொடியை ஏற்றிவிட்டு உலங்கு வானூர்தியில் பத்திரமாகத் திரும்பினார்.
இப்போதைய மனித வளத்துறை அமைச்சர் திருமதி சுமிருதி இராணி இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 207 அடி உயரமுள்ள கொடிக்கம்பங்களில் மூவண்ணக் கொடி கம்பீரமாக பறக்கவிடப்படவேண்டுமென ஆணை பிறப்பித்தார்.
2016-2017ஆம் ஆண்டுகளில் நாடெங்கும் பா.ச.க. தொண்டர்கள் மூவண்ணக் கொடிகளை ஏந்தி நாட்டின் மதிப்பை நிலைநாட்டப் போவதாகக் கூறி ஊர்வலங்களை நடத்தினார்கள். முசுலிம்களையும், சமய சார்பற்றவர்களையும் மிரட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்கள்.
ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நாடெங்கும் மூலை முடுக்குகளில்கூட மாணவர்களும், அவர்களுடன் இணைந்து மக்களும் மூவண்ணக் கொடிகளை ஏந்தி தேசிய மக்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடுவதைக் கண்டு தலைமையமைச்சர் மோடியும், பா.ச.க. தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பா.ச.க. அரசு செயல்படுவதைக் கண்டிக்கும் வகையில் மாணவர்கள் அரசியல் சட்டத்தின் முகப்புரையை கூட்டங்களில் படித்துக்காட்டுகிறார்கள். அதற்காக மாணவர்கள் மீது காவல்துறை வழக்குத் தொடுத்து கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, நீதிபதி கோபமடைந்தார். ்அரசியல் சட்டத்தின் முகப்புரையை படித்துக் காட்டுவது என்பது தேசத்திற்கு எதிரான செயலா? என காவல் அதிகாரியை கேட்டபோது, அவரால் பதில்கூற முடியவில்லை. மாணவர்களை விடுதலை செய்தார் நீதிபதி.
அரசியல் சட்டத்தின் முகப்புரை அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு ஆவணமல்ல. ஆனால், அதற்கும் மேலானது. அனைவருக்கும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கிறது. எத்தகைய நாட்டை நாம் உருவாக்க இருக்கிறோம் என்பதை அது எடுத்துக் கூறுகிறது. நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்தில் எத்தகைய உன்னதமான கோட்பாடுகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும் போராடி, 1947ஆம் ஆண்டில் விடுதலை பெற்றபோது நாம் காண விரும்பிய நாட்டின் அடிப்படை நோக்கங்களுக்கு தேசிய மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்றது தானா? என்ற கேள்வி நம் உள்ளங்களில் எழுகிறது.
நவீன துரியோதனன்
கிழக்கு மாநிலங்களில் தேசிய மக்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முசுலிம்கள் மட்டுமல்ல, பா.ச.க.வின் கூட்டணி கட்சிகளும் போராடுகின்றன. பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பா.ச.க.வின் கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், தனது மாநிலத்தில் இத்திட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்தார். பாரதப் போர்க்களத்தில் தனது சகோதரர்களையும், உறவினர்களையும், தளபதிகளையும், படைகளையும்  இழந்து தனித்து நின்று தவித்த துரியோதனனைப் போல, இந்தப் போராட்டத்தில் பா.ச.க. தனிமைப்படுத்தப்பட்டுத் தவிக்கிறது.
ஆனால், நாட்டு மக்களின் நாடித் துடிப்பை பா.ச.க. தலைமை உணர மறுக்கிறது. இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 6மாத காலத்திற்குள் இந்துத்துவாவின் முக்கியமான நோக்கங்களை நிறைவேற்றி விட்டதாக அந்தத் தலைவர்கள் பறைசாற்றிக்கொள்கிறார்கள்.
அகதி யார்?
அகதிகள் குறித்த சர்வதேச சட்ட நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வதைத்தல், அகதி ஆகிய சொற்களை கடன் வாங்கி தேசிய மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பயன்படுத்தி உள்ளது. ஆனால், அந்தச் சட்டத்தின் நோக்கங்களைப் பின்பற்றவில்லை. வதைத்தல் அல்லது துன்புறுத்தல் என்ற சொற்களுக்கு மத ரீதியாக சர்வதேசச் சட்டங்கள் பொருள் கொள்ளவில்லை. 1951ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் மாநாடு வதைத்தலுக்குரிய விரிவான அடிப்படைகளை கூறியுள்ளது. மரபினம், மதம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவின் உறுப்பினர் அல்லது குறிப்பிட்ட அரசியல் கருத்தோட்டம் கொண்டவர் ஆகியோர் வதைக்கப்பட்டு அதன் காரணமாக தாங்கள் வாழ்ந்த நாட்டை விட்டு வெளியேறி வருவார்களானால், அவர்கள் அகதிகளாகக் கருதப்படுவார்கள் எனக் கூறுகிறது. ஆனால், இந்திய அரசின் சட்டம் மத ரீதியாக வதைக்கப்படுவதை மட்டுமே குறிப்பிடுகிறது.
