திசை மொழிகளின் கலவையே இந்தி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 மார்ச் 2020 14:42

"இந்தி மொழி ஒன்றுதான் இந்தியாவை இணைக்கும் தகுதி வாய்ந்தது" என நடுவண் உள்துறை அமைச்சர் அமித் சா கூறியிருக்கிறார். உண்மையில் நாட்டை சட்டரீதியாக இணைப்பது இந்தியாவின் அரசியல் சட்டமே என்பதை அவர் உணரவில்லை.

பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட பல நாடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரே ஒன்றியமாக இணைத்துக் காட்டியுள்ளது. உண்மையில் பல்வேறு மொழிப் பேசும் நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கண்டத்தைப் போல பல்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும், வரலாறுகளையும் கொண்ட பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு துணைக்கண்டமே இந்தியாவாகும். இதைச் சற்றும் உணராத வகையில் அமித் சா பேசியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டியம், வங்காளம் போன்ற பழம் பெரும் மொழிகள், இந்தி மொழிப் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தோன்றிய மொழிகளாகும். குறிப்பாக, தமிழ்மொழி 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த மொழியாகும். இந்திய மொழி களுக்கான இலக்கணங்களில் தமிழ் மொழியின் தொல்காப்பியமே முதன்முதலில் தோன்றியதாகும். செவ்வியல் மொழியான தமிழில் படைக்கப்பட்ட சங்க இலக்கியங் களும் காலத்தால் உலகத்தின் மிகப் பழமையான இலக்கியங்களாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி உள்பட 22 மொழிகளை இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணை நாட்டின் மொழிகளாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த 22 மொழிகளில் மிகப் பிற்காலத்தில் தோன்றிய மொழியான இந்தி மட்டுமே நாட்டை இணைக்க முடியும் என அவர் கூறியிருப்பது முற்றிலும் தவறானதாகும்.

மொழி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான மக்கள் குழுவின் தலைவர்   ஜி.என். திவி இதுகுறித்து பின்வரும் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1369 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் ஒரு மொழிதான் இந்தியாகும். மேலும் இந்தி பேசும் மாநிலங்களாகக் கருதப்படும் உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கூட பெரும்பான்மை மக்களால் இந்தி பேசப்படுவது இல்லை. இந்த மாநிலங்களில் போச்புரி என்னும் மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது. இந்தியின் திசைமொழிகளில் ஒன்றாகக் கூறப்படும் இந்த மொழி 5 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகின்றது. ஆனால் அதிக எண்ணிக்கையுள்ள மக்களால் பேசப்படும் மொழி இந்தி என கூறுவது தவறானது. இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் இந்தி பேசப்படவில்லை என்பதுதான் நிலைநிறுத்தப்பட்ட உண்மையாகும்.

எந்த மொழியானாலும் அதன் தகுதிக்கு மிஞ்சிய வகையில் பேசப்படும் எல்லையைப் பெருக்கினால் அதன் விளைவாக அந்த மொழி சிதைவடையும். - கடந்த காலத்தில் இலத்தீன் மொழிக்கு இந்த கதிதான் ஏற்பட்டது. இப்போது ஆங்கில மொழிக்கும் அதேகதி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தி மொழியைப் பாதுகாக்க வேண்டுமென அமித் சா விரும்புவாரானால் இந்திமொழி பேசுவோரிடம் மட்டுமே அம்மொழிக்கு முதன்மைக் கொடுக்க முயலவேண்டும். மக்கள் எந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அரசு தலையிடக் கூடாதுஎன கூறினார்.

அவருடன் இருந்த மற்றொரு அறிஞரான யோகேந்திர யாதவ் திவி கூறியதை ஆதரிக்கும் வகையில் குறிப்பிடுகையில் “19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஒரு தேசிய இனம், ஒருமொழி, ஒரு பண்பாடு என்பதை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் படுதோல்வியடைந்ததை அமித் சா போன்றவர்கள் உணரவேண்டும். இந்த கருத்தோட்டத்தின் விளைவாக போர்கள் மூண்டன. இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. அழிவுக்கு வழிவகுக்கும் மேற்கண்ட சிந்தனையோட்டத்திலிருந்து உலகம் விலகி நிற்கிறது. ஆனால் நம்முடைய ஆட்சியாளர்கள் அந்த அழிவுப் பாதையில் செல்லத் துடிக்கிறார்கள் வரலாறு, பண்பாடு, நாகரீகம் போன்றவற்றால் பன்மைத் தன்மை வாய்ந்த நமது நாடு பல்வேறு மொழிகளைப் பேசுகிற சமுதாயங்களைக் கொண்ட நாடாகும்என்றார்.

“1955-56-ஆவது ஆண்டுகளில் மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்கும் வேலை தொடங்கியது. இதன் மூலம் நமது மாநிலங்களுக்கு மொழிவழி அடையாளங்கள் உருவாயின. அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே கல்வி, ஆட்சி, நீதிமன்ற மொழிகளாயின. பல மொழியினர் வாழும் கூட்டு மாநிலங்களாக இருந்தபோது, ஆங்கிலம் ஆட்சிமொழியாக விளங்கிற்று. மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநில மொழிகள் ஆட்சிமொழிகள் ஆயின. ஆங்கிலம் அகற்றப்பட்டது. ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியை ஆட்சிமொழியாக்கும் முயற்சி உருவான போது கடும் எதிர்ப்பு எழுந்தது. 1965ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக் கானவர்கள் சிறை புகுந்தனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் அகில இந்திய காங்கிரசுத் தலைவராக காமராசர் இருந்தார். குத்தூசி குருசாமி அவர்கள் தலைமையில் புகழ்பெற்ற சட்ட அறிஞர் மோகன் குமாரமங்கலம், தமிழறிஞர் மு. வரதராசனார், காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த செங்கல்வராயன், திருமதி அனந்தநாயகி, சோ. லட்சுமிரதன் பாரதி, திருமதி. இலட்சுமிபாரதி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் காமராசரைச் சந்தித்துப் பேசினர். இந்திக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டம் குறித்தும், அதன் விளைவாக தமிழக மக்களின் கொந்தளிப்புக் குறித்தும் அவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்தி பேசாத தலைவர்கள் எதிர்ப்பு

