பிரிவினை ரணம் - காரணமானவர்களே நாடகம் ஆடுகிறார்கள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2021 11:15

“இந்தியா விடுதலை பெற்ற 1947ஆம் ஆண்டில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முசுலீம்களைக் கொண்ட பகுதி பாகித்தான் என ஆக்கி ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய பிரிவினை ஆறாத ரணமாகும். இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

 

மிகப்பெரிய அளவில் வன்முறை வெறித்தாண்டவமாடியதனால் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்தத் துயரத்தை நினைவுகூரும் வகையில் இனி ஆண்டுதோறும் ஆகசுடு 14ஆம் நாள் பிரிவினைக் கொடுமை நினைவுநாளாகக் கடைப்பிடிக்கப்படும்” என தலைமையமைச்சர் மோடி அறிவித்துள்ளார்.

தலைமையமைச்சர் மோடி அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

மோடி மற்றும் இந்துத்துவாவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்டிருக்கும் ரணத்தைக் குணப்படுத்த பிரிவினை நாளைக் கொண்டாடுவது மருந்தல்ல. இந்த ரணத்தை ஏற்படுத்தியவர்கள் யாரோ அந்தக் குற்றவாளிகளை தங்களது வழிகாட்டிகளாகக் கொண்டு இன்னமும் அவர்களின் பாதையிலேயே நடைபோடுகிறவர்கள் அந்தக் குற்றவாளிகளின் செயலை மறப்பதற்காக இப்போது இத்தகைய நாடகம் ஆடுகிறார்கள்.

1923ஆம் ஆண்டில் "இந்துத்துவா-இந்து யார்?'' எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை வி.டி. சாவர்க்கார் வெளியிட்டார். இந்துத்துவா கருத்து முதல் முதலாக அப்போதுதான் விதைக்கப்பட்டது.

1924ஆம் ஆண்டில் முதுபெரும் காங்கிரசுத் தலைவரும், பாஞ்சால சிங்கம் எனப் போற்றப்பட்டவருமான லாலா லசபதி ராய் அவர்கள் முசுலீம்களுக்கு தனித்தொகுதி முறையை ஆங்கிலேய ஆட்சி புகுத்தியதைக் கண்டிக்கும் வகையில் பின்வருமாறு கூறினார்- “முசுலீம்களுடன் அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறையில் செயல்படுத்த முடியாததாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துக்கள் மிகப்பெரும்பான்மையினராக விளங்குகிறார்கள். வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாபின் மேற்குப் பகுதி, சிந்து மாகாணம், வங்காளத்தின் கிழக்குப் பகுதி ஆகியவற்றில் முசுலீம்கள் அதிகமாக உள்ளார்கள். எனவே, இப்பகுதிகளை தனியாகப் பிரித்துவிடவேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தக் கருத்து பிறந்ததற்குப் பிறகே 1925ஆம் ஆண்டில் ஆர்.எசு.எசு. இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் தலைமை உரை ஆற்றும்போது சாவர்க்கார் பின்வருமாறு குறிப்பிட்டார். ""இந்தியாவில் இந்துக்கள், முசுலீம்கள் என இரு வெவ்வேறு தேசிய இனத்தவர் வாழ்கின்றனர்.''

சாவர்க்கார் இவ்வாறு பிரகடனம் செய்த மூன்று ஆண்டுகள் கழித்து 1940ஆம் ஆண்டில் முசுலீம்லீக் தலைவரான முகமது அலி ஜின்னா இரு இனக் கொள்கையை ஏற்று "முசுலீம்கள் தனித் தேசிய இனம்'' என அறிவித்தார்.

ஆக, மதவாத தேசியத்தை முன் மொழிந்தவர்கள் சாவர்க்கார், லாலா லசபதிராய் போன்றவர்களே என்பதும் வழி மொழிந்தவர் ஜின்னா என்பதும் வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும்.