ஐ.நா. அகதிகளுக்கான ஆணையம் வெளியிட்டுள்ள கையேட்டில், அகதி என்பதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஒருவருடைய தனிப்பட்ட மற்றும் குடும்பப் பின்னணி, ஒரு குறிப்பிட்ட மரபினம், மதம், தேசிய இனம், சமுதாயம்  அல்லது அரசியல் குழு ஆகியவற்றில் அங்கம் வகித்து அதன் காரணமாக அவர் உயிருக்கு அச்சம் தரும் சூழ்நிலையில் வெளியேறி வர நேர்ந்தவர் அகதியாவார்.
ஆனால், ஒருவரின் குறிப்பிட்ட மத  அடையாளம்தான் அவர் வதைக்கப்படுவதற்குக் காரணம் என தேசிய மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் கூறுகிறது. இதை ஐ.நா. அகதிகள் ஆணையம் ஏற்கவில்லை. அதனுடைய கையேட்டில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் என்பது மட்டுமே அகதியின் தகுதியாகக் கருதப்படமாட்டாது என தெளிவாகக் கூறுகிறது.
உலகின் முன் தலை குனிவு
உலக அரங்கில் இந்தியாவின் பெருமை மிகவும் சரிந்துள்ளது, உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு எனக் கருதப்பட்ட இந்தியா மிக மோசமான நடத்தைகளின் மூலம் உலக அரங்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் அடைக்கலம் புக வருபவர்களுக்கு அகதி தகுதி தருவதுதான்  நோக்கமென்றால், அதற்குரிய வகையிலான அகதிகள் சட்டம் ஒன்றினையும், அதை செயல்படுத்துவதற்கான உலகத் தரத்திலான திட்டங்களையும் விருப்பு வெறுப்பில்லாமல் வகுத்திருக்கவேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தைப் படித்துப் பார்த்தால் அண்டை நாடுகளிலிருந்து வரும் முசுலிம்கள் மட்டுமே சட்டத்திற்குப் புறம்பான குடியேறிகள் எனக் கருதப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. ஏற்கெனவே தென்னாசியப் பகுதியில் இந்தியா தனது செல்வாக்கை முற்றிலுமாக இழந்துவிட்டது. மாறாக, இந்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு ஓங்கியுள்ளது. தில்லியில் உள்ள வெளியுறவுத்துறை பொறுப்பாளர்களுக்கு இது புரியாமல் இல்லை, ஆனால், அவர்கள் உள்நாட்டு அரசியல் ஆதாயங்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். தேர்தல் வெற்றிகளுக்கேற்ற வகையில் வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொள்கிற போக்கு மேலோங்கியுள்ளது.
காசுமீர் பிரச்சனையில் தொடங்கி தேசிய மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் வரை ஒன்றன்பின் ஒன்றாக தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டதின் விளைவாக சர்வதேசச் சமுதாயத்தின் நல்லெண்ணத்தை  முற்றிலுமாக இந்தியா இழந்து நிற்கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் இச்சட்டத்தை பாகுபாடு உள்ளது என கண்டித்துள்ளார். கடந்த டிசம்பரில் இந்தியாவின் அரசியல் சட்டம் சனநாயக கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு இணங்க மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அமெரிக்க அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச நீதிமன்றம் இச்சட்டத்தை மிகுந்த பாகுபாடு கொண்டதாகவும், தன்னிச்சையானதாகவும் கண்டித்துள்ளது. மேலும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்குக் கட்டுபட்ட இந்தியா, அதற்கு மாறாக நடப்பதாகவும் கூறியுள்ளது.