1965ஆம் ஆண்டு சனவரி 31ஆம் நாள் அன்று பெங்களுரில் காங்கிரசுத் தலைவர் காமராசர் தலைமையில் கர்நாடக முதலமைச்சர் எஸ். நிசலிங்கப்பா, வங்காள காங்கிரசுத் தலைவர் அதுல்யா கோசு, ஆந்திராவைச் சேர்ந்த மூத்த மத்திய அமைச்சர் சஞ்சீவி ரெட்டி ஆகியோர் கூடிப் பேசி வெளியிட்ட அறிக்கையில் ்இந்திப் பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க இந்தி ஆதரவாளர்கள் செய்யும் முயற்சி நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைத்துவிடும் என்று எச்சரித்தனர்.

1965ஆம் ஆண்டில் சூன் மாதத்தில் புதுதில்லியில் காங்கிரசுச் செயற்குழுவின் சிறப்புக் கூட்டம் ஒன்றினை காமராசர் கூட்டினார். இக்கூட்டத்தில் மொழிப் பிரச்சனைக் குறித்து இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. தலைவர் காமராசர் கூறிய யோசனை ஏற்கப்பட்டு இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டது. “ஆங்கிலம் அகற்றப்படும் இடங்களில் எல்லாம் மாநில மொழிகள் விரைவில் அமர்த்தப்படவேண்டும். மாநிலங்களில் அந்தந்த மொழிகளே ஆட்சிமொழிகள் ஆவதை விரைவுபடுத்தப்படவேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டு அது வளமாக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகே இணைப்பு மொழியாக அதை பயன்படுத்துவது குறித்து ஆராயவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளையும் வளம்பெறச் செய்யும் திட்டம் ஒன்றினை மத்திய அரசு வகுத்துச் செயல்படுத்தப்படவேண்டும். மத்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளை அவரவர்கள் தாய்மொழியில் எழுதுவதற்கு ஏற்ப அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய அரசு தேர்வு மொழிகளாக ஆக்கவேண்டும்இந்தத் தீர்மானம் இந்தி பேசாத மக்களின் அச்சத்தை அகற்றியது.      

இந்தப் பிரச்னைக்கு பரிகாரம் காண மும்மொழித் திட்டம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தென் மாநிலங்களில் தாய்மொழியோடு ஆங்கிலமும், இந்தியும் மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் வடமாநிலங்களில் இந்தி, ஆங்கிலம், தென்னாட்டு மொழிகளில் ஒன்றினையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்றும் இத்திட்டம் கூறியது. ஆனால் இது வெறும் காகிதத் திட்டமாகவே நடைமுறையில் ஆக்கப்பட்டது. வட மாநில மாணவர்கள் தென்னாட்டு மொழிகளில் ஒன்றை கற்பதற்குப் பதில் சமற்கிருத மொழியைக் கற்கும்படி தூண்டப்பட்டார்கள். மும்மொழித் திட்டம் படுதோல்வி அடைந்தது.

மதரீதியாக மக்களை பா.. பிளவுபடுத்தியதைப்போல மொழி ரீதியாகவும் பிளவுப்படுத்த அக்கட்சி செய்யும் முயற்சியே இந்தியை ஆட்சிமொழியாகத் திணிக்கும் போக்காகும். இத்தகைய இந்திவெறிப் போக்கு நாட்டைப் பல துண்டுகளாகச் சிதறடித்துவிடும் என்பதை அமித்சா போன்றவர்கள் உணரவில்லை.

வழக்கொழிந்த வடமொழிக்கு ரூ. 643கோடி!

சீரிளமைத் திறன் குன்றாத செந்தமிழுக்கு ரூ. 22கோடி!

உலகச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், சமற்கிருதம், தமிழ் ஆகியவற்றில் தமிழ்மொழித் தலைவர் மற்றைய செம்மொழிகள் வழியாகவும் பேச்சு, எழுத்து வழக்கின்றி மறைந்துவிட்டன. அவற்றில் சில பண்டைய மொழி மரபுகளை முற்றிலுமாக இழந்து புதிய மொழிகளாகக் கிளைத்துள்ளன.

தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மொழியில் எழுதினார்களோ அதே தமிழ்மொழி இன்றும் சீரிளமை திறம் குன்றாது வளமுடன் வளர்ந்தோங்கி வருகிறது.

