அறிக்கை: 7பேர் விடுதலை - ஆளுநரின் காலங்கடத்தும் தந்திரம் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2021 16:28 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : 7பேர் விடுதலைப் பிரச்சனையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து காலம் கடத்தும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அவரது செயல்பாடு அரசியல் சட்ட மாண்பினை மதிக்காதப் போக்காகும். சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை ஏற்றுச் செயல்படவேண்டியது மட்டுமே ஆளுநரின் கடமை என அரசியல் சட்டம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனாலும், கடந்த இரண்டாண்டு காலமாக அதை மதியாதப் போக்கில் நடந்துகொண்ட ஆளுநர், இப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி குடியரசுத் தலைவருக்கே இதற்கான அதிகாரம் உண்டு என்று கூறியிருப்பது அப்பட்டமான காலம் கடத்தும் தந்திரமாகும். அமைச்சரவையின் பரிந்துரை அனுப்பப்பட்டவுடனேயே இவ்வாறு அவர் கூறியிருக்கலாம். ஆனால், இரண்டாண்டுகள் எதுவுமே கூறாமல் இப்போது குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று கூறியிருப்பது, கேலிக்கூத்தாகும். எனவே, உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டு ஆளுநரின் தவறானப் போக்கினை கண்டிக்க முன்வரவேண்டும். இல்லையேல் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும் அரசியல் சட்ட மாண்பினை மதியாதப் போக்கில் நடந்துகொள்ள முற்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். |