வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:16 |
கோவை ஞானி படிக்கும் காலத்திலிருந்து நெருங்கிப் பழகி அன்புகாட்டிய தமிழ்த்தேசிய – மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு மிக வருந்துகிறேன்.
அவருடைய படைப்புகள் மக்களுக்குத் தெளிவூட்டின. கண் பார்வையை இழந்தப் பிறகும்கூட பிறர் உதவியுடன் வாசிப்பதையும், எழுதுவதையும் இறுதிவரை அவர் நிறுத்தவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் அவர் காட்டிவந்த ஈடுபாடு ஒப்புவமை இல்லாததாகும். தன்னைச் சுற்றி ஒரு சிந்தனை வட்டத்தை உருவாக்கித் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து தொண்டாற்றினார். அவருடைய மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பாகும். எழுத்தாளர் கர்ணன் பழம்பெரும் எழுத்தாளர் ப. கர்ணன் அவர்கள் மதுரையில் காலமான செய்தி அறிந்து மிக வருந்துகிறேன். எளிமையான சூழலில் பிறந்து வளர்ந்த அவர், சிறுகதை, கட்டுரை, குறுநாவல், சுதந்திரப் போராட்ட வரலாறு ஆகியவைக் குறித்து அவர் எழுதிய சிறந்தப் படைப்புகள் முதன்மையான தமிழ் இதழ்களில் வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசையும் 2005ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு மத்திய அரசும் பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்களான சிசு. செல்லப்பா, ந. பிச்சைமூர்த்தி, பி.எஸ். இராமையா, நா. பார்த்தசாரதி போன்றோரால் பாராட்டப்பெற்றவர். அவரது மறைவின் மூலம் சிறந்ததொரு படைப்பாளியை தமிழகம் இழந்திருக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். |