சமற்கிருத மொழி இந்தியாவில் இன்று சுமார் 24ஆயிரம் பேர்களால் மட்டுமே பேசவும், எழுதவும் பயன்படுகிறது. ஆனால், இந்த மொழிக்கு இந்திய அரசு ஆண்டிற்கு ரூபாய் 643கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தியாவில் ஏறத்தாழ 8கோடி மக்களாலும், இந்தியாவிற்கு வெளியே 2கோடிக்கும் அதிகமான மக்களாலும், உலகில் 10கோடிக்கு மேல் பேசப்படும் செம்மொழியான செந்தமிழ் மொழிக்கு ரூபாய் 22கோடி மட்டுமே இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்திய அரசு இழைக்கும் இந்த ஓர வஞ்சினையை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கடந்த கால வரலாறு

இந்தி ஆதிக்கவாதிகள் கடந்த கால வரலாற்றை சிறிதும் உணராத போக்கில் செயல்படுகின்றனர். விடுதலை பெற்ற இந்தியாவுக்கான அரசியல் யாப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் ஆட்சிமொழியாக இந்தியை ஆக்குவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.தமிழகம் மட்டுமல்ல, இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி ஆக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மூத்த தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் மருமகனும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு குடும்பத்தோடு சிறை சென்று ஈக வரலாறு படைத்தவரும், அப்போது அரசியல் யாப்பு அவையில் அங்கம் வகித்தவருமான எல். கிருட்டிணசாமி பாரதி அவர்கள்நமது அரசியல் அமைப்புச் சட்டமும்- மொழிகளும்என எழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இந்தியாவின் அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் அந்த அவையில் அங்கம்வகித்த என் போன்றவர்கள் இந்தி ஆட்சிமொழியாவதைக் கடுமையாக எதிர்த்தோம். கோவை நகரத்தைச் சேர்ந்தவரும் அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினராக இருந்தவருமான டி..இராமலிங்கம் (செட்டியார்) இந்தியை எதிர்த்து அரசியல் நிர்ணயசபையில் முழங்கினார். ஆதிக்க மனப்பான்மையை விட்டொழிக்குமாறு இந்தி பேசுபவரை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் பேசுகையில் அவர் பின்வருமாறு கூறினார். ்தென்னாடு மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கிறது. சுதந்திரம் பெற்றுவிட்ட உணர்வு தென்னாட்டில் இல்லை. தென்னாட்டிலிருந்து வடகோடியில் உள்ள டில்லிக்கு வந்திருக்கிற எங்களைப் போன்றவர்கள் இங்கே அந்நியர்களாகவே உணருகிறோம். இத்தகைய உணர்வை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டால் ஒழிய தென்னாடு சுலபத்தில் திருப்தியடையாது. இதன்விளைவு என்னவாகும் என்பதை நான் சொல்லவிரும்பவில்லை. டி.. இராமலிங்கம் செட்டியாரின் இந்த முழக்கத்தை தொடர்ந்து திருவாங்கூர்- கொச்சியைச் சேர்ந்த பி.டி.சாக்கோ, மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோரும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்கள். ஆங்கிலமே தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றும், தேசியமொழி பற்றி முடிவு செய்யும் பொறுப்பை எதிர்காலத்தில் அமையவிருக்கும் நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.

அகில இந்திய முசுலீக் தலைவரான காயிதே மில்லத் முகமது இசுமாயில் சாகிப் அவர்கள் உரையாற்றும்போது “இந்தியாவின் ஆட்சிமொழியாக விளங்க முழுத் தகுதி படைத்த மொழி என்னுடைய தாய்மொழியான தமிழ்மொழியே ஆகும்என உறுதிபடத் தெரிவித்தார். அரசியல் யாப்பு அவையில் அங்கம் வகித்த தமிழ்நாட்டு உறுப்பினர்களில் அவர் ஒருவர் மட்டுமே இவ்வாறு இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார் என்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் நிர்ணயசபையில் இதுபற்றி நடந்த விவாதங்களையும் எப்படி ஒரே ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி ஆட்சிமொழியாகத் திணிக்கப்பட்டது என்பது பற்றியும் கிருட்டிணசாமி பாரதி பின்கண்டவாறு தெளிவாக விளக்கியிருக்கிறார்.

அரசியல் நிர்ணய மன்ற காங்கிரசுக் கட்சி

விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி, விடுதலைக்கு வழி வகுத்த இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் ஆதரவிலேயே நாங்கள் பெரும்பான்மையினர் அரசியல் மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டோம். எனவே, அரசியல் நிர்ணயமன்றகாங்கிரசுக் கட்சி” என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தை வகுத்ததில் பெரிய பங்கு இந்தக் கட்சியினையே சேரும். இந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் பட்டாபி சீதாராமய்யா என்பவராவார்.

அரசியல் நிர்ணய மன்றம்

அரசியல் நிர்ணய மன்ற சபைக்கு இராசேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கிட, அம்பேத்கரை தலைவராகக் கொண்ட குழு (Drafting Committee) ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழு சட்டப்பிரிவுகளை வரைந்தது. அரசியல் நிர்ணய மன்றத்தில் முன்னிலைப்படுத்து முன்னர், அப்பிரிவுகள் ஒவ்வொன்றும், பரிசீலனைக்காகவும், ஒப்புதலுக்காகவும், அம்பேத்கர் எங்கள் கட்சிக் கூட்டத்தில் முன்னிலைப்படுத்துவார். அவற்றை விவாதித்து உரிய திருத்தங்கள் செய்வோம். நாங்கள் இறுதியாக முடிவு செய்த வடிவத்திலே அரசியல் நிர்ணய மன்றத்தில், அம்பேத்கரால் முன் மொழியப்பட்டு விவாதத்திற்குப்பின் நிறைவேற்றப்பட்டு, அரசியல் சட்டத்தில் இடம் பெறுவதாகும்.

