திருக்குறளும் - வர்ண தர்ம சாத்திரங்களும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 18 டிசம்பர் 2020 11:21

இந்திய மக்களை பல நூறு சாதிகளாகக் கூறு போட வர்ண தர்ம சாத்திரங்களும் மநு நீதி சாத்திரமும் கீதையும் உதவின. நில மானிய சமுதாயத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தின் விளைவாக சதுர் வர்ணங்கள், பல நூறு சாதிகளாயின. இவற்றை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடக்கி வைக்கவே தர்ம சாத்திரங்கள் துணை புரிந்தன.

மக்களை சாதிகளாகப் பிரித்ததோடு தர்ம சாத்திரங்கள் நிற்கவில்லை. வேத கால பிராமணங்கள் கடவுள்களையே நான்கு வர்ணங்களாக பிரித்தன. அக்னியும் பிரகசுபதியும் பிராமணக் கடவுள்கள். இந்திரன், வருணன், சோமன், இயமன் ஆகியோர் சத்திரியக் கடவுள்கள். விசு, ருத்ரன், விசுவதேவன் மற்றும் மருந்துக்கள் வைசியக் கடவுள்கள். புசன்கள் சூத்திரக் கடவுள்கள். இந்த உலகில் மட்டுமல்ல; மேல் உலகத்திற்கும் வர்ண தர்மத்தை பார்ப்பனீயம் ஏற்றுமதி செய்தது.

அர்த்த சாத்திரமும் மநு தர்மமும் கீதையும் கற்பிக்கும் நோக்கங்கள் அனைத்தும் ஒரு திசை வழியிலேயே செல்லுகின்றன. எதைச் செய்தாவது எப்படியாவது தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் காப்பாற்றிக் கொள்வதும், ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதும் ஆகியவற்றையே குறிக்கோட்களாகக் கொண்டுள்ளன.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத கொடிய பழக்கமான பிறப்பினால் ஏற்ற தாழ்வு கற்பிப்பதும், சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்தி உழைக்கும் மக்களைப் பிரித்தாள்வதும், சூத்திர மக்கள் என இழிவுப் படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதும் இந்திய நாட்டில் மட்டுமே உள்ளன. இதற்கு அடிப்படையான காரணம் பார்ப்பனீயத் தத்துவமும் சாத்திரங்களுமே. இவற்றை பாமர மக்களுக்கும் பரப்பும் நோக்கத்துடன் புராணங்களைக் கற்பித்தார்கள்.

கி. மு. 4-ஆம் நூற்றாண்டில் மகதத்தில் ஆண்ட நந்த வம்ச ஆட்சியைச் சூழ்ச்சிகளால் வீழ்த்தி சந்திர குப்த மவுரியனை அரசனாக்குவதில் சாணக்கியன் வெற்றி பெற்றான். சாணக்கியனின் அர்த்த சாத்திரம் ஒரு அரசன் தன்னுடைய புதல்வர்களையே கண்காணிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரச குமாரர்கள் “நண்டுகள் போல தங்களுடைய தகப்பனைத் தின்று விடுவார்கள்” என்று கூறுகிறது. அரசனுக்கு வழிகாட்ட மந்திரி பரிசத் அமைக்கப்பட வேண்டும்; ஆட்சி நிர்வாக அமைப்பு அனைத்தையும் செயற்படுத்த பரிசத் முற்படும். ஆனால் இந்த பரிசத்தில் புரோகிதர்களும் படைத் தளபதிகளும் மட்டுமே அங்கம் வகிப்பார்கள். வேதங்களை அறிந்தவர்கள், உயர்ந்த சாதியினர் என்ற காரணத்தினால் பார்ப்பனர்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; வேத விற்பன்னர்கள், முனிவர்கள், புரோகிதர்கள் ஆகியோரிடம் வரி வாங்குபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அரசன் இரவும் பகலும் விழிப்புடன் இருக்க வேண்டும். யாரையும் முழுமையாக நம்பக் கூடாது. இதில் பார்ப்பனர்களுக்கு மட்டும் விதி விலக்கு. இவை போன்ற பல அநீதியானதாகவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே நீதி வழங்குவதாகவும் சாணக்கியனின் அர்த்த சாத்திரம் எழுதப்பட்டுள்ளது.

