24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழர் திருநாள்-பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
காலை 9 மணிக்கு கவிஞர் க. பத்மா தலைமையில் மகளிர் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு காலை 10 மணிக்கு மறைந்த தமிழறிஞர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சு. பழனிராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். சா. இராமன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். துரை. குபேந்திரன், கோ. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மறைந்த பேராசிரியர் அறிவரசன் அவர்களின் படத்தினை வழக்கறிஞர் பொ. இளஞ்செழியன் திறந்து வைத்து உரையாற்றினார். பேராசிரியர் தொ. பரமசிவன் படத்தை பேரா. பா. மதிவாணன் திறந்து வைத்து உரையாற்றினார். பின்னர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â Â பழ. நெடுமாறன் மறைந்த இரு தமிழறிஞர்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பொங்கல் விழா நிகழ்ச்சி
மாலை 3 மணிக்கு பொங்கல் விழா நிகழ்ச்சி தொடங்கியது. முனைவர் கோ. விசயராமலிங்கம்Â அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் வி. பாரி தலைமை தாங்கினார். எம்.ஜி.கே. நிசாமுதீன், ந.மு. தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாலை 4 மணிக்கு ஒரத்தநாடு கயல் கோபு குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையைச் சேர்ந்த முனைவர் ஆழி. ஏ. வெங்கடேசன் மற்றும் மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டு நடித்த நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
நூல் அறிமுக விழா
மாலை 5 மணியளவில் இசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்கள் எழுதிய தமிழிசைப் பேரகராதி நூலின் ஆங்கில மொழியாக்கப் பதிப்பான Lexicon on Tamil Music Scales என்னும் நூல் அறிமுக விழா நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் எசு. சங்கரக்குமரன் நூல் குறித்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பழ. நெடுமாறன் நூலை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இசை ஆய்வாளர் நா. மம்மது ஏற்புரை நிகழ்த்தினார்.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டுமான நுட்பங்கள் குறித்து பொறியாளர் சு. இராசேந்திரன் படங்களைத் திரையிட்டு விளக்கவுரையாற்றினார். இறுதியாக பழ. பிரகதீசு அனைவருக்கும் நன்றி கூறினார்.
இறுதியாக அனைவருக்கும் அறுசுவை தமிழர் விருந்து அளிக்கப்பட்டது. |