கடப்பாரையை விழுங்கி கசாயம் குடித்தல் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:18

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் இந்திய வரலாற்றில் என்றும் மறையாத களங்கம் படைத்த  நாளாகும். கி.பி. 1528ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 464ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நின்ற பாபர் மசூதியை இந்துத்துவா வெறியர்கள் இடித்துத் தகர்த்த நாள் அதுவாகும்.

"இந்த இடத்தில் இராமர் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துத்துவா வெறியர்கள் கூறுவதற்கும், இராமாயண காலத்தில் இருந்த அயோத்தி நகரம்தான் இப்போதுள்ள அயோத்தி என்று கூறப்படுவதற்கும் எத்தகைய ஆதாரமும் இல்லை" என இந்திய வரலாற்றறிஞரான  கே.என். பணிக்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1986ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 24 வரலாற்றறிஞர்கள் ஒன்றுகூடி ”“"இராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று கூறுவதற்கு வரலாற்று  நூல்களிலோ, ஆவணங்களிலோ சிறிதளவுகூட ஆதாரமில்லை" என அறிவித்தனர்.
பாபர் - நாமா  என்ற பெயரில் மொகலாய சக்கரவர்த்தியான பாபர் எழுதியுள்ள நினைவுக்  குறிப்புகளில் அயோத்திக்கு இருமுறை சென்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இராமர் கோயிலைப் பற்றியோ, தன்னுடைய பெயரால் மொகலாய படைத்தளபதி நீர்பாகி அமைத்த மசூதிபற்றியோ குறிப்புஎதுவும் காணப்படவில்லை.
இராம பக்தரும், இந்திமொழியில் இராமாயணம் எழுதியவருமான துளசிதாசர் அயோத்தியில் வாழ்ந்தவர். பாபர் மசூதி கட்டப்பட்ட காலத்தில் அதை தனது கண்களால் நேரடியாகப் பார்த்தவர். ஆனால், இராமர் கோயில் பற்றியோ, அது தகர்க்கப்பட்டது குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை. தீவிர இராம பக்தரான அவர், அப்படியொரு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் அதை குறிப்பிடாமல் இருக்கமாட்டார்.  
மேற்கண்ட வரலாற்று உண்மைகளுக்கு மாறாக, தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகள் இராமர் கோயிலை இடித்துதான் பாபர்  மசூதியைக் கட்டினார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தனர். பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடைபெற்றது. இதற்காகப் பல்வேறு இயக்கங்களையும் நடத்தினார்கள்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று இராமர் கோயில் கட்டும் பணியை  மீண்டும் துவங்கப் போவதாக விசுவ இந்து பரீசத் அறிவித்தது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளைப் பற்றியோ அல்லது உத்தரப்பிரதேச பாரதிய ஜனதாக் கட்சி அரசின் முன்னுரிமைகள் குறித்தோ விசுவ இந்து பரீசத் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
மீண்டும் கரசேவை நடைபெறுவதற்கும் அவ்வாறு நடைபெற்றால் அதற்கு அனுமதி அளிக்காமல்  இருப்பதாகவும் உத்தரப்பிரதேச அரசு உறுதி கூறவேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் நவம்பர் 27ஆம் தேதியன்று மிகக் கடுமையான ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணையை ஏற்பதாக முதல்வர் கல்யாண்சிங் உறுதியளித்தார்.
பிரச்சனை இல்லாத நிலத்தில் அடையாளப் பூர்வமாக கரசேவையை நடத்த அனுமதிப்பது என சமரசத் தீர்வு ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
1992ஆம் ஆண்டு நவம்பர் 27ந் தேதி துணை இராணுவப் படைகளை அயோத்தியில் மத்திய அரசு குவித்தது. இதற்கு கல்யாண்சிங் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் அந்த ஆட்சேபனையை ஏற்கவில்லை.
டிசம்பர் 6ஆம் தேதி சுமார் 1,50,000 கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்தனர். நவம்பர் கடைசி நாட்களில் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களும் இதில் தீவிரமாகப் பங்கு கொண்டனர்.
டிசம்பர் 6ந் தேதி அத்வானி, எம்.எம். ஜோஷி உட்பட் ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரீசத், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் அடையாளப் பூர்வமான கரசேவையைப் பார்க்கக் கூடியிருந்தார்கள்.
