வரலாறு காணாத உழவரின் புரட்சி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 13:02

வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் கிளர்ந்தெழுந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய காலத்தில்கூட இத்தகைய வீறுகொண்ட, கட்டுப்பாடு நிறைந்த மாபெரும் போராட்டம் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றதில்லை.

Uzhavar

இன்னமும் தொடரும் இப்போராட்டத்தில் ஏறத்தாழ ஒரு இலக்கத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களில் பயணம் செய்து ஒரு கோடியே 20 இலக்கத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் தில்லி முற்றுகைப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கெடுத்துள்ளனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட  உழவர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் நோயின் காரணமாகவும், வேறு பல காரணங்களினாலும் மரணமடைந்த போதிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. மிகக் கடுமையான குளிர்காலத்தில் அவற்றைச் சற்றும் பொருட்படுத்தாமல் தங்களின் உழவு இயந்திரங்களிலேயே தங்கியும், கூடாரங்கள் அமைத்தும், தாங்களே சமைத்து உண்டும், போராடும் உழவர்களின் உறுதியும், தீரமும் இந்தியத் துணைக்கண்டம் இதுவரை கண்டறியாத எழுச்சிமிகு காட்சியாகும்.
தில்லி நோக்கி பஞ்சாப், அரியானா உழவர்கள் போராட்டத்திற்குப் புறப்பட்டபோது, வழிநெடுகிலும் அவர்களை தடுத்து நிறுத்த அரியானா காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேசிய நெடுஞ்சாலையின் நெடுகிலும் ஆழமான குழிகளை ஆங்காங்கே வெட்டியது. முள் வேலிகளை அமைத்தது. அதுமட்டுமல்ல, முன்னேறி வரும் உழவர்களின் மீது கடும் குளிர் காலம் என்பதையும் பாராமல் தண்ணீரைப்  பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைத்து விரட்டியடிக்க  அரியானா காவல்துறை முயற்சி செய்தது. ஆனால், உள உறுதியுடன் அடக்குமுறைகளைத் தாண்டிய  உழவர்களின் முன்னேற்றத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை. அத்தனை தடைகளையும் தாண்டி தில்லியைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டனர். அரியானா பா.ச.க. அரசு வெட்டிய குழிகளும், அமைத்த முள் வேலிகளும் போராட்டக்காரர்களின் நோக்கத்திற்குத் துணை செய்தன. வேறு யாரும் அந்த சாலைகளில் பயணம் செய்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
மராட்டியம், இராசசுதான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து உழவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க தில்லி நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். வழிநெடுக இவர்களை தடுத்து நிறுத்தவும், கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உழவர்களின் இந்தப் போராட்டத்தைத் திசைத் திருப்பவும், அடக்குமுறைகளைக் கையாண்டு ஒடுக்கவும் இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்ட நாடெங்கிலும் உள்ள தொழிற் சங்கங்களும், உழவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கொதித்தெழுந்தன. அறவழியில் நடைபெறும் உழவர் போராட்டம் ஒடுக்கப்படுவதற்கு அனுமதித்தால் எதிர்காலத்தில் இனி தொழிலாளர்களோ, உழவர்களோ அல்லது கட்சிகளோ யாரும் அரசை எதிர்த்துப் போராட முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த அனைவரும் ஒன்றுபட்டு கடந்த டிசம்பர் 8ஆம் நாள் அன்று நாடெங்கிலும் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர். போராடும் உழவர்களின் கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுத் தெரிவித்தனர். அத்துடன் உழவர்களுக்கெதிரான அடக்கு முறைகளை நிறுத்துமாறும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும் அரசை வலியுறுத்தினர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக  நாடு முழுவதும் 2கோடி பேர் கையெழுத்திட்ட மனுக்களை குடியரசுத்  தலைவரிடம் காங்கிரசு முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சென்ற குழுவினர் அளித்தனர்.
நோய் நெருக்கடி வேளையில் ஏன்?