1939ஆம் ஆண்டில் ஆர்.எசு.எசு. தலைவரான கோல்வால்கர் "நாம் அல்லது நமது தேசியத் தன்மையின் விளக்கம்'' என்ற தலைப்பில் வெளியிட்ட பிரகடனம்தான் இந்து ராட்டிரா என்ற பாசிசத் தத்துவமாகும். இந்நூல் "இந்தியாவில் வாழும் இந்துக்களைத் தவிர மற்றவர்கள் அன்னியர்கள்'' எனத் திட்டவட்டமாக வரையறை செய்தது. அதே நூலில் அவர் மேலும் குறிப்பிடுவதாவது. "இந்தியாவில் வாழும் அன்னியர்களுக்கு இருவழிகள்தான் உள்ளன. இந்து தேசிய இனத்துடனும் அதன் கலாச்சாரத்துடனும் இரண்டறக் கலந்துவிடுவது (அ) இந்து தேசிய இனத்தின் கருணைக்கு உட்பட்டு அவர்கள் அனுமதிக்கிற காலம் வரையில் இங்கு வாழ்வது; இந்து தேசிய இனம் விரும்பாத போது நாட்டை விட்டு வெளியேறி விடுவது. இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. நாம் மிகப் பழமையான இனத்தைச் சேர்நதவர்கள். உலகின் மிகப் பழமையான பிற இனத்தவர், அன்னிய இனங்கள் பற்றிய பிரச்சினையில் எத்தகைய தீர்வு கண்டிருக்கிறார்களோ? அதே மாதிரியான தீர்வை நமது நாட்டிலும் நாம் காண வேண்டும். செர்மனியில் தங்கள் ஆரிய இனத்தின் தூய்மையையும், கலாச்சார மேன்மையையும் பாதுகாப்பதற்காக யூத இனத்தவர் திட்டமிட்டு ஒழிக்கப் பட்டார்கள். இந்துத்தானைச் சேர்ந்த நமக்கு இது முன் மாதிரியான படிப்பினையாகும். இதை பின் பற்றி நாம் ஆதாயமடைய வேண்டும்.''

ஆர்.எசு.எசு. தலைவர் கோல்வால்கர் போற்றிப் பின்பற்றும் தலைவர் இட்லரே ஆவார். இந்து மகா சபையின் தலைவர் டாக்டர் மூஞ்சே முன்மாதிரியாகக் கொண்ட தலைவர் முசோலினியே ஆவார். 1920ஆம் ஆண்டுகளில் ஆர்.எசு.எசு. இயக்கத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் மூஞ்சே. அந்த இயக்கத்தை அமைப்பு ரீதியாகக் கட்டி எழுப்பியவர் கோல்வால்கர். அந்த இயக்கத்தின் தத்துவ ஆசிரியர் சாவர்க்கார். இட்லரையும், முசோலினியையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்து பாசிச இயக்கத்தை உருவாக்கியவர்கள் இந்த மூவருமே ஆவார்கள்.

செர்மனியில் மிகப் பெரும்பான்மையான மக்கள் செர்மானியர். செர்மானிய இனம் உலகிலேயே மிக உயர்ந்த இனம் என்ற கற்பனாவாதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வெறியூட்டி சிறுபான்மையினரான யூதர்களை ஒழித்துக் கட்டுவது சுலபமாக இருந்தது. அதைப்போல இந்தியாவில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த சாவர்க்கார் விரும்பினார். ஆனால் இங்கு பார்ப்பனர்கள் சிறுபான்மையினர். பெரும்பாலான மக்கள் பார்ப்பனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினால் மிகத் தந்திரமாகச் செயல்பட்டார்.

மனுதர்ம சாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பார்ப்பனியத் தத்துவத்திற்கு இந்துத்துவா என்ற பெயரைச் சூட்டினார்.

ஒரு கலாச்சாரம், ஒரு நாடு, ஒரு தேசிய இனம் என்பதைக் குறிக்க கலாச்சார தேசியம் என்ற வார்த்தையை இந்துத்துவா வாதிகள் கையாண்டனர்.

"பல கலாச்சாரம், பல மொழிகள், பல மதங்கள் கொண்ட பன்முகத் தன்மையும், மதச் சார்பற்ற தன்மையும் கொண்ட ஜனநாயகக் கூட்டரசு நாடே இந்தியாவாகும்'' என்று நமது அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

ஆனால் சங்கப் பரிவாரத்தின் கலாச்சாரத் தேசியம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் கருத்தை அடியோடு மறுக்கிறது. அதற்கு முற்றிலும் எதிரானது. பல கலாச்சாரம், பல மொழிகள், பல மதங்கள் என்ற பன்முகத் தன்மையை மறுத்து ‘இந்துத்துவ கலாச்சாரம்' என்னும் ஒருமுகத் தன்மையை வலியுறுத்துகிறது. மதச் சார்பற்ற தன்மையை அடியோடு மறுத்து இந்து மதவாதத்தைப் புகுத்துகிறது. சனநாயகக் கூட்டாட்சிக்குப் பதிலாக இந்து சர்வாதிகார ஆட்சியை நிறுவ முற்படுகிறது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இந்துத்துவா எதிரானது ஆகும்.

