கல்விக் கண்களைக் குருடாக்கும் கல்விக் கொள்கை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:30

1950ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டிருந்தது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்றவற்றின் அடிப்படையில் அந்தந்த மாநில மாணவர்களுக்குரிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் தான் முடிவு செய்ய முடியும்.

எனவே, மாநிலப் பட்டியலில் கல்வி இடம்பெற்றது. ஆனால், 1976ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்படி கல்வி மத்திய&மாநில அரசுகளுக்குரிய பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிட்டது.
தொடர்ந்து 1986, 1992, 2016 ஆகிய ஆண்டுகளில் தேசியக் கல்விக் கொள்கைகள் திருத்தப்பட்டன. இறுதியாக அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் தலைமையிலான குழுவில் முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குசராத் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் கதிர் மங்கத், தேசியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் குழுவின் முன்னாள் இயக்குநர் ஜே.எஸ். ராஜ்புத் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ராஜ்புத்தைத் தவிர யாருக்கும் கல்வித் துறையில் பணியாற்றிய அனுபவம் இல்லை. நிருவாகத் துறைகளிலேயே பணியாற்றியுள்ளனர். ராஜ்புத்கூட கல்வித்துறையில் நிர்வாகப் பணியில் ஈடுபட்டவர். ஆக, தேசியக் கல்விக் கொள்கையை வகுக்கும் குழுவில் உண்மையான கல்வியாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. கல்வித்துறையைச் சாராத இந்த முன்னாள் அதிகாரிகள் கல்விக் கொள்கையைப் பற்றி உருவாக்கியுள்ள பரிந்துரைகள் ஒருபோதும் மாணவர்களுக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ அல்லது கல்வி முறைக்கோ பயன்தரவே தராது.
இந்தக் குழு அளித்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு இந்திய அமைச்சரவை சூலை 29ஆம் நாளன்று ஒப்புதல் அளித்தது. இதற்குப் பிறகு, இக்கல்விக் கொள்கைக் குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாநில முதல்வர்களும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று நடுவண் கல்வி அமைச்சர் கூறியது வெறும் கண்துடைப்பேயாகும். ஏற்கெனவே, இரண்டாண்டுகளுக்கு முன்பு தேசியக் கல்விக் கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்டபோது, ஆசிரிய அமைப்புகளும், கல்வியாளர்களும் தெரிவித்தக் கருத்துக்கள் எதனையும் அரசு ஏற்கவில்லை. புதிய கல்வித் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்தப் பிறகு, கருத்துக்கேட்பது என்பது வெறும் ஒப்புக்காக மட்டுமேயாகும். சனநாயக மரபுகளை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் அவசரஅவசரமாக புதிய கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, அதிலும், குறிப்பாக, கரோனா நோய் தொற்று பரவி மக்கள் முடங்கியிருக்கும் வேளையில் செய்வது சனநாயக மரபுகளை ஆழக் குழிதோண்டிப்  புதைப்பதாகும்.
அரசியல் திட்டத்திற்கு எதிரானது
இந்திய உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் அளித்தத் தீர்ப்பொன்றில் பின்வருமாறு கூறியுள்ளது. ்மாநில மக்களின் நலன், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மாநில அரசே பொறுப்பாகும். அதனடிப்படையில் மாணவர் சமுதாயத்தின் நலனுக்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கே உண்டு. குறிப்பாக, உயர் கல்வித்துறையில் வளர்ச்சிக்காணவேண்டிய பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. அதற்குரிய நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவேண்டிய கடமையை ஏற்றுள்ளது.நடுவண் அரசின் நிதி உதவியால் நடத்தப்படும் ஐ.ஐ.டி. , எம்.ஐ.டி, போன்றவற்றைத் தவிர, பிற கல்வி நிலையங்களின் மாணவர் சேர்ப்பு, கட்டணம், கல்வி நிலையங்களை நிருவகித்தல் ஆகியவற்றை அலசிப் பார்த்து ஆராய்ந்து முடிவெடுக்க மாநில அரசால் மட்டுமே இயலும். இதில் நடுவண் அரசின் தலையீடு குறித்து அரசியல் சட்டப் பிரிவு 66ன்படி உயர் கல்வியின் தகுதியை நிர்ணயிப்பதே தவிர, மாணவர் சேர்ப்புப் போன்றவற்றிளெல்லாம் நடுவண் அரசின் தலையீடு கூடாது” என அறிவித்துள்ளது.