வேளாண் சட்டங்களுக்கெதிராக நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு உருவானதைக் கண்ட நடுவண் அரசு திகைத்தது. கொரோனா கொடிய நோய் தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டங்களை நிறைவேற்றிவிட்டால் அதை உழவர்களோ அல்லது தொழிலாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ இவற்றுக்கெதிராகப் போராட அணி திரள முடியாது. எனவே, இதுதான் நல்ல சமயம்.  இதை நழுவவிடக் கூடாது என முடிவு கட்டி, இச்சட்டங்களை அவசரஅவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டனர்.
நாட்டு மக்களை பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருந்த கொடிய கொரோனா நோய் காலகட்டத்தில் இந்திய அரசு அவசரஅவசரமாக வேளாண்மைத் தொடர்பான மூன்று அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதலுக்கு வைத்து நிறைவேற்றியது. இந்த அவசரச் சட்டங்கள் கடந்த ஆண்டான 2020 சூன் மாதத்தில் பிறப்பிக்கப்பட்டவையாகும். ஆனால், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் இவற்றை நிறைவேற்றுவதில் இந்திய அரசு பிடிவாதமாக இருந்ததின் காரணம் என்ன? கொரோனா நெருக்கடியிலிருந்து நாடு மீண்ட பிறகு இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்திற்கு உட்படுத்தவும், மாநில அரசுகளின் அறிவுரைகளைப் பெறவும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும், எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த திருத்தங்களை  ஏற்கவும் இந்திய அரசு அடியோடு மறுத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தவும் இந்திய அரசு சம்மதிக்கவில்லை. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது உழவர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் ஐயமும், அச்சமும் உருவாவது இயற்கையானதாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 2023இல் தான் அடுத்தப் பொதுத்  தேர்தலை மோடியின் ஆட்சி சந்திக்கவேண்டியதிருக்கும். அதுவரை அரசுக்கு எத்தகைய நெருக்கடியும் ஏற்படப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர் விரோதச் சட்டங்கள், உழவர்களுக்கெதிரான சட்டங்கள்  மற்றும்  மக்கள் விரோதச் சட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு உரிய தருணமாக இத்தருணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த இந்த வேளையே சரியான வேளை. ஏனெனில், யாரும் எதிர்க்கவோ, ஒன்றுகூடவோ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுதான் இதற்கேற்ற சரியான காலம் என மோடியின் ஆலோசகர்கள் அறிவுரை  கூறினார்கள்.  நிதி ஆயோக்கின் தலைவராக  இருந்தவர்  "இந்தியாவில்  மிக அதிகமான சனநாயகம் நிலவுவதாக வெளிப்படையாக அலுத்துக்கொண்டார்”. மோடி அரசின் அறிவுரையாளர்கள் எத்தகையவர்கள் என்பதை இக்கூற்று மெய்ப்பிக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தில் மாநிலங்களின் பட்டியல் வேளாண்மை இடம்பெற்றிருக்கிறது. மத்திய அரசின் பட்டியலிலோ அல்லது மத்திய&மாநில அரசுகளின் பட்டியலிலோ இது இடம்பெறவில்லை என்பது மேலும் மிக முக்கியமானதாகும். இதை அடியோடு மீறி சர்வாதிகாரப் போக்கிலும், மாநிலங்களின் உரிமைகளை  மதிக்காதப் போக்கிலும் நடுவண் அரசு வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த முறை இந்திய அரசியல் சட்டத்தைத் தகர்ப்பதாகும்.
அதுமட்டுமல்ல, வேளாண் சட்டங்கள் உழவர்களுக்கு மட்டும் எதிரானவை அல்ல. மாறாக, மக்கள் அனைவருக்குமே எதிரான சட்டப்பிரிவுகள் இவற்றில் அடங்கி உள்ளன. அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால், நீதிமன்றத்திற்குச் சென்று முறையீட்டு நீதிபெறும் உ ரிமையையே  இச்சட்டப்பிரிவுகள் பறிக்கின்றன.
" நடுவண் அரசு, மாநில அரசுகள் மற்றும் அந்த அரசுகளின் அதிகாரிகள் நல்லெண்ணத்துடன் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கவோ மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாது” என இச்சட்டங்களின் பிரிவுகள் கூறுகின்றன. அதாவது,  அரசுகளோ அல்லது அதிகாரிகளோ இச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நல்லெண்ண நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும். அதற்கெதிராக நீதிமன்றங்களுக்கு யாரும் சென்று முறையிட முடியாது. 
நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றங்களிலோ நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கெதிராக நீதிமன்றங்களில்  முறையிட முடியும். அதன்மூலம் அச்சட்டங்களை செல்லாது என அறிவிக்க வழியுள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களின் பிரிவுகளின்படி நீதிமன்றங்களுக்குச் செல்லும் உரிமை உழவர்களுக்கும்  மட்டுமல்ல,  மக்கள் அனைவருக்குமே மறுக்கப்படுகிறது. 
இதைகண்டு அதிர்ச்சியடைந்த தில்லி வழக்கறிஞர்களின்  குழு, தனது கண்டனத்தை  ஒரு கடிதத்தின் மூலம் தலைமையமைச்சர் மோடிக்குத் தெரிவித்தது. "நீதிமன்றங்களுக்குரிய உரிமையை அதிகார வர்க்கத்திற்கு மாற்றுவது என்பது அடியோடு நீதித்துறையை அழித்துவிடும் செயலாகும்” என தில்லி வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சட்டப்பிரிவு 32, சட்டரீதியாகப் பரிகாரம் தேடும் உரிமையை குடிமக்களுக்கு இப்பிரிவு வழங்கியுள்ளது. அந்த உரிமையை வேளாண்  சட்டத்தின் 19ஆவது பிரிவு பறிப்பதின் மூலம் அரசியல் சட்டத்தின்  பிரிவை செல்லாததாக ஆக்குகிறது. 
"உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படவேண்டும்” என்பது மட்டும் பிரச்சனையல்ல. வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த இந்த சட்டம் வழிவகுக்கிறது. இந்தப் பெரு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் உழவர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்க முடியும் என்ற நிலை உருவாகிவிடும்.
இன்றியமையாதப் பொருட்களின் சட்டத்திற்கு நடுவண் அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மிகமிக அபாயகரமானதாகும். இன்றியமையாதப் பொருட்களை இருப்பு வைப்பதற்கு அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ் இது நீக்கப்பட்டு, எந்தளவுக்கும் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம் என திருத்தப்பட்டுவிட்டது. இதன் விளைவாக உணவுப் பொருட்களுக்குச் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கியும், பொருட்களைப் பதுக்கி வைத்தும், விலைகளை உயர்த்தும் நிலையை பெரு நிறுவனங்கள் உருவாக்கும். இதன் விளைவாக ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களின் விலை எட்ட முடியாத அளவுக்கு உயரும். மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். புதிய வேளாண் சட்டங்களின் மூலம் உணவுப் பொருட்களின் சந்தை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஆதிக்கத்திற்குள்ளும் சென்றுவிடும்.
வேளாண்மைத் தொழிலை இயந்திர மயமாக்குவது பெரு நிறுவனங்களின் கட்டுபாட்டுக்குள்ளாக்குவது ஆகியவற்றையே தமது நோக்கங்களாக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுள்ளன. இதன் விளைவாக, வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள 56.7% வேளாண் தொழிலாளர்களும் மற்றும் சிறு, குறு உழவர்களில் 86.08% பேர்களும்  தங்களது வாழ்வாதாரத்தை அடியோடு இழக்கவேண்டி நேரிடும்.
ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட நிலம் வைத்திருக்கும் உழவர்களுக்கு உழவுத் தொழிலை நவீனமயமாக்குவதற்குத் தேவையான பயிற்சிகள் அளித்தும், இயந்திரங்கள் வாங்குவதற்கு நிதி உதவி மற்றும் மானியங்கள் வழங்கியும், அவர்கள் வாழ்வை மேம்படுத்துவதற்குப் பதில் அவர்களை ஒட்டுமொத்தமாக பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைக்கவே புதிய வேளாண் சட்டங்கள் துணை புரியும். உழவர்களுக்கு ஒருபோதும் நன்மை பயக்காது.
