திருமுறைக் காவலர் தங்க. விசுவநாதன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:01

இனிய நண்பர் ஈரோடு திரு. தங்க. விசுவநாதன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அளவற்றத் துயரம் அடைந்தேன். அரை நூற்றாண்டு காலமாக என்னுடைய பணிகள் யாவற்றிலும் தோள் கொடுத்துத் துணை நின்ற அருமைத் தோழரின் மறைவு எனக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அதிலும் உடனடியாக ஈரோடு சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக் கூட இயலாத காலச் சூழ்நிலை என்னை மிக வருந்த வைத்து விட்டது.

 

 

இளைஞராக இருந்த போது சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களின் தலைமையை ஏற்று தமிழக எல்லைப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றும் போராட்டம், தமிழ் ஆட்சி மொழி / பயிற்சி மொழிப் போராட்டம் போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறைச் சென்றவர். 1978-ஆம் ஆண்டில் என்னுடன் இணைந்து தமிழர் தேசிய இலட்சிய தீபத்தினை ஏந்திப் பிடித்து இறுதி வரை துணை நின்றவர். இயக்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றதோடு பல்வேறு போராட்டங்களிலும் பங்கு கொண்டவர்.

1983-ஆம் ஆண்டு ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் “கடல் கடந்து இலங்கைச் சென்று சகோதரத் தமிழர்களின் உயிர் காக்க” மேற்கொள்ளப்பட்ட “தமிழர் தியாகப் பயணம்”, காவிரி நீர் உரிமை மீட்புப் போராட்டம் மற்றும் இயக்கம் நடத்திய பல்வேறுப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். குறிப்பாக கண்ணகிக் கோவில் உரிமையை நிலைநாட்டும் போராட்டத்தில் மூணாறில் கேரளக் காவல்துறையின் தடையை மீறி அங்குச் சென்று கண்ணகியின் சிலையை வழிபடும் வகையில் அந்த மலை உச்சியின் மீது அவர் சிலப்பதிகாரப் பாடலைக் கணீரென்ற குரலில் ஓங்கி ஒலித்த போது அது எதிரொலித்து தமிழரின் உரிமையைப் பறைசாற்றிய அந்தக் காட்சி இன்னமும் என்னுள்ளத்திலும் உடன் வந்த தோழர்களின் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

சமுதாயத் தொண்டிலும் ஈடுபட்டு ஈரோட்டில் குழந்தைகள் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவி ஏழை, எளியக் குழந்தைகளின் கல்விக்கு உதவினார். அது மட்டுமல்ல ஈரோட்டில் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கும் நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் கல்வி பெறவும் வழி வகுப்பதில் முன்னின்றார்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக அவர் திகழ்ந்தார். அரசியல் தொண்டு மட்டுமல்ல இலக்கியம், ஆன்மீகம், போன்றவற்றில் சிறந்த சொற்பொழிவாளராகவும் அவர் விளங்கினார். தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தனது சொல்லாற்றலின் மூலம் தமிழர்களின் உள்ளங்களில் அழியாத இடம் பெற்றார்.

சிவநெறிச் செல்வர், திருத்தொண்டர் மாமணி, இலக்கியச் செல்வர், பெரிய புராணப் பேரொளி, திருமுறைக் காவலர், இலக்கியத் தென்றல், திருமுறைச் செல்வர், விரிவுரை வித்தகர் போன்ற விருதுகள் பல பெற்றவர்.

குறிப்பாக தமிழ் வழிபாட்டு இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். தமிழக மடாதிபதிகள் பலராலும் நன்கு மதிக்கப்பட்டவர். தனது கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களில் மட்டுமல்ல தமிழகமெங்கும் உள்ள பல கோயில்களில் குடமுழுக்கு தமிழிலேயே நடத்துவதற்குத் தொண்டாற்றியவர்.

திருமுறைகளின் பெருமை, திருத்தொண்டர்களான நாயன்மார்கள் ஆற்றிய தொண்டின் சிறப்பு போன்றவை குறித்து இருபதிற்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர். அவற்றில் சில ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்க்கப்பட்டன.

கொடி காக்கத் தடியடிக்கு உள்ளாகி உயிர்த் தியாகம் புரிந்த திருப்பூர் குமரனின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி அவரின் தியாக வரலாற்றினை நூலாக எழுதி அவரின் பெருமையைப் பரப்பியவர்.

தலை நிமிர்ந்த தமிழ்த் தேசியம் – 40-ஆம் ஆண்டு விழா மாநாடு மதுரையில் 22-12-2019 அன்று நடைபெற்ற போது அவருக்கு தமிழ்த் தேசியச் செம்மல் என்னும் விருதினை வழங்கிய போது உடல் நலிவுற்ற நிலையிலும் நேரில் வந்திருந்து அதைப் பெற்றுக் கொண்டு அனைவரையும் மகிழ்வித்தார். ஆனால் அதுதான் அவர் இறுதியாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதை அறியாமல் போனோம்.

அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எங்கள் இருவரின் குடும்பங்களும் மிக நெருங்கிப் பழகி நட்புறவுக் கொண்டாடின. அவரின் மறைவு இரு குடும்பத்தினருக்குமே பேரிழப்பாகும். இந்த நிலையில் யாருக்கு யார் ஆறுதல் கூறவோ பெறவோ முடியும். அவரின் அருமைத் துணைவியார் சகோதரி மல்லிகா அம்மையார் அவர்கள், அவருடைய செல்வ மகள் பண்மொழி, மூத்த மகன் ஆரூரன், இளைய மகன் புகழேந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரின் மீளாத் துயரத்தில் நானும் எனது குடும்பத்தினரும் மற்றும் தோழர்களும் பங்கேற்கிறோம்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.