காலை 11 மணியளவில் மேடையில் இருந்தவாறு பேசிய தலைவர்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி மசூதியின் மீது ஏறி, அதனுடைய விமானங்களை இடிக்கத் தொடங்கினார்கள். இதைப் படமெடுத்த பத்திரிகைகாரர்கள் தாக்கப்பட்டனர். பாபர் மசூதி அருகே குவிக்கப்பட்டிருந்த மத்தியப் படை வீரர்கள் அவர்களைத் தடுக்க எதுவும் செய்யாததோடு, சிறிது நேரத்தில் அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள்.
பிற்பகல் 12.45 மணிக்கு மசூதிக்குள் இருந்த விக்கிரகங்கள், உண்டியல்கள் மற்றும் படங்கள் அவசர அவசரமாக அங்கிருந்து அகற்றப்பட்டன.
பிற்பகல் 2.55 மணிக்கு இடதுபுற விமானம் தகர்ந்து விழுந்தது. மாலை 4.35மணிக்கு வலதுபுற விமானமும் விழுந்தது. இதற்கு 15 நிமிடங்கள் கழித்து மத்தியிலிருந்த  விமானம் தகர்ந்தது.
மசூதியை இடிக்கும் வேலை ஒருபுறம்நடந்து கொண்டிருக்க மறுபுறத்தில் அயோத்தியில் இருந்த முசுலீம்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்ட பிறகு அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு அங்கு தற்காலிகக்  கோயில் ஒன்று அமைக்கப்பட்டு அதற்குள் மீண்டும் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. இரவு முழுவதிலும் சட்டத்திற்குப்  புறம்பான முறையில் இந்த வேலைகள் நடைபெற்ற போது பாதுகாப்புப் படைகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன என்பது வெட்கக் கேடானதாகும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது திட்டமிடப்பட்டதா? என்ற கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் திட்டமிட்டுச்  செய்யப்படவில்லை என்று கூறினார்கள்.
உளவுத்துறை அதிகாரி கூறிய செய்தி
பாபர் மசூதியை இடிக்கப் பத்து மாதங்கள் முன்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டது என்றும், இது குறித்துத் தகவல்கள் அனைத்தும் அன்றைய தலைமையமைச்சர் நரசிம்மராவ் மெளனமாக இருந்தார் என்றும் மத்திய உளவுத்துறை (ஐ.பி.)யில் இருந்து  ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ஒருவர் கூறியுள்ளார்.
மலோய் கிருஷ்ணா தார் என்ற இந்த  அதிகாரி ஓபன் சீக்ரெட்ஸ் இந்தியாஸ், இந்தலிஜென்ஸ் அன்வில்ட் என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில் பரபரப்பான பல இரகசியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். (மக்கள் உரிமை &04&02&2005)
கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரை முரளி மனோகர் ஜோஷி ஏக்தா யாத்ரா என்ற பெயரில் இரத யாத்திரை ஒன்றை நடத்தினார். இந்த யாத்திரை படுதோல்வியில் முடிவடைந்தது.  இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1992இல் சங்கப் பரிவார அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள்  கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அத்வானி, ஜோஷி அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ராஜú பைய்யா, கே.எஸ். சுதர்சன், விஜய் ராஜி சிந்தியா, சேசாத்திரி, வினய் கத்தியார், உமாபாரதி, சம்பத்ராய் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிந்து தகவல் அளிக்கும் பொறுப்பு தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இக்கூட்டத்தை இரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தான் டிசம்பர் 1992இல் பாபர் மசூதியைத்  தகர்ப்பதற்குத் தெளிவான வரைவுத் திட்டம் வகுக்கப்பட்டது என்கிறார் தார். இந்த கூட்டத்தில் பங்கு கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப., பஜ்ரங்தளம் மற்றும் பா.ச.க. தலைவர்கள் பாபர் மசூதியைத்  தகர்ப்பதற்காகத் தெளிவான திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு முன்வந்தார்கள் என்ற தெரிவிக்கிறார் தார். இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதை  தான் ஒலிநாடாவில் பதிவு செய்ததாகவும், அந்த ஒலிநாடாவைத் தனது மேலதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும், அதனை அவர் நிச்சயமாக தலைமையமைச்சரிடமும், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவானிடமும் ஒப்படைத்திருப்பார் என்பதில் தனக்கு சந்தேகமில்லை என்று தார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த மனிதர் (நரசிம்மராவ்) முடிவெடுக்கத் தெரியாதவர் என்றும் அற்பனுக்கு வாழ்வு கிடைத்தது போல் அவருக்குப் பொறுப்பு கிடைத்தவுடன் அவர் நேரு&இந்திராகாந்தி குடும்ப அரசியலை வீழ்த்துவதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்றம் தார் வர்ணிக்கிறார். வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் ராவ் சறுக்கினார். இதன் விளைவாக அத்வானியும் அவரது சகாக்களும் வரலாற்றுத் தடைகளைத் தாண்டி வெறியை ஊட்டி, அந்த பள்ளிவாசலை இடித்தார்கள் என்று தார் தனது  நூலில் எழுதியுள்ளார்.
