உலகெங்கும் உள்ள நாடுகளில் பல்வேறு மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, அலோபதி மற்றும் சீனா போன்ற நாடுகளில் தனியான மருத்துவமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இயற்கை நமக்கு வரம்பற்ற செல்வங்களை வாரி வாரி வழங்கியுள்ளது. மலைகளும், காடுகளும் அவற்றில் அடர்த்தியாக வளர்ந்தோங்கி நிற்கும் மரங்களும், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உட்கொள்வதற்கும், வாழ்வதற்கும் தேவையான உயிர் வளியை நமக்கு அள்ளித் தருகின்றன. மலைகளில் உருவாகும் ஆறுகள், குடிப்பதற்குரிய நீரை மட்டுமல்ல, நிலத்தில் அந்நீரைப் பாய்ச்சி வேளாண்மை செய்யப்படும் உணவுப் பயிர்களுக்கு உயிரூட்டி வளர்க்கின்றன. ஆற்று நீரில் வாழும் மீன் இனங்களும் மற்றும் நீர் வாழ்வனவும், அந்நீரில் கலந்திருக்கும் அசுத்தங்களை தாமே உண்டு நீரைத் தூய்மைப்படுத்தி நமக்குத் தருகின்றன. நாடெங்கும் பாய்ந்தோடும் ஆறுகள் இறுதியாகக் கடலில் கலக்கும் வரை எத்தனையோ வகையில் மனித குலம், விலங்குகள், பறவைகள், மரம், செடி கொடிகள் ஆகிய அத்தனை உயிர்களையும் வாழ வைக்கும் திருப்பணியை எவ்விதப் பயன் கருதாமலும் செய்கின்றன.
வானுயர ஓங்கி நிற்கும் மலைகள், பருவக் காற்றுகளின் துணையோடு மேகங்களைத் தடுத்து நிறுத்தி மழைப் பொழிய வைக்கின்றன. அவ்வாறு பெய்யும் மழை சிறுசிறு ஓடைகளாக ஓடி பின்னர் இணைந்து பேராறுகளாக உருவெடுத்து மலையில் உள்ள கற்களை ஒன்றுடனொன்று மோத வைத்து நொறுக்கி மணல்களாக்கி அவை ஆற்றின் நீருடன் கலந்து மலைகளிலிருந்து இறங்கும்போது சமவெளிகளை உருவாக்கி வேளாண்மை செய்யும் வகையில் மனித குலத்திற்கு அளிக்கின்றன.
விண்ணும் மண்ணும் மானிட குலத்திற்கு வள்ளல் தன்மையோடு அள்ளி அள்ளித் தருபவை அனைத்தும் விலை மதிப்பற்றவையாகும். விண்ணிலிருந்து கதிரவன் தரும் ஒளி உலகை வாழ வைக்கிறது. சந்திரனும், விண்மீன்களும் ஒவ்வொரு வகையிலும் மனித குலத்திற்குத் துணையாக நிற்கின்றன.
மண் தன்னை அகழ்வாரையும் தாங்கிப் பொறுமை காக்கிறது. மண்ணும், மழை நீரும் இணைந்து தாவரங்களைச் செழித்து வளர வைக்கின்றன. இவ்விரண்டின் கூட்டுறவின் விளைவாகக் கிடைக்கும் தானியங்கள், காய்கறிகள், கனிகள் போன்றவை உயிர்களை வாழ வைக்கின்றன. மண்ணின் மேலாக நமக்குக் கிடைக்கும் இவைகளைத் தவிர மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் கனிம வளங்கள் மனித நாகரிகத்தை வளரச் செய்த பெருமைக்குரியவையாகும்.
ஆனால், தமது வாழ்விற்குப் பெருந்துணையாக விளங்கும் வான், மண், வளி, நீர், நெருப்பு ஆகிய ஐந்தையும் தன்னலத்திற்காக மாசுபடுத்தியும், சீரழித்தும், வாழ்வதற்குத் தகுதியற்றதாக உலகை மனித குலம் ஆக்கிக்கொண்டிருக்கிறது. இத்தகைய நச்சுச் சூழலிலிருந்து உலகையும், மனித குலத்தையும் மீட்கும் வழி தெரியாமல் நாம் திணறித் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் உணர்ந்து இயற்கையை நேசித்தார் ஒரு இளைஞா்.
