சிதைக்கப்பட்டு உருமாறிய அரசியல் சட்டம் பயன்படாது தன்னுரிமையை ஏற்கும் புதிய அரசியல் சட்டம் வேண்டும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 நவம்பர் 2020 12:09

இந்தியாவில் அரசியல் யாப்பு அவை அமைக்கப்பட்டபோது, நாடு விடுதலை பெறவில்லை. 1946ஆம் ஆண்டில் பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்து, காங்கிரசு, முசுலீம் லீக் மற்றும் பல கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விளைவாக எடுக்கப்பட்ட பல முடிவுகளில் அரசியல் யாப்பு அவை அமைப்பதும் ஒன்றாகும்.

அதே ஆண்டில் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. அத்தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முசுலீம் பெரும்பான்மை மாகாணங்களில் முசுலீம் லீக் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சொத்துரிமைப் படைத்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் அரசியல் யாப்பு அவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தன. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சுதேச மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளில் வாழ்ந்தனர். அந்த மக்களின் சார்பில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதில் சுதேச மன்னர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அரசியல் யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தத்தில் சொத்துரிமை கொண்டவர்கள் மற்றும் சுதேச மன்னர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாக அரசியல் யாப்பு அவை அமைக்கப்பட்டது. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்தலில் இந்திய மக்களில் பெரும்பாலோரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த அவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக் கட்சியின் சார்பில் அமைச்சரவைத் தூதுக் குழுவிடம் பின்வரும் திட்டம் அளிக்கப்பட்டது. “ஒரு கூட்டாட்சி அமைப்பின் கீழ் அதிகாரம் பரவலாக வழங்கப்பட்டிருப்பதுதான் சிறுபான்மையினோரின் அச்சத்தைத் தணிக்க உதவும். கூடியவரை அதிகளவு அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கி, மாகாண சுயாட்சியை உறுதிசெய்யும் வகையிலேயே இந்திய கூட்டாட்சி அமைக்கப்படவேண்டும். சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவேண்டும்” எனக் காங்கிரசு முன்மொழிந்தத் திட்டத்தை முசுலீம் லீக்கும் வரவேற்றது. நாடே வியக்கும் வகையில் இத்திட்டத்தை ஏற்றதோடு, பாகிசுதான் பிரிவினையின் கோரிக்கையைக் கைவிடுவதாக முசுலீம் லீக்கின் தலைவர் ஜின்னா அறிவித்தார். இத்திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் காங்கிரசு - முசுலீம் லீக் பிரதிநிதிகள்   இடம்பெற்றனர்.

அரசியல் யாப்பு அவை கூடியபோது “முழுமையான சுயாட்சியுடைய மாநிலங்கள் தாமே விரும்பிக்கொடுத்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்கும் வகையில் சுதந்திர இந்திய கூட்டாட்சித் திகழும்” என்ற அரசியல் யாப்பு அவையின் நோக்கத் தீர்மானத்தை தலைமையமைச்சர் நேருவே முன்மொழிந்து உரையாற்றினார். காங்கிரசுக்கும் முசுலீம் லீக்கும் இடையே அதுவரை நிலவிவந்த பகைமை விலகி அரசியல் யாப்பு அவையிலும், நடுவண் அரசிலும் இந்த இரு கட்சிகளும் ஒத்துழைத்து பணியாற்றும் என்ற நம்பிக்கை பிறந்தது. நாடு துண்டாடப்படும் நிலைமை தவிர்க்கப்பட்டு இந்து-முசுலீம் சமுதாயங்களின் ஒற்றுமையின் மூலம் சுதந்திர இந்தியா பிறக்கும் என அனைவரும் நம்பினர்.

ஆனால், கூட்டாட்சி அரசுக்கு இசைந்துப் போவதைக் காட்டிலும் நாடு பிளவுபடுவதையே இந்தியப் பெரு முதலாளிகள் விரும்பினர். தங்களுக்குப் போட்டியாக மாநிலங்களில் அந்தந்த மொழிவழித் தேசிய முதலாளிகளும் உருவாக கூட்டாட்சியும், மாநில சுயாட்சியும் வழிவகுத்துவிடும் என்றும், தங்களுடைய ஏகபோக பொருளாதார மேலாதிக்கம் தகர்ந்து போய்விடும் என்றும், தொழில் தொடங்க அனுமதிக்கும் அதிகாரம் நடுவண் ஆட்சியிடம் மட்டுமே இருப்பது நல்லது என்றும், இந்தியப் பெரு முதலாளிகள் கருதினர். இத்தகைய கூட்டாட்சி அமைவதைவிட, பாகிசுதான் பிரிந்துப் போவதே நல்லது என்றும், எஞ்சிய இந்தியாவை நமது விருப்பம் போல கட்டமைக்கலாம் என்றும் மிகப்பெரு முதலாளியான பிர்லா கூறியது சிந்திக்கத் தக்கதாகும். எனவே அவர்கள் நேரு, படேல் ஆகிய தலைவர்களைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து தங்கள் நிலைப்பாட்டை ஏற்க வைத்தனர்.

இந்த காலகட்டத்தில் காங்கிரசுத் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டு மௌலானா ஆசாத்தின் பதவி காலம் முடிந்து அவருக்குப் பதிலாக நேரு தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதற்குப் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் “பிரித்தானிய அரசு அளித்த அமைச்சரவைத் திட்டத்தை காங்கிரசு முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதாகக் கருதலாமா? ” என எழுந்த வினாவுக்குப் பதிலளிக்கையில் “இத்திட்டத்திற்கு காங்கிரசுத் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. தனக்கு உகந்தது என்று தோன்றும் வகையில் அந்த திட்டத்தை மாற்றவோ, திருத்தவோ காங்கிரசுக் கட்சிக்கு சுதந்திரம் உண்டு” என நேரு கூறினார்.

இதைக் கண்டு முசுலீம் லீக் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரித்தானிய ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. இந்த காலகட்டத்திலேயே காங்கிரசுக் கட்சி தனது வாக்குறுதிகளிலிருந்து பிறழுமானால் ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு காங்கிரசுக் கட்சி தனது போக்கை மாற்றிக் கொள்ளாது என்பது என்ன உறுதி? என முசுலீம் லீக் தலைவர் ஜின்னா கேட்டார். மாநில சுயாட்சியையும், மத்தியில் கூட்டாட்சியையும் காங்கிரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது என நம்பித்தான் பாகிசுதான் பிரிவினைக் கோரிக்கையை முசுலீம் லீக் கைவிட்டது. ஆனால், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கக் கூடிய வகையில் பிரித்தானிய திட்டத்தை காங்கிரசு திருத்தினால் தங்கள் நிலைமை என்னாவது? என ஜின்னா அஞ்சினார். எனவே, தனது கட்சியின் செயற்குழுவைக் கூட்டி பாகிசுதான் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினார்.

உருவாகியிருந்த நல்ல சூழ்நிலை இதன் விளைவாக சீர்கெட்டு முற்றிலுமாக மாறியது. அதற்குப் பின் நடந்தவை வரலாறாகும். நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வேண்டாத மதக் கலவரங்கள் மூண்டன. இலட்சக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பல கோடி மக்கள் இரு நாடுகளிலிருந்தும் அகதிகளாக இடம்பெயர்ந்த அவலம் நிகழ்ந்தது. இந்தியாவின் வரலாற்றில் இது துயரம் நிறைந்த கட்டமாகும்.