அத்வானி, ஜோஷி உள்பட ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. சிவசேனை உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள்  பங்கு கொண்ட ஒரு கூட்டம் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர்  5, 1992இல் அயோத்தியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்டதையும் தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் தார். அரசியல் நலனுக்காக இந்துத்வத்தை அதன் உச்சிக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை அயோத்தி அளிக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கை கூட்டத்தில் பங்கு கொண்டவர்களிடையே நிலவியது. இரும்பு சூடாக இருக்கின்றது, இதுதான் அடிப்பதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று கூட்டத்தில் கருத்து நிலவியதாக தார் குறிப்பிடுகிறார்.
டிசம்பர் 6, 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று ஒரு பத்திரிகையாளராக வேடமிட்டு அங்கு நடந்த நிகழ்வுகளைப் படமெடுத்ததையும் தனது நூலில் நினைவுகூர்கிறார் தார். சிவசேனையைச் சேர்ந்தவர்கள் பள்ளிவாசலை இடித்தார்கள் என்றும் சங்கப் பரிவாரத் தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் உரையாற்றிக் கொண்டிருந்தனர் என்றும்  தார் குறிப்பிடுகிறார்.
மேடையில் இருந்து அத்வானி நஞ்சு கக்கிக் கொண்டிருந்தார். தான் மூட்டிய தீயை அணைக்க அவரால் இயலவில்லை. வரலாற்றின் முக்கியக் கட்டத்தில் அத்வானி உருவாக்கிய வெறியலையைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டார் என்று டிசம்பர் நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ள தார், அச்சம்பவம் குறித்து தான் ஒளி நாடாவில் பதிவு செய்ததாகவும் 70க்கும்  மேற்பட்ட படங்களை எடுத்ததாகவும் தனது நூலில்  எழுதியுள்ளார்.
மத்தியில் வாஜ்பாயி தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பிறகு லிபரான் கமிஷன் பா.ச.க. தலைவர்களை விசாரணைக்கு அழைத்த வேளையில் உள்துறையமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி தன்னை இருமுறை சந்திக்க அழைத்ததாக தார் குறிப்பிடுகிறார். டிசம்பர் அன்று எடுத்த ஒளிநாடாவைத் தருமாறு அத்வானி கேட்டதாகவும், தன்னிடம் அந்த ஒளிநாடாவின் பிரதி எதுவும் இல்லை என்றும் அந்த ஒளிநாடா டெல்லிக்கு வெளியில் உள்ள ஐ.பி.யின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று அத்வானியிடம் தான் தெரிவித்ததாகவும் தார் எழுதியுள்ளார். டிசம்பர் 6 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை விவரித்து விட்டு அந்த ஒளிநாடா வேண்டுமெனில் ஐ.பி.யின் இயக்குநரிடம் அதனைக்  கேட்டுப் பெறுங்கள் என்று  அத்வானியிடம் தெரிவித்ததாக தார் குறிப்பிடுகிறார்.
