பேராசிரியர் அறிவரசன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 மார்ச் 2020 12:42

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரும், மிகச் சிறந்த தமிழறிஞருமான பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இரவு காலமானார் என்ற செய்தி கிடைத்தபோது அளவற்ற துயரம் அடைந்தேன்.

செய்தியறிந்து தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்ட தமிழ் உணர்வாளர்களுக்கு ஆறுதல் கூற முடியாமலும், நான் ஆறுதல் பெற முடியாமலும் தத்தளித்தேன். இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் தொலைப்பேசி மூலம் அவர் பேசினார்& "உடல் நலம் சீர்கெட்டுள்ளது. மூச்சுவிடுவதே துன்பமாக இருக்கிறது" என அவர் கூறியபோது பதறிப் போனேன். பல வாரங்களுக்கு முன்னால் சென்னை வந்து என்னை சந்தித்துப் பேசியபோது, அவர் உடல்நலம் சீர்கெட்டதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. இரவே மகிழுந்து மூலம் கடையம் செல்வதாக  அவர் கூறிய போது, இரவு நேரப் பயணம் வேண்டாம் எனத் தடுத்தேன் "வேண்டுமானால் வழியில் எங்காவது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். அவரைக் கடைசி முறையாக சந்திப்பது இதுதான் என்பதை அறியாமல் போனேன்.
தமிழ் வளர்த்த குடும்பத்தின் தோன்றல் அவர். அவருடைய பெரிய தந்தை தமிழறிஞர் மு. அருணாசலனார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். நண்பர் அறிவரசன் அவர்களும் அவரது வளர்ப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே படித்து பட்டமும் பெற்றார். அவருக்குச் சில ஆண்டுகள் மூத்த மாணவனாக நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றேன். பேராசிரியர் மு. அருணாசலனார் அவர்கள் தொல்காப்பியம் குறித்து விளக்கம் தருவதை கேட்பதே பெரும் பேறாகும். நானும், நண்பர்களும் எங்களுக்குத் தோன்றும் ஐயங்களுக்கு அவரைச் சந்தித்துத்தான் தெளிவு பெறுவோம். ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பெற்ற தமிழறிஞரான அருணாசலனார் அவர்களின் வளர்ப்பு மகனாக வளர்க்கப்பட்ட பேராசிரியர் அறிவரசன் அவர்கள் பிற்காலத்தில் மிகச்சிறந்த தமிழறிஞராக  உருவானதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சிறந்த தமிழறிஞர் மட்டுமல்ல, மிக உயர்ந்தப் பண்பாளர். சொல்லாலும், செயலாலும் தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்த் தொண்டிலேயே கழித்தார். ஆழ்வார் குறிச்சி பரம கல்யாணி கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிச் சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கினார். தினமணியின் ஆசிரியராக இன்று திகழும் திரு. வைத்தியநாதன் அவர்கள் அவரின் மாணவர்களில் ஒருவராவார்.
சொந்த ஊரான கடையத்திலும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு  ஊர்களிலும் தமிழ் மன்றங்கள் பலவற்றை உருவாக்கி மக்களிடையே மொழி உணர்வை ஊட்டியதோடு மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்களை சுவைக்கவும் வழிவகுத்தார். இதன் மூலம் தமிழகமெங்குமுள்ள உணர்வாளர்களுக்கு அவர் அறிமுகமானார். அனைவராலும் மதித்துப் போற்றப்பெற்றார். சிறந்தப் பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் இயங்கியபோது அவரது இல்லம் அவர்களுக்கு ஒரு புகலிடமாகத் திகழ்ந்தது. அவரும், அவருடைய துணைவியார் திருமதி ஞானத்தாய் அவர்களும் புலிகளின் பணிகள் அனைத்துக்கும் துணை நின்றனர். விரும்தோம்பலில் சிறந்த ஞானத்தாய் புலி இளைஞர்களுக்கும் தாயாகத் திகழ்ந்தார். நெல்லை மாவட்டத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவுத் திரட்டுவதில் இருவரும் முன் நின்றனர்.
அந்தக் காலகட்டத்தில்தான் பேராசிரியரோடும், அவருடைய குடும்பத்தினரோடும் நான் மிகவும் நெருக்கமானேன். என்னுடைய தொண்டுகள் அனைத்திற்கும் அவர் தோள் கொடுத்துத் துணை நின்றார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக  நான் நடத்திய மாநாடுகள், போராட்டங்கள் போன்ற அனைத்திலும் அறிவரசன் - ஞானத்தாய் இணையர் தவறாமல் பங்கேற்றனர்.