எனவே, எங்கள் கட்சிக்கட்டத்தின் முடிவுகளுக்குச் சிறந்த முக்கியத்துவம் உண்டு. இந்தப் பின்னணி பலருக்கும் தெரியாதிருக்குமாதலால் ஈண்டு இந்த நடைமுறை பற்றி எடுத்துரைக்கலானேன். எனவே, எங்கள் கட்சிக் கூட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகிறது.

அரசியல் சட்டத்தில் மொழிப்பிரிவு

அரசியல் சட்டத்தின் 17 ஆவது பாகம் மொழியைப் பற்றியது. இதன் தலைப்பு அலுவலக மொழிப்பிரிவு 343 முதல் பிரிவு 351 வரை, ஒன்பது பிரிவுகளைக் கொண்டது.

அத்தியாயம் 1. ஒன்றிய அரசின் மொழி Part XVII Official Language Chapter I-Language of the Union பிரிவு 343, ஒன்றிய அரசின் மொழி பற்றியது. இது பற்றிய சர்ச்சை எங்கள் கட்சிக் கூட்டத்தின் பரிசீலனைக்கு வந்தது. மிகுந்த பரபரப்பையும் அளவு கடந்த உணர்வையும் கோபத்தையும் உண்டாக்கியது, இந்த மொழிப்பிரச்சினைதான். கட்சிக் கூட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நாளேடுகளில் இடம் பெறலாகாது என்ற கட்டுப்பாடு இருந்தபடியால், இவை பற்றிய செய்திகள் வெளிவரவில்லை. இது பிற்காலத்தில் மொழி பற்றிய சில தவறான கருத்துக்கள் நிலவுவதற்கு இடங்கொடுக்கலாயிற்று. அவைபற்றிக் குறிப்பிட்டுத் திருத்த முற்படுவதும் எனது கடமையாகும்.

இனி செய்திக்கு வருகிறேன். இந்தியா, பல மொழிகள் கொண்ட மாநிலங்களின் ஒன்றிய ஆட்சியாகும். ஒன்றிய ஆட்சி, தானியங்கவும் மற்ற மாநிலங்களோடு தொடர்பு கொள்ளவும், அரசின் ஆட்சி மொழி வேண்டும். அதை அரசியல் சட்டத்தின் குறிப்பிட வேண்டுமல்லவா? அத்தகைய அரசுத்துறைப் பணி மொழியினை எந்த அடைமொழி கொடுத்துக் குறிப்பிடலாம்? மேலும் எந்த மொழி ஒன்றிய ஆட்சியின் (Union Government) ஆட்சி மொழியாக இடம்பெற வேண்டும்?

இதற்கு, ஆங்கில மொழியும் இந்தி மொழியும் கடுமையாகப் போட்டி போட்டன.

ஒன்றிய அரசு மொழிக்கு அடைமொழி?

சட்டம், ஆங்கிலத்தில் ஆக்கப்படுவதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். Language என்ற ஆங்கிலச் சொல்லுக்கு முன் எந்த ஆங்கிலச்சொல்லை அடைமொழியாகக் கொடுத்தால், நாம் கருதும் பொருளைக் குறிப்பதாகும் என்ற ஆய்வு எங்கள் கட்சியில் நடைபெற்றது. பல சொற்கள் ஆராயப்பட்டன. அவையாவன:-

(1)     Common               (2) Linquafranca               (3) State

(4)   Official                  (5) Governmental              (6) Executive

(7)   Ruling                     (8) National                        (9) Administrative

பலமணிநேர ஆய்வுக்குப் பின்னர் Official என்ற ஆங்கிலச் சொல்லே அடைமொழிக்குப் பொருத்தமானது என்ற அம்பேத்கரின் பரிந்துரை, கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சொல் உலகத்தில் மூன்று நாடுகளின் அரசியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடற்பாலது. அவையாவன (1) அயர்லாந்து (Ireland), (2) ஆசுதிரியா (Austria) சட்டப்பிரிவு 8, (3) குரோட்ஸ் மேலும் செர்பியர்கள் சலோவன்ஸ் அரசாங்கம் (Kingdom of the serbs"," croats and slovens) பிரிவு 3 (Select constitutions of the world by B. Shiva Rao). ‘Administrative’என்ற சொல்லை நான் வற்புறுத்தினேன். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

‘National’என்ற சொல் விரிவான ஆய்வுக்குப் பின்னர் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. மேலும் ‘National’என்ற சொல், ஒரு மொழிக்கோ, பல மொழிகளுக்கோ அடைமொழியாக, அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை என்று திட்ட வட்டமாகக் குறிப்பிட்ட விரும்புகிறேன். இது பலருக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் இதுவே உண்மை. சந்தேகப்படுவோர், சட்டத்தை ஊன்றிப் படிப்பார்களாக! ஏனென்றால் இந்தத் தவறினை ஒன்றிய அரசின் அமைச்சர்கள், முத்தமிழ் வித்தகர்கள், பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் நாளும் இழைத்து வருவதைக் கண்டு வருகிறேன். இயன்ற மட்டும் திருத்த முற்பட்டும் வருகிறேன். தமிழ் நாளேடுகள், வார, திங்களேடுகள் இதற்கு ஒத்துழைக்க வில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அலுவலக மொழி (ஆட்சி மொழி) (Official language)