இந்துத்துவவாதிகளின் இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்க இந்திய தேசியவாதிகள் முன்வரவில்லை. காங்கிரசுக் கட்சியின் தலைவர்களாக இருந்த திலகர், அரவிந்தர், லாலா லசபதிராய், பண்டித மதன் மோகன மாளவியா போன்றவர்கள் இந்துப் பழமைவாதக் கருத்தோட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். மகாராட்டிரத்தில் முசுலீம்களின் மொகரம் பண்டிகைக்கு எதிராக விநாயகர் விழாவையும், சிவாஜி விழாவையும் கொண்டாட திலகர் வழிகாட்டினார். லாலா லசபதிராயும், பண்டித மதன் மோகன மாளவியாவும் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர்களாக மட்டும் இருக்கவில்லை; இந்து மகா சபைத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். மதவாத அரசியலுக்கும் இவர்களே வித்திட்டார்கள். இந்து-முசுலீம் பிரச்சினையைப் பெரிதாக்கியவர்களும் இவர்களேயாவர்.

ஜின்னாவின் மதவாத அரசியலின் தொடக்கக் காலத்தில் பெரும்பாலான முசுலீம்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை. இது குறித்து வரலாறு கூறும் சில உண்மைகளை நாம் இப்போது பார்க்கலாம்.

வகுப்புவாத தேசியம்

பிரிட்டிசு ஆட்சிக் காலத்தில் இருந்த பஞ்சாப் மாநிலம் மிகப் பெரியதாக இருந்தது. இன்று பாகித்தானில் உள்ள மேற்கு பஞ்சாப், இந்தியாவிலுள்ள பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அதுபோல வங்காள மாகாணம் என்பது இந்தியாவிலுள்ள மேற்கு வங்காளம், வங்காளதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. ஐக்கிய மாகாணம் என்பது இன்றைய உத்தரப்பிரதேசம், உத்திராஞ்சல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

பஞ்சாப், வங்காளம், ஐக்கிய மாகாணம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் முசுலீம்கள் கணிசமான அளவுக்கு வாழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தார்கள். இந்த இரு சமூகத்தினரும் இணைந்து பெரும்பான்மையினராக விளங்கினார்கள். பார்ப்பனர்களும் இதர மேல் சாதி இந்துக்களும் சிறுபான்மை ஆனார்கள். தங்களின் அரசியல் முக்கியத்துவத்தை மேல் சாதி இந்துக்கள் இழக்க விரும்பவில்லை. எனவே முசுலீம்களுக்கு எதிரான மதவாதத்தை உருவாக்கினார்கள்.

இந்து-முசுலீம் மதவாதப் பிரச்சினை என்பது மேற்கண்ட மூன்று மாநிலங்களில் மட்டுமே இருந்தது. இந்தியாவின் பிற மாகாணங்களில் இந்தப் பிரச்சினை அறவே இல்லை. ஆனால் இந்துக்களின் பெரும்பான்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இது திட்டமிட்டு அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கப்பட்டது.

கிலாபத் இயக்கக் காலத்தில் காந்தியடிகளுடன் தோளோடு தோள் நின்ற முசுலீம் தலைவரான செளகத் அலி ஒத்துழையாமை இயக்கத்தின்போது விலகி இருந்தார்.

"ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கம் இந்து இராச்சியத்தை அமைப்பதேயாகும்'' என்று அவர் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில் 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. முசுலீம் லீக் பெரும் தோல்வியைச் சந்தித்தது. முசுலீம்களுக்குத் தனியான தொகுதி முறை இருந்த போதிலும் முசுலிம் மக்களிடையே 48 சதவீதம் வாக்குகளை மட்டுமே முசுலீம் லீக் பெற்றது.