சிற்றூர் ஒன்றில் எளிய வேளாண்மைக் குடியில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞர் ஒருவர் தனது எதிர்காலத்திற்கு ஏற்றதாகப் புதிய துறை ஒன்றினைத் தேர்ந்தெடுக்க விந்தையான செயலைப் புரிந்தார். அவர் வயதை ஒத்த இளைஞர்கள் ஆங்கில மருத்துவம் அல்லது பொறியியல் படித்து மருத்துவர்களாகவும், பொறிஞர்களாகவும் ஆக வேண்டும் என்பதையே தமது வாழ்க்கையின் நோக்கங்களாகக் கொண்டிருந்த வேளையில், இந்த இளைஞர் தமிழ்நாட்டில் இல்லாததும், தொலைதூரத்தில் உள்ள ஐதராபாத் நகரில் இயங்கிவந்ததுமான இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துச் சேர்ந்தார். அதற்காக தான் ஏளனம் செய்யப்பட்டதை அவர் பொருட்படுத்தவில்லை. அங்கு சென்று யோகா மற்றும் இயற்கை மருத்துவம் கற்றுப் பட்டம் பெற்று தமிழகம் திரும்பினார். அத்துடன் அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் கற்றுக்கொள்ள விரும்பினார். இலங்கையில் மட்டுமே அதைக் கற்றுக்கொடுக்கும் நிலையம் இருப்பதை அறிந்து கடல்கடந்து அங்கு சென்று அதையும் கசடறக் கற்றார்.
பிறகு தமிழகம் திரும்பி தனது இயற்கை மருத்துவத் தொழிலைத் தொண்டாகக் கருதி செயல்பட முனைந்தபோது, ஆதரித்தவர்கள் மிகக் குறைவு. ஆனாலும் அவர் சோர்வடையவில்லை. ஆங்காங்கே சென்று பல பெரியவர்களைச் சந்தித்து அவர்கள் துணையோடு சிறுசிறு கூட்டங்களைக் கூட்டி இயற்கை மருத்துவம் குறித்து அவர்களுக்கு விளக்கி அயராது தொண்டாற்றினார்.
அண்ணா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அரும்பாடுபட்டு வேலையில் சேர்ந்தார். அங்கிருந்த அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன் மருத்துவமனையின் ஒரு மூலையில் சிறு இடத்தை ஒதுக்கினர். 1997ஆம் ஆண்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. தன்னந்தனியனாக அந்த இளைஞர் மூன்றாண்டுகள் மிகப் பொறுமையுடனும், அதேவேளையில் திறமையுடனும் தொண்டாற்றித் தன்னை நாடிவரும் நோயாளிகளை இயற்கை மருத்துவ முறையில் குணப்படுத்தினார். அதன் விளைவாக இயற்கை மருத்துவத்தின் சிறப்பும், பெருமையும் மக்களிடையே மெல்லமெல்ல பரவத் தொடங்கின.
தமிழக அரசும் இதை உணர்ந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பிற்கான கல்லூரி ஒன்றைத் தொடங்குவதற்கு முன்வந்து அதற்கான ஆணையை 30-05-2000 அன்று பிறப்பித்தது. அதன் விளைவாக சென்னை அண்ணாநகரில் இக்கல்லூரி தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பும், ஓராண்டு கட்டாய மருத்துவப் பயிற்சியும் உள்ளடக்கிய இக்கல்லூரியின் முதல் முதல்வராக அந்த இளைஞர் நியமிக்கப்பட்டார்.
இயற்கை மருத்துவத்தைக் கற்று மக்களின் பிணிகளைப் போக்க தொண்டாற்றவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை மட்டுமே தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட அந்த இளைஞர்தான் இன்று அக்கல்லூரியின் முதல்வராகவும், இந்தியத் மருத்துவத்துறையின் இணை இயக்குநராகவும் விளங்கும் மரு. மணவாளன் ஆவார்.
இக்கல்லூரியில் ஆண்டிற்கு 60 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது இங்கு மொத்தம் 600 மாணவர்கள் கற்கிறார்கள். மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் வசதியான விடுதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் மற்றும் திரைப்படங்களைக் காட்டும் இயந்திரங்களுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கருத்தரங்கு அறை, நவீன ஆராய்ச்சிக் கூடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 100 படுக்கை வசதிகளுடன் கூடிய உள் நோயாளிகள் மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குத் தனி அறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில்தான் முதன்முறையாக கீழ்க்கண்ட இயற்கை மருத்துவப் பட்ட மேற்படிப்பு மூன்று பிரிவுகளில் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை தருவதாகும்.