பாகிசுதான் பிரிந்து சென்ற பிறகு காங்கிரசுக் கட்சியின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றம் உருவாயிற்று. எஞ்சியிருக்கக்கூடிய இந்தியாவில் எதிர்காலத்தில் மாநிலங்கள் பிரிந்து போகும் நிலைமை ஏற்படாமல் தடுக்க வலிமை வாய்ந்த நடுவண் அரசை அமைப்பது ஒன்றே வழி என முடிவு செய்து, அதற்கேற்ற முறையில் அரசியல் சட்டத்தை வகுத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவுள்ள பகுதிகள்

 1. மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியலில் 97 விசயங்களும், மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பட்டியலில் 67 விசயங்களும், மாநில அரசுப் பட்டியலில் 66 விசயங்களும் மட்டுமே சேர்க்கப்பட்டன. பொதுப்பட்டியலில் ஒதுக்கப்பட்ட ஒரு விசயத்தைப் பற்றி மத்திய அரசு தனியாகவும், மாநில அரசு தனியாகவும் சட்டங்கள் இயற்றுமேயானால் மத்திய அரசின் சட்டமே மேலோங்கி நிற்கும். மூன்று பட்டியலிலும் சேராத விசயம் ஏதேனும் இருக்குமானால் அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை அதாவது, எஞ்சிய அதிகாரம் (Residuary Power) மத்திய அரசுக்கே உண்டு. அரசியல் சட்டப்படி அதிகாரப் பங்கீடு என்பது மத்திய அரசைச் சார்ந்ததாகவே அமைந்துவிட்டது.
 2. அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது என்பது எளிதானதல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மத்திய நாடாளுமன்றத்தில் வருகை தந்துள்ள உறுப்பினர்களில் 2/3 பங்கு பெரும்பான்மை மூலம் எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம். மாநிலச் சட்ட மன்றங்கள், இதை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. அரசமைப்புச் சட்டத்தின் சில பகுதிகளுக்கான திருத்தங்களை மட்டுமே மாநிலச் சட்டமன்றங்கள் அங்கீகரிக்கவேண்டும். அரசமைப்புச் சட்டத்திற்கு எந்தத் திருத்தத்தையும் கொண்டுவர மாநிலச் சட்டமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.
 3. இந்திய அரசமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்குத் தனியான அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்ளும் அதிகாரம் கிடையாது. காசுமீர் மாநிலம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்திய அரசியல் அமைப்பிலிருந்து மாநிலங்கள் வெளியேறிச் செல்ல முடியாது. இந்த அரசியல் அமைப்புக்குட்பட்டு மாநிலங்கள் இயங்க வேண்டும்.
 4. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சமப் பிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் தொகையின் அடிப்படையிலே மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 5. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொருவருக்கும் இரட்டைக் குடியுரிமை உண்டு, ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரே ஒரு குடியுரிமை மட்டுமே வழங்கியுள்ளது.
 6. மற்ற கூட்டாட்சி நாடுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் மத்திய அரசினால் நேரடியாக ஆளப்படுகிற பகுதி உண்டு. (Union Territories) இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களும் தகுதியும் இந்தப் பகுதிகளுக்குக் கிடையாது.
 7. கூட்டாட்சி நாடுகளில் அந்த நாடுகளின் அமைப்பினைத் தலைகீழாக மாற்றுவதற்குச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இத்தகைய மாற்றத்திற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பிலுள்ள கூட்டாட்சி முறையைப் போர்க் காலத்திலோ அல்லது வேறு அவசர காலங்களிலோ முற்றிலுமாக மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்கலாம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டால் மாநிலங்களின் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள எந்த விசயத்தைப் பற்றியும் மத்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிட்டு வழிமுறைகளைக் காட்ட உத்தரவிடுவதற்கு மத்தி்ய அரசுக்கு அதிகாரம் உண்டு. எந்த மாநிலத்திலாவது நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அந்த மாநிலத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
 8. சர்வதேசக் கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் நேர்ந்தால் மாநிலப் பட்டியலிலுள்ள எந்தப் பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். மாநிலத் துறைகளில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்யலாம்.
 9. IAS, IPS, IFS போன்ற அகில இந்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களை மத்திய அரசே நியமிக்கிறது. அவர்களைப் பல மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசின் கீழ் வேலை பார்த்தாலும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே. அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநிலப் பணிகள் வேறாகவும், மத்தியப் பணிகள் வேறாகவும் உள்ளன.
 10. மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் விரும்புகிற காலம் வரை அவர்கள் அந்தப் பதவியை வகிக்கலாம். ஆளுநர்கள் மத்திய அரசின் தரகர்களாகவே இருக்கிறார்கள்.
 11. தேர்தல் ஆணையத்திற்குரிய அதிகாரிகளைக் குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். மாநில அரசுக்குத் தேர்தல் ஆணையத்தின் நியமனத்திலோ, நிர்வாகத்திலோ எந்தவிதப் பங்குமில்லை.
 12. அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டை நீதிமன்ற முறைகள் உள்ளன. மாநிலச் சட்டங்களை அமுல் நடத்துவதற்கு மாநில அரசு தனி நீதிமன்றங்களையும், மத்திய சட்டங்களை அமுல் நடத்த மத்திய அரசு தனி நீதிமன்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரே ஒரு உச்ச நீதிமன்றமும், அதன்கீழ் மாநில உயர்நீதிமன்றங்களும் இயங்குகின்றன.
 13. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி ஒரு மாநிலத்தின் எல்லைகளை விரிவாக்கவோ அல்லது குறைக்கவோ மத்திய அரசினால் முடியும். மாநிலத்தின் பெயரையே மாற்றியமைக்கலாம். ஒரு மாநிலமே இல்லாமலும் செய்துவிடலாம்.
 14. கூட்டாட்சி அமைப்பின் முக்கியமான அம்சம் நிதிப் பங்கீடாகும். மத்திய-மாநில அரசுகள் சுதந்திரமாக இயங்குவதற்குத் தேவையான நிதி அதிகாரங்கள் அளிக்கப்படவேண்டும். ஆனால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு ஏற்ற நிதி வருவாய் வழிமுறைகளோ அவற்றை உருவாக்கும் அதிகாரங்களோ மாநிலங்களுக்கு இல்லை. மாநிலங்கள் நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலைமை நீடிக்கிறது.
 15. மாநிலச் சட்டமன்றங்களினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான் அமுலாக முடியும். மாநிலச் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் நிறுத்தி வைக்கும் உரிமை மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மாநில சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிறுத்தி வைக்கலாம். இதற்குக் காலவரையறை கிடையாது.

எனவேதான் இந்த அரசியல் சட்டத்திற்குச் சில திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாநில உரிமைகளை முழுவதுமாகப் பெற்றுவிட முடியாது. இது திருத்தப்பட்டாலும் உருப்படியாக முடியாத சட்டம். முற்றிலுமாக இதைத் தூக்கியெறிந்து விட்டு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கினாலொழிய மாநிலங்கள் தங்கள் உரிமைகளைப் பெறவே முடியாது.