இந்தியாவில் உள்ள வேளாண்மை நிலங்களில் 47% சிறு, குறு நிலவுடைமையாளர்களிடம் உள்ளது. இவர்களின் நிலைமை நாளுக்குநாள் சீர்குலைந்துவருகிறது. "தாங்கள் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாமலும், வேறு பல வகையிலும் பாதிக்கப்பட்ட இத்தகைய சிறு, குறு உழவர்களில் சுமார் 3 இலட்சம் பேர் கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, 2019ஆம் ஆண்டில் மட்டும் மராட்டிய மாநிலத்தில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் (எக்சுபிரசு நாளிதழ்- 13-12-20). இத்தகைய அவலத்திற்கு ஆளான உழவர்களைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் முன்வரவில்லை.
ஏற்கெனவே, மின்வாரியச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து மின் உற்பத்தி மற்றும் வழங்கும் துறையையே தனியாருக்கு நடுவண் அரசு தாரை வார்த்துவிட்டது. பல மாநிலங்களில்  உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இனி தனியாரின் ஆதிக்கத்தின் கீழ் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்குமா? என்ற கேள்விக்கு அரசு தரப்பில் எவ்வித விடையும் இல்லை.
உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலையை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்ற உழவர்களின் நீண்டகால கோரிக்கைக் குறித்து புதிய சட்டங்களில் எதுவும் கூறப்படவில்லை.
ஏற்கெனவே, சரக்கு மற்றும் சேவை வரியை எதேச்சதிகார முறையில் கொண்டுவந்து மாநில அரசுகளுக்குப் பெரும் வருவாயை ஈட்டித்தந்த விற்பனை வரியைப் பறித்து மாநிலங்களை நிதிநெருக்கடிக்கு நடுவண் அரசு உள்ளாக்கியது. அடுத்தப் பேரிடியாக மாநிலங்களுக்கு மட்டுமே உள்ள உரிமையான வேளாண்மைத் துறையிலும் அத்துமீறித் தலையிட்டு அத்துறையின் அடிப்படையையே அடியோடு மாற்றும் சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.
எம்.எசு. சுவாமிநாதன் அறிக்கை
ஆனால், புதிய வேளாண் சட்டங்களின் மூலம் உழவர்களுக்கு பெரும் நலன்கள் விளையும் என்று தலைமையமைச்சர் மோடியும் மற்ற அமைச்சர்களும் இடைவிடாது பேசுகிறார்கள். உழவர்களுக்கு இந்த  அரசு நன்மை செய்ய விரும்பினால், ஏற்கெனவே நடுவண் அரசு நியமித்த வேளாண் விஞ்ஞானி எம்.எசு. சுவாமிநாதன்  தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய உழவர் ஆணையம் அளித்தப் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுத்தவேண்டும்.
சுதந்திர இந்திய வரலாற்றில் வேளாண்மை குறித்து மிக விரிவாக ஆராய்ந்ததோடு, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று உழவர் அமைப்புகளையும், வேளாண் விஞ்ஞானிகளையும் சந்தித்து அவர்களின் அறிவுரைகளை தொகுத்ததோடு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்களுக்கு இருக்கக்கூடிய முற்றிலும் வேறுபட்ட பிரச்சனைகளைக் கேட்டறிந்ததோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் அலசி, ஆராய்ந்து கூறப்பட்ட பரிந்துரைகளைக் கொண்ட இந்த ஆணையத்தின் அறிக்கை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அறிக்கையாகும். இந்நாட்டின் வேளாண்மைத் தொழிலைத் தொலைநோக்குடன் திருத்தியமைப்பதோடு, உழவுத்  தொழிலை அறிவியல் ரீதியாக முன்னேற்றப் பாதையில் எடுத்துச்செல்வதற்கான வழிமுறைகளையும்  இந்த அறிக்கை கூறியது.
அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள்
ஏனெனில், உலகில் பசியும் பட்டினியுமாகக் கிடக்கக் கூடிய மக்களின் எண்ணிக்கையைப் பாதியளவாவது குறைக்க வேண்டுமானால், 2005ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டிற்குள்ளாக அதாவது, 10 ஆண்டுகளில் உலகின் வேளாண்மை உற்பத்தியை இருமடங்காகப் பெருக்கவேண்டும் என்பதை மனித குலத்திற்கான குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் என ஐ.நா. 2005ஆம்  ஆண்டில் அறிவித்ததை, இக்குழு தனது அறிக்கையில்  முதலாவதாக சுட்டிக்காட்டி அந்த நிலையை நமது நாடும் எட்டவேண்டுமானால், கீழ்க்கண்டவற்றை உடனடியாக நிறைவேற்றுவதற்கு இந்திய  அரசும், மாநில அரசுகளும் விரைவான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளது. 300 பக்கங்களுக்கு மேலாகக் கொண்ட அந்த அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகள் மட்டும் கீழே தரப்படுகின்றன.
* சிறு, குறு உழவர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கவேண்டும். பயிர்கள் உற்பத்தி, கால்நடைகளின் மூலம் உற்பத்தி இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல், சாணத்தின் மூலம் எரிசக்திப் பெறுதல் ஆகியவற்றை மேற்கொள்வதின் மூலம் பட்டினி, வறுமை, கிராமப்புற வேலையில்லாத்  திண்டாட்டம் ஆகியவற்றை வெற்றிக்கொள்ள முடியும்.
வேளாண் குடும்பங்களும்,  மீனவர்  குடும்பங்களும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட  சுனாமி மூலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. மேலும், பூகம்பம், புயல், வெள்ளப் பெருக்கு, மழையின்மை போன்ற இயற்கை உற்பாதங்களின் விளைவாகவும்,  உழவர்களும், மீனவர்களும் பெரும் பாதிப்புக்கு  ஆளாகி உள்ளனர்.  ஆனால், நாடெங்கிலும் உள்ள உழவர்களில் 10% உள்ளானவர்கள் மட்டுமே பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். மேலும், இவர்களின் குடும்பங்கள் மருத்துவக் காப்பீடு மேற்கொள்ளவும் இல்லை. வேளாண் தொழிலுக்கான இடர்  உதவி, நிதி உதவி அமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட, உற்பத்திச் செலவு அதிகமாக உள்ளது. இவற்றின் விளைவாகவும்,  மீளாக் கடன் சுமை விளைவாகவும், ஏராளமான உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை நீடிக்கிறது. மேலே கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக 2006-2007ஆம் ஆண்டினை வேளாண்மை ஆண்டாக அறிவித்து, வேளாண்மைக்குப் புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மண் வள மேம்பாடு திட்டம் வகுக்கப்பட்டு உழவர்களுக்குத் தக்க வழிமுறைகளை எடுத்துக் கூறுவதற்காக நாடெங்கிலும் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள், உர தயாரிப்பு நிறுவனங்கள், வேளாண்மைத் துறையினர், ஊராட்சியினர், உழவர்களின் சங்கங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து மண் வள மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடவேண்டும்.
பாசன நீராண்மை, செம்மையான முறையிலும், பாகுபாடற்ற முறையிலும் செயற்படுத்தப்படவேண்டும்.  பாசன நீராண்மை சமுதாயத்திற்குச் சொந்தமானது. அதை வழங்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. மேலும், மழை  நீரை சேமித்து நிலத்தடி நீரைத் திட்டமிட்டுப் பெருக்கவேண்டும்.சொட்டு நீர்ப் பாசனம்  போன்ற நீர் சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். கடல்நீர் பாசனமுறையின் மூலம் கடற்கரைகளில் சதுப்பு நிலக்காடுகளைப் பெருக்கவேண்டும். அலையாத்திக் காடுகள், சவுக்குமரக் காடுகள்,  சதுப்புநிலத் தாவரங்கள் ஆகியவற்றை அமைக்கவேண்டும்.
குறைந்தளவு நீரைப் பயன்படுத்திப் பயறுகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய உழவர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். குறைந்த நீரில் அதிகளவு நெல் உற்பத்தி முறைகள் பின்பற்றப்படவேண்டும். இதற்கான வழிகாட்டுதலை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் செய்யவேண்டும்.