இந்துக்கள்-முசுலீம்கள் உட்பட இந்திய மக்கள் அனைவருக்கும் தானே ஏகப்பிரதிநிதி எனக் காங்கிரஸ் கட்சி மார்தட்டிக்கொண்டது. முசுலீம் லீக்குடன் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளக் காங்கிரசு தயாராக இல்லை. காங்கிரசுக் கட்சியின் இந்தப் போக்கு முசுலீம்கள் மத்தியில் நம்பிக்கையின்மையைத் தோற்றுவித்தது.

எந்த மாகாணத்திலும் முசுலீம் லீக்கைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அமைச்சரவை அமைக்க காங்கிரசு முன் வரவில்லை. முசுலீம் லீக் அப்போது பாகித்தான் கோரிக்கையை எழுப்பவில்லை என்பதும் ஜின்னா தேசியவாதியாகத் திகழ்ந்தார் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கவையாகும்.

காங்கிரசிலிருந்து விலகி ஒதுங்கியிருந்த ஜின்னாவை முசுலீம் லீக்கைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தி அழைத்து வந்து தலைவராக்கினர். மத அடிப்படையில் முசுலீம்களை ஒன்று திரட்டியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த ஜின்னா "இந்துக்களும் முசுலீம்களும் தனித்தனி தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இரு இனத்தவரும் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது. எனவே முசுலீம்களுக்குப் பாகித்தான் தனி நாட்டைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையை 1940ஆம் ஆண்டில் முன்வைத்தார்.

ஜின்னாவின் இந்தக் கோரிக்கைக்கு முசுலீம் மக்களிடையே போதுமான ஆதரவு திரளவில்லை. பஞ்சாப், சிந்து, வங்காளம் போன்ற மாநிலங்களில் காங்கிரசு, முசுலீம் லீக் அல்லாத வேறு கட்சிகளைச் சேர்ந்த முசுலீம் தலைவர்கள் தலைமையில் அமைச்சரவைகள் அமைக்கப்பட்டன.

சிந்து மாகாணத்தின் பிரதமராக ஐக்கியக் கட்சியின் தலைவர் அல்லாஹ் பக்ஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கட்சி முசுலீம்கள், இந்துக்கள் ஆகியோரின் பேராதரவைப் பெற்றிருந்தது. பாகித்தான் தீர்மானத்தை இவர் மிகவும் கடுமையாக எதிர்த்தார். 1940ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டில்லியில் "சுதந்திர முசுலீம்கள் மாநாடு'' என்ற பெயரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டில் திரளான முசுலீம்கள் கலந்து கொண்டார்கள்.

காங்கிரஸ் தலைவர்களான சவகர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் "மிக வெற்றிகரமான மாநாடு'' என்று இதைப் பாராட்டினார்கள். அன்னிய நாட்டில் இருந்த வண்ணம் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய நேதாஜி சுபாசு சந்திர போசு வானொலி மூலம் அல்லாஹ் பக்ஷ் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

1942ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு'' என்ற இயக்கத்தைக் காங்கிரசுக் கட்சி தொடங்கியபோது பிரிட்டிசு பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் நாடாளுமன்றத்தில் அதை இழித்தும் பழித்தும் பேசினார் என்பதற்காக அல்லாஹ் பக்ஷ் கடும் கண்டனம் தெரிவித்ததோடு பிரிட்டிசு அரசு அவருக்கு வழங்கியிருந்த விருதுகளைத் திருப்பி அனுப்பினார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த இந்திய வைசிராய் முதலமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கினார். அன்னிய ஆட்சியை எதிர்த்துச் சிந்தி மக்களை மதவேறுபாடு இல்லாமல் ஒன்று திரட்டிய அல்லாஹ் பக்ஷ் 1943ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாகாணத்தில் பிரதமராக இருந்த சிக்கந்தர் ஹையத்கான் பாகித்தான் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள், முசுலீம்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவரும் அவருக்குப் பெரும் ஆதரவு அளித்தனர். பஞ்சாப் சுதந்திர நாடாவதை ஆதரித்துப் பேசும்போது "பஞ்சாப் ஒரு போதும் பாகித்தானாகாது. பஞ்சநதிகள் பாயும் நாடாக அது இறுதிவரை திகழும். அதை யாராலும் கூறுபோட முடியாது'' என்று அவர் முழங்கினார்.