மாநில அரசால் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப்படும் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துள்ளது அப்பட்டமான அரசியல் சட்ட மீறிலாகும். அத்துடன் அரசியல் சட்டம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துத்தை அடியோடு தகர்த்து மத்தியில் அதிகாரத்தை குவிக்கும் கொள்கையை  புதிய கல்வித் திட்டம் வகுத்துள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் உள்பட உயர் கல்வித்துறையை நிருவகிக்க ஒரு மத்திய ஒழுங்குமுறை அதிகார அமைப்பு அமைக்கப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறியிருப்பது அரசியல் சட்டத்தின் 246ஆவது விதிக்கு முற்றிலும் புறம்பானதாகும்.
மாநிலங்களில் கல்வி வளர்ச்சி என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நிலையில் உள்ளது. இதை மேலும் வளர்ப்பதற்கு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வளர்ந்துவரும் நிலையில் அதற்கு மாறாக, தொடக்கப்பள்ளியிலிருந்து முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் வரை கட்டுப்படுத்தும் பொறுப்பை நடுவண் அரசுக்குப் புதிய கல்விக் கொள்கைப் பரிந்துரைத்துள்ளது.
சமுதாய ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் சில சிறப்பு உரிமைகளை இந்திய அரசியல் சட்டத்தின் 13ஆவது பிரிவு வழங்கியுள்ளது. இந்த உரிமையைத் திட்டமிட்டு புதிய கல்விக் கொள்கைப் புறக்கணித்துள்ளது. இதன்மூலம் பின்தங்கிய, சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
புதிய கல்விக் கொள்கையை செயற்படுத்த வேண்டுமானால், அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும். மாநில சட்டமன்றங்களிலும் அவை நிறைவேற்றப்படவேண்டும். வயது வந்த அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்பதை இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது. இதை நிறைவேற்றுவதற்காக பல்கலைக்கழகங்களை நிருவகிக்கும்  அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை நிருவகிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை எதையும் மதிக்காத வகையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வித் திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் இதை முன் வைத்து முழுமையாக விவாதிக்காமல் அவசரஅவசரமாக இந்திய அரசு வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதாகும்.
தமிழக சட்டமன்றம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ள கல்வி குறித்தச் சட்டங்கள் யாவும் இனி செல்லாதவையாகிவிடும். எதிர்காலத்தில் உயர் கல்வி நிலையங்களை நிருவகிக்கும் சட்டம் எதையும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்ற முடியாது. இவைகள் குறித்தும் இன்னும் விரிவாகவும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் மாநில சட்டமன்றமும் விவாதிக்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
தமிழக அரசு நீண்ட காலமாக அமைத்துக் கட்டிக் காத்துவரும் உயர் கல்வி நிலையங்கள் யாவற்றையும் புதிய கல்விக் கொள்கை அடியோடு தகர்த்துவிடும். நீண்ட காலமாக தமிழக அரசு கல்வித்துறையில் பின்பற்றிவரும் சமூக நீதிக் கொள்கை அடியோடு ஆழமாகப் புதைக்கப்பட்டுவிடும். தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழிலேயே நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை இனி ஒருபோதும்  நிறைவேறாது.
தமிழக அரசு நிருவியுள்ள பல்வேறு  ஆய்வு நிலையங்கள் அனைத்தும் தேசிய ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். உலகத் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி உருவாக்கியுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் செம்மொழிக்கான நடுவண் அமைப்பு போன்றவற்றின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் பின்தங்கியுள்ள சமுதாயங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிப்பதற்கு இந்திய அரசியல் சட்டம் அனுமதித்துள்ளது. அதற்கிணங்க தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால், புதிய கல்விக்கொள்கை இந்த அடிப்படையை முற்றிலுமாக ஏற்க மறுக்கிறது. இதன் விளைவாக எதிர்காலத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்பது கனவாகிவிடும். கல்வியில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் உதவித்தொகை தொடர்ந்து அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு புதிய கல்விக் கொள்கை எவ்விதப் பதிலையும் கூறவில்லை.  
தேசிய ஆய்வு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு அதன்கீழ் ஆய்வுகள் கொண்டுவரப்படும். ஆய்வு மாணவர்களுக்கு தங்களின் ஆய்வுகளுக்கான தலைப்பை முடிவு செய்யவோ அதைச் சுதந்திரமாக ஆய்வு செய்வதற்கோ உரிமை கிடையாது. அரசு அல்லது தொழில் துறையினரின் விருப்பத்திற்கேற்ப தங்கள் தலைப்பை அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அதன்படியே அவர்கள் ஆய்வு நடத்த முடியும்.  அவர்களின் ஆய்வினை ஒரு முதன்மைக்குழு பரிசீலனை செய்யும். இத்தகைய கெடுபிடிகள் ஆராய்ச்சியின் நோக்கத்தையே தவிடுபொடியாக்கிவிடும்.