- இயற்கை மருத்துவம் (MD Naturopathy)
- யோகா (MD – YOGA)
- அக்குபஞ்சர் மற்றும் ஊக்க மருத்துவம் – (MD – Acupuncture & Energy Medicine)
மூன்றாண்டுகள் கொண்ட இம்மருத்துவப் பட்ட மேற்படிப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 5 மாணவர்கள் வீதம் ஒவ்வொரு ஆண்டும் 15 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இயன்முறை சிகிச்சை, மருத்துவ தாதியர் பயிற்சி ஆகிய 21/2 ஆண்டுகள் பட்டயப் படிப்புகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.
ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் 21பேர்கள், துறைத் தலைவர்களாக 11 பேர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான பதவி உயர்வினை இந்திய மருத்துவத் துறை இயக்குநரகம் அளிக்கிறது.
இப்படிப்புகளுக்குரிய பாடத் திட்டத்தை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வகுக்கிறது. தேர்வுகளையும் அது நடத்துகிறது. மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இயற்கை மருத்துவப் படிப்புக்கு மட்டும் நீட் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 12ஆம் வகுப்பில் தேறிய மாணவர்கள் இங்கு சேரலாம்.
அலோபதி மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு M.B.B.S. பட்டம் அளிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு B.N.Y.S. பட்டம் அளிக்கப்படுகிறது. இரண்டு பட்டங்களும் சமமானவையாக அரசினால் ஏற்கப்பட்டுள்ளன. அரசுப் பணியில் இருவருக்குமே சமஊதியம் அளிக்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று மேற்பட்டதோ, கீழ்பட்டதோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசுப் பணிக்கு மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாரியம்தான் இயற்கை மருத்துவர்களையும் தேர்ந்தெடுக்கிறது.
தமிழ்நாட்டில் முதன்முதல் அமைக்கப்பட்ட இக்கல்லூரி தவிர, செங்கல்பட்டில் 100 மாணவர்களைச் சேர்க்கும் வகையில் மற்றொரு கல்லூரியை அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.
பட்டம் பெற்று வரும் இயற்கை மருத்துவர்கள் அரசுப் பணியிலும் சேரலாம். தனியார் மருத்துவமனைகளிலோ அல்லது தாங்களே தனியாக மருத்துவப் பணியினையும் செய்யலாம். நாளுக்குநாள் இயற்கை மருத்துவர்களின் எண்ணிக்கைக் கூடி வருவதோடு, ஏராளமான மக்கள் இயற்கை மருத்துவத்தை நாடிவந்து குணம் பெற்று செல்லும் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
சிகிச்சை முறைகள்
100 படுக்கைகளைக் கொண்ட இயற்கை மருத்துவமனையில் இலவசமாக தங்கும் மற்றும் உணவு வசதியுடன் இயற்கையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் உடல்வாகு மற்றும் உடல் நிலைக்கு ஏற்பவும், அவர்களின் உடல் நலனை மேம்படுத்தும் வகையிலும், ஒருவாரம் முதல் நான்கு வாரம் வரை யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பெறுகின்றன. நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இயற்கை உணவு அளிக்கப்படுவது இம்மருத்துவமனையின் சிறப்பாகும்.