ஐ.பி.யின் இயக்குநர் அத்வானியின் விருப்பத்தை நிறைவேற்றினாரா இல்லையா என்பது தனக்குத் தெரியவில்லை என்று சொல்லும் தார், அன்றைய ஐ.பி.யின் இயக்குனருக்கும் பிரதமர் அலுவலகத்தைச்  சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று குறிப்பிடுகிறார். பிரதமர் (வாஜ்பாய்) அலுவலக  அதிகாரிகள் அத்வானி தொடர்பான ஒளிநாடாவை அவரிடம் அளிக்கவேண்டாம் என்று ஐ.பி.  இயக்குநருக்கு அறிவுறுத்தியது தனக்குத் தெரிய வந்ததாக குறிப்பிடுகிறார். அத்வானி பிரதமர் பதவிக்கான ஒரு வலுவான போட்டியாளராகவே கருதப்பட்டார் என்றும் தார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
பாபர் மசூதி இடிப்பு ஒரு தற்செயல் நடவடிக்கை தானே தவிர, அது திட்டமிட்ட சதியல்ல என்று கூறிவரும் சங்கப் பரிவார அமைப்புகளின் வாதத்தைத் தவிடு பொடியாக்கும் வகையில் தார் விவரித்துள்ள நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. பாபர் மசூதி இடிக்கப்படுவதை நரசிம்மராவ் வேண்டுமென்றே வேடிக்கைப் பார்த்தார் என்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு சான்றாக தார் எழுதியுள்ள நூல் அமைந்துள்ளது.
ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், மத்திய-மாநில அரசுகளின் உளவுத்துறையினர், காவல் படையினர், துணை இராணுவப் படையினர் உள்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் தான்  பாபர் மசூதி இடிக்கப்பட்டது.  தொலைக்காட்சிகள் படம் பிடித்து உலகமெங்கும் ஒளிப்பரப்பின. பத்திரிகைகளும் படம் பிடித்து பக்கம் பக்கமாக வெளியிட்டன. அவர்களின் பலர் கட்டுரைகளாகவும் எழுதினர். இங்ஙனம் உலகறிய நடந்த நிகழ்ச்சிக்குரிய சான்றுகள், ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் முழுமையாக அளிக்கத் தவறிவிட்டது ஏன்? இதைக் காரணமாகக் காட்டிதான் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார். இது குறித்து, நீதிநாயகம் கே. சந்துரு (ஓய்வு) அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் (ஜúனியர் விகடன் - 07-10-20) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகமே பார்த்துக்கொண்டிருந்த தொலைக் காட்சிகளின் கேமராக்களில் பதிவான 500 வருடங்கள் பழைமையான பாபர் மசூதியை இடித்ததற்கு, ஒரு கிரிமினல் வழக்குகூட  கிடையாதா? என்ற கேள்வி எழுந்துவிடும் என்பதால், கடமைக்கு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் கல்யாண்சிங் முதல் குற்றவாளியாக ஆக்கப்பட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை 2014இல் இராசசுதானின் ஆளுநராக நியமித்தார்கள். அரசமைப்புச் சட்டத்தின் 361ஆவது பிரிவில், குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநர்களுக்கும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் 2019இல் தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால், வழக்கோ முடிவதாக இல்லை.
இராமர் கோயில் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், பாபர் மசூதி இடிப்பு மிகக் கொடூரமான செயல் மட்டுமன்றி, சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கியது என்று கோபமாகக் குறிப்பிட்டதுடன், வழக்கை 2020, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது. பின்னர், தொற்றுநோய் காரணமாக ஒரு மாத நீட்டிப்பு கொடுக்கப்பட்டது.
இடையே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்குக் கொடுக்கவேண்டும் என்று பா.ச.க. தனது முக்கிய அரசியல் கோரிக்கையாக வைத்ததோடு, அதன் தலைவர் அத்வானி குசராத் சோமநாதர் கோயிலிருந்து இரத யாத்திரையாகப் புறப்பட்டது நாடு முழுவதும் கலவரத்தைத் தூண்டியது. ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
அந்தச் சமயத்தில்தான், நாட்டிலுள்ள பிரச்சனைகளையெல்லாம் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் தீர்த்துவிட முடியாது, பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்துவிட முடியாது என்றெல்லாம் புதிது  புதிதாக முத்துகளை உதிர்க்க ஆரம்பித்தனர் பா.ச.க. தலைவர்கள். பாபர் மசூதி நிலம் சம்பந்தமான சொத்து வழக்கு நீதிமன்றங்களில் நடக்கிறதே என்று அவர்கள் அமைதியாகச் செல்ல விரும்பவில்லை. மாறாக, தாங்கள் அதிகாரத்திலிருந்த கால கட்டங்களில் சூட்சுமமான  வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். கோயில் கட்டுவதற்கான செங்கற்களை நாடு முழுவதும் தயார் செய்து அயோத்தியில்  கொண்டு சேர்த்தனர். இராசசுதானிலிருந்து நூற்றுக்கணக்கான சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக கோயிலின் கல்தூண்கள் வடிவமைக்கப்பட்டன.