மவுரிய குல ஆட்சியில் கி. மு. 3-ஆம் நூற்றாண்டில் பதவியேற்ற அசோகப் பேரரசன் காலத்தில் இந்த நிலை தலைகீழாக மாறியது. அசோகர் பவுத்த சமயத்திற்கு பேராதரவு அளித்தார். நாடெங்கும் பவுத்தம் பரவுவதற்கு வழி வகுத்தார். அரச சமயமாக பவுத்தம் மாறிற்று. ஒடுக்கப்பட்ட பார்ப்பனர்கள் அடிபட்ட பாம்புகளாக பழிவாங்கும் நோக்கத்துடன் காலம் நோக்கிக் காத்திருந்தார்கள். அசோகர் மறைந்த 40 ஆண்டுகளில் அவரின் பேரனான பிருகத்ரதன் என்பவன் பதவிக்கு வந்தான். அவனுடைய தலைமைத் தளபதியாக இருந்த புசியமித்திர சுங்கன் என்ற பார்ப்பனன் அவனைப் படுகொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான். அவன் ஆட்சியில் பவுத்த சமயத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு பல கொடுமைகளை இழைத்தான். பவுத்த பிட்சுக்களும் பிக்குணிகளும் படுகொலை செய்யப்பட்டனர். சமண, பவுத்த இலக்கியங்கள் எரிக்கப்பட்டன. அந்த சமயத்தைச் சார்ந்த பாமர மக்களைக் கூட அவன் விட்டுவைக்கவில்லை. பவுத்த சமயத்தை முற்றிலுமாக துடைத்து எறியும் வரையில் அவனது அட்டூழியங்கள் தொடர்ந்தன. சுங்க வம்ச ஆட்சியில் பார்ப்பனீயம் மீண்டும் தழைத்து ஓங்கியது.

மநு சாத்திரம்

சுங்க குலத்தினர் ஆட்சியில் சமுதாயத்தில் பார்ப்பனத் தலைமைத்துவத்தை நிலைநிறுத்துவதற்காக கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் மநுவின் தர்ம சாத்திரம் எழுதப்பட்டது. மநு இதை எழுதிய காலத்தில் ஒரு இலக்கம் சுலோகங்களைக் கொண்டதாக எழுதியதாகவும் அதற்குப் பின்னர் வந்த நாரதர் 12,000 சுலோகங்களாகச் சுருக்கியதாகவும் அதற்குப் பிறகு மார்க்கண்டேயர் 8000 சுலோகங்களாக ஆக்கியதாகவும், பிருகு முனிவரின் மகன் சுமதி அந்த சாத்திரத்தை 4000 சுலோகங்களாக்கி இறுதி வடிவம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சமுதாய உறவு நிலையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், ஒழுங்குகள் ஆகியவற்றை மநு விரிவாகக் கூறுகிறார். அவர் கூறும் விதத்தில் சில சாதியாருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் மற்றும் சில சாதியினரை ஓர வஞ்சனையுடன் நடத்தும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பார்ப்பனர்களை ஒரு சூத்திரன் அவமதித்துப் பேசினால் பத்து விரல் நீளமுள்ள இரும்புத் துண்டை பழுக்கக் காய்ச்சி அவன் வாய்க்குள் திணிக்க வேண்டும். ஒரு பார்ப்பனனை சூத்திரன் திட்டிப் பேசினால் அவன் நாக்கைத் துண்டிக்க வேண்டும். ஒரு சூத்திரன் அளவுக்கு மீறிப் பேசினால் எண்ணெயை சூடாகக் காய்ச்சி அவன் வாயிலும் காதுகளிலும் ஊற்ற வேண்டும் – என்றெல்லாம் மநு கூறுகிறார்.