வேளாண் கடன்களுக்கான வட்டிவிகிதம் 4% ஆக இருக்கவேண்டும். சந்தையில் விலை  வீழ்ச்சி  ஏற்படும் காலங்கட்டங்களில் கூட்டு வட்டி விதிக்கக் கூடாது.
வறுமையில் வாடும் மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் கடன் உதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
இயற்கை உற்பாதங்கள் ஏற்படும் காலங்கட்டங்களில் உழவர்களுக்கு உதவுவதற்காக இடர்நிதி  உருவாக்கப்படவேண்டும். இதற்கு நடுவண் அரசு, மாநில அரசுகள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றின் பங்களிப்பு இருக்கவேண்டும்.
இடர் காலகட்டங்களில் கடன்களை காலம் தாழ்த்தித் திருப்பிச் செலுத்துவதற்கு இணக்கம் அளிக்கப்படவேண்டும். பெண் உழவர்களுக்கு உழவர் கடன் அட்டை வழங்கப்படவேண்டும்.
சிறு - குறு உழவர்கள் அவசரத் தேவைகளுக்காகத் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்கவேண்டிய நிலைமையை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு உடனடியாகக் கடன் உதவிகள் வழங்கப்படவேண்டும்.
வேளாண் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் வேறு வகையான தேவைகளுக்காக சிறு காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
நாட்டில் 14% உழவர்களே பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். அனைத்து உழவர்களும் பயிர்க் காப்பீடு செய்ய உதவவேண்டும்.
உழவர்கள் கடன் வாங்கும் பிரச்சனைகளில் அவர்களுக்கு உதவுவதற்குக் கடன் ஆலோசனை மையங்கள் உருவாக்கப்படவேண்டும்.
பயிர்கள்-கால்நடைகள்-உழவர்களுக்கு மருத்துவம் ஆகியவற்றுக்காக ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படவேண்டும். 
நாடெங்கிலும் உழவர்களுக்கு உதவுவதற்காக 60ஆயிரம் வேளாண் சோதனை நிலையங்கள் அமைக்கப்படவேண்டும்.
உற்பத்தித் திட்டத்தை உள்ளடக்கிய சந்தைச் சீர்திருத்தங்கள்  மேற்கொள்ளப்படவேண்டும்.
மாநில மற்றும் வட்டார அளவில் உழவர்களுக்கு ஆலோசனை வழங்க தேசிய நிலப் பயன்பாட்டு ஆலோசனைத் துறை  உருவாக்கப்படவேண்டும்.
கிராமப்புற வாராந்திர சந்தைகள்  மேம்படுத்தப்படவேண்டும்.
உழவர்கள் தங்களின் விளைப் பொருட்களை நேரிடையாகப் பயனாளர்களுக்கு விற்கும் முறை ஊக்குவிக்கப்படவேண்டும்.
ஆனால்,  இக்குழு அளித்த பெரும்பான்மையான பரிந்துரைகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. மாறாக,  தனது நோக்கத்திற்கேற்ப சிலவற்றைத் திரித்தும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய சட்டப்பிரிவுகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால், அது அளித்த பரிந்துரைகளை தலைமையமைச்சர் மன்மோகன் சிங் கிடப்பில் போட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு இலக்கத்திற்கும் மேலான உழவர்கள் அணி திரண்டு, நாடாளுமன்றத்திற்கு முன் போராடினார்கள். எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற  வேண்டும் என வற்புறுத்தினார்கள். மேலும், வேளாண்மைக் குறித்த பிரச்சனைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் எனக் கோரினார்கள். அப்போது போராடிய உழவர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அணி திரண்டு வந்து போராடியவர்கள் ஆவார்கள். எம்.எசு. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அன்று காங்கிரசு அரசு கிடப்பில் போட்டது. இப்போது பா.ச.க. அரசும் அதைச் செயல்படுத்த மறுக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எசு. சுவாமிநாதன் உலகளவில் புகழ்பெற்றவர். பல்வேறு நாடுகள் அவரை அழைத்து தங்கள் நாட்டின் வேளாண்மையை வளர்ச்சியடைய செய்வதற்கான அறிவுரைகளை அவரிடம் கேட்டுப்பெற்று தங்களது நாட்டில் பின்பற்றி பெரும் பயன் அடைந்துள்ளன. ஆனால், இத்தகைய சிறப்புமிக்க அறிஞர் பெரும் உழைப்பிற்கிடையே உருவாக்கி அளித்த சிறப்பு வாய்ந்த பரிந்துரைகளை அவரைப் பெற்ற இந்நாடு படித்துப் பார்க்கவும் மறுக்கிறது. கடந்த 16ஆண்டு காலத்திற்கும்  மேலாக  அவரின் தலைமையில்  அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்ற  விவாதத்திற்குக் கூட வைக்கப்படவில்லை என்பது மிகவும் வெட்கக்கரமான செயலாகும். உழவர்கள் மற்றும் வேளாண்மைத் தொழிலை வளர்ச்சியடைய செய்வதற்கான ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும், திட்டங்களையும் கொண்ட இந்த அறிக்கை, இந்திய வேளாண்மைத் துறை அமைச்சகத்தில் எங்கேயோ கடைக்கோடியில் தூசிப் படிந்து  கிடக்கிறது. இதற்கு கடந்த கால காங்கிரசு அரசும்,  தற்போதைய பா.ச.க. அரசுமே முழு பொறுப்பாகும்.