மசூதியைச் சுற்றியிருந்த நிலங்களை மத்திய பா.ச.க. அரசு, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம்  கையகப்படுத்தியது. அந்த நடவடிக்கையை சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. பாபர் மசூதியில் தொழுகை நடக்கவில்லையென்றாலும், அதன் ஒரு பகுதியில் இராமர் சிலைக்கான வழிபாடுகள் தொடர்ந்து நடத்துவற்கு நீதிமன்றங்கள் அனுமதித்தன. வழிபாட்டுத்தலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னரே இத்தனை ஏற்பாடுகள். அப்படியென்றால், அவர்களுக்கு  நீதிமன்றங்கள் மீது எத்தகைய நம்பிக்கை இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
தலைமை நீதிபதி கோகாய் தலைமையில் அமைந்த அரசியல் சாசன அமர்வு, இராமர் கோயில் விவகாரத்தில் விசித்திரமான தீர்ப்பொன்றை அளித்தது. பாபர் மசூதி அமைந்திருக்கும் நிலத்தில், ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததற்கான தடயங்கள் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், 500 வருடங்கள் தொடர்ச்சியாக இந்துக்கள் அங்குதான் இராமர் தோன்றினார் என்ற நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின்றனர்.அதனால், இடிக்கப்பட்ட மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலங்களை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடிய ஓர் அறக்கட்டளை வசம் ஒப்படைத்து, இராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்ற அதிர்ச்சியான தீர்ப்பை நீதிபதிகள் தங்களது சிறப்பு அதிகாரத்தின் மூலம் வழங்கினர். ஆக, பா.ச.க. சட்டங்களால் தீர்க்க முடியாது. மக்களின் நம்பிக்கையைக் கருத்தில்கொள்ளவேண்டும் என்று கூறிவந்தது நீதிமன்றத் தீர்ப்பிலும் எதிரொலித்தது.
இப்போது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வழக்கில், பத்திரிகைக் குறிப்புகளைக் கொடுத்த சி.பி.ஐ. அந்தச் செய்திகள் வெளியான முழுச் செய்தித் தாள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. காணொளிக் காட்சிகள் பதிவான குறுந்தகடுகளை, சீலிட்ட உறையில் நீதிமன்றத்துக்குத் தரவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். மசூதியை இடிப்பதற்கு ஒன்றுகூடி இரகசியச் சதி தீட்டியதற்கான சாட்சியம் இல்லை என்று கூறியநீதிபதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 149வது பிரிவைப் பார்க்க மறந்துவிட்டார். அதன்படி, சட்டவிரோத  கும்பலில் இருக்கும் ஒவ்வொரு நபரும், அந்த கும்பல் செய்யும் குற்றங்களுக்கான சதியிலும் ஈடுபட்டிருப்பார்கள் என நம்பலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இரத யாத்திரையில் தொடங்கி இன்று இராமர் கோயிலுக்கான பூமி பூசையும் முடிந்துவிட்ட சூழ்நிலையில் ஒரு மாவட்ட நீதிபதி மசூதி இடிப்பில் வேறு என்ன தீர்ப்பு கொடுத்திருக்க முடியுமா? அரசு மற்றும் கட்சி இயந்திரங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதுடன், மக்களிடமும் செய்த பிரசாரங்களின் விளைவு, குற்றவாளிகள் என்று நிறுத்தப்பட்டவர்கள் இன்று இராம பக்தர்களாகக் காட்சியளிக்கிறார்கள். தீர்ப்பு கிடைத்தவுடன் காணொளியில் தோன்றிய அத்வானி சொன்ன வார்த்தை ஜெய் ஸ்ரீராம் என்பதே.
கடப்பாரையை விழுங்கி கசாயம் குடிப்பது என்பதற்கு இதைவிட நல்ல விளக்கம் இருக்க முடியாது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.