மறைவு - செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 10:53

“தழல்” தேன்மொழி மறைவு

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமகளும் ஆய்வறிஞர் அருளி அவர்களின் துணைவியாருமான தேன்மொழி அம்மையார் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்தத் துயரத்தை அளித்துள்ளது.

 

 

சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, தமிழ் மொழிக் காப்பு, தமிழக உரிமை மீட்பு ஆகியவற்றிற்காக தொடர்ந்து செயலாற்றினார். எழுதினார். பேசினார். தழல் என்ற பெயரில் திங்களிதழ் ஒன்றினையும் நடத்தி தனது தடத்தினைத் தமிழகத்தில் பதித்தார்.

இராசீவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கும் ஒட்டுமொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தோம். அந்த வழக்கை நடத்துவதற்கு மக்களிடம் கையேந்தினோம். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த பொற்றாலிக் கொடியைக் கழற்றி நன்கொடையாக வழங்கிய பேருள்ளம் படைத்தவர். தனது செயற்பாட்டின் மூலம் தனித்தன்மையை நிறுவியவர்.

வாழ்க்கைத் துணையின் மறைவினால் பெருந் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அறிஞர் அருளியார் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்மநாபன் மறைவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்கக் காலத்தில் இருந்து அதன் தலைமை நிலையச் செயலாளராக திறம்பட பணியாற்றிய நண்பர் பத்மநாபன் அவர்கள் காலமான செய்தி அறிய மிக வருந்துகிறோம்.

அவருடைய இறுதி நிகழ்ச்சியின் போது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் முத்தமிழ்மணி மற்றும் புலவர் இரத்தினவேலன், லாரன்சு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திரளான தோழர்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்ச்சி

ஆவடி முத்தமிழ் மன்றத்தில் 17-10-2020 அன்று திரு. பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்ச்சி பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. அருள்மொழிச் செல்வன் அனைவரையும் வரவேற்றார். அருகோ, அய்யநாதன், புலவர் இரத்தினவேலன் ஆகியோர் உரையாற்றினர். ப. இளங்கோவன், முருகக் கூத்தன் ஆகியோர் நன்றி கூறினர்.

தமிழ்ப் போராளி குமர. தன்னொளியனார் மறைவு

உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், சான்றோர் பேரவை, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றில் பொறுப்பு வகித்து அயராது தமிழ்த் தொண்டாற்றிய புலவர் குமர. தன்னொளியனார் அவர்கள் காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும்.

தமிழ், தமிழர், தமிழ் நாடு நலனுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு அருந்தொண்டாற்றிய அவரின் மறைவினால் வருந்தும் அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வழக்குரைஞர் கலைமணி மறைவு

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக விளங்கி தமிழுக்காகத் தொண்டாற்றுபவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில் எதையும் எதிர்பாராமல் அவர்களுக்காக வாதாடிய உயர் பண்பு படைத்த நண்பர் கலைமணி அவர்களின் மறைவு அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தினை அளித்துள்ளது.

அவரது பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதூசா அம்மையார் மறைவு

தமிழ்த் தேசியப் போராளி மறைந்த தமிழரசன் அவர்களின் அன்னை பதூசா அம்மையார் காலமான செய்தி அறிந்து மீளா துயரத்தில் ஆழ்ந்தோம். வீர மகனை தமிழ்த் தொண்டிற்கு ஒப்படைத்த வீரத்தாய் அவர்களுக்கு தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பாரதி செல்வன், திருவாரூர் மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், நாகை மாவட்டத் தலைவர் பேரா. முரளிதரன் மற்றும் தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி வணக்கம் செலுத்தினர்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.