இங்கு கீழ்க்கண்ட நோய்களுக்குத் தக்க சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
- நீரிழிவு நோய்
- உயர் ரத்த அழுத்தம்
- உடற்பருமன்
- கழுத்து வலி, இடுப்பு வலி,கை கால் மூட்டு வலி
- (விரி) சுருள் சிரை நோய்
- பித்தப்பை கல், சிறுநீரக கல்
- முடக்கு வாதம்
- தோல் நோய்கள்
- ஒற்றை தலைவலி
- ஆண், பெண் மலட்டுத் தன்மை
- இரத்தசோகை
- தைராய்டு பிரச்சனைகள்
- மலச்சிக்கல்
- தன்னெதிர்ப்பு நோய்கள்
- வயிற்று புண், குடல் அழற்சி
- இதய நோய்கள்
- ஒவ்வாமை
- தூக்கமின்மை
- மனஅழுத்தம்
- சுவாசக்கோளாறுகள்
- மாதவிடாய் கோளாறுகள்
மேலே கண்ட நோய்களுக்கு உள் மற்றும் புற நோயாளிகளாகப் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்குரிய இரத்தப் பரிசோதனை, E.C.G., E.M.G., போன்றவையும் செய்யப்படுகின்றன. மேலும் இயற்கை மருத்துவத்தின் சிறப்புப் பரிசோதனைகளாக நாடி பரிசோதனை, கருவிழி பரிசோதனை போன்ற சிறப்புப் பரிசோதனை வசதிகள் உள் மற்றும் புற நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
சில மருத்துவ முறைகளில் அளிக்கப்படும் மருந்துகளுக்குப் பக்க விளைவுகள் உண்டு. ஆனால், இயற்கை மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லாத கீழ்க்கண்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பட்டினி சிகிச்சை
யோகா சிகிச்சை
உடல் தசைப் பிடித்தல்
நீர் சிகிச்சை
நீராவி குளியல்
வாழை இலை குளியல்
மண் குளியல்
காந்த சிகிச்சை
நிற சிகிச்சை
ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல் சிகிச்சை
இயற்கை உணவு சிகிச்சை
இயற்கை மூலிகை சிகிச்சை
நறுமண சிகிச்சை
அக்குபஞ்சர்
அக்குபிரசர்
கை மற்றும் கால் பாத அழுத்த சிகிச்சை
மன நல ஆலோசனைகள்
யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் அறிவியல் ரீதியாக சிறந்தவை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இங்கு முழுமையாக உடல்நலம் பெற்றுத் திரும்பும் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளானவர்கள் எவ்வாறு குணப்படுத்தப்பட்டனர் என்பது குறித்த சிகிச்சை விவரங்கள் அறிவுத் தரவுகளாக உலகத் தரம் வாய்ந்த மருத்துவ ஆய்வு இதழ்களில் வெளியிடப்படுகின்றன.
கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக மரு. மணவாளன் அவர்களை நான் நன்கு அறிவேன். எனது நண்பர் சடகோபன் அவர்கள் மூலம் அவரது நட்பிற்குரியவனானேன். எனக்குற்ற சில நோய்களுக்கு அவரை நாடி சிகிச்சைப் பெற்றுள்ளேன். ஒருமுறை அவரை நான் சந்தித்த போது சிவசைலத்தில் அமைந்துள்ள நல்வாழ்வு ஆசிரமத்தில் அளிக்கப்பட்டுவரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் குறித்து அவர் எனக்கு விளக்கிக் கூறி அங்கு சென்று பத்து நாட்கள் தங்கி வருமாறு அறிவுரை கூறினார். அதற்கிணங்க நானும் எனது துணைவியார் பார்வதியும் இயற்கை சூழல்மிக்க சிவசைலம் ஆசிரமம் சென்று 10 நாட்கள் தங்கியிருந்து புத்துணர்வுப் பெற்றுத் திரும்பினோம்.
வயது மூப்பினாலும், கொரோனா நோயின் பின் பாதிப்பினாலும் நானும், எனது துணைவியாரும் பாதிக்கப்பட்ட போது மருத்துவர் மணவாளன் அவருடன் தொடர்புகொண்டேன். இயற்கை மருத்துவமனையில் வந்து சேருமாறு அவர் கூறியதை ஏற்று 10-08-2021அன்று நாங்கள் அங்கு சேர்ந்தோம். குளிர்ச்சியூட்டப்பட்ட தனி அறை எங்களுக்காக ஒதுக்கப்பட்டது.
ஓயாத பரபரப்பும், சந்தடியும், மாசுக் கேடுகளும் மிகுந்த சென்னை மாநகரத்தில் இவை எதுவும் எட்ட முடியாத அமைதியும் மகிழ்ச்சியும் தவழும் பூங்காவாகத் திகழ்ந்த அந்த மருத்துவமனையில் நாங்கள் தங்கியிருந்த 28 நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத பொன்னாட்களாகும்.
