உழவர் போராட்டம் கட்டுரை-2 - உச்சநீதிமன்றத்தின் ஆணை அநீதிக்கு மேல் இழைக்கப்படும் அநீதியாகும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:44

கடந்த 45 நாட்களுக்கு மேலாக தில்லியைச் சுற்றி முற்றுகைப் போராட்டத்தை உழவர்கள் நடத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் மிகக் கொடுமையான குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்வுரிமைகளைக் காப்பதற்காக உறுதியுடனும் தீரமுடனும் போராடுகிறார்கள்.

 

கொட்டும் குளிரின் விளைவாக 60-க்கு மேற்பட்ட உழவர்கள் போராட்டக் களத்திலேயே உயிர் ஈகம் செய்திருக்கிறார்கள். நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் கூட இத்தகைய எழுச்சி மிகுந்ததும், துளி அளவு கூட வன்முறை இல்லாததும், சனநாயக முறை கொண்டதுமான மாபெரும் போராட்டம் நடைபெற்றதில்லை. ஆனாலும் கூட நடுவண் அரசு தான் கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு பிடிவாதமாக மறுத்து வருகிறது. உழவர்களின் ஒன்றுபட்டப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் காலிசுதான் தீவிரவாதிகளின் போராட்டமாகவும் பிரிவினைவாதிகளின் போராட்டமாகவும் வெளிநாடுகளின் தூண்டுதலின் காரணமாகவும் இப்போராட்டம் நடைபெறுவதாக நடுவண் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வேளாண் சட்டங்கள் செயற்படுத்தப்படுவதை நிறுத்தி வைக்குமாறு ஆணைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். நடுவண் அரசின் தகாதப் போக்கிற்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் முன் வந்துள்ளது நடுவண் அரசுக்குப் புகட்டப்பட்டப் படிப்பினையாகும்.

வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்துத் தீர்வு காணும் நோக்கில் நான்கு பேரைக் கொண்ட ஒரு குழுவினை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. ஆனால் போராடும் உழவர்கள் இக்குழுவை ஏற்க மறுத்துள்ளனர். ஏனெனில் இக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உறுப்பினர்களில் ஒருவரான அசோக் குலாட்டி ஒரு வேளாண்மைப் பொருளாதார அறிஞராவார். ஆனால், அவர் “1991ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையுடன் வேளாண்மைச் சட்டங்களை ஒப்பிட்டு முதன்மையான நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரவேற்றுள்ளார். மற்றொரு உறுப்பினரான பிரமோத் கே ஜோசி என்பவர் விலைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கைக்கு எதிரானவர். அதுமட்டுமல்ல, குத்தகை வேளாண்மை முறையை ஆதரிப்பதோடு, வேளாண்மையைப் பெரு நிறுவனமயமாக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். மூன்றாவது உறுப்பினரான அனில் கன்வத் என்பவர் திறந்த சந்தைக் கொள்கையின் ஆதரவாளர். வேளாண் பொருட்களை திறந்த சந்தையில் உழவர்கள் விற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வெளிப்படையாகக் கூறியவர். நான்காவது உறுப்பினரான பூபிந்தர் சிங் மன் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்ததைப் போல உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் இக்குழு அமைக்கப்படவில்லை. மேலும் முன்னாள் நீதிபதிகளில் ஒருவர் கூட இக்குழுவில் இடம்பெறவில்லை. இது ஏன்? என்ற கேள்வி மக்களின் உள்ளங்களைக் குடைகிறது.

இந்தியா இன்னமும் ஒரு வேளாண்மை சார்ந்த நாடாகும். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வேளாண்மையையே நம்பி வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக வேளாண்மைத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்டச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காகத் தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு சேற்றிலும் சகதியிலும் இறங்கி உழைக்கும் மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேயே இன்னமும் வாழும் நிலை நீடிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிப் போன்ற உண்மையாகும்.

நாட்டு மக்களின் தேவைக்கு அதிகமான அளவில் உணவு உற்பத்தி ஆகிறது என அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 72 மில்லியன் டன் கோதுமையும் 60 இலட்சம் டன் சர்க்கரையும் அரசின் கிட்டங்கிகளில் குவிந்து கிடக்கின்றன. ஆனாலும் ஆண்டு தோறும் இந்தியாவில் 25 இலட்சம் மக்கள் போதுமான உணவின்றி பட்டினியால் சாகின்றனர். நம்முடைய குழந்தைகளில் 37% அதிகமானவர்கள் போதிய ஊட்டச்சத்து இன்மையால் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்பட்ட இரங்கத்தக்க நிலைமையில் வாழ்வதற்காகப் போராடுகின்றனர். உலகில் பட்டினியால் வாடுபவர்கள் அதிகமானவர்களைக் கொண்ட நாடு நமது நாடாகும். இத்தகைய இழி நிலையை மாற்றுவதற்கு முன் வராத இந்திய அரசு வேளாண்மைத் தொழிலையும் உற்பத்தியாகும் தானியங்களையும் இதில் ஈடுபட்டுள்ள உழவர்களையும் பெரு முதலாளிகளிடம் அடகு வைக்க முற்படுகிறது. புதிய வேளாண் சட்டங்களின் அப்பட்டமான நோக்கம் இதுவாகும்.

