பெரு முதலாளிகள் வங்கி தொடங்க அனுமதிப்பது வரலாற்றுப் போக்கைத் திருப்புவதாகும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 11:11

இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வங்கிகளை தொடங்க அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. ஏற்கெனவே டாடா, பிர்லா மற்றும் பெரு முதலாளிகள் நடத்திவந்த வங்கிகளை 1969ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசியமயமாக்கியது.

அதற்கு முக்கிய காரணம், தனியார் வங்கிகளில் கோடான கோடி ஏழை மற்றும் மத்திய தரவர்க்கத்தினர் தங்களது சேமிப்புப் பணத்தை வைப்புத் தொகையாகவும், நடப்புத் தொகையாகவும் செலுத்தி வைத்திருந்தனர். மக்களுக்குச் சொந்தமான இந்தப் பணத்தை, இந்த வங்கிகள் நடத்திவந்த பெரு முதலாளிகள் தங்களது தொழில், வணிக வளர்ச்சிக்காக வரைமுறையின்றி எடுத்துப் பயன்படுத்தினர். சில வங்கிகள் திவாலான போது மக்கள் தங்களின் வாழ்வால் சேமிப்பைப் பறிகொடுத்துத் தெருவில் நின்று புலம்பி அழும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தகைய முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவே வங்கிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால், ரிசர்வ் வங்கியின் குழு அளித்துள்ள பரிந்துரை இந்த வரலாற்றுப் போக்கையே அடியோடு மாற்றுவதற்கு முயலுகிறது.

1969ஆம் ஆண்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1963ஆம் ஆண்டில் தலைமையமைச்சராக இருந்த நேரு அவர்கள், வங்கிகளைத் தேசியமயமாக்கும் திட்டம் குறித்து அப்போதைய திட்டக்குழு உறுப்பினராக இருந்த வி.கே.ஆர்.வி. ராவ் உடன் கருத்துப் பரிமாற்றம் செய்தார். சந்தையில் விற்கப்படும் வங்கிகளின் பங்குகளை அவ்வப்போது வாங்கும்படி அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஆணை பிறப்பிக்கும்படி ராவ் கூறினார். போதுமான அளவு பங்குகள் வாங்கப்பட்டதும், தேசியமயமாக்கப்படுவது எளிதாகிவிடும் என்று அவர் கூறினார். அதன்படியே நேரு அவர்கள் ஆணைப் பிறப்பித்தார்.

1964ஆம் ஆண்டில் காங்கிரசுத் தலைவராக காமராசர் பொறுப்பேற்றப் பிறகு வங்கிகள் தேசியமயமாக்கும் திட்டத்தை உடனடியாகச் செயற்படுத்துமாறு வற்புறுத்தினார். ஆனால், நேரு அவர்களின் உடல்நலக் குறைவும், நாட்டின் அரசியல் நிலையும் அதற்குத் தடையாக இருந்தன. நேரு அவர்களின் மறைவுக்குப் பிறகு தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்ற லால்பகதூர் காலத்திலும் காமராசரின் அறிவுரைக்கிணங்க இத்திட்டம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நிதியமைச்சராக காமராசரின் நெருங்கிய தோழர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரி இருந்தார். அவர் உடனடியாக வங்கிகளைத் தேசியமயமாக்குவதற்கான நகல் திட்டத்தைத் தயாரித்துவிட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாகப் பாகிசுதானுடன் போர் மூண்டதின் விளைவாக, இத்திட்டம் பின்னுக்குத் தள்ளப்ட்டது.