            இந்த அரசியல் சட்டத்தை ஏன் ஏற்க மறுக்கிறோம் என்பதற்கு வலுவான நியாயமான பல காரணங்கள் உள்ளன. இந்த அரசியல் சட்டத்தை உ ருவாக்கிய அரசியல் நிர்ணயசபை எப்படி யாரால் அமைக்கப்பட்டது என்பது மிக முக்கியமானதாகும். இந்திய நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்த அரசியல் நிர்ணயசபை அமைந்திருக்கவில்லை. எனவே மக்களின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

            காங்கிரசுக் கட்சி தனது ஆட்சியில் சிறிதுசிறிதாக இந்திய அரசியல் சட்டத்தை சிதைத்தது. பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவித்தது. அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் இருந்த அதனுடைய நோக்கம் என்பது, அடியோடு சிதைக்கப்பட்டுவிட்டது. அது குறித்து அரசியல் சட்ட அறிஞர்கள் பலரும் ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார்கள்.

இந்துத்துவா நிலைப்பாடு

ஆனால், இந்திய அரசியல் சட்டம் குறித்து பா.ச.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை நாம் பார்க்கவேண்டும். அறிஞர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை காங்கிரசு ஆட்சிக் காலத்திலும், பின்னர் சனதாக் கட்சி, மற்றும் பல கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் 120க்கும் மேற்பட்ட திருத்தங்களின் மூலம் உருத்தெரியாமல் ஆக்கிவிட்டனர். ஆனால், சங்கப் பரிவாரம் தொடக்க முதலே இந்த அரசியல் சட்டத்தை ஏற்கவில்லை. தங்களுடைய கடும் எதிர்ப்பினை அவர்கள் தெரிவித்தார்கள். அதன் சாரம் வருமாறு-

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்கப் பரிவாரக் கும்பல் 1993ஆம் ஆண்டு சனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது. அவர்கள் நிறுவ திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு முறையைப் பற்றி அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது. வெள்ளை அறிக்கையின் முன் பக்க அட்டையில் இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

                        இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றைச் சீர்குலைத்தது யார்? இது முதல் கேள்வி.

                        பட்டினி, வேலையின்மை, இலஞ்ச ஊழல், மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார்? இது எழுப்பப்பட்டிருந்த இரண்டாவது கேள்வி. அதற்கான பதில் வெள்ளை அறிக்கையின் தலைப்பில் அளிக்கப்பட்டது. வெள்ளை அறிக்கையின் தலைப்பு ‘தற்போதைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்’.

                        இந்தி மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் இந்தியன் என்ற சொல் ஒரு காரணத்துடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் இந்தியத் தன்மை வாய்ந்தது. அது இந்துக்களின் அரசியல் சாசனமல்ல என்பதை உணர்த்துவதற்கே அவ்வாறு குறிப்பிடப்பட்டது. அந்த வெள்ளை அறிக்கையின் முன்னுரையில் சுவாமி இரானந்த் எழுதுகிறார்:

                        “நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.” இந்த ஆவணத்தைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டு அவர் கூறுகிறார். “இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்த பிறகுதான் நம்முடைய பொருளாதாரக் கொள்கை நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புள்ள மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதனை முழுமையாக ஒதுக்கித்தள்ளுவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செய்தியாகும். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும்போது 200 ஆண்டு பிரித்தானியா ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது. உலகம் முழுவதும் தற்போது இந்தியர்கள் என்றே அறியப்படுகிறோம்” என்று வருத்தப்படுகிறார்.

                        “இந்து நாட்டைப் பெறுவதற்காக விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. வந்தே மாதரம் தான் தேசிய கீதமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உருவான இந்தியாவில் இந்து நாடும் வந்தே மாதரமும் அழிக்கப்பட்டு விட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காகப் பாடப்பட்ட பாடல் தேசிய கீதமாக மாறியுள்ளது” என அவர் வருந்துகிறார்.

                        உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக அந்தப் பிரசுரம் எழுதப்பட்டதாகக் கருதக் கூடாது. முழுமையான விவாதத்திற்குப் பிறகு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சுவாமி இரானந்த் ஒரு பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். சுவாமி வாமதேவ் மகாராசும் அவருடன் பேட்டியில் கலந்து கொண்டார்.

                        இந்து எதிர்ப்பு அரசியல் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தேசத்திற்கு அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டின் சட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதுக்கள் நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவின் இயற்கையான குடிமக்கள் என்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் கூறுவது ஒரு மோசடி ஆகும்”. ஒரு வாரம் கழித்து இரானந்தின் பிரசுரம் வெளியிடப்பட்டது.

                        சங்பரிவாரின் தாய் அமைப்பான ஆர்.எசு.எசு. தான் வெள்ளை அறிக்கை பற்றிய கருத்துக்களை முதலில் வெளியிட்டது. 1993ஆம் ஆண்டு சனவரியில் ஆர்.எசு.எசு. அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த இராசேந்திர சிங் பின்வருமாறு எழுதினார்:

                        “இந்தியாவின் இன்றியமையாத தேவைகளை ஈடு செய்யும் வகையிலோ, அதன் பாரம்பரியம், அது உயர்வாகப் போற்றும் அம்சங்கள், அதன் உயர்ந்த பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாகவோ இல்லாத வகையில் நமது அமைப்புகள் இருப்பதே தற்போது நடைபெறும் மோதலுக்கு ஓரளவு காரணமாக அமைந்துள்ளன என்று கூறலாம். இந்த நாட்டின் சில சிறப்புத் தன்மைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துசுதான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் என்று அதிகாரபூர்வமான ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நமது கலாச்சாரம் பன்முகத் தன்மை கொண்டதல்ல என்பது உறுதி. அணியப்படும் ஆடைகளோ, பேசும் மொழிகளோ கலாச்சாரமல்ல. அடிப்படையான நிலையில் பரிசீலித்தால் கலாச்சார ரீதியில் நாடு ஒன்றுபட்டு நிற்பது தெரிய வரும். எந்த ஒரு நாடும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கக் கூடாது. இவைகளெல்லாம் மாறுதல் செய்யப்பட வேண்டியதன் தேவையைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் உயர் பண்புகளுக்கும் அறிவுத் திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும்” (இந்தியன் எக்ஸ்பிரஸ் - சனவரி 14, 1993)

                        அன்றைய பா.ச.க. தலைவரான முரளி மனோகர் ஜோசி 1993 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் நகரத்தில் பேசும்போது, ‘அரசியல் அமைப்புச் சட்டத்தைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை வலியுறுத்தினார்’.