முதலில் அவசரச் சட்டங்களாகப் பிறப்பிக்கப்பட்டு அதற்குப் பிறகு அவசர கதியில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகள் எதையும் ஏற்க மறுத்து குறிப்பாக வாக்கெடுப்பு நடத்தும் சனநாயக உரிமைகளை கூட மதிக்காமல் ஏதேச்சதிகாரமான முறையில் நிறைவேற்றப்பட்டச் சட்டங்களாகும்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான எஸ்.ஏ. போப்டே “நடுவண் அரசின் இப்போக்கினை மிகக் கடுமையாக நீதிமன்றத்தில் சாடியபோது, உழவர்களின் போராட்டத்தை அரசு கையாண்டவிதம் எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னால், சகலதரப்பினருடன் நீங்கள் கலந்து ஆலோசித்ததாகத் தெரியவில்லை. பல்வேறு மாநில அரசுகள் இச்சட்டங்களுக்கு எதிராகப் புரட்சிக் கொடியை உயர்த்தி உள்ளன. போதுமான ஆலோசனையின்றி நீங்கள் இந்தச் சட்டங்களை நிறைவேற்றியதின் விளைவாகப் போராட்டம் மூண்டுள்ளது. இந்தக் கட்டத்தில் போராட்டத்தைத் தவிர்க்க வழி தெரியாமல் தவிக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளீர்கள்” என வெளிப்படையாகவும், மிகக் கடுமையாகவும் சாடினார்.

சனநாயகத்திற்கு எதிரான அரசின் போக்கை மிகக் கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், பிரச்சனையை ஆராய்வதற்கு நால்வர் கொண்ட குழுவை அமைத்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. யாரையும் கலந்தாலோசிக்காமல் சட்டங்களைக் கொண்டு வந்ததற்காக நடுவண் அரசை சாடிய நீதிமன்றம் போராடும் உழவர்களையோ, நடுவண் அரசையோ அல்லது மக்கள் அமைப்புகளையோ சிறிதளவும் கலந்தாலோசிக்காமல் குழு ஒன்றை நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

உழவர்கள் போராட்டத்தின் விளைவாக பெரும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் நடுவண் அரசைக் காப்பாற்றுவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

அத்துடன் மட்டுமல்ல அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களுக்கே உரிமையானப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேளாண்மை குறித்து சட்டமியற்ற நடுவண் அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும் நடுவண் அரசு – மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் கூட இது இடம் பெறவில்லை. இந்திய அரசின் இந்தச் சட்டங்கள் அரசியல் சட்டத்தை அடியோடு மீறியவையாகும். இவ்வாறு தான்தோன்றிப் போக்கில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்களை உழவர்கள் ஏற்றுக் கொண்டே தீர வேண்டுமென நடுவண் அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. நாடெங்கிலும் உள்ள அனைத்து உழவர்களின் சங்கங்களும் அனைத்துக் கட்சியினரும் இச்சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தும் கூட செவி சாய்ப்பதற்கு இந்திய அரசு மறுத்து வருகிறது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் விளைவாக இப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அறிகுறி காணப்படவில்லை. மேற்போக்காக உழவர்களின் பிரச்சனையை உச்சநீதிமன்றம் அணுகியிருக்கிறதே தவிர, ஆழமாகவும், தொலைநோக்கோடும் அணுகவில்லை. இந்திய அரசியல் சட்டப்படி மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மைக் குறித்து நடுவண் அரசு சட்டம் இயற்றி அரசியல் சட்டத்தை அடியோடு மீறியுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உழவர்களின் சார்பிலும், பல்வேறு மாநில அரசுகளின் சார்பிலும் தொடுக்கப்பட்டிருக்கம் வழக்கினை எடுப்பதில் உச்சநீதிமன்றம் அக்கறைக் காட்டவில்லை இது ஏன்? வேளாண் சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்விக்குரிய விடையை அளிப்பதற்குப் பதில் அந்த வழக்கையே ஆறப்போட்டுவிட்டது உச்சநீதிமன்றம். அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றம் அமைத்தக் குழுவின் பரிந்துரைகள், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு அதை அம்மன்றம் ஆராய்ந்து அறிவிக்கும் முடிவு நீதிமன்றத்தின் முடிவாக அமையும். ஆனால், இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்திய அரசிடமே அளிக்கப்படுமே என்று மட்டும் கூறியிருப்பது அந்தப் பரிந்துரைகளை ஏற்பதும், ஏற்காததும் அரசிடமே விடப்பட்டுவிட்டது. வேளாண் சட்டங்களை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம் என அறிவித்திருக்கும் இந்திய அரசிடமே இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒப்படைத்தது அநீதிக்கு மேல் இழைக்கப்படும் அநீதியாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.