இந்தியாவில் முசுலீம்களுக்கென்று தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நாளில் இருந்து அதில் வங்காளம் சேர்க்கப்பட்டதில்லை. 1911ஆம் ஆண்டு வங்காள மாகாணத்தை வைசிராயாக இருந்த கர்சான் பிரபு இரண்டாகப் பிரித்தார். வங்கமொழி பேசும் மக்களை இந்துக்கள் என்றும் முசுலீம்கள் என்றும் பிரிக்கவே கர்சன் சூழ்ச்சி செய்வதாக வங்க மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இந்துக்களும் முசுலீம்களும் ஒன்றுபட்டுப் போராடினார்கள். இதன் விளைவாக வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டது.

1946ஆம் ஆண்டு வங்காளத்தின் பிரதமராக இருந்த பசூல் ஹக் இந்தியாவை இந்துத்தான், பாகித்தான், வங்காளத்தான் என்று மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். 1940ஆம் ஆண்டு நடைபெற்ற முசுலீம்லீக் மாநாட்டில் பாகித்தான் தீர்மானத்தை முன் மொழிந்தவர் இவரே என்பது நினைவுகூரத்தக்கது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஜின்னா அவர் ஆட்சியைக் கவிழ்த்தார்.

சிந்து, பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த முசுலீம் பிரதமர்களான அல்லாஹ் பக்ஷ், சிக்கந்தர் ஹையத் கான், பசூல் ஹக் போன்றவர்கள் பாகித்தான் கோரிக்கைக்கு ஆதரவு தராமலும், மதவழி அரசியலை எதிர்த்தும் உறுதியாக நின்றனர். அவர்கள் மொழி வழித் தேசிய உணர்வோடு அனைத்து மதத்து மக்களையும் ஒன்று திரட்டினார்கள். முசுலீம் அடிப்படைவாதிகள் இவர்களைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதே வேளையில் காங்கிரஸ் கட்சியும் இவர்களுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

முசுலீம்கள் தனித்தேசிய இனம் என்ற வாதத்தை ஏற்க மறுத்த இந்தத் தலைவர்கள் மொழிவழித் தேசிய இன உணர்வோடு தங்களைச் சிந்தியாகவும், பஞ்சாபியாகவும், வங்காளியாகவும் வெளிப்படுத்தியதைக் காங்கிரசும் விரும்பவில்லை. இந்தியத் தேசியத்திற்கு இக்கருத்து எதிரானது எனக் காங்கிரசு இவர்களைப் புறக்கணித்தது. அந்தத் தவற்றை காங்கிரசு செய்யாமல் இவர்களை அரவணைத்துக் கொண்டிருக்குமானால் பாகித்தான் உருவாகியே இருக்காது.

பிரிவினைக்குப் பொறுப்பாளி யார்?

பாகித்தான் பிரிவினைக்கு முன்னோடியான அரசியல் நிகழ்ச்சிகளை நாம் அலசிப் பார்ப்போமானால் பிரிவினை ஏற்பட்டதற்கான காரணங்களையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் "மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி'' அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர் காங்கிரசுத் தலைவர்கள். காங்கிரசு மாநாடுகளிலும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

ஆனால் நாடு சுதந்திரம் பெறக்கூடிய காலக்கட்டத்தில் மாநில சுயாட்சிக்கு எதிரான நிலையை எடுத்தார்கள். இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

1938ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் திரிபுராவில் கூடிய காங்கிரசு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் மாநில சுயாட்சிக் கோரிக்கை  வலியுறுத்தப்பட்டது.

1946ஆம் ஆண்டில் இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு வந்த பிரிட்டிசு அமைச்சரவைத் தூதுக்குழுவினரிடம் காங்கிரசின் கொள்கை மாநிலங்களுக்குப் பூரண சுயாட்சி வழங்குவதுதான் என்று கூறப்பட்டது.

பிரிட்டிசு அமைச்சரவை தூதுக்குழு அளித்த திட்டப்படி உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் 22-01-1947இல் பிரதமர் நேரு முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானத்தில் மாநிலங்களின் சுயாட்சி உரிமை வலியுறுத்தப்பட்டது.

பிரிட்டிசு அமைச்சரவைத் தூதுக் குழுவினர் வெளியிட்ட திட்டத்தில் பிரிவினைக்கு மாற்றாக "மத்தியில் கூட்டாட்சி-மாநிலங்களில் சுயாட்சி'' என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டது.

அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த மெளலானா அபுல்கலாம் ஆசாத் காங்கிரசு சார்பில் பிரிட்டிசு அமைச்சரவைத் தூதுக் குழுவிடம் அளிப்பதற்காக ஒரு திட்டத்தைத் தயாரித்தார்.

"இந்தியாவின் அரசியல் அமைப்பானது கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்க முடியும். கூடிய வரை அதிக அளவு அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கி, மாகாண சுயாட்சியை உத்தரவாதப்படுத்தும் வகையில் இந்தியக் கூட்டாட்சி அமைக்கப்பட வேண்டும்'' என்று கூறினார். 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரசு செயற்குழுவும், காந்தியடிகளும் இந்தத் திட்டத்தை முழு மனதுடன் வரவேற்றனர்.

பிரிட்டிசு அமைச்சரவைத் தூதுக்குழுவும் இத்திட்டத்தை பரிசீலிக்க ஒப்புக் கொண்டது.

முசுலீம் லீக் தலைவர் ஜின்னா அவர்களுக்கும் இத்திட்டம் ஓரளவு ஏற்புடையதாக இருந்தது. அதன் விளைவாக இடைக்கால அரசிலும், அரசியல் நிர்ணய சபையிலும் இணைந்து பணியாற்ற முசுலீம் லீக் முன் வந்தது.

சுமூகமான சூழ்நிலை உருவாகி இந்தியா இனிப் பிரிக்கப்படாது என்ற நம்பிக்கை உருவாயிற்று.

இந்த நேரத்தில் காங்கிரசுத் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டது. ஆசாத்திற்குப் பதில் நேரு காங்கிரசு தலைமைப் பொறுப்பை ஏற்றார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் "பிரிட்டிஷ் அமைச்சரவைத் திட்டத்திற்குக் காங்கிரசு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. தனக்கு உகந்ததென்று தோன்றும் வகையில் அந்த திட்டத்தை மாற்றவோ திருத்தவோ காங்கிரசுக்கு சுதந்திரம் உண்டு'' என்று கூறினார்.

முசுலீம் லீக் தலைவர்கள் இது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாநில சுயாட்சியைக் காங்கிரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டது என்று நம்பித்தான் பாகித்தான் பிரிவினைக் கோரிக்கையை முசுலீம் லீக் கைவிட்டது. ஆனால் பிரிட்டிசு திட்டத்தைத் திருத்த காங்கிரசு முயற்சி எடுக்குமென நேரு அறிவித்தபின் ஜின்னா ஆத்திரமடைந்தது நியாயமே. எனவே "காங்கிரசு தலைவரின் அறிக்கையின் விளைவாக நிலைமை முழுவதையுமே மறுபரிசீலனை செய்ய அவசியம் நேரிட்டிருப்பதாக'' ஜின்னா அறிவித்தார்.

ஆகச்ட் 7ஆம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடித் தெளிவில்லாத தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி முசுலீம் லீக்கைத் திருப்திப்படுத்த முயன்றது. ஆனால் எத்தகைய பயனும் இல்லை.

பிரிட்டிசு திட்டம் வழங்கிய மாநில சுயாட்சிக் கொள்கைக்குக் காங்கிரசு நிச்சயமாகக் குழி தோண்டி விடுமென்று முசுலீம் லீக் உறுதியாக நம்பியது. உடனடியாக லீக்கின் செயற்குழுவை ஜின்னா கூட்டினார் "பிரிட்டிசு திட்டத்தை ஏற்றுப் பாகித்தானைக் கைவிடுவது என முன்பு செய்திருந்த முடிவை ரத்து செய்தும் பாகித்தான் கோரிக்கையைத் திரும்பவும் வற்புறுத்தியும்'' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனமாற்றம் ஏன்?

நேரு மற்றும் பட்டேல் ஆகியோரின் மன மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி மெளலானா ஆசாத் பின்வருமாறு கூறியுள்ளார்:

"இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி வழங்குவதைவிடச் சிந்து, மேற்குப் பஞ்சாப், கிழக்கு வங்காளம், எல்லைப்புற மாகாணம், பலுசித்தான் ஆகிய மாகாணங்களை இழந்து எஞ்சியுள்ள இந்தியாவில் வலிமையான மத்திய அரசு ஒன்றை அமைப்பதே நல்லது'' என்று வைசிராய் மெளண்ட்பேட்டன் கூறிய யோசனை நேருவையும் படேலையும் கவர்ந்தது. மற்றும் இந்துப் பெருமுதலாளிகள் மாகாண சுயாட்சியை விரும்பவில்லை. பலமான மத்திய அரசும் ஒன்றுபட்ட இந்தியாவும் இருப்பதுதான் தங்களின் சுரண்டலுக்கு நல்லதென நினைத்தார்கள். எனவே அவர்களும் நேருவையும், படேலையும் நெருக்கினார்கள். இதன் விளைவாகத்தான் காங்கிரசு தலைமையில் மனமாற்றம் ஏற்பட்டது.