தற்போதுள்ள பட்ட மேற்படிப்பு முறை மாற்றப்படும். நான்காண்டுகள் பட்டப் படிப்பும், ஓராண்டு பட்ட மேற்படிப்பும் புகுத்தப்படும். இதன்மூலம் பட்ட மேற்படிப்பின் நோக்கமும் பயனும் ஒருபோதும்  நிறைவேறாது.
அனவைருக்கும் கல்வி அளிக்கவேண்டுமானால் அதற்கு  ஏராளமான ஆசிரியர்கள் தேவை. புதிய கல்விக் கொள்கை அதற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. இரண்டாண்டுப் படித்தால் ஆசிரியர் பட்டம் பெறலாம் என்பது மாற்றப்பட்டு அது நான்காண்டுகளாக்கப்படுகிறது. இதன்விளைவாக, ஆசிரியர் பற்றாக்குறை பெருகும்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இரண்டாண்டுப் படித்துப் பட்டயம் பெறலாம்  என்பதின்  மூலம் ஏராளமான பெண்கள் படித்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால், நான்காண்டுகள் படித்தால்தான் ஆசிரியர் ஆக முடியும் என்பது ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் திண்டாடும் தொடக்கப்பள்ளிகளை மூட வைத்துவிடும். ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்குப் படிக்கும் ஆண்டுகளை நான்காகக் கூட்டுவதின் மூலமே சாதிக்க முடியும் என புதிய கல்விக் கொள்கை கருதுவது அடிப்படையில் மிகத் தவறானதாகும்.
பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான பலவிதமான தேர்வுகள் நடத்துவதற்குப் பதில் பொதுவான ஒரு தேர்வை நடத்துவதற்காக தேசிய தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கிய, பிற்பட்ட மக்களை இத்தகைய தேர்வுகள் அடியோடு வடிகட்டிவிடும். உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் எவற்றிலும் இப்படியொரு தேர்வு முறை வைக்கப்படவில்லை.
உயர் கல்விக் குறித்துப் புதிய கல்விக் கொள்கை வகுத்துள்ள திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை அடியோடு பறித்துவிடும். அதுமட்டுமல்ல, மாணவர் சேர்ப்பு போன்றவற்றில் பல்கலைக்கழகங்களோ, மாநில அரசுகளோ எத்தகைய முடிவும் எடுக்க அதிகாரமில்லாமல் போகும்.
சுருக்கமாகச் சொன்னால் புதிய கல்விக் கொள்கையானது கல்வித்துறையை சந்தைப்படுத்திவிடும். தனியாரின்  தயவில் படிக்கவேண்டிய நிலைக்கு ஏழை, எளிய மாணவர்கள் ஆளாக்கப்பட்டுவிடுவார்கள். உயர்கல்வியில் 100% அந்நிய நேரடி மூலதனத்துக்கு வழிவகுக்கப்படும். உலகத் தொழில் அமைப்பு  அறிவித்த  உலகமயமாக்கும் கொள்கைக்கு ஏற்பவே புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி கற்பிக்க 200 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை நிருவகித்துவரும் பல்கலைக்கழகங்களின் மானியக்குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக்  குழுமம், மருத்துவக் கல்விக் குழுமம் ஆகியவை அடியோடு கலைக்கப்பட்டு ஒற்றை நிறுவனம் ஒன்று அமைக்கப்படும்.
இந்திய நிர்வாகத்துறைக்காக ஐ.ஏ.எஸ்., காவல்துறையை நிருவகிக்க ஐ.பி.எஸ்., போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல, கல்வித்துறையை நிருவகிக்க இந்தியக் கல்விப் பணித் தேர்வு முறை (ஐ.இ.எஸ்.) உருவாக்கப்படும். இதன்மூலம் மாநில அரசுகளின் கல்வித்துறை முழுமையாக இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.
1966ஆம் ஆண்டில் கோத்தாரி குழு வகுத்த தேசியக் கல்விக் கொள்கையின்படி கல்விக்காக இந்தியாவின் மொத்த செலவினத்தில் 6% ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. 54 ஆண்டுகளுக்குப் பிறகும் சுப்ரமணியம் குழு அதே 6%ஒதுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது ஒரு உண்மையை அம்பலமாக்கியுள்ளது. இத்தனை ஆண்டு காலமாகப் பல தேசியக் கல்விக்கொள்கைகள் வகுக்கப்பட்ட போதிலும், கல்விக்காக செலவழிக்கும் தொகை 6% என்பது ஒருபோதும் எட்டப்படவில்லை.  வெறும் ஏட்டிலேயே  உள்ளது.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டிற்குள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 1.24கோடிபேர் நடுவிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.  இதைத் தடுத்து பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களையும் முழுமையாகப் படிக்க வைப்பதற்கான திட்டமோ, அதற்கான நிதியைப் பற்றியோ புதிய கல்விக் கொள்கை எதுவும் கூறவில்லை.  நாடெங்கிலும் உள்ள 13.77இலட்சம் அங்கன்வாடி மையங்களில் 3.62இலட்சம் மையங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை என்பதும், 1.59இலட்சம் மையங்களில் குடிநீர் வசதி இல்லை என்பதும், இந்த மையங்களில் 1.75இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.  மேலும், அரசு நடத்தும் தொடக்க மற்றும் உயர் பள்ளிகளில் 10இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலேகண்ட புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் இந்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இவை போன்ற அதிர்ச்சித்தரும் குறைகளைப் போக்க எத்தகைய வழிமுறையையும் புதிய கல்வித் திட்டம் கூறவில்லை.
