தில்லியைச் சுற்றி வளைத்து உழவர்களின் முற்றுகைப் போராட்டம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 11:05

இந்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உழவர்கள் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நவம்பர் 30-11-20இருந்து ஒருவாரக் காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அரியானா எல்லையைத்தாண்டி அவர்கள் செல்லாமல் தடுப்பதற்கு அரியானா அரசும், மத்திய அரசும் பெரும் முயற்சி செய்து படைகளைக் குவித்தன.

கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், நீரைப் பீச்சி அடித்தும் ஏவப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாமல் உழவர்கள் முன்னேறி வந்து தில்லியை முற்றுகையிட்டனர். “போராட்டத்தைக் கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை” என உள்துறை அமைச்சர் அமித் சா விடுத்த எச்சரிக்கையை உழவர்கள் துச்சமென மதித்து தூக்கியெறிந்தனர். தலைநகரமான தில்லி செயலற்று முடங்கியது. தில்லிக்கு வெளியே இருந்து யாரும் உள் நுழைய முடியவில்லை. தில்லியில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியவில்லை. இந்தியாவில் இத்தகைய முற்றுகைப் போராட்டம் இதுவரை நடைபெற்றதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மற்ற மாநிலங்களிலிருந்தும், தில்லி நோக்கி உழவர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் குவிந்து வருகிறார்கள்.

எனவே, வேறு வழியின்றி உழவர்களின் பிரதிநிதிகளாக 5 பேரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைத்தார். ஆனால், “அனைத்துச் சங்கங்களின் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால்தான் கலந்துகொள்வோம்” என உழவர்கள் உறுதியாக கூறினர். எனவே, வேறு வழியில்லாமல் 40 உழவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஐந்து கட்டமாக மத்திய அமைச்சர் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தப் பயனும் விளையவில்லை. சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வந்த போதிலும், உழவர் தலைவர்கள் அதை ஏற்கவில்லை. வேளாண்மைச் சட்டங்களை அடியோடு திரும்பப் பெற்றாலொழிய போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

நாடெங்கும் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்துள்ளன. பல்வேறு கட்சிகளும் ஆதரவுத் தெரிவித்துள்ளன. நாளுக்குநாள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. கொட்டும் குளிரில் வெட்டவெளிகளில் தாங்களே சமைத்து உண்டும், அங்கேயே படுத்து உறங்கியும் உழவர்கள் விடாப்பிடியாகப் போராடுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மக்களின் பேராதரவும் பெருகி வருகிறது.

ஐ.நா. பேரவை செயலாளர் – நாயகம் - அறிவுரை

ஐ.நா. பேரவையின் செயலாளர் நாயகம் அந்தோணியோ குட்ரசு “அமைதியாகப் போராடும் உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு. அதை அனுமதிக்கவேண்டிய கடமை அரசுக்கு உண்டு” என தில்லி உழவர்கள் முற்றுகைப் போராட்டத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

அனைத்து நாடுகளின் கண்டனம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூ டியோ மற்றும் கனடா சனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜக்மிக்சிங், ஜாக் ஹாரிஸ் ஆகியோர் போராடும் உழவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதைபோல, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 36 பேர் தங்கள் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் உடனடியாக இந்திய அரசுக்கு தங்களின் கவலையை தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிலும் தில்லி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களுக்கு ஆதரவுப் பெருகி வருகிறது.

ஆனால், இந்திய வெளியுறவுத் துறையின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் “இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. இதில் தலையிட எந்த வெளிநாட்டிற்கும் உரிமை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. வகுத்துள்ள மனித உரிமைகள், சனநாயக உரிமைகள் ஆகியவை எந்த நாட்டில் மீறப்பட்டாலும் அதில் தலையிட்டு கருத்துக்கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. உழவர்களின் அறப்போராட்டத்தை ஒடுக்குவதற்கும், திசைத் திருப்புவதற்கும் இந்திய அரசு செய்யும் முயற்சிகளைக் கண்டிக்க உலக நாடுகளுக்கு உரிமை உண்டு. அதை இந்தியா ஏற்க மறுப்பது இதுதான் முதல் தடவையல்ல. காசுமீரில் இந்தியப் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைக் குழுவை இந்தியாவுக்குள் நுழைய இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