இனி விஷயத்துக்கு வருவோம். எந்த மொழியினை ஒன்றிய அரசின் அலுவலக மொழி (Official language) ஆக அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கேள்வி எங்கள் கட்சிக் கூட்டத்தில் எழுந்தது. அதுபோழ்து 1946-இல் ஆங்கில மொழியே நடுவண் அரசின் (Central Government)இதுவே அப்பொழுது இந்திய அரசினைக் குறிப்பிடும் சொல்லாகும்) ஆட்சி மொழியாக இருந்து வந்தது. எனவே, அங்கிலமே தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று ஒரு சாராரும், இந்தி மொழியே வேண்டும் என்று இன்னொரு சாராரும் வாதிட்டனர். வாதிட்டனர் என்றா சொன்னேன்? கச்சை வரிந்து கொண்டு கடும்போரிட்டனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். உரத்த குரலில் காரசாரமான விவாதங்கள்கோப உணர்வுடன் சொற்கள் தாண்டவமாடின. இரு சாராரும் கட்டுக்கடங்காத உணர்ச்சி வசப்பட்டனர். ஆங்கில மொழியின் அணியில், உரத்த குரலில் வீராவேசமாகப் போர் முரசு கொட்டிய கோவை டி..இராமலிங்கம் செட்டியாரை நான் மறக்குமாறில்லை! விவாதம் கடுமையான சூடு பிடித்து உச்சக் கட்டத்தை அடைந்தது. அதுபோழ்து, தலைமையமைச்சர் நேரு அவர்கள், கண்களில் கனல் பொறி பறக்க, எழுந்து நின்று, உரத்த குரலில், ‘விவாதம் போகிற போக்கைப் பார்த்தால், இங்கே கொலை விழுந்தாலும் நான் வியப்பதற்கில்லை’அந்தக் கோரக்காட்சியை நான் பார்க்க விரும்பவில்லை; நான்வெளியேறுகின்றேன், என்று சொல்லிவிட்டுத் தம் கோப்புகளை எடுத்துக் கொண்டு, வெளிக்கிளம்பித் தம் காரில் ஏறிச் சென்றுவிட்டார். கட்சிக் கொறடா சத்யநாராயண சின்கா என்பவர் அவர் பின்னால் காரில் சென்று, நேரு அவர்களைச் சாந்தப்படுத்திக் கூட்டத்திற்கு அழைத்து வந்தார். கூட்டத்தில் அமைதி நிலவியது. நேரு ஒருயோசனை கூறினார். “பேசியது போதும். இரகசிய வாக்கெடுப்பு                          (Voting by secret)மூலம் இப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்” என்றார். வாக்குப்பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. உறுப்பினர்களுக்கு வெள்ளைத்தாள் கொடுக்கப்பட்டது. அந்தத் தாளில் நாங்கள் ஆதரிக்கும் மொழியில் பெயரை எழுதிப் பெட்டியில் போடவேண்டும்.வாக்கெடுப்பு அமைதியாக நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவு- ஆங்கிலத்தை ஆதரிப்போர் 44 (வாக்குகள்) இந்தியை ஆதரிப்போர் 44 (வாக்குகள்) சரிசமமான நிலை.

எந்த மொழிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. இந்த நிலையில் நேரு அவர்கள் கூறினார்; ிமிகவும் முக்கியமான இவ்விஷயத்தைச் சிறிதளவே உறுப்பினர்கள் கொண்ட கூட்டத்தில் முடிவு செய்வதை விட, அனைத்து உறுப்பினர்கள் கொண்ட கூட்டத்தில் முடிவுசெய்வதே முறையும் நியாயமுமாகும். எனவே, அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். எனவே, இக்கூட்டத்தை ஒத்திவைக்கவேண்டும்ீ என்றார்அவர் யோசனை ஏற்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சின்னாட்கழித்து அடுத்த கூட்டம் கூடியது. ஆந்திர நாட்டுப் பிரமுகர் பட்டாபி சீதாராமய்யா அவர்கள் தலைமை தாங்கினார். பிரதமர் நேரு அவர்கள் கூட்டத்தில் எங்களிடம் ஒரு வாக்குறுதி வேண்டிப்பெற்றார். அவர் சொன்னார்; “இந்தப் பிரச்சினை, மிகுந்த உணர்ச்சிவசமாக்கப்பட்டுள்ளது. மக்கள்வழிமுறைப்படி வாக்கெடுப்போம். இரண்டில் ஒரு மொழிக்குத்தானே முடிவு ஏற்படும்! வெற்றி பெற்ற அம்மொழிக்கு எதிர் மொழியாளர்கள் வருத்தமுறுதல், கோபமுறுதல், இயற்கைதான்! அந்த வருத்தத்தைச் செயல்படுத்திவிடக் கூடாது. இந்தப் பிரிவு, அரசியல் சட்ட மன்றத்தில் வரும் போது, இங்கு ஏற்படும் முடிவுக்கு எல்லோரும் ஒருமித்த ஆதரவளிக்க வேண்டும். இதற்கு உறுதிமொழி தரவேண்டும்ீ என்றார். அவர் வேண்டியவாறு நாங்கள் உறுதிமொழியினை அளித்தோம்.