தலைமையமைச்சர் பொறுப்பை இந்திராகாந்தி ஏற்றப் பிறகுகூட, இத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை. 1967ஆம் ஆண்டில் காங்கிரசுத் தலைவர் காமராசர் அளித்த 10 அம்ச பொருளாதாரத் திட்டத்தில் வங்கிகளைத் தேசியமயமாக்கப்படுவது முதன்மை இடம்பெற்றது. இத்திட்டத்தை அகில இந்தியக் காங்கிரசுக் கட்சி ஏற்றுக்கொண்டது. அதற்குப் பின்னர் 1969ஆம் ஆண்டில்தான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் விளைவாக, மக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் பெரும் பயன் விளைந்தது. மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்பட்டன. மேலும்,   ஏழை மக்கள் மற்றும் எளிய வணிகர்கள் ஆகியோர் தங்களின் அவசரத் தேவைகளுக்காகவும், வணிகம், தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவும் வங்கிகளிடமிருந்து சுலபமாகக் கடன் பெற்றனர். தனியாரிடம் வங்கிகள் இருந்தபோது குறைந்தளவு ஊதியம் பெற்றுவந்த வங்கி ஊழியர்களின் ஊதியம் பல மடங்கு உயர்ந்தது. நாட்டின் பொருளாதாரத்திற்கும், வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கும் அரசு வங்கிகள் பேருதவியாகத் திகழ்ந்தன.

ஏற்கெனவே, வங்கிக் கடன்களை முறைப்படுத்தும் பல விதிமுறைகள் வங்கிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் உள்ளன. ஆனால், அரசியல் தலையீட்டின் விளைவாக பெரு முதலாளிகளுக்கு விதிமுறைகளையும் மீறி பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான வங்கிக் கடன்கள் அளிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, பெரு முதலாளியான மல்லையா என்பவருக்கு 9ஆயிரம் கோடி ரூபாய்கள் கடனாக அளிக்கப்பட்டது. அது திரும்பப் பெறப்படவில்லை. அவரும் நாட்டைவிட்டுத் தப்பி பிரிட்டன் சென்றுவிட்டார். அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகள் பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதைப் போன்ற பல பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட கோடானு கோடி ரூபாய் பெறுமான கடன்கள் திரும்பப் பெறப்படவில்லை. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இக்கடன்களை வாராக் கடன்களாக வங்கிகள் அறிவித்தன. இத்தகையப் பின்னணியில் தற்போது பெரு முதலாளிகளுக்கு வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கவேண்டும் என்ற ரிசர்வ் வங்கிக் குழுப் பரிந்துரையை நாம் ஆராயவேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இரகுராம்ராசன், துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ஆகியோர் இத்திட்டத்திற்குப் பின்வருமாறு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “ஒரு வங்கியில் கடன் பெறுபவர்களே அதன் உரிமையாளராக இருந்தால், அக்கடன்களை எப்படி நிருவகிக்க முடியும்? இந்தியப் பெரு நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்ற பரிந்துரை அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். அதிலும், இப்போது கரோனா பாதிப்பினால் இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், இவ்வாறு ஒரு பரிந்துரையை அளிப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவில் எப்போதாவதுதான் வங்கிகள் மோசமான நிலைக்குச் செல்கின்றன. குறிப்பாக, தற்போது எஸ் வங்கி, இலட்சுமி விலாசு வங்கி ஆகியவை மூடப்பட்டுவிட்டன. கடும் உழைப்பிற்குப் பின்னர் தாங்கள் திரட்டிய பணம் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைதான் மக்கள் வங்கியில் தங்கள் பணத்தை வைப்புத் தொகையாகச் செலுத்துவார்கள். அந்த நம்பிக்கையை இழந்துவிட்டால், வங்கிகளில் பணம் செலுத்தமாட்டார்கள். பெரு நிறுவனங்கள் வங்கிகளை நடத்தினால், எத்தகைய குறுக்கு வழியைக் கையாண்டாவது வங்கிப் பணத்தைத் தங்களின் சொந்த நிறுவன முதலீட்டிற்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். இதனால் மக்களின் பணம் சூறையாடப்பட்டுவிடும்” என மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

2008ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இரகுராம்ராசன் இருந்தபோது, அவர் தலைமையில் அமைக்கப்பட்ட நிதித்துறை சீர்திருத்தக் குழு பின்வரும் பரிந்துரையை அளித்தது. “தனியார் பெரு நிறுவனங்களை வங்கித்துறையில் ஈடுபடவும், வங்கிகளை தொடங்குவதற்குமான சூழல் தற்போது அறவே இல்லை” என திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

