தமிழீழத் தாயகத்தை ஏற்றது அமெரிக்கா! இந்தியா களத்தில் இறங்குமா? - கவிஞர் காசி ஆனந்தன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:42

KasiAnandanஅமெரிக்க அரசின் 117-ஆவது பேரவை (Congress) முதல் கூட்டம் 18-5-2021-இல் நடைபெற்றது. இப்பேரவையின் 413-ஆவது தீர்மானம் “தமிழீழத் தாயகத்தை” ஒப்புக் கொண்டிருப்பது ஈழத் தமிழர் நெஞ்சில் ஆறுதலையும் புதிய தெம்பையும் அளித்திருக்கிறது.


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வருகை தந்த கோல்புறூக் ஆணைக்குழு தன் அறிக்கையில் “இலங்கையின் வடக்கு - கிழக்கு நிலப்பரப்பு தமிழர்களின் வழிவழித் தாயம்” எனக் குறிப்பிட்டிருப்பதாக “மனித உரிமைகளுக்கான தமிழ் மையம்” தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்பதிவுக்குப் பின்பு “வடக்கு-கிழக்கு இலங்கைத் தமிழர்களின் தாயகம்” என இற்றைவரை பிறர் யாரும் பதிவு செய்ததில்லை.
சிங்கள - புத்தமத இனவெறித் தலைவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் “இலங்கையில் தமிழர் தாயகம் என்று எதுவும் இல்லை” என அடிக்கடி முழங்கி வருகிறார்கள்.
ஆனால் -
“நாங்கள் மாகாணங்கள் அல்ல - நாங்கள் ஒரு தாயகம்” என்று நான் அவர்களுக்கு எதிராக குரலெழுப்பி வருகிறேன்.
தமிழீழத்தின் தாயகத்தன்மையை அழித்துவிட்டால் தமிழர்கள் தமிழீழ விடுதலை கேட்பதை அழித்துவிடலாம் என்று சிங்களர்கள் கருதுவது மட்டுமல்ல - அதற்காகவே தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றத்தை விரைந்து முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
கொடுமையான இக்காலக்கட்டத்தில் அமெரிக்க அரசின் 117-ஆவது பேரவைக் கூட்டத்தின் தீர்மானத்தில் “இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வழிவழித் தாயகம்” என அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது - (The North Eastern Region of the Country, the traditional Tamil home land) கொந்தளித்தும் குமுறியும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுக்கும் செய்தியாகும்.
இந்திய அரசு இத்தீர்மானத்தை கருத்திலும் கவனத்திலும் கொள்ள வேண்டும். தமிழீழம் ஒரு தாயகமாக இருக்கும்வரைதான் இந்தியாவுக்கு அது பாதுகாப்பு அரணாக இருக்கும். சிங்களவர்களின் தாயகமான சிங்கள சிறீலங்கா சீனாலங்காவாக மாறிக் கொண்டிருக்கும் இக்காலச் சூழலில் தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை இந்தியாவின் பாதுகாப்பு அரணாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுடையதாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.