                        சங்கப்பரிவாரக் கும்பல் முழுமையும் அடிப்படையில் தாராளமான சிந்தனைப் போக்கு கொண்டதல்ல. அவை அறிவாளிகளுக்கு எதிரானது. மேற்கத்திய அறிவுப் பாரம்பரியத்தை ஏற்க மறுக்கும் அமைப்புகள் அவை. “இந்தியாவின் கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் அறிமுகமில்லாத மேற்கத்தியபாணி சிந்தனை கொண்ட மக்களை உருவாக்கியதுதான் நமது அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறது இப்பிரசுரம். தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராக இப்பிரசுரம் கண்டனம் தெரிவிக்கிறது. சிறுபான்மையினர் தொடர்பான விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. அதுவும் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக நிதானமற்ற சொற்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டமே ஒரு குப்பைக் குவியல் என்று வருணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச் சட்டம் விரோதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த அரசியல் சட்டம்

                        காலப்போக்கில் காங்கிரசுக் கட்சியும், பா.ச.க.வும் மாறிமாறி அரசியல் சட்டத்தின் பல்வேறு பகுதிகளை திருத்தியும், அழித்தும் புதிய திருத்தங்களைக் கொண்டுவந்தும், முற்றிலுமாக அதன் நோக்கத்தையும், தோற்றத்தையுமே அடியோடு மாற்றிவிட்டன. இவற்றின் விளைவாக மாநில அரசுகள் அதிகாரங்களை முற்றாகப் பறிகொடுத்து மத்திய அரசிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளன. மத்தியில் எதேச்சதிகார அரசு உருவாகியுள்ளது. படிப்படியாக இரு கட்சிகளுமே அரசியல் சட்டத்தைச் சிதைத்ததற்குச் சில சான்றுகளைக் கீழே காணலாம்-

சனநாயகம் சிதைந்து சர்வாதிகாரம் தலைத் தூக்குகிறது

                        இந்திய நாடு நாடாளுமன்ற சனநாயக முறையை அரசியல் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் இயங்குவதற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ. 26,035 செலவிடப்படுகிறது. ஆண்டிற்கு 440கோடி ரூபாய் செலவாகிறது. நாடாளுமன்றம் ஆண்டிற்கு 143 நாட்களாவது கூடி விவாதிக்கவேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் பழங் கனவாகப் போய்விட்டன.

                        தலைமையமைச்சராக நேரு இருந்தபோது நாள்தோறும் தவறாமல் நாடாளுமன்றத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியமானவர்கள் பேசும்போது கூர்ந்து கவனித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு பின்னர் அவற்றுக்குப் பதிலும் சொல்லுகிற சனநாயகப் பண்பு அவரிடம் நிறைந்திருந்த காரணத்தினால் மற்ற அமைச்சர்களும், உறுப்பினர்களும் தவறாமல் நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கெடுத்தனர். காலப்போக்கில் இந்த நிலைமை மாறியது. நாடாளுமன்றம் சந்தைக் கடையாக மாற்றப்பட்டது. கூச்சலும் குழப்பமும் அன்றாட நடைமுறைகளாகிவிட்டன. பேரவைத் தலைவர் எதுவும் செய்ய இயலாத கையறு நிலைக்கு உள்ளானார். அவரது இருக்கையையே சூழ்ந்துகொண்டு கூச்சலிடும் அநாகரிகம் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. ஆண்டுதோறும் 50க்கும் குறைவான நாட்களே நாடாளுமன்றம் குழப்பமின்றி நடைபெறுகிறது. 100 நாட்களுக்கு மேல் கூச்சல், குழப்பம் காரணமாகக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தை முடக்குவதில் எல்லா கட்சிகளுக்கும் பங்கு உண்டு. காங்கிரசுக் கூட்டணி ஆண்டபோது, பா.ச.க. கூட்டணி இந்த நடைமுறையைக் கையாண்டது. இப்போது பா.ச.க. ஆட்சியில் காங்கிரசு அதே குழப்ப முறையைக் கையாண்டு கூட்டங்கள் முறையாக நடைபெற முட்டுக்கட்டைப் போடுகிறது. நாடாளுமன்ற மரபுகளையோ, நடைமுறைகளையோ மதித்துப் பின்பற்ற யாரும் தயாராக இல்லை. மக்கள் நலனைவிட, கட்சி நலன் பெரிது என்று குறுகிய கண்ணோட்டம் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்ற சனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டுவிட்டது. இது தொடருமானால் சனநாயகம் சிதைந்து சர்வாதிகாரம் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

பணநாயகமாகும் சனநாயகம்

                        நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆளும் கட்சி எதுவோ அது வீசும் பணம் அல்லது பதவி வலையில் விழுந்து கட்சி மாறுகிறார்கள். 2008ஆம் ஆண்டு காங்கிரசு சார்பில் தலைமையமைச்சராக மன்மோகன் சிங் இருந்தபோது, பா.ச.க.வைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள், ஐக்கிய சனதாவிலிருந்து 3 உறுப்பினர்கள், ம.தி.முக.வைச் சேர்நத 2 உறுப்பினர்கள், தெலுங்கு தேசக் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜீ சனதா தள், மதச் சார்பற்ற சனதா தளம் ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒருவர் வீதம் கட்சி மாறி வாக்களித்தார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இந்த உறுப்பினர்களை வலைவீசிப் பிடித்ததை பெரும் சாதனையாகக் கருதி காங்கிரசுத் தலைவர்கள் கொண்டாடினார்கள். இந்தியாவின் முதல் தலைமையமைச்சராக இருந்த நேரு வகுத்த சிறந்த சனநாயக மரபுகளிலிருந்து சோனியா காங்கிரசு அறவே விலகி விட்டது என்பதைத்தான் இந்நிகழ்ச்சி சுட்டிக்காட்டியது.

                        காங்கிரசு காட்டிய வழியை, அதைவிட சிறப்பான முறையில் பா.ச.க. இன்று செய்து காட்டுகிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரசு அரசுகளை இதே வழிமுறையைப் பின்பற்றி பா.ச.க. கவிழ்த்தது. காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை வலைவீசிப் பிடித்து கட்சி மாற வைத்து மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் பா.ச.க. ஆட்சிகளைக் கைப்பற்றிவிட்டது. இப்போது காங்கிரசு ஓலமிடுவதில் எந்தப் பயனும் இல்லை. காங்கிரசுக் கட்சி காட்டிய வழியை பா.ச.க. பின்பற்றுகிறது.

                        இந்திய அரசியலில் குதிரை பேர வழிமுறைகள் எல்லா கட்சிகளாலும் பின்பற்றப்படுகின்றன. கொள்கை வழி அரசியல் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. எதைச் செய்தாவது, எப்படியாவது பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்பதே இன்றைக்கு கட்சிகளின் கோட்பாடாகவும், குறிக்கோளாகவும் மாறிவிட்டது.

நியமன முதலமைச்சர்கள்

                        சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களின் பதவி என்பது மிகுந்த மதிப்பிற்குரியதாகும். மக்கள், சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சட்டமன்றத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ, அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கூடி தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரே அம்மாநிலத்தின் முதல்வர் ஆவார். ஆனால், அகில இந்திய கட்சிகளில் இந்த சனநாயக நடைமுறைப் பின்பற்றப்படுவதில்லை. கட்சியின் மேலிடம் யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ, அவர் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகத் திணிக்கப்படுகிறார். இது அப்பட்டமான சர்வாதிகாரமான போக்காகும். இதன்விளைவாக அந்தந்தக் கட்சிக்குள் குழு அரசியல் ஓங்குகிறது. கட்சியின் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை சனநாயகம் முறை கடைப்பிடிக்கப்பட்டாலொழிய அக்கட்சியில் சர்வாதிகாரம் தலைத் தூக்குவதைத் தடுக்க முடியாது. இந்திய அரசியலில் இன்றுள்ள நிலைமையில் எந்தக் கட்சியிலும் சனநாயக முறைகள் பின்பற்றப்படுவதில்லை. கட்சித் தலைவரின் சர்வாதிகாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. இதன் விளைவாக, நாட்டிலும் சர்வாதிகாரத்தின் கை ஓங்கும்.