பெரு நிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்கினால் அவற்றில் உள்ள பணத்தை தங்களுடைய தொழிலுக்கும், வணிகத்திற்கும் தாராளமாகப் பயன்படுத்தியே தீருவார்கள். மேலும், தங்களுக்கு மிக வேண்டியவர்களுக்கும் வங்கிப் பணத்தை கடனாக அள்ளிக் கொடுப்பார்கள். வங்கிகளைத் தொடங்குவதற்குத் தனியார்களுக்கு அளிக்கும் அனுமதி என்பது பொருளாதார அதிகாரத்தைப் பெருஞ் செல்வர்கள் சிலரிடம் குவித்துவிடும். தற்போது அரசியல்வாதிகள் சிலர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வங்கிகளில் உள்ள பணத்தைத் தங்களுடைய ஆதாயத்திற்காக எப்படிப் பயன்படுத்துகிறார்களோ, அதைபோல தனியார்களும் பயன்படுத்துவார்கள்.

அரசியல் செல்வாக்குப் படைத்தப் பெரு முதலாளிகள் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதிக்கப்படும்போது, எந்த விதிமுறைகளையும் மதிக்கமாட்டார்கள். தங்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி விதிமீறல் நடவடிக்கைகளிலிருந்து தப்பிவிடுவார்கள். ஏற்கெனவே, வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களை பெரு முதலாளிகள் நடத்திவருகிறார்கள். இத்தகைய நிதிநிறுவனங்களைப் பத்தாண்டுகளுக்குப் பிறகு வங்கிகளாக மாற்றலாம் என ரிசர்வ் வங்கிக் குழு பரிந்துரைத்துள்ளது.

அரசு வங்கிகள் போதுமான முதலீடு இல்லாமையால் தவிக்கின்றன. தற்போதைய இந்திய அரசு அவற்றுக்கு உதவ எந்தவகையிலும் முன்வரவில்லை. இந்த நிலையில், தனியார் வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாக அரசு வங்கிகளை மூடவேண்டிய நிலைமை தானாகவே உருவாகிவிடும்.

ஏற்கெனவே, செய்திப் போக்குவரத்துத் துறையிலிருந்து தொடர்வண்டித் துறை வரை பெரு முதலாளிகள் ஆக்கிரமிப்பதற்கும், அவற்றை நடத்துவதற்கும் இந்திய அரசு அனுமதித்துவிட்டது. இந்தியப் பெரு முதலாளிகள் அனைத்துத் துறைகளிலும் தங்களின் தடத்தைப் பதிக்க உதவும் வகையிலேயே அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்திய அரசின் பெருந் தொழில்களான நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் எஃகுத் தொழிற்சாலை, இந்திய விமானப் போக்குவரத்து போன்றப் பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இவை அனைத்தும் தனியாரின் கைகளுக்குச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நாடு விடுதலைப் பெற்றதிலிருந்து கனரகத் தொழில்கள், தொடர்வண்டித்துறை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம், வங்கித்துறை மற்றும் இராணுவம் சம்பந்தமான தொழில்கள் போன்றவையெல்லாம் தேசியமயமாக்கப்பட்டன. அதாவது, மக்களுக்குச் சொந்தமாக்கப்பட்டன. இவற்றிலிருந்து கிடைக்கும் ஆதாயம் மக்கள் நலன் திட்டங்களில் செலவிடப்பட்டது. இவற்றில் பணியாற்றிய கோடிக்கணக்கான ஊழியர்களின் ஊதியங்கள் உயர்த்தப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டது. முன்னோக்கிச் சுழன்ற நாட்டின் பொருளாதாரச் சக்கரம் இப்போது பா.ச.க. ஆட்சியில் பின்னோக்கிச் சுழல்கிறது. இதன் விளைவாக, பெரு முதலாளிகள் கொழுத்துச் செழிப்பார்கள். மக்கள் மேலும் மேலும் நலிவார்கள். இதற்கான முன்னோட்ட நடவடிக்கையே வங்கிகளைத் தொடங்கப் பெரு முதலாளிகளை அனுமதிப்பதாகும்.

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.