இந்தியா முழுவதிலும் உயர் கல்விப் படிப்போரின் விகிதம் அதிகமான மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். பெருகிவரும் மாணவர்களுக்கேற்ப உயர்கல்வி நிலையங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதைப்போக்குவதற்கு எத்தகைய வழிமுறைகளையும் புதிய கல்விக் கொள்கை கூறவில்லை. மாறாக, உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களை வடிகட்டித் தடுப்பதற்கு இக்கொள்கை முயலுகிறது. மொத்தத்தில் புதிய கல்விக் கொள்கை மாணவர்களின்  கல்வியை அடியோடு சீரழிக்க முயலும் கொள்கையாகும்.
பெட்டிச் செய்தி
மாணவர் மீது சுமத்தப்படும் மொழிச்சுமை
மும்மொழித் திட்டம் கொண்டுவரப்படும் என்று புதிய கல்விக்கொள்கை அறிவித்துள்ளது. ஏற்கெனவே 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்  விளைவாக, அப்போதைய தலைமையமைச்சர் லால்பகதூர் மும்மொழித் திட்டத்தை அறிவித்தார். தென்னிந்திய மாணவர்கள் தாய்மொழியோடு ஆங்கிலம் மற்றும் இந்தியைப் படிக்கவேண்டும் என்றும், வடமாநிலங்களில் உள்ள மாணவர்கள் தாய்மொழி ஆங்கிலம் ஆகியவற்றோடு தென்னாட்டு மொழிகள் ஒன்றையும் படிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இத்திட்டம் ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை. வடக்கே உள்ள மாணவர்கள் தென்னாட்டு மொழிகளைக் கற்க எந்த ஏற்பாட்டையும் வடமாநில அரசுகள் செய்யவே இல்லை.  
அதுதான் இப்போதும் நடக்கும். தென்னாட்டு மாணவர்களுக்கு மொழிச் சுமை அதிகரிக்குமே தவிர, வடநாட்டு மாணவர்களுக்கு அல்ல.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே தனியார் நடத்தும் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் மும்மொழித் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும்  அங்கு புகுத்தப்பட்டுள்ளது.   நாளடைவில் அரசுப் பள்ளிகளிலும் இந்தி கொண்டுவரப்படும் அபாயம் உள்ளது.
பெட்டிச் செய்தி
கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் முடவன்
தொடக்கப்பள்ளி நிலையிலேயே சமற்கிருதம் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. 2011ஆம்  ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி இந்தியா முழுவதிலும் உள்ள 133கோடி மக்களில் சமற்கிருதம் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 25,000 பேர்களுக்குட்பட்டேயாகும். இவர்களில் எத்தனை பேர் பிறருக்கு சமற்கிருதம் கற்றுக்கொடுக்க தகுதிப் படைத்தவர்கள்? இந்தியா முழுவதிலும் சமற்கிருதம் கற்றுக்கொடுக்க தேவைப்படும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு எங்கே போவது? சமற்கிருதத்துக்கு ஆதரவாகப் பேசுபவர்களில் எத்தனை பேருக்கு சமற்கிருதம் தெரியும்? கவைக்கு உதவாத திட்டத்தைப் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும், மடங்கள் மற்றும் தனியார் கட்டுப்பாட்டிலும் 50,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் உள்ள அர்ச்சகர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமான அளவு இருக்கும். இந்தியா முழுவதிலும் சமற்கிருதம் தெரிந்தவர்கள் 25,000பேர் என்ற கணக்கின்படி தமிழ்நாட்டில் சில நூறுபேருக்குத்தான் சமற்கிருதம் தெரிந்திருக்க முடியும். அப்படியானால், இந்தக் கோயில்களில் அர்ச்சனை செய்யும் பலருக்கு சமற்கிருதம் தெரியாது. தமிழில் எழுதி வைத்துக்கொண்டு தப்பும் தவறுமாக உச்சரிக்கிறார்கள் என்பது அம்பலமாகிறது. இந்த நிலைமையில் சமற்கிருதத்தை மாணவர்களிடம் திணிக்கப் புதிய கல்விக் கொள்கை முயலுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலாகும்.

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.