"அகில இந்திய வானொலியில், தினமும் 15 நிமிடங்களுக்கு சமற்கிருதத்தில் கட்டாய ஒலிபரப்பு செய்யவேண்டும்” என்ற மத்திய அரசின் சுற்றறிக்கை, மீண்டும் தமிழகத்தில் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது."இறந்துபோன அம்மொழிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்" என்றும், "இது மறைமுகமாக சமற்கிருதத்தை மீண்டும் திணிக்கும் முயற்சி" என்றும் தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிக்கைவிட்டிருக்கின்றன.
அவர்கள் அறிக்கை வெளிவந்த அதேநேரத்தில், நியூசிலாந்து நாட்டில் மேற்கு ஆமில்டன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெளரவ் சர்மா, சமற்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டசெய்தி ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர், சூரிநாம் நாட்டு குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற சந்திரிகா பிரசாத் சந்தோகி சமற்கிருதத்தில் இந்த வருடம் சூலை மாதம் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். உண்மையிலேயே சமற்கிருதம் வழக்கொழிந்த மொழியா என்ற கேள்விக்கு விடை காண்பது முக்கியம். இந்திய அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில், சமற்கிருதமும் இந்திய மொழியாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதேபோல், 351ஆவது பிரிவில், இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற கூறப்பட்டிருப்பதோடு, "அம்மொழியைச் செழுமைப்படுத்துவதற்கு சமற்கிருதத்திலிருந்து வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றும் கூறப்பட்டிருக்கிறது. 1968ஆம் வருடம் வரை தமிழகத்திலும், உதவிபெறும் பள்ளிகளில் சமற்கிருதம் விருப்பப் பாடமாக இருந்தது. அதுதவிர, இன்றும் தமிழகத்தில் நான்கு கீழ்த்திசைப் பள்ளிகள் சமற்கிருதத்தைக் கூடுதலாகக் கற்றுத்தரும் பள்ளிகளாகÂ இருந்து வருகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தின்படி, இந்தப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்றுத்தரப்பட்டாலும், 11, 12ஆம் வகுப்புகளில் சமற்கிருதம் கட்டாய மொழிப்பாடமாகக் கற்றுத்தரப்படுகிறது. மத்திய கல்வி வாரியத்திடம் அங்கீகாரம் பெற்ற (சிபிஎஸ்இ) பள்ளிகளில், சமற்கிருதம் இரண்டாவது விருப்ப மொழிப்பாடமாக 1994ஆம் ஆண்டு வரை இருந்தது. ஆனால், இந்த மொழிப் பாடத் திட்டத்தை, மத்திய கல்வி வாரியம் ரத்து செய்ததை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் சமற்கிருதமும் பட்டியலிடப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பு வாய்ந்த கலாச்சார பின்னணிகொண்ட அம்மொழியை மத்திய அரசு விட்டுவிடக் கூடாது என்றும், அதை வழக்கொழிந்த மொழி என்று யாரும் கூற முடியாது என்றும் குறிப்பிட்டு மறுபடியும் சமற்கிருதத்தை விருப்பப் பாடமாகப் பள்ளிப் பாடத் திட்டத்தில் இணைப்பதற்கு உத்தரவிட்டது. சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் 24,820பேர் என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், அம்மொழி வளர்ச்சிக்காக 2011ஆம் வருடம் மட்டுமே 644கோடி ரூபாய் செலவிட்டது. அதே வருடத்தில் தமிழுக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 23கோடி ரூபாய் மட்டுமே, இவ்வருடம் மார்ச் மாதம் நாடாளுமன்றம், மத்திய சமற்கிருத பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளையும் செழுமைப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளாததோடு, பல விதத்திலும் சமற்கிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதைப் பார்க்கலாம். இது தவிர, அனைத்து இந்துக் கோயில்களிலும் கடவுள் வழிபாட்டுக்கு சமற்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆகமங்களை ஆதாரமாகக் காட்டி வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்து ஆலயப் பாதுகாப்பு சார்பாகப் போடப்பட்ட வழக்கில், கடவுளுக்கு நெருங்கிய மொழி சமற்கிருதம்தான் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது. அவ்வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், "கோயிலார்" என்ற தலைப்பில் பாரதிதாசன் எழுதிய பாடலை மேற்கோளாகக் காட்டியது. "உயிர்போன்ற உங்கள் தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லைபோலும்! உயிர் போன்ற உங்கள் தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்! திருப்படியில் நின்றபடி செந்தமிழில் பெரும்படியார் அருளிச் செய்த உருப்படியை அப்படியே ஊரறியும் படியுரைத்தால் படியும் நெஞ்சில்!” 130கோடி மக்களைக்கொண்ட இந்தியாவில், 25,000பேர் பேசக்கூடிய ஒரு மொழிக்கு அரசு முக்கியத்துவம் தருவதை எதிர்க்க வேண்டுமெனில், அதே 8ஆவது அட்டவணையிலுள்ள இதர இந்திய மொழிகளுக்குக் காட்டிவரும் சமத்துவமின்மையை நாம் சுட்டிக்காட்டவேண்டும். அகில இந்திய வானொலியில் சமற்கிருத ஒலிபரப்பு கேட்பதற்கு பெரிய அளவில் நேயர்கள் இல்லையெனினும், அதை ஒலிபரப்புவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளன. முதல் காரணம், இந்து மதப் பிரசாரம் செய்வதற்கு ஏற்ற வாகனமாக அம்மொழி இருக்கும். செம்மொழி அந்தஸ்து பெற்றாலும், அம்மொழியில் இன்றைய பொருளாதார, அரசியல், சமூக, வரலாற்றுப் பிரச்சனைகள் பற்றித் தெரிந்துகொள்வதற்கான வெளியீடுகள் இல்லையெனினும், பழைமை வாதங்களை மீண்டும் எடுத்துரைப்பதற்கு வாய்ப்பாகப் பயன்படப் போவதே இரண்டாவது காரணம். எனவே, இத்தகைய உள்நோக்கத்தை வெளிப்படுத்தி, அந்த ஒலிபரப்பு என்பது மக்களுக்காக அல்லாமல் இந்துத்துவப் பிரசார மேடையாகப் பயன்படுத்தப்படும் என்ற காரணத்துக்காக நாம் அதை எதிர்க்கவேண்டும். (ஜீனியர் விகடன் - 13-12-2020)
|