2002ஆம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பைத் தொடங்கிய காலத்திலிருந்து அதனுடைய துணைத் தலைவராகப் பொறுப்பேற்று அதை வளர்த்தப் பணியில் அவருடைய பங்கு மகத்தானதாகும்.மாநாட்டு மலர்களை உருவாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு நாட்கணக்கில் சென்னையிலேயோ, தஞ்சையிலேயோ தங்கி மலருக்கான கட்டுரைகளைத் திருத்துவதிலிருந்து அச்சிடுவது வரை அத்தனைப் பணிகளையும் அவரே ஏற்றுக்கொண்டு அயராது தொண்டாற்றினார்.
2006ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான தமிழேந்தி அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். விடுதலைப்புலிகளுக்கு தமிழ், இலக்கண - இலக்கியங்கள், வரலாறு போன்றவற்றை கற்றுக்கொடுக்க ஏற்றதொரு தமிழறிஞர் தேவை என கூறினார். அதைபோல, ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுக்கவும், ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரை அனுப்பவேண்டும் என்று கூறினார். போர்க்களமாகத் திகழ்ந்த தமிழீழத்திற்குச் செல்வதற்குப் பலரும் அஞ்சிய காலகட்டத்தில் பேரா. அறிவரசன் அவர்களிடம் நான் பேசியபோது, எவ்விதத் தயக்கமும் இல்லாமல்  மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக்கொண்டார். அதைபோலவே, 2008ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் தமிழீழத்தில் தங்கியிருந்து புலிகளுக்குத் தமிழறிவை ஊட்டியதோடு, புலிகளோடு புலியாகவும் வாழ்ந்தார். விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரும் அவரின் மாணவர்கள்தான். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருமை துணைவியார் மதிவதினி அவருடைய மாணவர்தான்.  
அங்கிருந்து அவ்வப்போது என்னோடு அவர் தொடர்பு கொள்ளும்போது, புலிகளின் ஆட்சி சிறப்பு, மக்களின் மகிழ்ச்சி மற்றும் அங்கு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தெல்லாம் தெரிவிப்பார். புலிகளின் வானொலியிலும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி கடல் கடந்த தமிழர்களிடமும் அவர் பெரும் மதிப்புப் பெற்றார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் அழைக்கப்பட்டு அவரின் நேரடியான  பாராட்டுதலைப் பெற்றப் பெருமையும் இவருக்கு உண்டு. பெரும் போருக்குப் புலிகள் தயாராகிக்கொண்டிருந்ததால் இவரை அனுப்புவதற்கு விருப்பம் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு இவரை திருப்பி அனுப்பி வைத்தனர். இவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தார். "ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்" என்னும் தலைப்பிலும்,  "பிரபாகரனைச் சந்தித்தேன்" என்னும் இரு நூல்கள் எழுதி வெளியிட்டார். அவையாவும் தமிழீழத்தில் இவர்வாழ்ந்த காலத்தில் அங்கு என்னென்ன நடைபெற்றன என்பதை விளக்கிக் கூறும் வரலாற்றுப் பட்டயங்களாகும்.
தமிழகம் திரும்பிய பிறகுகூட, வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இவரை விரும்பி அழைத்தனர். அந்நாடுகளில் வாழும் தமிழ்க்  குழந்தைகளுக்கு நமது மொழியைக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு வகுப்பு நடத்துவதற்காக இவரை அழைத்தனர். வயதைப் பொருட்படுத்தாமல்  ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் அவர் பலமுறை சென்று கடமையாற்றினார்.  
தமிழிசையிலும் அவர் வல்லவர் என்பது பலர் அறியாததாகும். நல்ல குரல் வளமும், இசை அறிவும் நிரம்பியவர். தமிழீழ ஆதரவு மாநாடு ஒன்றில் முழுநேர இசை நிகழ்ச்சியை அவர் நடத்திய போதுதான் இந்த உண்மை பலருக்குப் புரிந்தது. அவரது இசைப் புலமையைப்  பாராட்டி பகுத்தறிவாளர் கழகம் "தமிழிசைப் பாவாணர்" என்ற பட்டத்தை வழங்கியது. கடையம் திருவள்ளுவர் கழகம் அவருக்குப் "பைந்தமிழ் பகலவன்" என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
சிறந்தப் பகுத்தறிவாளராகத் திகழ்ந்த அவர், தனது உடலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கியது  அனைவரையும் நெகிழ்விக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தன்னை ஒப்படைத்துக்கொண்டு வாழ்ந்த தன்னலமற்ற ஈகியான பேராசிரியர் அறிவரசன்  அவர்களின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பாகும். உலகத் தமிழர் பேரமைப்புக்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய அருமை துணைவியார் ஞானத்தாய் அம்மையார் அவர்களுக்கும், அவரின் மக்களான முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி, செல்வநம்பி, அழகியநம்பி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.