நாள்தோறும் காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் எங்களுக்கு அளிக்கப்பட்ட நெல்லிச்சாறு, கருவேப்பிலைச்சாறு, பாகற்காய்சாறு போன்ற வெவ்வேறு மூலிகைச் சாறுகளை குடித்து மகிழ்ந்தோம். மூன்று வேளைகளிலும் எங்களுக்குப் பச்சைக் காய்கறிகள், பழங்கள், முளைப் பயிர்கள், ஊறவைத்த சிறுதானியங்கள் ஆகிய இயற்கை உணவுகள் அளிக்கப்பெற்றன. சமைத்த உணவுகள் அளிக்கப்படுவதில்லை. சமைக்கும் போது தானியங்களிலும், காய்கறியிலும் உள்ள ஊட்டச் சத்துக்கள் அழிந்துபோய்கின்றன. இந்தச் சத்துக்களும், வைட்டமின்களும், பச்சைக் காய்கறி பழங்களிலிருந்துதான் அழியாமல் நமக்குக் கிடைக்கின்றன. கொதிக்கும் நீரினாலும், வெப்பத்தினாலும் இவை சுலபமாக அழிக்கப்படுகின்றன. எனவே, இங்கு நோயாளிகள் அனைவருக்கும் இயற்கை உணவே அளிக்கப்படுகிறது.
மனித உடல் அழிவதற்கு காரணமாக விளங்குவது ஐந்தில் நான்கு பங்கு நாம் உண்ணும் உணவு என்றும் ஒரு பங்கு அளவுக்கு மீறிய தூக்கம், அச்சம் போன்றவையுமே என்று வள்ளலாா் அவா்கள் ஆறாம் திருமுறையில் அவா அறுத்தல் என்னும் பதிகத்தில் பாடிய 13 பாடல்களில் வலியுறுத்திக் கூறுகிறாா்.
“ஒரு மனிதன் உணவு கிடைக்காமையின் காரணமாகப் பட்டினிக் கிடந்து இறக்கிறான் என்றால், நூறு மனிதர்கள் விருப்பம்போல் அளவுக்கு மீறி உண்டு இறந்துவிடுகிறார்கள். கொழுத்த உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகமானவர்களைக் கொல்லுகிறது” என மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும்,ÂÂ
மருந்தென வேணடாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
எனக் கூறியுள்ளார்.
நமது முன்னோா்கள் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளைச் சிந்தித்து அவற்றை நமது அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே கடைப்பிடித்தனா்.
நமது உடல் நலனுக்கு ஏற்றதும் தேவையானதுமான ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், நாா்ச்சத்துக்கள், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து போன்றவற்றை நமது மண்ணில் விளையும் காய்கனிகள், தானியங்கள் ஆகியவற்றில் கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது மண்ணில் உள்ள கனிமச்சத்துகளில் இயற்கையாக உள்ளன.
இயற்கை உணவையும், பச்சைக் காய்கறிகளையும், சிறுதானியங்கள் மட்டுமே உண்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, பல நோய்களையும் தீர்த்துக்கொண்டும், உடல் நலமுடனும் வாழ முடியும் என்பதை இந்த மருத்துவமனை நடைமுறையில் நிறுவிக் காட்டுகிறது.
நாள்தோறும் மூன்று வேளையும் மருத்துவர்கள் எங்களை மட்டுமல்ல, அங்கு தங்கியிருந்த நோயாளிகள் அனைவரையும் பரிசோதித்துத் தக்க மருத்துவம் செய்கிறார்கள். அத்துடன் மூச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, அக்குபஞ்சர், அக்குபிரசர் போன்றவையும் அவரவர் நோய்க்குத் தக்கவாறு அளிக்கப்பெறுகின்றன.
மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டிருப்பதால், இயற்கை சூழல் இதமாக அமைந்துள்ளது. காலையும் மாலையும் நடைப் பயிற்சி செய்தோம். அதுமட்டுமல்ல, கூழாங்கற்கள் பரப்பப்பட்டுள்ள நடை பாதையில் நாங்கள் நடந்தபோது, அக்குபிரசர் சிகிச்சை எங்களது கால்களுக்குக் கிடைத்தது.
தனது பல்வேறு பணிகளுக்கிடையேயும் முதல்வர் மரு. மணவாளன் இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை எங்களைத் தவறாமல் சந்தித்து எங்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள், சரியானவையாக அமைந்துள்ளதா? என்பதை மருத்துவர்களிடம் கேட்டு அறிவதோடு, எங்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் வகையில் உரையாடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததை ஒருபோதும் மறக்க இயலாது. அதைப்போலவே நாள்தோறும் மூன்று வேளையும் தவறாமல் வருகைதந்து எங்களை கவனித்த மரு. ராதிகா அவர்கள் மருத்துவராக மட்டுமல்ல, மகளாகவும் விளங்கி எங்களுக்கு வேண்டுவன செய்தார்.
