அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை குற்றச்சாட்டு - கொரோனா பேரழிவுக்கு இந்திய அரசின் திறமையின்மையே காரணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 02 ஜூலை 2021 12:08

இந்தியா இன்று சந்திக்கும் கொரோனா பேரழிவுக்கு தலைமையமைச்சர் நரேந்திர மோடியே காரணம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.

 

புளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியரும், அண்மையில் வெளியான ‘இந்தியாவின் தேசிய பாதுகாப்பு’ என்ற நூலின் ஆசிரியருமான சுமித் கங்குலி இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் தற்போதைய கொரோனா தொற்று நெருக்கடி அதிர்ச்சியைத் தருகிறது. கொரோனா தொற்று விகிதம் நாளொன்றுக்கு 3 இலட்சத்திற்கு அதிகமாக உள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா இறப்பானது நாளொன்றுக்கு 3 ஆயிரம் என்ற அளவிற்கு உச்சம் அடையும் என்று தொற்று நோயியல் நிபுணர்கள் நம்புகின்றனர். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா இருக்கிறது. ஆனாலும் இந்தியா தனது 130கோடி மக்களில் 2 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவிருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அந்த மருந்தை இரவல் கேட்கும் நிலைக்கு கொண்டுபோய் மக்களை தள்ளிவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைக்கூடக் கிடைக்காமல் மக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை குறைபாடுகள் நன்கு அறியப்பட்டவையே என்றாலும், கடுமையான பொதுமுடக்க நடவடிக்கைகள் மூலம் 2021 சனவரி மாதத்திற்குள் கொரோனா முதல் அலைகளை நாடு கட்டுப்படுத்தியது. 2020இல் அமல்படுத்தப்பட்ட 21 நாள் பொது முடக்கம் குறைந்த காலத்திற்கு வைரஸ் பரவுவதைத் தடுத்தது. ஆனால், இந்த கால அவகாசத்தை முற்றிலுமாக கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான திட்டமிடல்களுக்கு தலைமையமைச்சர் மோடி பயன்படுத்தவில்லை. தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை உருவாக்குவதற்கும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அல்லது சோதனைகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, வழக்கம்போல தனது வேலையை ஆரம்பித்தார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கேலி செய்வது, அரசியல் எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது மற்றும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இந்தியா வைரஸை ஒழித்துவிட்டதாக தம்பட்டம் அடித்து, தனது வலிமையை வெளிப்படுத்த முயன்றார். அதுமட்டுமல்ல, 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில், மோடி தன்னை முழுமையாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். கொரோனா அபாயம் குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.

கங்கையில் உள்ள அரித்துவார் நகரில் இந்து மத விழாவை (கும்பமேளா) நடத்த மோடி அனுமதித்தார். கும்பமேளா வழக்கமாக மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கும் திருவிழா இது என்று நிலையில், கொரோனா அபாயத்தையும் தாண்டி, அந்த கும்பமேளாவை மோடி அனுமதிக்கிறார் என்றால், அதற்கான அரசியல் காரணம் வெளிப்படையானது. இந்து நம்பிக்கையாளர்களின் வாக்குகளை தலைமையமைச்சர் மோடிக்கும் அவரது கட்சிக்கும் கிடைப்பதை இது உத்தரவாதம் செய்யும் என்பதுதான். மோடியைப்   பொறுத்தவரை, நாட்டு மக்களின் நல்வாழ்வைவிட, அவரது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல், அரசியல் நாடகம் மற்றும் தேர்தல் வெற்றிகள்தான் முக்கியமானவை. மோடியும் அவரது அரசாங்கமும் இந்தியாவின் குடிமக்கள் மீது அக்கறை கொண்டிருந்திருந்தால், அவர்கள் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களையும், திருவிழாவையும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர்களின் தேசியத் தடுப்பூசி இயக்கம், இன்று மக்களைப் பயமுறுத்துகிறது.

உள்ளூர் கட்சித் தலைவர்களில் சிலர் யோகா பயிற்சி மற்றும் பசுமாட்டின் சிறுநீரை கிருமிநாசினியாகப் பயன்படுத்துவது வைரஸைத் தடுக்கும் என்று பரிந்துரைத்தனர். பா.ஜ.க.வின் வெளியுறவுத் துறையின் தலைவர் விஜய் சவுதைவாலே, பசுவின் சிறுநீர் மற்றும் மஞ்சளை உட்கொள்வதை ஊக்குவித்தார். தொழில்துறை நகரமான துர்காபூரில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோசும் பசுவின் சிறுநீரைப் பரிந்துரைத்தார். தொற்று நோயை கையாளும் விவகாரத்தைப் போலவே இதற்கு முன்பு போதிய முன்னெச்சரிக்கை இல்லாமல் பணமதிப்பு நீக்கம், ஜி .எஸ்.டி.   அமலாக்க முடிவுகளை மோடி மேற்கொண்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் யாருடனும் அவர் ஆலோசிக்கவில்லை. இதன் விளைவாக நாட்டில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது.

2019இல் இந்தியாவின் ஒரே முசுலீம் பெரும்பான்மை மாநிலமான சம்மு-காசுமீரின் சிறப்பு தகுதியை இரத்து செய்ததன் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை மோடி புறக்கணித்தார். அவர் தனது நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு இந்தியாவின் விவசாய சந்தைகளையே அடியோடு மாற்றியமைப்பதற்கான மூன்று சட்டங்களை இயற்றினார். பெரும்பாலும் விவாதம் அல்லது வாக்கெடுப்பு இல்லாமல், இந்த புதிய பண்ணைச் சட்டங்களைக் கொண்டு வந்தார். அதுவும் கொரோனா வைரஸ் சீற்றமடைந்த காலத்தில் இதனை செய்தார். விவசாயிகள் அதனை எதிர்த்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், மோடி தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மறுத்து, எதிர்ப்பாளர்களை அலட்சியம் செய்தார்.

இப்போது பொது பூங்காக்கள் தற்காலிக சுடுகாடாக மாறி வருகின்றன. நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே நடைபாதையில் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆம்புலன்சுகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால், மோடியின் கூட்டாளிகளோ, மிகவும் கடுமையான, பழக்கமான, தந்திரோபாயங்களை மேற்கொண்டு, இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று வாதிடுகின்றனர். அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பின் விளைவுகளை பொருட்படுத்தாமல் எடுக்கப்பட்ட பல முடிவுகளின் பாதிப்புக்களை அனுபவித்த பின்னரும், மோடியின் நடவடிக்கைகள் மாறுவதாக இல்லை. மோடியின் அணுகுமுறைகள் அவரை, திசைத்திருப்ப முடியாத வழிகளில் வேட்டையாடுகிறது. தலைமையமைச்சர் மோடியின் தவறான கொள்கைகள், சரியான திட்டமிடல்கள் ஆகியவை இல்லாததன் காரணமாக, இந்தியா கொரோனா எனும் ‘வாட்டர்லூ’வைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையில் ஊடகங்களின் வாயை அடைக்க முயன்றாலும், இன்றைய அபாயகரமான கொரோனா பேரழிவிற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இவ்வாறு, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் சுமித் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

-நன்றி – ஜனசக்தி - மே -15- 2021

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.