                        மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர்கள், அந்த மாநிலத்தின் உண்மையான மக்கள்முதல்வராகத் திகழ்வார். மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார். மத்திய தலைமை அல்லது மத்திய அரசு மாநிலத்தின் உள் விவகாரங்களில் தலையிடும் போதும், மாநில மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும்போதும், அவற்றைத் துணிவாகத் தட்டிக்கேட்பார். மாநில மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பேராதவைப் பெற்றிருக்கிற முதலமைச்சரை மீறியோ அல்லது புறக்கணித்தோ எந்த ஆணையையும் அல்லது சட்டத்தையும் அம்மாநிலத்தின் மீது திணிக்கும் துணிவு நடுவண் அரசுக்கு வராது. மாநில மக்களின் உரிமைகளும், நலன்களும் ஒருபோதும் பறி போகாது.

                        ஆனால், அகில இந்திய கட்சித் தலைமைகளால் நியமிக்கப்படும் முதலமைச்சர்கள் தங்கள் தலைமையை மீறி செயல்படுவதற்கு ஒருபோதும் துணியமாட்டார்கள். மாநில மக்களின் உரிமைகளை தில்லியிடம் அடகு வைத்துவிடுவார்கள். இதைக் கண்டு எரிச்சலடைந்தப் பல மாநிலங்களின் மக்கள் மாநிலக் கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள். ஆனால், இந்த மாநிலக் கட்சிகளில் பெரும்பாலானவை இலஞ்ச-ஊழல் தலைமைகளாக மாறிவிட்ட காரணத்தினால் நடுவண் அரசை எதிர்க்கும் துணிவு அவர்களுக்கு இல்லாமல் போனது. தங்களது பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள தில்லி தலைமைக்குப் பணிந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெரும்பாலான மாநிலக் கட்சிகளில் வாரிசு தலைமைகள் உருவாயின. மக்களாலோ அல்லது கட்சித் தொண்டர்களாலோ இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைவர்கள் ஆனவர்கள் அல்லர். வாரிசு முறையில் தலைவர்களானவர்கள். எனவே இவர்களுக்கு மக்களின் ஆதரவுமில்லை, கட்சி உறுப்பினர்களிடையே உண்மையான செல்வாக்கும் கிடையாது. பதவி அல்லது பணம் கொடுத்துத் தங்கள் தலைமையை நீட்டித்துக் கொள்கிறார்கள். கொள்கையோ, கோட்பாடோ இவர்களுக்குக் கிடையாது. பதவியை வைத்துப் பணம், பணத்தை வைத்துப் பதவி என்ற நச்சு வட்டத்தில் உழல்கிறார்கள். வளர்ந்துவரும் இத்தகைய போக்கு சனநாயகத்தைச் சீரழித்து விடுவதோடு மட்டுமல்ல, நடுவண் அரசின் ஏதேச்சதிகாரத்தை வளர்த்துவிடும் போக்காக அமைந்துவிடும். மாநிலத்தின் உரிமைகள் எளிதில் பறிபோகும்.

மாநில ஆளுநர்கள்

                        ஆளுநர் பதவி என்பது இந்திய அரசின் கீழ் பணியாற்றும் பதவி அல்ல. அரசியல் சட்டப்படியான பதவியாகும். மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரின் ஒப்புதல் பெறாமல் எந்தச் சட்டமும் நடைமுறைக்கு வராது. மத்திய அமைச்சரவையின் அறிவுரையின் பேரிலேயே குடியரசுத் தலைவர் ஆளுநர்களை நியமிக்கிறார். அரசியல் சார்பற்றவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்ட காலம் அடியோடு மாறி மத்தியில் ஆளுங்கட்சி எதுவோ அக்கட்சியைச் சார்ந்தவர்களே மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள். மாநிலங்களில் வேறொரு கட்சி ஆட்சியில் இருக்குமானால், அம்மாநிலங்களில் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு வலுக்கிறது.

                        காங்கிரசு ஆண்டபோது தனது கட்சியில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் போன்றவர்களை ஆளுநர்களாக நியமித்தது. பா.ச.க.வும் அதே நடைமுறையைப் பின்பற்றுகிறது. இதன் விளைவாக மாற்றுக் கட்சிகள் ஆட்சி புரியும் மேற்கு வங்கம், மராட்டியம், இராசசுதான் போன்றப் பல மாநிலங்களில் ஆளுநர்-முதலமைச்சர் ஆகியோரிடையே மோதல் போக்கு மட்டுமல்ல, அறிக்கைப் போரும் நடக்கிறது. இதனால் நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறது. மத்திய ஆட்சிக்குட்பட்ட புதுச்சேரி போன்ற மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமானதாகும். இம்மாநிலங்களில் இருக்கக்கூடிய துணை ஆளுநர்கள் மாநில சட்டமன்றத்தையோ, அமைச்சரவையையோ சற்றும் மதிப்பதில்லை. தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்துப் பேசி ஆணைகளைப் பிறப்பிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 7பேர் விடுதலை பிரச்சனையில் தமிழக அமைச்சரவை கூடி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி இரண்டு ஆண்டு காலமாகியும் அவர் அதை கிடப்பில் போட்டிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலும் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநர்களின் ஒப்புதலுக்காக ஆண்டுக் கணக்கில் காத்துக் கிடக்கின்றன. ஒரே வரியில் கூறுவதானால், ஆளுநர்கள் அரசியல் சட்ட வரம்பை மீறி மாநிலத்தில் போட்டி அரசு நடத்த முற்படுகிறார்கள்.

சனநாயகத்திற்குப் புறம்பான கறுப்புச் சட்டங்கள்

                       ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் விடுதலைப் போராட்ட உணர்வை ஒடுக்குவதற்காக ரௌலட் சட்டம் போன்றப் பல கொடிய சட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் உரிமைகளைப் பறித்து ஒடுக்கினார்கள். நாடு விடுதலைப் பெற்ற பிறகு, வெள்ளையர் ஆட்சிப் பிறப்பித்த கொடிய சட்டங்கள் ஒழிக்கப்படவில்லை. அச்சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்ட கறுப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைக்குக் காங்கிரசு கொண்டு வந்தது.

 1. இந்தியப் பாதுகாப்புச் சட்டம்
 2. தேசியப் பா துகாப்புச் சட்டம்
 3. தடுப்புக் காவல் சட்டம்
 4. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
 5. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்
 6. இராணுவச் சட்டம் – சிறப்பதிகாரங்கள்
 7. குண்டர் சட்டம்

இவற்றைத் தவிர, அந்தந்த மாநில அரசுகள் தனியாக பல ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்க இத்தனை சட்டங்கள் இருக்கும்போது 2009ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அரசு இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டு வந்தது. தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், மேலும் மிகக் கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியான பா.ச.க. இச்சட்டத்தை சனநாயக விரோதச் சட்டம் என வர்ணித்தது. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

ஆனால், இப்போது மோடியின் ஆட்சி வரிசையாகப் பல கறுப்புச் சட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்திருக்கின்றது. தேசியக் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றின் மூலம் நாட்டின் மதச் சார்பற்றத் தன்மைக்கு வேட்டு வைத்துவிட்டது. இப்போது காங்கிரசுக் கட்சி இச்சட்டங்களுக்கெதிராக குரல் கொடுப்பது நகைப்புக்குரியதாகிவிட்டது.