பாகித்தான் கோரிக்கையை ஜின்னா கைவிட்டபிறகும் காங்கிரசு தலைவர்கள் ஜின்னாவின் சட்டைப் பையில் பாகித்தானை வலுவில் திணித்தார்கள்” என ஆசாத் எழுதிய "இந்திய விடுதலை வெற்றி'' எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

வலிமையான மத்திய அரசு அமைப்பது என்ற பெயரால் பார்ப்பன - பனியா மேலாதிக்கத்தை நிலை நாட்டும் நோக்கத்துடன்தான் தேசிய இனங்களின் தன்னாட்சியை நேரு, படேல் ஆகியோர் கைவிட்டுள்ளனர் என்பதைக் காங்கிரசின் முக்கிய தலைவரான ஆசாத் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தேசிய இனங்களுக்குக் காங்கிரசு செய்த துரோகம்தான் பாகித்தான் பிரிவினைக்கு வழிவகுத்தது என்பதுதான் வரலாற்றுப்பூர்வமான உண்மையாகும்.

பெட்டிச் செய்தி-1

சீனாவில் உறையும் சிவன்

"கிறித்துவர்களுக்கும், முசுலீம்களுக்கும் புனித தலங்களாக விளங்கும் செருசலம், மெக்கா போன்றவை இந்தியாவிற்கு வெளியில் இருப்பதால் அவற்றை இந்திய கிறித்துவர்களும் முசுலீம்களும் புறக்கணிக்க வேண்டும்'' என ஆர்.எசு.எசு. வற்புறுத்துகிறது. அன்னிய நாட்டிலுள்ள புனித பூமியை வழிபடுபவர்கள் அன்னியர்களே எனத் திட்டவட்டமாக வரையறுக்கிறது. இவ்வாறு வெறித்தனமாகக் கூறும் இந்துத்துவாவாதிகள் ஒரு உண்மையை மறந்து விட்டார்கள். இந்துக்களின் பெரிய கடவுளான சிவபெருமான் உறையும் கைலாசம் இந்தியாவுக்கு வெளியே சீனாவில் உள்ளது. எனவே அன்னிய நாட்டில் புண்ணிய பூமியைக் கொண்ட இந்துக்களும் அன்னியர்களாகிவிடுவார்கள் என்ற உண்மையை உணராது பிற மதத்தினருக்கு எதிரான வெறுப்பை வளர்க்கிறார்கள்.

பெட்டிச் செய்தி-2

பெரும்பான்மைப் பேரச்சம்

இந்தியாவிலிருந்து பாகித்தானும் பாகித்தானிலிருந்து வங்காள தேசமும் பிரிந்து சென்றுவிட்டன. ஒன்றுபட்ட இந்தியாவிலிருந்து முசுலீம்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட மேற்கண்ட இரு நாடுகளும் பிரிந்து சென்ற பின்னால் எஞ்சியுள்ள இன்றைய இந்தியாவில், இந்துக்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவில் உள்ள முசுலீம்களைவிட 6 மடங்கு அதிகமான அளவில் இந்துக்கள் உள்ளனர். சம்மு-காசுமீர் மாநிலம் ஒன்றைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே முசுலீம்கள் உள்ளனர். இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, மத்தியக் காவல்படைகள், மாநில அரசுகளின் காவல்படைகள் ஆகியவற்றில் மிகப் பெரும்பான்மையினராக இந்துக்களே அங்கம் வகிக்கிறார்கள். இராணுவப் படைகளில் 2%க்கும் குறைவாகவும் காவல்துறைகளில் 7%க்கும் குறைவாகவும் மட்டுமே முசுலீம்கள் உள்ளனர். ஆனால் முசுலீம்களினால் இந்தியாவுக்கு பேரபாயம் இருப்பதாக இந்துத்வா சக்திகள் ஓயாது ஓலமிட்டு மதவெறியை வளர்க்கின்றன.

