தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய ஒரே தமிழ்த்துறவி மதுரை ஆதீனம் மறைவு! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2021 12:13

மதுரை திருஞான சம்பந்தர் மடாலயத்தின் ஆதீன கர்த்தர் திருப்பெருந் திரு. அருணகிரிநாத அடிகளார் அவர்கள் காலமான செய்தி உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.

சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்காகவே சைவத் திருமடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த உண்மையை தனது இரு கண்களாகக்கொண்டு செயல்பட்டதோடு மட்டுமல்ல, அதற்கு மேலாகத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதற்குக் குரல்கொடுத்தப் பெருமைக்குரியவர் மதுரை ஆதீன கர்த்தராவார்.

1983ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இலங்கையின் தலைநகரமான கொழும்புவில் வாழ்ந்த தமிழர்களுக்கெதிராக பெரும் கலவரத்தை சிங்கள இனவெறியர்கள் இராணுவ உதவியோடு நடத்தினார்கள். இந்தக் கலவரத்தில் 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அவர்களின் கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டன.

தமிழர் வரலாற்றில் கறுப்பு சூலை என குறிக்கப்பட்ட இந்தக் கலவரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கிடையில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திற்று. சிங்கள இனவெறியர்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தாயகத் தமிழர்கள் கிளர்ந்தெழவேண்டும் என்ற குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு மதுரையிலிருந்து இராமேசுவரம் வரை தமிழர் தியாகப் பயணம் என்ற பெயரில் ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினோம். எனது தலைமையில் நடைபெற்ற இந்தப் பயணத்தில் 5000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர். இந்தத் தியாகப் பயணம் இந்தியாவெங்கும் பெரும் பரபரப்பை தோற்றுவித்தது. இந்தியாவெங்கிலும் உள்ள பல்வேறு பத்திரிகைகளின் செய்தியாளர்களும், இலண்டன் பிபிசி செய்தியாளரும் மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களும் இந்தப் பயணத்தோடு பயணித்து நாள்தோறும் செய்திகளை உலகமெங்கும் பரப்பினார்கள். பயணம் சென்ற வழிநெடுகிலும் இருபுறங்களிலும் வாழ்ந்த கிராமப்புற மக்கள் திரண்டுவந்து வரவேற்றார்கள். அதுமட்டுமல்ல, எங்கெங்கு நாங்கள் தங்கினோமோ அங்கேயெல்லாம் அந்த கிராம மக்கள் மூன்று வேளையும் அத்தனை பேருக்கும் உணவளித்தனர்.

பரமக்குடி நகருக்கு மாலை நேரத்தில் நாங்கள் சென்றபோது மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்ட மேடையில் நான் அமர்ந்திருந்தபோது, திடீரென மதுரை ஆதீனம் அவர்கள் அங்கு வந்து மேடை ஏறினார். அவரைக் கண்ட மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். அக்கூட்டத்தில் பேசுமாறு அவரை நான் வேண்டிக்கொண்டேன். உச்சக்கட்ட உணர்ச்சிவசமாக அவர் பேசும்போது, தான் அணிந்திருந்த தங்க ருத்ராட்ச மாலையை கழற்றி வீசியெறிந்தார். “எங்களுடைய ஈழத் தமிழ் சகோதர, சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது இந்த ஆபரணங்கள் எனக்குத் தேவையில்லை; மடாலய தலைவர் பதவி தேவையில்லை; நானும் தியாகப்படையோடு சேர்ந்து ஈழத் தமிழர்களைக் காப்பதற்கு எனது உயிரைத் தியாகம் செய்ய தயாராக உள்ளேன்” என உணர்ச்சிக் கொப்பளிக்கப் பேசினார்.

அவர் வீசியெறிந்த ருத்ராட்ச மாலைகளை மக்கள் எடுத்துவந்து என்னிடம் கொடுத்தனர். அதை அவரிடமே கொடுத்து அமைதிப்படுத்தி அணிவிக்கச் செய்தேன். உங்கள் வாழ்த்து எங்களுக்குத் துணையாக இருக்கும். துறவி கோலத்தைத் துறந்து எங்களுடன் நீங்கள் வரவேண்டியதில்லை. உங்களின் ஆசியோடு நாங்கள் மேலும் பயணிக்கிறோம் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்புவதற்கு படாதுபாடுபட்ட அந்த நிகழ்ச்சி இன்னமும் என்னுடைய உள்ளத்தில் பசுமையாக உள்ளது.

அப்படித் தொடங்கிய எங்களின் நட்புறவு கடந்த 38 ஆண்டு காலத்திற்கு மேலாகத் தொடர்ந்து நீடித்தது. 1984ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலக ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க வருமாறு அழைத்தபோது, மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்தார். இருவருமாக அமெரிக்கா சென்று அந்த மாநாட்டில் மட்டுமல்ல, பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் கலந்துகொண்டோம். திரும்பும் வழியில் இலண்டன் மாநகரத்திலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினோம். சைவ மடம் ஒன்றைச் சேர்ந்த துறவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய அந்த வீரமுழக்கம் உலகத் தமிழர்களை மிகவும் கவர்ந்தது. அவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அவரை வணங்கி வாழ்த்துக்களைப் பெற்றார்கள்.

தமிழ்நாட்டிலும், பல்வேறு கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுத் திரட்டினார். அவரது பேச்சுக்கள் மக்களிடம் பேரெழுச்சியை ஏற்படுத்தின என்று சொன்னால் மிகையாகாது. தமிழ்நாட்டில் எத்தனையோ திருமடங்கள் உள்ளன. ஆனால் அந்த மடங்களைச் சேர்ந்த துறவிகள் யாரும் வெளிப்படையாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசவோ, மக்களைத் திரட்டவோ முன்வரவில்லை. அவ்வாறு முன்வந்த ஒரே தமிழ்த்துறவி மதுரை ஆதீனத் தலைவர் மட்டுமே ஆவார்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவரது பேச்சின் நடுவே துப்பாக்கியை தூக்கிக் காட்டினார் என அவர்மீது வழக்கு ஒன்றினை அரசு பதிவு செய்தது. இதற்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்து நான் பேசினேன். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் இந்த வழக்கைத் திரும்பப்பெறவேண்டுமென அரசை வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகு அந்த வழக்குக் கைவிடப்பட்டது.

ஈழத் தமிழர் பிரச்சனையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளைக் காக்க அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

என்மீது என்றும் தனியாத அன்பு கொண்டிருந்தார். நான் அழைத்தபோதெல்லாம் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் தொலைப்பேசி மூலம் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். பிறந்தநாளை நான் கொண்டாடுவதில்லை. இது உங்களுக்குத் தெரியாதா? என்று நான் கேட்டபோது, தெரியும். திடீரென எனக்குத் தோன்றியது; உடனடியாகக் கூப்பிட்டு வாழ்த்தினேன் என்றார். கொரோனா நெருக்கடியின் விளைவாக அனைவருமே முடங்கிக் கிடந்த நேரம். எனவே அவரிடம் நான் மதுரைக்கு வரும்போது வந்து சந்திக்கின்றேன் என்று கூறினேன். அதுதான் அவருடன் நான் பேசும் கடைசிப் பேச்சு என்பதை அறியாமல் போனதை எண்ணி எனது நெஞ்சம் இன்னமும் கலங்குகிறது. அதை அவர் உணர்ந்திருந்ததால் என்னவோ என்னை வாழ்த்தியிருக்கிறார். உண்மையான தமிழ்த் துறவியாக வாழ்ந்து தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அவர் என்றும் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்திருப்பார்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.