பெண்கள் மீதும் இத்தகைய கொடூரத்தை மநு சுமிரிதி காட்டுகிறது. பெண்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. ஒரு பெண் சிறு வயதில் தந்தை, இளமையில் கணவன், முதுமையில் மகன் ஆகியோரின் பாதுகாப்பில் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக இயங்கக் கூடாது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது பெண்கள் முகமூடி அணிந்தே வர வேண்டும் – என்று முதன்முதலாக கூறியவர் மநுவே ஆவார். அவருக்குப் பிறகுதான் பெண்கள் முகமூடி, முக்காடு போன்றவற்றையெல்லாம் அணியும் வழக்கம் உருவாயிற்று.

கணவன் இறந்தால் அவனுடைய சிதையில் மனைவிகளையும் வைத்து உயிரோடு எரிக்க வேண்டும் என மிகக் கொடுமையான விதியை வகுத்தவர் மநுவே ஆவார். மநு வாழ்ந்த காலத்தில் மட்டும் இந்தக் கடும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மாறாக தொடர்ந்து பின்பற்றப்பட்டன.

கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரரும் மநுவை விஞ்சும் விதிமுறைகளை வகுத்தார். “பெண் பிறவிக்கு மோட்சம் கிடையாது” என்றார். ஆணாகப் பிறந்தால், அதுவும் பார்ப்பனனாக பிறந்தால் மட்டுமே மோட்ச வாயில் திறக்கும் என அவர் கூறினார்.

கி. பி. 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த இராசா ராம் மோகன் ராய் காலத்தில் உடன் கட்டை ஏறும் கொடியப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் போராடினார். அதன் விளைவாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டது. கி. மு. 2-ஆம் நூற்றாண்டில் மநு தொடக்கி வைத்த இந்தக் கொடியப் பழக்கம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயரால் தடை செய்யப்படும் வரை இப்பழக்கம் நீடித்தது.

தேவதாசி முறை

கோவில்கள் எழுந்த காலக்கட்டத்தில் பெண்களைக் கோவிலுக்குப் பொட்டுக் கட்டிவிடும் பழக்கம் பார்ப்பனீயத்தால் தொடக்கி வைக்கப்பட்டது. மன்னர்களும் மற்றும் உயரதிகாரிகளும் இதற்கு ஆதரவளித்து அத்தகையப் பெண்களுக்கு மானியங்களை தாராளமாக அளித்தனர். பல நூற்றாண்டு காலமாக நீடித்த பெண்களை இழிவு செய்யும் இந்த பழக்கத்திற்கு நீதிக் கட்சியின் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. (1926-1930). சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவராக பதவி வகித்த மரு. முத்துலெட்சுமி அவர்கள் பல சமுதாய சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார். தேவதாசி ஒழிப்பு, விபச்சார ஒழிப்பு மற்றும் பெண்களின் திருமண வயதுச் சட்டங்களை அவர் கொண்டு வந்த போது காங்கிரசுக் கட்சித் தலைவராக விளங்கிய எசு. சத்தியமூர்த்தி அவற்றிற்கு மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துப் பேசுகையில் “தேவதாசி முறை என்பது இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். அதனால் அந்தப் பெண்களுக்கு புண்ணியம் ஏற்படுகிறது. அந்த முறையை ஒழித்தால் காலங்காலமாக அவர்கள் பெற்று வரும் புண்ணியமெல்லாம் மறைந்து போய்விடும். இச்சட்டத்தை எதிர்த்து சிறை சென்றாலும் செல்வேனே தவிர சாத்திரத்தை எதிர்த்து நரகத்திற்கு போக நான் ஒரு போதும் உடன்பட மாட்டேன்” என்று கூறினார்.