காங்கிரசு ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம், தடாச் சட்டம் போன்றவற்றின் மூலம் மொழிவழித் தேசிய உரிமைப் போராளிகள், மனித உரிமைப் போராளிகள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் நீண்டகாலம் வாழ நேரிட்டது.

பா.ச.க. ஆட்சியில் மனித உரிமைப் போராளிகள் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருண்ட சிறைகளில் நீண்டகாலமாகத் தவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இவர்களை விடுதலை செய்யுமாறு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு பா.ச.க. அரசு செவி சாய்க்க மறுக்கிறது.

நடுவண் அமைச்சர்களின் மிரட்டல்

“மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. அம்மாநிலத்தில் சுமார் 100 பேர்களுக்கு மேல் மார்க்சிய கட்சித் தொண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அம்மாநிலத்தின் நிலைமையை நேரில் மதிப்பிட்டு, அம்மாநில அரசை பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்தவேண்டும்” என்று மத்திய அமைச்சரான மம்தா பானர்சி கண்டனம் தெரிவித்தார். மன்மோகன் சிங் தலைமையிலிருந்த காங்கிரசுக் கூட்டணியில் மம்தா பானர்சியின் கட்சி ஒரு அங்கமாக இருந்த காரணத்தினால் மத்திய அரசு உடனே ஒரு குழுவை மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தியது. இதற்கு பா.ச.க., இடது சாரி கட்சிகள் மற்றும் பல கட்சிகள் இணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இப்போது மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான மம்தா பானர்சியின் ஆட்சியில் பா.ச.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், அம்மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா குற்றம் சாட்டியிருக்கிறார். காங்கிரசு மற்றும் இடது சாரி கட்சிகளும் அதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைத்தான் இந்நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

அரச பயங்கரவாதம்

“மாவோ அமைப்பினரின் வன்முறை நடவடிக்கைகளை சில அமைப்புகள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால், அவர்களுக்கு அறிவார்ந்த வகையிலும், பொருளாதார ரீதியிலும் ஆதரவு அளித்துவரும் மெத்தப் படித்தவர்கள் அவர்களின் வன்முறைச் செயல்களை கண்டிக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று காங்கிரசு ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் 16-02-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

மாவோ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அல்லது நக்சலைட்டுகள் வேறு எங்கேயோ இருந்து வந்தவர்களல்லர். இந்த நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அவர்கள் ஏன் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அந்தக் காரணங்களை சரிசெய்வது மட்டுமே இப்போக்கினைத் திருத்த முடியும். நோய் நாடி நோய் முதல் நாடி மருத்துவம் செய்யவேண்டும். சமூகப் பொருளாதாரப் பிரச்சனையாக இதை பார்க்கவேண்டுமே தவிர, சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. அவர்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அரச பயங்கரவாதத்தை நடுவண் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நாட்டில் வன்முறைச் செயல்களை ஒடுக்குவதற்கு ஏராளமான கறுப்புச் சட்டங்கள் இருந்தும் அவற்றை ஒடுக்க முடியாதது ஏன்? மத்திய உளவு நிறுவனங்கள் பல இருந்தும், அவை போதாது என்று புதிதாக தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்றினை உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது அமைத்தார். அதற்கு அளவுகடந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் கே.ஜி. பாலகிருட்டிணன் 12-02-2008ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற சர்வதேச நீதிபதிகள் மாநாட்டில் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிப்பதை நியாயப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. பயங்கரவாத வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பதில் சந்தேகப்பட்டவர்களை கால வரம்பின்றி சிறையில் அடைத்தலும், விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்தலும், நியாயமான விசாரணை நடப்பதை மறுப்பதும் நடைபெறுகின்றன. இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவு வழங்கியிருக்கும் தனி நபர் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக் கூடாது” என க் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கும் இந்த கருத்துக்கு மாறாக, மத்திய உள்துறை அமைச்சர் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அதற்கு மக்கள் ஆதரவுத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிற வேடிக்கையும் இந்த நாட்டில் நடைபெற்றது.

ஐ.நா. தீர்மானம்

10-12-1984ஆம் நாள் அன்று ஐ.நா. பேரவையில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ யாராவது ஒருவருக்கு வலியை ஏற்படுத்தி அவரிடமிருந்து அல்லது வேறு ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்கு மூலமோ அல்லது தகவலோ பெறவேண்டும் என்றோ , அவரையோ அல்லது வேறு ஒருவரையோ பழிவாங்கவேண்டும் என்றோ, தண்டிக்க வேண்டுமன்றோ அல்லது பயமுறுத்த வேண்டுமன்றோ ஒரு பொது ஊழியரின் நடவடிக்கைகள் அல்லது அவர் சார்பாக நடத்தப்படும் செயல்கள் அனைத்துமே சித்தரவதையாகும்”

ஐ.நா. பேரவை நிறைவேற்றிய இந்த தீர்மானம் 16-08-1987அன்று நடைமுறைக்கு வந்தது. இத்தீர்மானத்தில் 10 ஆண்டுகள் கழித்து இந்தியா கையெழுத்திட்டது. ஒருநாடு, ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால் மட்டும் போதாது. கையெழுத்திட்டப் பிறகு அத்தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதாக ஒப்புதல் வழங்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அத்தீர்மானம் அந்நாட்டைக் கட்டுப்படுத்தாது. ஒப்புதல் வழங்கியப் பிறகு அந்நாடு இத்தீர்மானத்தின்படி சித்திரவதைகளைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

மேலும் ஒப்புதல் வழங்கிய நாட்டில் எழும் சித்திரவதைகள் தொடர்பான புகார்களை ஐ.நா. பார்வையாளர் விசாரிப்பார். 1997ஆம் ஆண்டில் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியா இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. காங்கிரசு ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்படாததை பா.ச.க. ஆட்சியும் தொடர்கிறது. இந்த ஆட்சியிலும் இதுவரை இத்தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, ஐ.நா. தீர்மானத்தின்படி இந்தியாவில் சித்திரவதைகள் நிறுத்தப்படவில்லை. தொடர்கின்றன. பா.ச.க. ஆட்சியில் பல மாநிலங்களில் நக்சலைட்டுகளை வேட்டையாட இராணுவம் ஏவி விடப்பட்டு நாள்தோறும் பலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எத்தகைய விசாரணையும் இல்லாமல் இந்தக் கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன. காங்கிரசு தொடங்கியதை பா.ச.க. தொடர்கிறது.

மத்திய – மாநில உறவு

                        மத்திய அரசு திரட்டும் வருமான வரி போன்றவற்றை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது மற்றும் மானியம், கடன் ஆகியவைக் குறித்து முடிவு செய்வதற்காக அரசியல் சட்டப்படி நிதி ஆணையம் (Finance Commission) அமைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இந்த ஆணையத்தை நியமிப்பார். இந்த ஆணையத்தின் முடிவு இறுதியானது. அதன்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்கவேண்டும். ஆனால், இந்த அரசியல் சட்ட முறை சரிவர பின்பற்றாத போக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

                        மன்மோகன் சிங் ஆட்சியில் நிதி ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு மத்திய நிதியமைச்சர் அமைத்த இரகுராம் ராசன் குழு அளித்தப் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு நிதி பங்கீடு அளிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்தது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். பின்தங்கிய மாநிலங்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பது நிதிக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாகும். பின்தங்கிய மாநிலங்கள் எவை என்பதை அடையாளம் காண்பதற்காக புதிய வரையறைகளை இரகுராம் ராசன் குழு வகுத்துள்ளது. மிகக் குறைந்த வளர்ச்சிப் பெற்ற மாநிலங்கள் என்ற புதிய பிரிவை சேர்க்க இக்குழு செய்துள்ள பரிந்துரைக்கு மத்திய திட்டக்குழு மற்றும் தேசிய வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் தேவை.

