இந்தி ஆதிக்க ஆட்சியை நிறுவ முயற்சி -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 ஆகஸ்ட் 2021 11:21

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராசசுதான், அரியானா, இமாச்சலப் பிரதேசம், சார்கண்ட், சட்டீசுகர் ஆகிய எட்டு மாநிலங்களிலும் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டுள்ளது.

 

இந்தி மொழியின் தாயகமாக இம்மாநிலங்கள் கருதப்படுகின்றன. இங்குதான் பா.ச.க. ஆழமாகக் காலூன்றி நிற்கிறது. இம்மாநிலங்களில் இருந்துதான் நாடாளுமன்றத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆக, இந்த எட்டு மாநிலங்களின் ஆதரவு இருந்தால் போதும். இந்தியா முழுவதையுமே ஆள முடியும் என்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த எட்டு மாநிலங்களிலும் உள்ள மக்களின் தாய்மொழியாக இந்தி விளங்குவது உண்மையா? என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் பதில். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வழங்கப்படும் மொழி போசுபுரி என்பதாகும். இராசசுதானில் வழங்கப்படும் மொழி இராசசுதானி ஆகும். பீகாரில் மைதிலி, பீகாரி ஆகிய இரு மொழிகள் பேசப்படுகின்றன. அரியானாவின் மக்கள் மொழி அரியான்வீ என்பதாகும். இமாச்சலப்பிரதேசத்தில் பஞ்சாபியும், அரியான்வீயும் பேசப்படுகின்றன. சார்கண்ட், சட்டீசுகர் மாநிலங்களில் வாழும் மலைவாழ் மக்களின் மொழிகள் வேறாகும். மத்தியப் பிரதேசத்திலும் பல்வேறு வட்டார மொழிகள் வழங்கப்படுகின்றன.

மொழிவழியாக மாநிலம் பிரிக்கப்படும்போது மேற்கண்ட மொழிகளின் அடிப்படையில் இந்த மாநிலங்களும் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இந்தி வெறியர்கள் அவ்வாறு இந்த மாநிலங்களைப் பிரிப்பதற்கு எதிராக நின்று தடுத்துவிட்டார்கள். ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களானாலும், முசுலீம்களானாலும், இந்துக்களானாலும் அவர்களின் தாய்மொழியாக பஞ்சாபி மட்டுமே திகழ்ந்தது. ஆனால், மதவெறியின் அடிப்படையில் முசுலீம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்குப் பஞ்சாப் பாகிசுதானுடன் இணைக்கப்பட்டது. அடுத்து இந்தியாவிலிருந்த கிழக்குப் பஞ்சாபில் வாழ்ந்த இந்துக்கள் வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கு இந்தி ஆட்சிமொழியாக்கப்பட்டது. திட்டமிட்டுப் பல்வேறு வட்டார மொழிகளையெல்லாம் அழித்து இந்தியைத் திணித்து இந்த எட்டு மாநில மக்களையும் இந்தி பேசும் மக்களாகக் கணக்குக் காட்டி இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி இந்தி என பொய்மையான கோட்பாடு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரசுக் கட்சி ஆண்ட காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த கோட்பாடு இந்துத்துவாதிகளுக்குப் பெரிதும் உதவியது. இம்மாநிலங்களில் அவர்களின் செல்வாக்கு ஓங்குவதற்கு வழிவகுத்தது. இந்த மாநிலங்களின் துணைகொண்டு இந்தியாவின் பிற மாநிலங்களை அடக்கி ஆள பா.ச.க. அரசு முற்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், வங்காளம், பஞ்சாப் ஆகியவை இருந்தன. மதவெறியின் காரணமாக வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி கிழக்குப் பாகித்தானாக மாறி பின்னர் வங்கதேசமாகிவிட்டது. பஞ்சாப் மாநிலம் மேற்குப் பஞ்சாப், பஞ்சாப், அரியானா, இமாச்சலப்பிரதேசம் என நான்காகப் பிரிக்கப்பட்டு பஞ்சாபி மொழிப் பேசுபவர்கள் சிதறிப்போய்விட்டனர்.

பாகித்தானில் இணைந்த மேற்குப் பஞ்சாப் தனது தாய்மொழியான பஞ்சாபியை இழந்து உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டது. கிழக்கு வங்காளத்தின் மீது உருது திணிக்கப்பட்டபோது அதற்கெதிராகப் போராடி வங்காளதேசம் சுதந்திர நாடானது.

வடஇந்திய மாநிலங்களில் வாழும் இந்துக்களை மதரீதியாக ஒன்றுதிரட்டுவதற்காகவும், இந்துத்துவா கோட்பாட்டை ஏற்கச் செய்வதற்காகவும் இராமர் கோயில் பிரச்சனையை பா.ச.க. கையில் எடுத்தது. அயோத்தியில் 600 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் இராமர் கோயில் இருந்தது என்ற பொய்மைக் கதையைப் பரப்பி இந்துவெறியைத் தூண்டி வட மாநிலங்களில் தனது செல்வாக்கினை பா.ச.க. பெருக்கிக்கொண்டது. ஆனாலும், போதுமான பெரும்பான்மையை அவர்களால் நாடாளுமன்றத்தில் பெற முடியவில்லை.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 23 கட்சிகளின் ஆதரவுடன் பா.ச.க. ஆட்சியைப் பிடித்தது. வாஜ்பாய் தலைமையமைச்சரானார். மேற்கண்ட 23 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட கட்சிகளே. ஆனாலும்கூட, இக்கட்சிகள் தங்களின் அடிப்படைக் கோட்பாடுகளை மறந்து பதவி பேரத்தில் மயங்கி பா.ச.க.வின் பின் அணி வகுத்து நின்றன. ஆட்சியைக் கைப்பற்ற தனக்கு உதவிய மாநிலக் கட்சிகள் பலவற்றைப் பிளவுப்படுத்திச் சிதறடித்து தன்னை வலிமையாக்கிக் கொண்டது பா.ச.க. சிலந்தி விரிக்கும் வலையில் சிக்கிய சிறு பூச்சிகள் இறுதியில் சிலந்திக்கு இரையாவதைப் போல இக்கட்சிகள் ஆயின.

இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசுக் கட்சிக்கும், இந்துத் தேசியம் பேசும் பா.ச.க.வுக்கும்  அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை. ஒரே இந்தியா என்ற பெயரில் மொழிவழித் தேசிய இனங்களை ஒடுக்குவதில் இரண்டு கட்சிகளும் ஒரே வழி முறையைத்தான் பின்பற்றுகின்றன.

“ஒரே நாடு பாரதம்; ஒரே மொழி சமற்கிருதம்; ஒரே மதம் இந்து; ஒரே ஆட்சி; என்பதே இந்துத்துவா கோட்பாடாகும். இதன் அடிப்படையில் இந்தியாவை நூறு சனபாதங்களாகப் பிரிக்கவேண்டும். தில்லியிலிருந்து ஒரே அரசு இதை ஆளும். மாநிலங்களோ, மாநில ஆட்சிகளோ அறவே கூடாது” என்பதுதான் ஆர்.எசு.எசு. தலைவராக இருந்த கோல்வால்கர் அவர்கள் வகுத்துத் தந்த திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில்தான் இந்திய அரசு இன்று முனைந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

மாநிலங்களின் அதிகாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவது நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகிறது. மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் சுருக்கப்பட்டு ஒன்றிய அரசின் நிதி பெருக்கப்படுகிறது. மக்கள் நலம், கல்வி, வேளாண்மை போன்ற துறைகளில் மாநில அரசுகள் தங்கள் வருவாயை 85%த்திற்கு மேல் செலவழிக்கும் நெருக்கடியில் உள்ளன. ஆனால், அவற்றின் நிதி அதிகாரங்கள் பறிக்கப்படுவதால், தில்லி அரசிடம் கையேந்தி மன்றாடவேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளன.

மாநிலங்களில் உள்ள இயற்கை வளங்களைப் பெருமுதலாளிகள் சூறையாடுவதற்கு தில்லி துணை நிற்கிறது. இதைத் தடுக்க முடியாமல் மாநில அரசுகள் தவிக்கின்றன. தில்லியின் ஆணையை மீறத்துணியும் மாநில அரசுகளையும், கட்சிகளையும் வருமானவரித்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் போன்ற தில்லி அரசின் இரும்புக்கரங்கள் அவர்களை நோக்கி நீளுகின்றன.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை பொதுப் பட்டியலுக்கு காங்கிரசு ஆட்சி மாற்றியது. அதை இன்னும் அதிகமான அளவில் பா.ச.க. ஆட்சி பயன்படுத்துகிறது. இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை ஒருபோதும் செயல்பட முடியாது. பல்வேறு மொழிப் பேசும் மக்களும், அவர்களின் பண்பாடு, வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அவர்களின் குழந்தைகளின் கல்வி அமையவேண்டும். ஆனால், பா.ச.க. அரசு தேசிய கல்விக் கொள்கை ஒன்றை வகுத்து, அதை மாநிலங்களின் மேல் திணிக்க முற்படுகிறது. மாநில அரசுகள் தங்களது செலவில் அமைத்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதிலும் தில்லி ஆளுநர்களின் மூலம் தலையிடுகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு மக்கள் நலத் துறையில் மிகவும் முன்னேறியுள்ளது. இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் ஏராளமான மாணவர்கள் படித்துத் தேறி மருத்துவர்களாகித் தமிழக மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். ஆனால், இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நீட் தேர்வு என்ற ஒன்றைத் திணித்து, பிற மாநில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிக்க வைக்கும் திட்டத்தைத் தில்லி திணித்துள்ளது. இங்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யமாட்டார்கள். படிப்பு முடிந்த பிறகு அவரவர் மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கே தொண்டாற்றுவார்கள். விரிக்கின் பெருகும்.

இந்திய அரசியல் சட்டமே கூட்டாட்சி (Federal) சட்டமல்ல. இது கூட்டரசு (Unitary) அரசியல் சட்டமாகும். இச்சட்டப்படி கொஞ்சம்நஞ்சம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டன. மாநில அரசுகள் ஊராட்சிகள் அளவுக்குத் தாழ்த்தப்பட்டுவிட்டன. முழுமையான சர்வதிகார ஆட்சி உருவாகி சனநாயகத்திற்குச் சாவுமணி அடிக்கும் நிலை தோன்றிவிட்டது.

மொழி உணர்வை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவெங்கும் உருவான மாநிலக் கட்சிகள் கடந்த காலத்தில் காங்கிரசு, பா.ச.க. போன்ற கட்சிகளுடன் மாறிமாறி கூட்டுச் சேர்ந்து மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பறிகொடுத்து தாங்களும் பலியாகி நிற்கின்றன. இந்தக் கட்டத்திலாவது இக்கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்கவேண்டும். உண்மையான கூட்டாட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களுக்கு முழுமையான தன்னுரிமை அளிப்பதற்கான அரசியல் சட்டம் ஒன்றை வகுப்பது, இந்த ஒரேயொரு கோட்பாட்டை மட்டுமே முன் வைத்து அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினாலொழிய பாசிச சர்வதிகாரத்தை ஒருபோதும் முறியடிக்க முடியாது.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.