உடனடியாக மரு. முத்துலெட்சுமி அவர்கள் எழுந்து “இறைவனுக்கு ஆற்றும் புண்ணியமெல்லாம் அந்தப் பெண்களுக்குப் போய்விடும் என்று வேதனைப்படும் சத்தியமூர்த்தி அவர்களே! இனி அந்தப் புண்ணியத்தை தங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்கள் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. இதுவரை நாங்கள் பெற்ற புண்ணியத்தின் பலனை இனிமேல் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரோ அந்த சமூகப் பெண்களை தேவதாசிகளாக்கி அனைத்துப் புண்ணியங்களையும் நீங்களே பெற்றுக் கொள்வதற்கு உடன்படுகிறோம்” என்று கூறிய போது அவை முழுவதுமே பெரும் நகையொலியும் கைதட்டலும் எழுந்தன.

20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில்தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நாடு விடுதலைப் பெற்ற பிறகே மற்ற மாநிலங்களிலும் அம்முறையை ஒழிக்கச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

பகவத் கீதை

நிலவுடைமை எழுச்சி சூழலுக்கு ஏற்ப உருவான சமுதாய மாற்றங்களுக்கு வேத மரபு சார்ந்த ஒரு தத்துவ அடிப்படை தேவையாக இருந்தது.. அம்மரபில் முன் வைக்கப்பட்ட பிரம்மம், ஆத்மா என்பவை தொடர்பான சிந்தனைகளை புராண, இதிகாச கால தெய்வ நம்பிக்கைக்கு ஏற்ப விளக்கி உரைக்க வேண்டிய தேவை உருவானது. ஆளும் வர்க்கத்தின் மீதான நம்பிக்கையை வலியுறுத்தவும், வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காக்கவும் ஒரு தத்துவ விளக்கம் தேவைப்பட்டது. இவ்விருவகைத் தேவைகளையும் நிறைவு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட நூலே பகவத் கீதையாகும். இந்நூல் வேத மரபின் வாரிசாகவும், புராண மரபின் சாரமாகவும், தர்ம சாத்திரங்களை நியாயப்படுத்தும் தத்துவமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

கி.பி. 4ஆம் நூற்றாண்டு வாக்கில் கீதை எழுதப்பட்டிருக்கவேண்டும். அதை எழுதியவர் யாரோ? ஆனால், அதற்கு ஒரு தெய்வத்தன்மையும், புனிதமும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மகாபாரத கதைக்குள் இடைச்செருகளாகப் புகுத்தப்பட்டது. பகவான் கிருட்டிணர், அரிச்சுனனுக்கு பாரதப் போர்க் களத்தில் அருளியதாகப் புகழப்பட்டது.

கீதையின் போதனைகள் பொது நல நோக்கில் கடமையை வற்புறுத்துவன என்று கொள்ளும் போது யாருடைய எத்தகைய கடமைகள் என்பதை ஆழமாக சிந்தித்தால் அதன் அடித்தளத்தில் குறிப்பிட்ட வர்ண சார்பு நலன் இருப்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். வர்ண தர்மத்தைப் பாதுகாத்து உயர் வர்ணத்தினர் தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள இயற்றப்பட்ட நூலே கீதையாகும். நான்கு வர்ணத்தினரும் தத்தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மீறலாகாது என்பது கீதையின் சாரமாகும்.

திருக்குறளுக்கு உரை கண்ட பரிமேலழகர் வடமொழி சாத்திரங்களின் கருத்துக்கள் குறளில் விரவிக் கிடக்கின்றன என தம்முடைய உரையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். குறிப்பாக, பிரகசுபதி எழுதிய பார்க்கபத்யம், சுக்ராச்சாரி எழுதிய ஔசாசம் ஆகிய நூல் கருத்துக்களும் சாணக்கியர் படைத்த அர்த்த சாத்திரம் என்னும் நூலின் கருத்துக்களையும் வள்ளுவர் உள்வாங்கி உள்ளார் என்று குறிப்பிடுகிறார். ஆனால் உண்மை என்ன? வடமொழியாரின் போலிக் கொள்கைகளையும் பொய்யானக் கூற்றுகளையும் மறுப்பதற்கு எழுந்த நூலே திருக்குறள் என்பதுதான் உண்மையாகும். தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் நூலாகவும் அவர்களின் வாழ்வு நெறியை விளக்கும் நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது.