பின்னர் இரகசிய முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. எங்கள் ஆதரவை ஒரு தாளில் எழுதி வாக்குப் பெட்டியில் போட்டோம். வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவு என்னே விந்தையிலும் விந்தை! ஆங்கிலத்துக்கு 77 வாக்குகள்: இந்திக்கும் 77 வாக்குகள் மீண்டும் எம்மொழிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லை. இந்த இக்கட்டான நிலையில்தான், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய டாக்டர் பட்டாபி சீதாராமய்யா அவர்கள் தலைவர்க்குரிய தனது வாக்கினை (Casting vote)இந்தி மொழிக்கு ஆதரவாக அளிப்பதாகக் கூறி, இந்தி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்தி ஆதரவாளர்களின் கரவொலி வானைப் பிளந்தது. முதல் 15 ஆண்டுகள் வரை, ஆங்கிலம் அலுவலக மொழியாகத் தொடர்ந்து இருந்து வரும் என்று அப்பிரிவில் 343 (1) ஆக இணைக்கப்பட்டது. வரலாற்றில் இடம்பெறுவதற்குரிய இந்தக்கட்சிக் கூட்டங்கள், புதுதில்லி, கர்சான் சாலையில் (Curzon Road)உள்ள “அரசியல் சட்ட இல்லம்” (Constitution House) என்ற கட்டிடத்தில் நடைபெற்றன.

இந்திக்கு எதிராக 77 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றால், அதன் பொருள் என்ன? தமிழ்நாட்டு உறுப்பினர்கள் மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் இந்திக்கு எதிராக வாக்களித்தனர் என்ற உண்மையை இது தெளிவாக்குகிறது. ஆனால், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தியவர்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தி எதிர்ப்பாளர்களையும் அழைத்துப் பேசி இந்தப் போராட்டத்தை இந்திய அளவில் விரிவுபடுத்தத் தவறிவிட்டனர் என்பதை இங்கு சுட்டிக்காட்டிப் பதிவு செய்கிறேன்.

பிரிவு 343(1):-

“தேவநாகரி எழுத்தில், இந்தி ஒன்றிய அரசின் அலுவலக மொழியாக இருக்க வேண்டும்.

Article 343 (1): The official language of the Union shall be Hindi in Devanagari Script 343 (2) மேற்கண்ட பிரிவு எவ்வாறு இருப்பினும், இவ்வரசியல் சட்டத் தொடக்கத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை, முன்னர், ஒன்றிய அரசின் அலுவலகக் காரியங்களுக்குப் பயன்பட்டுவந்த எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே தொடர்ந்து இருந்து வர வேண்டும்.

Article 343 (2): Notwithstanding anything in clause (1) for a period of 15 years from the commencement of this constitution"," the English language shall continue to be used for all official purposes of the union for which it was being used immediately before such commencement.

மொழிபற்றி நாங்கள் எங்கள் கட்சியில் தீர்மானித்தபடியே, அரசியல் மன்றத்தில் ஒரே மனதாக நிறைவேற்றப் பட்டு அரசியல் சட்டத்தில் இடம் பெற்றது.

இந்தி மொழி அரசியல் சட்டத்தில் அரியாசனம் ஏறிய நிகழ்ச்சி வரலாறு இதுவே. இதனை இத்துணை விரிவாக நான் எடுத்துரைப்பதற்குச் சிறந்த காரணமுண்டு. நேரு அவர்களுக்கு இந்தப் பின்னணி நன்றாகத் தெரியுமாதலால்தான், இந்தி மொழி பேசாத மாநில மக்களின் நியாயமான கருத்திற்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வகையில், “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பிடும் காலம் வரை, ஆங்கிலமொழி ஒன்றிய அரசின் அலுவலக மொழியாகத் தொடர்ந்து இருந்துவரும்”, என்ற சிறந்த வாக்குறுதியை அளித்தார். அவர் வாக்குறுதி வாழ்க. இந்த வாக்குறுதியின் தொடர்பாக, ஆங்கிலத்தைத் தொடர்ந்து அலுவலக மொழியாக இருந்து வர வகை செய்து நாடாளுமன்றத்தில் 1963-ஆம் ஆண்டு 19ஆவது சட்டமாகஅலுவலக மொழிச் சட்டமாகநிறைவேற்றப்பட்டது. (Official Language Act No.19of1963) 1968-இல் அதற்கு ஒரு திருத்தச்சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது”.1

இந்தி ஆட்சிமொழியாக வாக்களித்த தலைவர் யார்?

ஆட்சிமொழிச் சட்டம் மொழி நிறைவேற்றப்பட்ட விதம் பற்றியும் சட்டத்தில் “தேசிய மொழி” என்பது பற்றியும் சில தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அக்கருத்துக்கள் இந்திய அரசின் அமைச்சர்கள். நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், முத்தமிழ் வித்தகர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியவர்களிடமும் இடம்பெற்றுள்ளன. அவ்வறியாமையை நீக்க வேண்டியதும் என் தலையாய கடமை எனக் கருதி ஈண்டு எடுத்துரைக்க முற்படுகின்றேன்.

முதலாவது தவறு: இந்தி மொழி அரசியல் சட்டத்தில் இடம் பெற்றதுமன்றத் தலைவர் இராசேந்திரப் பிரசாத் தமது தலைவர் பதவிக்குரிய வாக்கினைப் பயன்படுத்தினார் என்பதாகும். இது முற்றிலும் தவறு. தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதே இல்லை.