1983ஆம் ஆண்டு சூலை மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் 3,000த்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சிங்கள வெறியா்களால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது இந்தியாவின் தலைமையமைச்சராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் ஆகஸ்டு 15ஆம் நாள் தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசும்போது “இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை. அதைப் பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இராது” என எச்சரித்தார். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை முதன்முதலாக அறிவித்தவர் இந்திராகாந்தி அவர்களேயாவார். ஈழத் தமிழர் பிரச்சனை எமது உள்நாட்டுப் பிரச்சனை என இலங்கை அதிபர் செயவர்த்தனா கூறியதை இந்திராகாந்தி ஏற்கவில்லை. இலங்கையை பணிய வைக்கவும், ஈழத் தமிழர்களைக் காக்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் ஒன்றரை இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதுபற்றி விசாரணை நடத்த குழுவை நியமித்தது. ஆனால், அந்தக் குழுவை அனுமதிக்க இலங்கை அதிபர் இராசபக்சே மறுத்ததோடு, “இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை” எனக் கூறினார். அதே வாதத்தை இந்திய அரசும் இப்போது சொல்லுவது என்பது நேர்மையற்ற செயலாகும்.

தென்னாப்பிரிக்காவில் நீக்ரோ மக்களும், இந்திய மக்களும் நிற வேற்றுமை கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அந்நாட்டின் வெள்ளை அரசு இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்று அகந்தையுடன் கூறியது. ஆனால், அன்றைய தலைமையமைச்சர் நேரு, ஐ.நா. பேரவையில் தென்னாப்பிரிக்க அரசின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார். அதுமட்டுமல்ல, காமல்வெல்த் அமைப்பிலிருந்து தென்னாப்பிரிக்காவை நீக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நீக்கச் செய்தார்.

கிழக்கு பாகிசுதான் மக்கள் மீது உருது மொழியை பாகிசுதான் அரசு திணித்தபோது, வங்கமொழிப் பேசும் அந்த மக்கள் அதை எதிர்த்துப் போராடினர். பாகிசுதான் இராணுவம் வங்க மக்களைக் கொன்று குவித்தது. இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் பலவும் அதைக் கண்டித்தன. அப்போது இந்தியப் படையை உடனடியாக கிழக்கு வங்கத்திற்கு அனுப்பி அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என தலைமையமைச்சர் இந்திராகாந்தியின் வீட்டிற்கு முன் சனசங்கத் தலைவர் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் இந்துத்துவாதிகள் போராட்டம் நடத்தினர். பாகிசுதானின் உள்நாட்டுப் பிரச்சனையான இதில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை என அந்நாட்டின் அதிபர் யாயாகான் கூறினார். ஆனால், அதை ஏற்காமல் இந்தியப் படை அங்கு அனுப்பப்பட்டு வங்கதேசம் விடுதலை செய்யப்பட்டது. இந்த வரலாறெல்லாம் மோடியின் அரசுக்குத் தெரியவில்லையா? புரியவில்லையா?

பாகிசுதானில் உள்ள இந்துக்கள் கொடுமைகளுக்கு உள்ளாகும்போது மோடியின் அரசு குரல் கொடுக்கிறது. கண்டிக்கிறது. பாகிசுதான் அரசு இது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று கூறும்போது, மோடி அரசு ஏற்க மறுக்கிறது. இலங்கை அரசும், பாகிசுதான் அரசும் எத்தகைய வாதத்தை முன் வைக்கின்றனவோ, அதே வாதத்தையும் இந்திய அரசும் இப்போது முன் வைப்பது வெட்கக் கேடானதாகும்.

தில்லி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும். மாறாக, அடக்குமுறைகளை ஏவி உழவர்களை ஒடுக்கு முற்பட்டால் நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை மோடியின் அரசு உணரவேண்டும்.

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.