பெட்டிச் செய்தி-3

மத வெறியால் வலிமை குன்றிய வங்கமும் பாஞ்சாலமும்

சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்கள் புரிந்து முன்னணிப் பங்கு வகித்த பெருமை பஞ்சாப், வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு உண்டு.

வங்காளத்தில் இராசாராம் மோகன்ராய், சி.ஆர்.தாசு, விபின் சந்திரபால், சரத் சந்திரபோசு, சுபாசு சந்திரபோசு, அபுல்கலாம் ஆசாத், பசூல் ஹக், சுராவர்த்தி போன்ற தலைவர்கள் அரசியல் துறையிலும், இராமகிருட்டிணர், விவேகானந்தர், அரவிந்தர் போன்றவர்கள், ஆன்மீகத் துறையிலும் இரவீந்திரநாத் தாகூர், பக்கிம் சந்திரர் இலக்கியத் துறையிலும் விஞ்ஞானத் துறையில் ஜகதீசு சந்திரபோசு ஆகியோர் இந்தியாவுக்கு வழிகாட்டினார்கள். இந்தியாவின் மிகப்பெரும் மாநிலங்களில் ஒன்றாக வங்காளம் திகழ்ந்தது. மேற்கு வங்கம், வங்காளதேசம் ஆகியவற்றின் இன்றைய மக்கள் தொகை 17 கோடி. இன்றைய இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 16 கோடி தான்.

வங்கம் மதரீதியாகப் பிளவுபடாமல் இருந்திருக்குமானால் இந்திய அரசியலில் வங்காளிகளின் கை ஓங்கியிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் வங்காளிகள் மதத்தால் பிளவுபட்டுப் போனார்கள். இந்து, முசுலீம் மோதல்களின் விளைவாக ஒட்டுமொத்தமாக வங்க தேசிய இனத்தின் வலிமை குன்றியது.

ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்த வங்க மக்கள் மதத்தால் வேறுபட்டு இரு நாடுகளாகப் பிரிந்து போயினர். அதன் விளைவை இரு வங்கப் பகுதிகளும் இன்னமும் அனுபவிக்கின்றன. சகல துறைகளிலும் முன்னேற முடியாமல் இரு நாடுகளையும் சேர்ந்த வங்க மக்கள் தவிக்கின்றனர்.

பஞ்சாபின் நிலைமையும் இது போலானது. ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலம் மேற்குப் பஞ்சாப், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் என 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்து, முசுலீம், சீக்கியர் என மதவழியாகப் பிளவுப் பட்ட பஞ்சாபிய இனம் தான் அடைந்திருக்கும் சரிவிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் செர்மனியைத் துண்டுகளாகக் கூறுபோட்டு வல்லரசுகள் பங்கிட்டுக் கொண்டன. சிறிது காலம் கழித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகியவை தங்கள் வசம் இருந்த பகுதிகளை ஒன்றாக்கி மேற்கு செர்மனி என்ற பெயரைச் சூட்டித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டன. கிழக்கு செர்மனி சோவியத் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு செர்மனிகளும் ஒன்றிணைக்கப்பட்டன. மீண்டும் செர்மனி எழுந்து நிற்பதற்கு அரை நூற்றாண்டுக் காலம் ஆகியிருக்கிறது. அறிவியல் ரீதியில் மிகவும் முன்னேறிய நாடான செர்மனி எழுந்து நிற்கவே அரை நூற்றாண்டு ஆகுமென்றால் மிகவும் பின்தங்கிய வங்கமும், பஞ்சாபும் மீண்டும் ஒன்றுபடுவது எப்போது? வளமும் வலிமையும் பெறுவது எப்போது? மதரீதியான தேசியம் பிற்போக்குத் தனமானதும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது மாகும் என்ற உண்மையை உணர்ந்தால் ஒழிய பஞ்சாபியருக்கும், வங்காளியருக்கும் விடிவு வரப்போவது இல்லை.

இவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பிற மொழிவழித் தேசிய இனத்தவரும் மதவழியாகவோ அல்லது சாதிய வழியாகவோ பிளவுப்பட்டு நிற்பார்களானால், அவர்களுக்கும் ஒருபோதும் விடிவு வராது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.