அரசியல் சட்டமன்றத்தின் காங்கிரசுக் கட்சிக் குழுக் கூட்டத்தில்தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதும், அதற்கு பட்டாபி சீத்தாராமைய்யா தலைமை தாங்கினார் என்பதும், அரசியல் சட்டமன்றத்தில் மொழிப் பற்றிய வாக்கெடுப்பு நடந்தபோது, காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் இந்திக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதும் வரலாற்றுப் பூர்வமான உண்மைகளாகும். -எல். கிருட்டிணசாமி பாரதி

திசை மொழிகள் வேறுஇந்தி வேறு

ஒரே ஒரு வாக்கு வேறுபாட்டால் ஆட்சிமொழியான இந்தியின் தகுதி என்ன? இந்தியில் எத்தனை திசை மொழிகள்? ஒன்றுக்கொன்று ஏதாவது தொடர்பு உண்டா? 19-ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியில் கவிதை எழுதவேண்டுமென்றால் அதற்கென்று தனியாக பிரஜா என்ற திசை மொழி பயன்படுத்தப்பட்டது. வசனம் எழுதவேண்டுமென்றால் அதற்கென்று மற்றொரு திசை மொழியான கரிபோலி என்ற திசை மொழி பயன்படுத்தப்பட்டது. கவிதைக்கு ஒரு மொழி வசனத்திற்கு ஒரு மொழி கொண்ட வியப்பூட்டும் மொழிதான் இந்தி. 19-ஆம் நூற்றாண்டில் கல்கத்தாவிலிருந்து போர்டு வில்லியம் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் கரிபோலி இந்தியை செம்மைப்படுத்தி பரப்பினார்கள். வசனத்திற்கும், கவிதைக்கும் ஒரே மொழியாக கரிபோலி இந்தியை அவர்கள் ஆக்கினார்கள். வெள்ளை அரசும் இதற்குத் துணை புரிந்தது.

இந்தியின் திசை மொழிகள் ஒவ்வொன்றும் தனித்தனியான சமூக-கலாச்சார வரலாற்று பின்னணியைக் கொண்டிருந்தன.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி, பீகாரில் ஒரு பகுதி ஆகியவற்றில் போஜ்புரி மொழி பேசுபவர் வாழ்கின்றனர். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் பண்டலி மொழி பேசுபவர் வாழ்கின்றனர். அரியானா, உத்தரப்பிரதேசம், டில்லி ஆகியவற்றில் சில பகுதிகளில் அரியான்வி மொழி பேசுபவர் வாழ்கின்றனர். அதேபோலவே பீகாரில் பல மாவட்டங்களில் மைதிலி மொழி பேசுவோர் வாழ்கின்றனர். பீகார் மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதம் இவர்கள் உள்ளனர். இராசசுதான் மாநிலத்தில் பல திசை மொழியினர் வாழ்கின்றனர். உத்திரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் பகாரி மொழி பேசுபவர் வாழ்கின்றனர். இந்த திசை மொழிகளைப் பேசுவோர்கள் தங்களுக்கு என்று தனி மாநிலங்கள் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். அதற்காகப் போராடினார்கள். தங்களுடைய மொழிகளுக்கு தனியான கலாச்சாரமும், சமூக பழக்கவழக்கங்களும் இந்தியிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டதென்றும் அவர்கள் கூறினார்கள். தங்களுடைய மொழிகளின் தனியான இலக்கியப் பாரம்பரியம் கொண்டவை என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த மொழிகளுக்கு என்று தனியான நாடோடி இலக்கியங்கள் அமைந்திருந்தன. இது போன்ற பல காரணங்களைக் கூறி தனி மாநில கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் போராடினார்கள். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் எல்லைக்கோடுகள் செயற்கையானவை என்றும், திசை மொழி பேசும் இனங்கள் வாழும் நிலங்களையொட்டி இயற்கையான எல்லைக்கோடுகள் வரையப்படவேண்டும் என்றும் அவர்கள் போராடினார்கள்.

இந்திய அரசு அமைத்த மாநில புனர் அமைப்புக்குழுவிடம் தங்கள் கோரிக்கைகளையும் அவர்கள் அளித்தார்கள். குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தை நான்காகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்க முன் வைக்கப்பட்டது. இது புதிதாக எழுப்பப்பட்ட கோரிக்கையல்ல. 1928ஆம் ஆண்டு முதல் 1933ஆண்டு வரை இதற்காக பல மாநாடுகள் அம்மாநிலத்தில் நடத்தப்பட்டன. பிரிட்டிசு அரசினால் அனுப்பப்பட்ட சைமன் ஆணையத்திடம் இந்தக் கோரிக்கை அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது குறித்து ஆராய்வதற்காக 1945ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த பிரிட்டிசு நாடாளுமன்றக் குழுவிடமும் இதற்கான கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. அவை வருமாறு-

1.வட உத்தரப்பிரதேசத்தில் பேசப்படும் பகாரி மொழியினருக்கான தனி மாநிலம்.

2.மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பேசப்படும் பிரிஜ் பாசா (Brij Bhasa) மொழிப் பேசும் மக்களுக்கான மாநிலம்.

3.கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பேசப்படும் அவ்தி (Oudhi) மொழிப் பேசும் மக்களுக்கான மாநிலம்.

4.கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் வாழும் போஜ்புரி மொழிப் பேசும் மக்களுக்காக ஒரு மாநிலம்.

ஆனால், மாநில புனரமைப்புக் குழுவில் அங்கம் வகித்த மூன்று உறுப்பினர்களில் பசல் அலி, இருதயநாத் குன்சுரூ ஆகிய இரு உறுப்பினர்கள் உத்தரப்பிரதேசம் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மற்றொரு உறுப்பினரான கே.எம். பணிக்கர் மிகப்பெரிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்குவது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும். எனவே நான்கு மொழிப் பேசும் மாநிலங்களாக அதைப் பிரிப்பது நல்லது என வலியுறுத்தினார்.