                        இந்தப் புதிய வரையறை தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பெரிதும் பாதிக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் தேசிய இலக்கை தமிழ்நாடு எட்டியுள்ளது. 1971ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கீட்டைத்தான் நிதி ஒதுக்கீட்டிற்கான அடிப்படையாகக் கொள்ளவேண்டும். ஆனால், அதற்குப் பின்னர் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கை எடுத்துக்கொள்வது தமிழ்நாடு போன்ற தேசிய இலக்கை எட்டிய மாநிலங்களை தண்டிப்பதாகும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்குப் பரிசு வழங்குவதாகும்.

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுத் தங்களது சொந்த முயற்சிகளால் முன்னேற்றமடைந்த மாநிலங்கள் இக்குழுவின் பரிந்துரையால் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அரசியல் ரீதியாகத் தங்களுக்கு ஆதரவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

காங்கிரசு ஆட்சியின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பட்ச பாதமான நடவடிக்கை பா.ச.க. ஆட்சியிலும் தொடர்கிறது. மாநிலங்களுக்கு நிதி அளிப்பதில் வஞ்சனை காட்டப்படுகிறது. புயல், வெள்ளம், வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் உதவி என்பது, ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேண்டிய மாநிலங்கள் அல்லது வேண்டாத மாநிலங்கள் என்ற பாகுபாட்டுடன் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.

காசுமீர்

                        இந்து மன்னரைக் கொண்ட சுதேசப் பகுதியாக சம்மு-காசுமீர் மாநிலம் இருந்தது. இங்கு முசுலீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தனர். இந்தியா விடுதலைப் பெற்ற போது சுதேசப் மன்னராட்சிப் பகுதிகள் அவைகளின் விருப்பப்படி இந்தியா- பாகிசுதான் ஆகிய இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் இணையலாம் என ஆங்கிலேயர் கூறிவிட்டு அகன்றனர்.

                        முசுலீம்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தினால் பாகிசுதானுடன் அதை இணைப்பதற்கு ஜின்னா முயற்சி செய்தார். ஆனால், காசுமீரின் தலைவர்கள் குறிப்பாக, சேக் அப்துல்லா இந்தியாவுடன் இணைவதைத்தான் தேர்ந்தெடுத்தார். மதவாத நாடான பாகிசுதானுடன் இணைய அவர் மறுத்து, இந்தியாவுடன் தனது நாட்டை இணைத்தார். அப்போது அவருக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவின்படி காசுமீர் மக்களுக்கு தனி அரசியல் சட்டம் வகுத்துக்கொள்ளும் உரிமையும், தனிக் கொடி பறக்கவிடும் உரிமையும், இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பகுதியும் காசுமீரில் செயல்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதியும் வழங்கப்பட்டன.

                        ஆனால், காலம் செல்லச் செல்ல இந்த வாக்குறுதிகளை நேருவின் அரசு மீறத் தொடங்கியது. அதன் உச்சக்கட்டமாக காசுமீர் முதல்வராக இருந்த சேக் அப்துல்லாவின் அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர் சிறை வைக்கப்பட்டார். காசுமீரத்தில் பொம்மை அரசு ஒன்று நிறுவப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகே சேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சிகள் காசுமீர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இராணுவ ஒடுக்கு முறையின் மூலம் இந்திய அரசு அவர்களை அடக்கியது. தொடர்ந்து நேருவுக்குப் பிறகும் காசுமீர் மக்களின் சிறப்பு உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டன.

                        அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் யாப்பு அவையில் 1948ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் அதன் அடிப்படைகளை விளக்கிப் பேசுகையில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பின்வரும் கருத்தினை வெளியிட்டு எச்சரித்தார்.

                        “அரசியல் அமைப்புச் சட்டம் எந்த வடிவில் அமைந்துள்ளதோ அதே உணர்வுடன் அதற்குப் பொருத்தமான முறையில் நிர்வாக அமைப்பு முறை வடிவமைக்கப்பட வேண்டும். ஆர்.எசு.எசு. அமைப்பின் பிடியிலுள்ள ஒரு நிருவாக அமைப்புத் துறை மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தைச் செயற்படுத்த முடியாது. நிர்வாக அமைப்பின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் வடிவத்தை மாற்றாமலே அதனைத் தவறான முறையில் துல்லியமாகப் பயன்படுத்த முடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் உள்ளுணர்வுக்குப் பொருத்தமற்ற முறையிலும் நேர் எதிராகவும் அதனைப் பயன்படுத்த முடியும்” என அவர் அன்று எச்சரித்தது நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது.

                        பா.ச.க. ஆட்சியில் அவர்கள் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை அடியோடு இரத்து செய்தார்கள். அது மட்டுமல்ல, காசுமீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்து மத்திய ஆட்சிக்குட்பட்ட மூன்று பகுதிகளாக்கினார்கள். காசுமீரின் நிரந்தர குடிகளைத் தவிர, அங்கு யாரும் குடியேறவும் முடியாது, நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்கவும் முடியாது. பா.ச.க. அரசு புதிய சட்டம் மூலம் அதை நீக்கியது. இனி காசுமீரில் இந்தியப் பெரு முதலாளிகள் தாராளமாகப் புகுந்து நிலங்களைக் கவர்ந்து உள்ளூர் மக்களை நாடற்றவர்களாக ஆக்கிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. காசுமீரைப் பொறுத்தவரையில் காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டிற்கும், பா.ச.க.வின் நிலைப்பாட்டிற்கும் பெரும் வேறுபாடு எதுவும் கிடையாது.

                        காசுமீரிகள் பாரம்பரியமாகத் தாங்கள் வாழ்ந்த மண்ணையும், உரிமைகளையும் பறிகொடுத்து இன்று தவிக்கும் நிலை, நாளை இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் நேரிடலாம். தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் செய்யப்படலாம். இரண்டாக, மூன்றாகப் பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாக ஆக்கப்படலாம் அல்லது மற்றொரு மாநிலத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு என்ற அடையாளமே இல்லாமல் போகலாம். இந்த உண்மையை தமிழர்கள் எவ்வளவு விரைவில் உணருகிறார்களோ அவ்வளவுக்கு நல்லது.

மாநிலங்களின் இசைவுக் குழு (Inter -State Council)

                        1950ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியல் யாப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 70ஆண்டுகளாகியும் இந்திய அரசியல் யாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற மாநிலங்களின் இசைவுக் குழுவினை இதுவரை எந்த அரசும் அமைப்பதற்கு முன்வரவில்லை. காங்கிரசுக் கட்சி ஆண்டபோதும், இப்போது பா.ச.க. அரசு ஆள்கின்ற போதும்,இதற்கு இடைப்பட்ட பல கட்சிகள் ஆண்ட காலத்திலும், அரசியல் சட்டப்படி அமைக்கவேண்டிய இந்தக் குழுவை அமைப்பதற்கு ஒருபோதும் துணியவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

                        அரசியல் யாப்புச் சட்டத்தில் மாநிலங்களின் இசைவுக் குழு அமைப்பது குறித்துக் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

                        “அரசியல் சட்டத்தின் 263ஆவது பிரிவில் கூறியுள்ளபடி, மாநிலங்களின் இசைவுக் குழு அமைப்பதின் மூலம் மத்திய – மாநிலப் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண முடியும். இத்தகைய அமைப்பினை உருவாக்க வேண்டுமென நடுவண் அரசால் அமைக்கப்பட்டப் பல்வேறு ஆணையங்கள் பரிந்துரை செய்துள்ளன. ஆனாலும், அவை இதுவரை அமைக்கப்படவில்லை.

