சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி சிங்கள அரசு பொன் நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகில் வியட்நாம், கியூபா ஆகிய கம்யூனிஸ்டு நாடுகள்கூட சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி நாணயம் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாணயத்தின் வெளியீட்டு விழாவில் பேசும்போது சிங்களத் தலைமையமைச்சர் இராசபக்சே பின்வருமாறு குறிப்பிட்டார்-“சிங்களத்தின் மிக உண்மையான உறுதியான உற்றுழி உதவும் நண்பன் சீனா மட்டுமே. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்டுக் கட்சி ஒரு நாட்டின் வெளியுறவு எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, உலக நாடுகளுக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. இதன் விளைவாக உலக அரங்கில் சீனாவின் மதிப்பு மிக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு நாட்டாண்மை செய்யும் பழக்கம் சீனாவிடம் அறவே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக மற்ற நாடுகளின் சுதந்தரத்தன்மையை சீனா மதித்துப் போற்றுகிறது. மற்ற நாடுகளை சமமாக நடத்துகிறது. அதனால் உலக நாடுகள் சீனாவுடன் சிறந்த நட்புறவு கொண்டு பாராட்டுகின்றன” என சீனாவிற்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார்.
அதேநேரத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் “இலங்கையின் உள் விவகாரங்களில் தேவையில்லாமல் இந்தியாவும், மேற்கு நாடுகளும் தலையிடுவது இலங்கையின் இறையாண்மைக்கு அறைகூவலாக அமைந்துள்ளது” என மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். ஈழத் தமிழர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கும் சிங்கள அரசின் செயலை உலக நாடுகள் கண்டித்தால் அது இலங்கையின் உள் விவகாரங்களிலும், இறையாண்மையிலும் தலையிடுவதாகும் எனக் கூறுவது கேலிக்கூத்தாகும். அப்படியானால், ஈழத் தமிழர்களைக் கொன்றுக் குவிப்பதற்கு சிங்கள இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை சீனா வழங்குவது இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகாதா? இனப்படுகொலையை கண்டிப்பது உள் விவகாரத்தில் தலையிடுவதாகும் என்றால், ஈழத் தமிழரைப் படுகொலை செய்ய ஆயுதம் வழங்குவதை என்ன பெயர் சொல்லி சுட்டுவது?
ஆனாலும் சிங்களத் தலைமையின் நோக்கத்தை கொஞ்சமும் புரிந்துகொள்ளாதப் போக்கில் இந்திய அரசு நடந்துகொள்கிறது. சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்குப் பொருளாதார உதவிகளையும், ஆயுத உதவிகளையும் சீனா அள்ளி அள்ளித் தருவது ஏன்? இலங்கைக்கு அருகில் இந்தியாவைத் தவிர வேறு நாடு கிடையாது. இந்தியாவோ இலங்கையின் நட்பு நாடாக நடந்துகொள்கிறது.
சீனாவின் பொருட்களை விற்பதற்கான சந்தையாக ஒருபோதும் இலங்கை ஆக முடியாது. அந்தச் சிறிய நாட்டின் மூலம் சீனாவுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை. ஆனாலும், சீன அரசும், சிங்கள அரசும் ஒன்றையொன்று கட்டித் தழுவுவது ஏன்?
இந்தியாவுக்கு எதிரான இராணுவத் தளமாக தனக்கு இலங்கை பயன்படும் என்பதும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் தன் கையில் சிக்கும் என்பதும் இலங்கைக்கு சீனா உதவுவதின் உள்நோக்கமாகும். அதைபோல,ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும் என இந்தியா அழுத்தம் தருவதைத் தடுக்கவேண்டுமானால், இந்தியாவின் எதிரி நாடான சீனாவுடன் கரம் கோர்ப்பதே சரியானதாகும் என்பது சிங்களரின் உள் நோக்கமாகும். ஆக, இந்த இரு நாடுகளும் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்தியாவுக்கு எதிராக இணைந்து என்றென்றும் நிற்கும் என்பதைத்தான் இராசபக்சேயின் பேச்சு எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை எந்த வல்லரசும் அங்குக் காலூன்ற முடியவில்லை. திரிகோணமலையில் அமெரிக்காவின் கடற்படைத் தளத்தை நிறுவுவதற்கு சிங்கள அரசு தயாராக இருந்த வேளையில் அதற்கு எதிராகப் போராடி முறியடித்தவர்கள் விடுதலைப்புலிகளே. புலிகளின் கட்டுப்பாட்டில் திரிகோணமலை இருந்தது. அந்நிய வல்லரசு ஒன்று அங்குக் காலூன்ற அனுமதிப்பது இந்தியாவுக்கு எதிராகப் பயன்படும் என்ற காரணத்தினால் புலிகள் தங்களது குருதியைச் சிந்தி அத்துறைமுகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதையெல்லாம் எண்ணிப் பார்க்காத இந்திய அரசு புலிகளுக்கெதிராக சிங்கள இராணுவத்திற்கு இராணுவ உதவிகளை அள்ளி அள்ளிக் கொடுத்தது.
இந்திய செய்த தவறின் விளைவாக இலங்கைத் தீவில் சீனா ஆழமாகக் காலூன்றிவிட்டது. இந்தியாவின் தெற்கு வாயிலின் கதவை சீனாவின் வல்லாதிக்கம் எட்டி உதைக்கத் துணிந்துள்ளது. அதற்குத் துணை நின்று சிங்கள அரசு இந்தியாவை நோக்கி கெக்கலிக் கொட்டுகிறது. சீன டிராகன் இந்திய யானையைச் சுற்றி வளைப்பதற்கு சிங்கள சுண்டெலி துணை போகிறது. |