தமிழரின் தொன்மையை மறைக்கும் முயற்சி தொடர்கிறது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:02

12ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு அமைத்துள்ள அறிஞர் குழுவில் தென்னாட்டைச் சேர்ந்த யாரும் குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இந்திய தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  

இந்தியாவின் மிகத் தொன்மைவாய்ந்த மொழி தமிழ் என்பதும், தமிழரின் பண்பாடும், நாகரிகமும் மிகத் தொன்மை வாய்ந்தவை என்பதையும் சிந்துவெளி அகழாய்வு முதல் கீழடி அகழாய்வு வரை எடுத்துக்காட்டியுள்ளன. வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உண்மைகளைப் புறக்கணிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் எவருக்கும் இந்தக் குழுவில் இடம் அளிக்கப்படாதது தமிழர் வரலாற்றினை மறைப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாகும் என்பதுடன், ஒட்டுமொத்தமாகத் தமிழர் நாகரிகத்தைப் புறக்கணிக்கும் செயலாகும்.
"நீத்தோர் நினைவாக பெரிய கற்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட பெருங் கற்படைச் சின்னங்கள் விந்திய மலைக்குத் தெற்கே இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன. பெருங் கற்படைகளைக் கொண்டு நீத்தோர் நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டதின் காரணத்தால் இது பெருங் கற்படைக் காலம் என தொல்லியலாளரால் அழைக்கப்படுகிறது. இப்பெருங் கற்படைக் காலம் தமிழகத்தில் கி.மு. 1000 ஆண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. இச்சின்னங்களை உருவாக்குவதற்கு கற்கள் தேவைப்படுவதால் இவை குறிஞ்சி, முல்லைப் பகுதிகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன.
ஆனால், மருதம் நிலத்திற்குரியனவாக முதுமக்கள் தாழிகள் விளங்குகின்றன.  தமிழகத்தில் குறிப்பாக, தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி, நதிகளின் படுகைகளில் கிடைக்கின்ற தாழிகளை பெருங் கற்படைக் கால பண்பாட்டுக்குள்ளேயே வரலாற்றறிஞர்கள் அடக்குகின்றனர். ஏனெனில், முதுமக்கள் தாழிகளிலும் பெருங் கற்படைச் சின்னங்களில் காணப்படும் கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவை கிடைப்பதேயாகும். இவை பெருங் கற்படைச் சின்னத்தின் மாறுபட்டத் தன்மை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எடுத்துக் காட்டாக, தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் பெருங் கற்படைப் பண்பாட்டுக்குள் அடங்கியவையே ஆகும்" என தொல்லியல் வரலாற்றறிஞர் முனைவர் கா. இராசன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிரேக்க, ரோம நாணயங்களும், முற்காலப் பாண்டிய சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களும், முத்திரை நாணயங்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. மேற்கண்ட நாடுகளுடன் தமிழர்கள் கொண்ட வாணிப உறவினை உறுதிப்படுத்தும் சான்றுகளாக இந்நாணயங்கள் திகழ்கின்றன.