உழவர் போராட்டப் பிரச்சனையில் தலையிட்டுள்ள உச்சநீதிமன்றம், "எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கவேண்டும். அத்துடன் அதன் பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கூறுவதற்காக, நாடாளுமன்ற குழு ஒன்றையும்  அமைக்கவேண்டும்” என ஆணைப்  பிறப்பிக்கவேண்டும்.
புயல், பெரு மழை, மழையின்மை போன்ற இயற்கை அழிவுகளின் காரணமாக வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டால்  நடுவண் அரசும், மாநில அரசுகளும் உழவர்களுக்கு இழப்பீடு தருகின்றன. ஆனால், வேளாண்மைத் துறை தனியாரின் ஆதிக்கத்திற்கு உள்ளாகும்போது, பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு தனியார் தருவார்களா? உதவுவதற்கு முன் வருவார்களா? வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்களின் ஆண்டு வருவாய்க்கும் மற்றும் பிற தொழில் துறைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் ஆண்டு வருவாய்க்கும் இடையே ரூபாய் ஒன்றரை இலக்கம் வேறுபாடு உள்ளது. பிற தொழிலாளர்களுக்கு போனசு, பொதுநல நிதி, ஆண்டுக்காண்டு ஊதிய உயர்வு போன்ற நன்மைகள் உள்ளன. ஆனால்,வேளாண் தொழிலாளர்களுக்கு இவைபோன்ற எதுவும் கிடையாது. அவர்கள் தங்களது உழைப்பின் பலனாக உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை  செய்தே ஆதாயம்  பெற முடியும். பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காவிட்டால் அவர்கள் செய்த முதலீட்டையும் இழக்கவேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.  இவைபோன்றப் பல கேள்விகளை உழவர்கள் எழுப்புகிறார்கள். ஆனால், எதற்கும் பதில் அளிக்காமல் இச்சட்டங்களை செயல்படுத்துவதில் நடுவண் அரசு முனைப்புக் காட்டிவருகிறது.
உச்சநீதிமன்றம் தலையீடு
உழவர்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையிலும், நடுவண் அரசு உழவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாத நிலையிலும், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எசு.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இருதரப்பின் வாதங்களுக்கு செவிமடுத்த நீதிபதிகள், பின்வருமாறு அறிவித்துள்ளனர். "வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் அமைதியாகப் போராடுவதற்கு உழவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. எனவே, அப்போராட்டத்தை அனுமதிக்கவேண்டும். போராடும் உழவர் சங்கங்களின் பிரதிநிதிகள், நடுவண் அரசின் பிரதிநிதிகள் மற்றுமுள்ள மனித உரிமை  அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து அதன் பரிசீலனைக்கு வேளாண் சட்டங்களும், உழவர்களின் கோரிக்கைகளும் முன் வைக்கப்படும்” என ஆணைப் பிறப்பித்துள்ளனர்.