தேசியக் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பபெறவேண்டும் என்று ரோமிலா தாபர், அருந்ததிராய் போன்ற 600க்கும் மேற்பட்ட முதன்மையான அறிஞர்கள் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். உலகளவிலும் இச்சட்டத்திற்கு எதிராக  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்க அரசின் மத உரிமைகள் தொடர்பான கூட்டாட்சி முகமை என்ற அமைப்பு உள்துறை அமைச்சர் அமித்சா மீது தடை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென பரிந்துரைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இதற்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் இந்தியாவுக்கு எதிராக எழுந்துள்ள இந்த  கண்டனத்தின் அடுத்த நடவடிக்கை என்பது இந்தியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை விதிக்கும் கட்டமாகும்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் அரசு ஆட்சி செய்த காலத்தில், கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறிக் கொள்கையைக் கடைபிடித்தது. இதற்கெதிராக ஐ.நா. பேரவையிலும், பிரிட்டிசு காமன்வெல்த் அமைப்பிலும் இந்தியா கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது வரலாறாகும். இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள் பலவும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் விளைவாக தென்னாப்பிரிக்கா பணிய நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன, மொழி, மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் உலக நாடுகள் பலவற்றிலும் இழைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, அரசியல் ரீதியான துன்புறுத்தல்களும் நடைபெறுகின்றன. சர்வாதிகார நாடுகள் பலவற்றில் சனநாயகக் கருத்துக் கொண்டவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. ஆப்கானிசுதான், பாகிசுதான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களைப் பாதுகாப்பதுதான் தேசியக் குடியுரிமைச் சட்டத்தின் நோக்கம் என்று சொன்னால், வங்கதேசப் பெண் எழுத்தாளரான தசுலிமா நசுரின் அந்நாட்டு அரசின் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளாரே அவருக்கு குடியுரிமை அளிக்க இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவது ஏன்? அதைபோல, பாகிசுதானின் இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடி அதன் விளைவாக உலக நாடுகள் பலவற்றில் அடைக்கலம் புகுந்திருக்கும் முசுலிம் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் குடியுரிமைத் தர இச்சட்டம்  மறுப்பது ஏன்?
இயற்கை சூழல் மாறுபாட்டாலும் மக்கள் இடம் பெயரும் அவல நிலை உருவாகியுள்ளது. உலக வெப்பமயமாதல், கடல் நீரின் மட்டம் உயர்தல், வாழ்நிலம் பாழ்நிலமாதல் போன்றவைகளால் தாங்கள் வாழ்ந்த இடங்களைவிட்டு மக்கள் இடம் பெயருகிறார்கள். பல்வேறு நாடுகளில் இயற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதின் விளைவாகவும் மக்களின் இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. இவ்வாறு இடம்பெயர்பவர்கள் சகல மதங்களையும், இனங்களையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இயற்கையும், ஏழ்மையும் மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை.
சர்வதேச அரசியலில் முதன்மைப் பெறவேண்டும் குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக அங்கம் பெறவேண்டும் என இந்தியா கொண்டுள்ள விருப்பமும், அதற்கான முயற்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பிற்போக்குத்  தன்மை வாய்ந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு நெறியற்ற நாடாக பாகிசுதானை உலகம் கருதியது. இப்போது இந்தியாவைப் பற்றியும் அதே கருத்தோட்டம் உலகில் உருவாகியுள்ளது.  
மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், இராசசுதான், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கேரளம், பஞ்சாப், மேகாலயா, மணிப்பூர்,  சத்தீசுகர், புதுச்சேரி, மிசோராம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இச்சட்டத்தை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். பா.ச.க.வின் கூட்டணி கட்சி ஆளும் பீகாரின் முதல்வரும் இவ்வாறே அறிவித்திருக்கிறார். ஆனால், இச்சட்டத்தை செயல்படுத்த மறுப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை இல்லாத மாபெரும் அரசியல் சட்ட நெருக்கடி எழுந்துள்ளது. எதிர்ப்புத் தெரிவித்துள்ள  மிகப்பெரும்பாலான மாநிலங்களில் மிக அதிகமான மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களும் இருக்கின்றன. பா.ச.க.வின் கூட்டணி கட்சிகளின் ஆளுகைக்குட்பட்ட அசாம், பீகார் போன்ற மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவெங்கும் பெரும்பான்மை மக்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையை உணராமல் எதிர்க்கும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க நடுவண் அரசு முற்படுமேயானால் நாடு இதுவரை கண்டிராத அளவில் பெரும் கொந்தளிப்பு மூளும் என்பதில் ஐயமில்லை. இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கும் மாநிலங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்போ அல்லது தேசியப் பதிவேடுகளோ உருவாகாது. அம்மாநிலங்களில் நடுவண் அரசே இதை செய்யவும் முடியாது.
நாடு எதிர்நோக்கியிருக்கக் கூடிய இந்த மாபெரும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மத்திய அரசு  இச்சட்டத்தையும், அதனுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருக்கிற பதிவேடுகள் மக்கள் மீதும், நாட்டின் மீதும் பாய்ந்துள்ள திரிசூலம் ஆகும். இம்மூன்று திட்டங்களையும் பா.ச.க. அரசு கைவிடவேண்டும். இல்லையேல் நாடு அமைதியை இழக்கும். நாட்டின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக  அமையும்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.