ஆனால் நான்கு திசை மொழிகளையும் உள்ளடக்கியே இந்தி மொழி பெரும்பான்மையினர் பேசும் மொழி எனக் கூறப்பட்டது. எனவே, உத்தரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரித்தால் பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற தகுதி இந்திக்கு இல்லாமல் போய்விடும் என்ற காரணத்திற்காக உத்தரப்பிரதேசத்தைப் பிரிக்க மாநிலப் புனரமைப்புக் குழு மறுத்துவிட்டது.

பல திசை மொழிகள் வழங்கும் சுதேச சமத்தானங்கள் பலவற்றை இணைத்து இராசசுதான் மாநிலம் அமைக்கவும், பகாரி மொழி பேசும் மக்களுக்காக இமாச்சலப்பிரதேச மாநிலம் அமைக்கவும் இந்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் மற்ற திசை மொழியினருக்காகத் தனி மாநிலங்கள் அளிக்கமுடியாது என்று இந்திய அரசு மறுத்து விட்டது. திசை மொழி பேசும் மக்களுக்காகத் தனி மாநிலங்கள் அமைக்கப்பட்டுவிட்டால் இந்தி பேசும் மாநிலங்களின் எல்லைகள் சுருங்கிவிடும் என்பது மட்டுமல்ல இந்திபேசும் மக்கள் தனித்த பெரும்பான்மையினர் என்பதும் அடிபட்டுப்போய்விடும். எனவே இம்மக்களுக்குத் தனி மாநிலங்கள் அளிக்கப்படவில்லை. இந்தியோடு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பல்வேறு திசை மொழி பேசுபவர்களையும் இந்தி பேசுபவர்களாக கணக்கில் காட்டிதான் இந்தி பெரும்பான்மையினரின் மொழியாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது பெரும்பான்மையினர் மொழி அல்ல.

இராசசுதான், இமாச்சலப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கூட திசைமொழிகளுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளின் காரணமாக இந்தி அங்கெல்லாம் ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தி பேசும் மாநிலங்களாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், இராசசுதான், அரியானா ஆகிய மாநிலங்களில் இந்தி மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 20 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. இம்மாநிலங்களில் வாழும் மக்களில் 80 சதவிகிதம் பேர் இந்தியை எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். இந்த மாநிலங்களிலுள்ள மக்களுக்கு முதலில் இந்தியைக் கற்றுக்கொடுக்க இந்திய அரசு முயற்சி செய்யட்டும். இந்த மாநிலங்களில் வாழ்பவர் பெரும்பான்மையினருக்கு இந்தியை எழுதப்படிக்கத் தெரியாது என்பதுதான் மறைக்க முடியாத உண்மையாகும்.

இந்தி பேசாத மக்களில் தமிழ்நாட்டைத் தவிர பாக்கி மாநிலங்கள் இந்தியைப் படித்துவிட்டன. தமிழர்கள்தான் படிக்கவில்லை என்று ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம் என்பதைக் கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

பொருந்தாத அரசியல் சட்டம்      

இந்திய அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் குறித்தும் சிலவற்றை நாம் அளித்து கொள்ளவேண்டும். இந்தியாவின் அரசியல் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலும், நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட காலத்திலும் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்படவில்லை. 1956-ஆம் ஆண்டுக்குப் பின்னால்தான் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு இந்தியாவின் வரைபடமே முழுவதுமாக மாறிவிட்டது. மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு அவைகளுக்கு முற்றிலும் பொருந்துவதற்கு மறுக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக்கொண்ட மாநிலங்கள்தான் இந்தியாவில் முன்பு இருந்தன. ஆகவே அவற்றில் எந்த மொழியை ஆட்சிமொழியாக்குவது என்பது பற்றி சர்ச்சை இருந்தது. எனவே அந்த மாநிலங்களில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடித்தது. மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு அந்தந்த மாநில மொழிகளே ஆட்சிமொழியாக மாறத்தொடங்கிவிட்டன. இந்த சூழ்நிலையில் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்பது மாநிலங்களால் ஒப்புக்கொள்ளமுடியாத ஒன்றாக உள்ளது.

மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னால் மொழி வழித் தேசிய உணர்வு வளரத்தொடங்கிற்று. இதன்விளைவாக இந்தி பேசாத மாநிலங்களில் மொழிவழித் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான கட்சிகள் வளர்ந்து ஆட்சியை பிடித்தன. இந்தி பேசாத மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தன. இந்தி பேசுகிற மாநிலங்களில் இந்தி வெறியையும், மத வெறியையும் வற்புறுத்தும் கட்சி எதுவோ அதுதான் வெற்றி பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், பாரத ஜனதா கட்சியும் போட்டியிடுகின்றன. மொத்தத்தில் மொழி வழித் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட மாநில கட்சிகளுக்கும், இந்தி ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அகில இந்திய கட்சிகளுக்கு மிடையே பெரும்மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் ஆட்சி மொழிப் பிரிவை நீக்குவது மட்டும்போதாது. மொழிவழித் தேசிய உணர்வின் கீழ் அமைந்த மாநிலங்களுக்கு இன்றைய அரசியல் சட்டம் முற்றிலும் பொருந்தவில்லை. எனவே இவற்றுக்கு ஏற்றாற்போல் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். மொழிவழி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான பிரதிநிதிகள் கூடி புதிய அரசியல் சட்டத்தை வகுக்கவேண்டும்.தற்போதைய அரசியல் சட்டம் முற்றிலுமாக கைகழுவப்பட வேண்டும். உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்ட புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதைத் தவிர வேறு வழி இல்லை. அப்போதுதான் இந்தி ஆதிக்கத்தை வீழ்த்த முடியும்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.