இந்த ஆணையின் மூலம் அமைதியாகப் போராடுவதற்குரிய உரிமை உழவர்களுக்கு உண்டு என்பதை உச்சநீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ஆணை குறித்து சட்ட அறிஞர்களின் அறிவுரையைப் பெற்று அதற்குப் பின் தங்கள் கருத்தை அறிவிப்பதாக உழவர் சங்கங்கள் கூறியுள்ளன.
அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மூன்று வேளாண் சட்டங்களில் அங்குமிங்குமாக சில திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவது வெறும் கண்துடைப்பாகும்.  அதனால்  எவ்விதப் பயனும் விளையப்போவதில்லை. இந்த வேளாண் சட்டங்களில் ஏறத்தாழ  90% மேற்பட்டப்  பிரிவுகள் அனைத்தும் உழவர்கள் மற்றும் மக்களுக்கு எதிரானவையாகும். எனவே, இச்சட்டங்களை தூக்கியெறியப்பட வேண்டியவையேயாகும்.
அரசியல் சட்டப்படி மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மைத் துறையில் அத்துமீறி இச்சட்டங்களை நடுவண் அரசு கொண்டுவந்திருப்பது செல்லாதது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் போக்காகும். எனவே, செல்லுபடியாகாத சட்டங்களுக்குத் திருத்தங்கள் கொண்டுவருவது அநீதிக்குமேல் அநீதி இழைப்பதாகும்.
தில்லியில் உழவர்கள் நடத்தும் முற்றுகைப் போராட்டம் கட்சி எல்லைகளைத் தாண்டி, மத  வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த உழவர்களின் கூட்டுப் போராட்டமாகும்.   குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு ஒன்று பகைமைக் கட்சிகளான அகாலிதளமும், காங்கிரசும் இப்பிரச்சனையில் கைகோர்த்து நிற்கின்றன. பஞ்சாபில் இப்போது காங்கிரசுக்  கட்சி ஆளுங்கட்சியாக உள்ளது. அகாலிதளம் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், பா.ச.க. கூட்டணியில் அங்கம் வகித்த அகாலிதளத்தைச் சேர்ந்த   மத்தியமைச்சர் வேளாண் சட்டங்களை எதிர்த்து தனது பதவியைவிட்டு விலகினார். பஞ்சாப் மாநில  காங்கிரசு முதலமைச்சர் தில்லிக்குச் சென்று தலைமையமைச்சர் மோடியைச் சந்தித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தினார். தில்லியின் முற்றுகைப் போராட்டத்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த உழவர்கள் அணிவகுத்துப் புறப்பட்டபோது, அவர்களை பஞ்சாப் முதலமைச்சர் வாழ்த்தி வழியனுப்பினார். வழிநெடுக அவர்களுக்குத்  தேவையான உதவிகள் அனைத்தையும் அம்மாநில அரசும்,  மக்களும் செய்தனர்.  இன்னமும் செய்து வருகின்றனர். போராட்டக் களத்தில் தோளோடு  தோள் இணைந்து கட்சி, சாதி, மத வேறுபாடுகளைத்  தூக்கியெறிந்துவிட்டு ஒன்றுபட்டுப்  போராடுகின்றனர்.  இது இந்நாடெங்கும் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியான வழிகாட்டும்  போராட்டமாகும்.
குறிப்பாக, இத்தகைய ஒற்றுமை தமிழ்நாட்டு உழவர்களுக்கும், கட்சிகளுக்கும், மக்களுக்கும் இடையே உருவாகியிருந்தால் காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் பிரச்சனைகளில் நமக்கு நேர்ந்துள்ள அவலங்களும், இழப்புகளும், தோல்விகளும் ஒருபோதும் நேர்ந்திராது. நம்மிடையே ஒற்றுமை இல்லாததின் விளைவாகத்தான் இப்பிரச்சனைகளில் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டது. தில்லியில் நடைபெறும் உழவர்களின் முற்றுகைப் போராட்டம் தமிழ்நாட்டு உழவர்கள், கட்சிகள்,  மக்கள் ஆகியோரின் விழிகளைத் திறப்பதற்கு உந்துதலை அளிக்குமாக.

 
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.