                        இந்தக் குழுவுக்கு உள்ள அதிகாரப் பொறுப்புகள் குறித்து அரசியல் சட்டம் கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது.

 1. மாநிலங்களிடையே ஏற்படும் தகராறுகளை விசாரித்து அவற்றைத் தீர்த்து வைக்க ஆலோசனைகளை வழங்குவது.
 2. ஒரு மாநிலமோ, சில மாநிலங்களோ அல்லது அனைத்து மாநிலங்களுமோ அல்லது நடுவண் அரசோ, எழுப்பும் ஒரு பிரச்சனை குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்குவது.
 3. மத்திய-மாநிலப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதும், சுமூகத் தீர்வுகாண வழிவகைகளைக் கூறுவது.

இக்குழுவின் அமைப்பு, வேலைத் திட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். மத்திய-மாநில நிதி உறவுகளைக் குறித்துப் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கும் அமைப்பாகவும் இக்குழுத் திகழும். மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கைகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் அமைப்பாகவும் இது விளங்கும்.

இத்தகைய குழுவினை அமைப்பதன் மூலம் தனது அதிகாரங்களை இழப்பதற்கும், தன்னைக் கட்டுப்படுத்தும் மேலான அதிகாரம் படைத்த அமைப்பினை உருவாக்குவதற்கும், மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கவும் நடுவண் அரசுக்கு மனமில்லை என்பதே இத்தகைய குழுவை அமைக்காததற்குக் காரணமாகும்.

மாநிலங்கள் உரிமை இழப்பிற்கும், மத்தியில் அதிகாரங்கள் குவிப்பதற்கும் உரிய சில சான்றுகளை மட்டுமே மேலே காட்டினோம். இவை குறித்து விரிவாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசியல் அறிஞர்கள் ஆகியோரைப் போன்றவர்கள் விரிவாகவும், விளக்கமாகவும், கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். விரிவஞ்சி சுருக்கமாகச் சிலவற்றை மட்டுமே இங்குச் சுட்டிக் காட்ட முடிந்தது.

மக்களின் இடைவிடாத போராட்டங்களின் விளைவாக, 1956ஆம் ஆண்டில் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைக்கவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு உருவானது. வேறு வழியில்லாமல் நடுவண் அரசு அவ்வாறு செய்தது. ஆனால், மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டனவே தவிர, அவற்றுக்குள்ள உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குவதற்கு நடுவண் அரசுகள் தொடர்ந்து மறுத்தே வருகின்றன. அது எந்தக் கட்சி தில்லியில் ஆட்சியில் இருந்தாலும், அந்த ஆட்சி மேலும் மேலும் தனது அதிகாரங்களைக் குவித்துக்கொள்கிறதே தவிர, மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கத் தயாராக இல்லை. இத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தீரவேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.

மொழிவழி மாநிலங்களுக்குத் தன்னுரிமை கொடுத்து அவ்வாறு உரிமை பெற்ற மொழிவழித் தேசிய இன மக்கள் தாமாக விரும்பி இணைந்த ஒரு கூட்டாட்சி நாடாக இந்தியா விளங்கவேண்டுமா? அல்லது பல்வேறு மொழிவழித் தேசிய இன மக்களையும் தங்களுக்கு அடிமைப்பட்ட மக்களாகக் கருதும் ஏகாதிபத்திய நா டாக இந்தியா விளங்கவேண்டுமா? என்ற கேள்விக்கு விடை கண்டு தீரவேண்டிய காலம் பிறந்துவிட்டது.

முற்றிலுமாக சிதைக்கப்பட்டு உருக்குலைந்திருக்கிற இன்றைய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவதற்கு எதிரானச் சட்டமாகும். இச்சட்டத்தைத் திருத்துவதின் மூலம் மாநிலங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. இச்சட்டத்தை அடியோடு தூக்கியெறிந்துவிட்டு அனைத்து மொழிவழித் தேசிய இனங்களுக்கும் சமப் பிரதிநிதித்துவம் உள்ள வகையில் புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கப்பட்டு உண்மையான கூட்டாட்சி அரசியல் சட்டம் உருவாக்கப்படவேண்டும்.

இந்துத்துவா வாதிகளும் இப்போதைய அரசியல் சட்டத்தை அகற்றித் தூக்கியெறிய விரும்புகிறார்கள். அவர்கள் நோக்கமும், நமது நோக்கமும் ஒன்றல்ல. அவர்களின் நோக்கம் முற்றிலும் வேறாகும். மொழிவழித் தேசிய உணர்வுகளை அடியோடு அழித்து இந்து மதவாத அடிப்படையில் அரசியல் சட்டத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள். ஆனால், நாம் மொழிவழித் தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களைப் பாதுகாக்கவும், தமக்குள் நட்புணர்வுடன் இணைந்து நின்று கூட்டாட்சியை நிறுவுவதற்கு ஏற்ற வகையில் ஒரு அரசியல் யாப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கும் முயலுகிறோம். அதற்காகப் புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக நாம் இத்திட்டத்தைக் கூறுகிறோம்.

செர்மானிய கூட்டாட்சியில் 16 மாநிலங்கள் உள்ளன. ஒரே மொழியை அவர்கள் பேசினாலும், மாநிலங்களுக்கு உள்ள தன்னுரிமையை அவர்கள் போற்றி வளர்க்கிறார்கள். செர்மன் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாகத் திகழுகிறது. அதிகாரக் குவிப்பு என்பது அங்கு இல்லை. ஏனெனில் கடந்த காலத்தில் அதிகாரக் குவிப்பின் மூலம் உருவான இட்லரின் நாஜிக் கட்சியின் பாசிச ஆட்சியில் ஏற்பட்டப் பேரழிவுகளை இன்னமும் அவர்கள் மறக்கவில்லை. பல தலைமுறைகளுக்குப் பின்னாலும் அவர்கள் இட்லரின் சர்வாதிகார ஆட்சியின் விளைவுகளை எண்ணிப்பார்த்து நடுங்குகிறார்கள். அத்தகைய நிலை ஒருபோதும் தங்கள் நாட்டிற்கு நேரிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். சூடுப்பட்ட பூனை போல அவர்கள் உள்ளனர்.

செர்மானிய மக்களுக்கு இருக்கும் இந்த எச்சரிக்கை உணர்வு நமக்கும் இருக்கவேண்டும். மாநிலங்களின் அதிகாரங்கள் இழப்பும், மத்தியில் அதிகாரக் குவிப்பும் இந்தியாவிலும் ஒரு இட்லரை உருவாக்கி மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கிவிடும். அத்தகைய நிலைமை வராது. தடுக்கவேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் நமக்கு உண்டு. நாம் அதை செய்வோம்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.