நோபல் பரிசு பெற்ற மேனாட்டு அறிஞரான ஆல்பர்ட் சுவைட்சர் இந்தியத் தத்துவங்கள் குறித்தும் திருக்குறள் குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதிய நூலில் “பகவத் கீதையானது பிராமணீயத்தின் சாரம்” என்றும் “திருக்குறள் தமிழர் பண்பாட்டின் சாரம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “திருக்குறளுக்கும் மநு நீதி சட்ட விதிகளுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. மநு நீதி பார்ப்பன உணர்வின் மேலாதிக்கத்தின் கீழ் உலகமும் வாழ்க்கையும் உண்டு என்னும் உறுதிப்பாட்டுத் தத்துவத்தை உரைக்கிறது. அதற்கு பக்கத்திலேயே உலகமும் வாழ்க்கையும் இல்லை என்கிற மறுப்புத் தத்துவமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆனால் திருக்குறளிலோ உலகுக்குரிய அன்பு நெறி பெரிதும் போற்றப்படுகிறது. மநு நீதி, கீதை போன்ற நூல்கள் பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கின்றன. குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உரத்துக் கூறுகிறது. “ஓதுதல் மேலோரின் சிறப்புரிமை” என கீதை கூறுகிறது. “கல்வி அனைவருக்கும் இன்றியமையாத பொதுவுடைமை” என குறள் கூறுகிறது. உழும் தொழிலை இழிவாக்கி கீழோருக்கு உரியதாக விதிக்கிறது தர்ம சாத்திரங்கள். “உழவே தலை” என குறள் போற்றுவதோடு மற்ற அனைவரும் உழவர்களைத் தொழுது உண்பவர்கள் எனக் கூறுகிறது. உலக மொழிகளில் படைக்கப்பட்ட எந்த சமகால இலக்கியங்களிலோ அல்லது தத்துவங்களிலோ “உழவே தலை” என்னும் கருத்து வலியுறுத்தப்படவில்லை. இரத்தல் வேதியருக்கு உரிமையான கடமை என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன. “இரந்தும் உயிர் வாழ வேண்டின் அதற்கு காரணமான உலகியற்றியான் பரந்து கெடுக” என செம்மாந்து செப்புகிறது குறள். உயிரா? மானமா? என்றால் மானத்தை விட்டு உயிரைப் பேணுவது வடவர் பண்பாடு. “உயிர் நீப்பர் மானம் கெடவரின்” என்பது குறள் வழி தமிழர் பண்பாடு. தர்ம சாத்திரங்கள் அனைத்தும் சமய நூல்கள் என்ற வகையில் அவை ஒரு எல்லைக்குள் உட்பட்டு நிற்பன. பொது நூல்களாக கருத முடியாது.ஆனால் திருக்குறள் சமயம், நாடு, மொழி, இனம் அத்தனையும் கடந்து அன்பு, அறம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு மானுடத்தை நேசிப்பது. எனவே உலக மக்கள் அனைவருக்கும் உடைமையான பொது நூலாக விளங்குகிறது. தர்ம சாத்திரங்கள் வர்ண சார்பு நலன் கொண்டவை. குறள் அனைத்து மக்களின் நலன் சார்ந்து நிற்கும் நூல். தர்ம சாத்திரங்கள் வேதம், பிராமணீயம் ஆகியவற்றின் சாரம். குறள் உன்னதமான தமிழ் மரபின் விழுமியங்களின் சாரமாகும். இவை போல வடமொழி தர்ம சாத்திரங்களுக்கும் திருக்குறளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை இன்னும் பலவகையில் சுட்டிக்காட்டலாம். விரிக்கின் பெருகும்.

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.