செங்கடல் கரையில் அமைந்துள்ள ரோம நாட்டுத் துறைமுகமான குவாசீர்&அல்&காதிம், பெரனிகே ஆகிய இடங்களில் தமிழ்ப் பிராமி வடிவத்தில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், தாய்லாந்து நாட்டில் கிளாங் தோம் என்ற இடத்தில் கிடைத்த உறை கல்லும், மத்திய தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த ஒரு வணிகருக்கும், மேலை கடற்கரையில் அமைந்துள்ள சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த ஒரு வணிகனுக்கும் இடையே நடைபெற்ற வணிக ஒப்பந்தமும்  புதியனவாக கிடைத்த முதல் சான்றுகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
"தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள நாணயங்கள், கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகள், மோதிரங்கள் ஆகிய பலவற்றிலும் காணப்படும் குறிப்புகள் தமிழ்ப் பிராமி வடிவத்தில் எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதைபோல, இலங்கையில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஆனைக் கோட்டை என்னும் இடத்தில் அகழாய்வின் போது இரு வரிவடிவ எழுத்துக்களைத் தாங்கிய முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இம்முத்திரையின் மேல்வரியில் மூன்று குறியீடுகளும், கீழ்வரியில் அதற்கு இணையான கோவேத எனப் பொறிக்கப்பட்ட தமிழ்வரிவடிவமும் காணப்பட்டது. இது தமிழ் மக்கள் அக்காலத்தில் பயன்படுத்திய இரு வரிவடிவங்களைத் தெளிவுபடுத்துகிறது. இத்தகைய குறியீடுகள் தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து சங்ககால ஊர்களிலும் கிடைத்துள்ளன. இக்குறியீடுகளின் எண்ணிக்கையையும், அதன் தன்மையையும் பார்க்கும்போது சங்க காலத்திற்கு முன்பாகவே தமிழ்மக்கள் ஒருவகையான குறியீடுகளைப் பயன்படுத்தினர் என்பதை உணரலாம். இக்குறியீடுகளின் பெரும் பான்மையானவை சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்” என்றும் வரலாற்றறிஞர் கா. இராசன் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டில் பூம்புகார் கடல்பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான கிரகாம் காங்காக் என்பவர் தீவிரமாக ஆராய்ந்து கடலுக்கு அருகில் ஒரு பெரும் நகரம் மூழ்கிக் கிடப்பதை கண்டுபிடித்தார். அந்நகரம் சுமார் 75அடி  ஆழத்தில் புதைந்து கிடப்பதையும் வெளிப்படுத்தினார். இதனுடைய காலம் 11, 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆதாரப் பூர்வமாக நிறுவினார்.
"அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் மூலம் தமிழி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்துக்களைக் கொண்ட ஏராளமான பானைஓடுகள் கிடைத்துள்ளன. இவை வரலாற்றுத் தொன்மையும், முதன்மையும் வாய்ந்தவையாகும். இப்பானை கீறல்கள் சிந்துசமவெளியில் கிடைத்த பானைக் கீறல்களை ஒத்திருக்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இதே மாதிரியான கீறல்களைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. ஆனாலும், இவற்றில் 75சதவீதமானவை தமிழ்நாட்டில் மட்டுமேதான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் கொற்கை, அழகன்குளம் ஆகியவற்றிலும் கீழடியிலும் கிடைத்த பானைப் பொறிப்புகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுக்கு முந்தியவையாகும்” என சிந்துசமவெளி ஆய்வாளர்                 ஆர். பாலகிருட்டிணன் கூறியுள்ளதை ஏற்கெனவே கீழடி பற்றிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
 ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், அழகன்குளம் இன்னும் பல இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டன. இவ்விடங்களில் முழுமையான அகழாய்வுகள் நடைபெற்றால் இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்பது வெளிப்பட்டுவிடும். எனவே, இவற்றை மூடி மறைக்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது.
கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்தவை தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தின. எனவே,இந்த அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களை உடனடியாக இடம் மாறுதல் செய்ததோடு, கீழடி ஆய்வையும் இந்திய அரசு நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தின் விளைவாக இந்த அகழாய்வினை தமிழகத் தொல்லியல் துறை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்திய அரசு தற்போது அமைத்துள்ள இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் குறித்து ஆராய்வதற்காக அமைத்துள்ள அறிஞர் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக்கூட நியமிக்காததின் அடிப்படை என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி  போல அனைவருக்கும் புலனாகும் என்பதில் ஐயமில்லை. தமிழக முதல்வரின் கடிதத்தைத் தொடர்ந்து இக்  குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள் யாரையேனும் நடுவண் அரசு நியமித்தாலும்கூட, தமிழர்களுக்கெதிராக ஆரிய நாகரிகத்தை உயர்த்திப் பிடித்துத் தொடர்ந்து தமிழுக்கு எதிராக நச்சுக் கக்கிவரும் நாகசாமி போன்றவர்களை நியமிக்குமே தவிர, உண்மையான தமிழ் வரலாற்றறிஞர்களை நியமிக்காது. தலையமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு, தனது கடமை முடிந்துவிட்டது என தமிழக முதலமைச்சர் கருதாமல் தமிழ், தமிழர் தொன்மைக் குறித்த ஆராய்ச்சியில் சிறந்த அறிஞரை இக்குழுவில் நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.