இங்கு கற்பிக்கும் ஆசிரியா்களும், படிக்கும் மாணவா்களும் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு யோகா முறைகளைக் கற்றுத் தருகிறாா்கள்.
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரிமா சங்கம் – சுழற் சங்கம் போன்றவை நடத்தும் சிறப்பு முகாம்களிலும் யோகா முறைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறாா்கள்.
இங்குள்ள மருத்துவா்களும், உதவியாளா்களும், மாணவா்களும் மற்றும் ஊழியா்களும் மிகுந்த அா்ப்பணிப்போடு மக்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில் நோய் தீா்க்கத் தொண்டாற்றுகிறாா்கள்.
”என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடிய திருநாவுக்கரசரின் தொண்டு உணா்வை இங்குள்ள மருத்துவா்களிலிருந்து மாணவா்கள் வரை அனைவருக்கும் முதல்வா் மணவாளன் அவா்கள் ஊட்டியிருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன்.
வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் இம்மருத்துவமனையை நாடி வந்து சிகிச்சைப் பெற்று உடல்நலமுடன் திரும்பிச் செல்வதை நாங்கள் பார்த்தோம். குறிப்பாக, இரு சக்கரவாகனத்தில் சென்று விபத்தில் சிக்கித் தலையில் அடிபட்டு நினைவை முற்றிலுமாக இழந்த நிலையில் எவ்வளவோ பெரிய பெரிய மருத்துவமனைகளில் பெரும் பொருட்செலவுடன் சிகிச்சைப் பெற்று எந்தப் பயனும் இல்லாமல் நினைவிழந்த நிலைமையிலேயே இம்மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட உமாமகேசுவரன் என்னும் இளைஞருக்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விளைவாக நினைவு திரும்பியது மட்டுமல்ல, சிறிது சிறிதாக நடக்கவும் தொடங்கியிருப்பதையும், நன்கு பேசவும் முடிந்திருப்பதையும் நேரில் கண்டு அளவிலாத வியப்படைந்தோம். பொதுவாக விபத்தில் சிக்கித் தலையில் அடிபட்டு நினைவிழந்தவர்கள் பெரும்பாலும் உயிருடன் மீள்வது மிகமிக அபூர்வமானதாகும். ஆனால், இந்த இளைஞருக்கு இயற்கை மருத்துவம் புத்துயிர்க் கொடுத்துள்ளது.
இயற்கை உணவு. மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி, அக்குபஞ்சர், அக்குபிரசர் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் ஆகியவற்றினால் எங்கள் உடலின் பல்வேறு பகுதிகளிலும், குருதியிலும் பலகாலமாகச் சேர்ந்து தங்கிக் கிடந்த நச்சுப் பொருட்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு உடலின் சகல உறுப்புகளும் புத்துணர்ச்சிப் பெற்று இயங்கத் தொடங்கின.
பரபரப்பு மிக்க சென்னை வாழ்க்கைக்குப் பழகிப்போன எங்களுக்கு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த அந்த மருத்துவமனை உடலுக்கும், உள்ளத்திற்கும் அளவற்ற மகிழ்ச்சியை ஊட்டியது என்று கூறினாலும் மிகையாகாது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கான அரசுக் கல்லூரிகள் 2, தனியார் கல்லூரிகள் 17 ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்து ஆண்டுதோறும் சுமார் 1600க்கு மேற்பட்ட மாணவ - மாணவியா் இயற்கை மருத்துவர்களாக வெளி வருகிறார்கள். இயற்கை முறையிலான இந்த எளிய சிகிச்சை முறை அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவயமாக அளிக்கப்படுகிறது. எனவே, மாவட்டந்தோறும் இருக்கக் கூடிய அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைப் பிரிவுகள் ஒவ்வொன்று உருவாக்கப்படவேண்டும். BNYS பட்டம் பெற்று வரும் மருத்துவர்கள் இம்மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டு மக்களுக்கு சிறிதும் செலவில்லாத மருத்துவத் தொண்டு கிடைக்க வழிவகை செய்யப்படவேண்டும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கும் அரசு முன்வரவேண்டும்.
இயற்கையை நேசித்த கிராமப்புற இளைஞராகத் திகழ்ந்த மருத்துவர் மணவாளன் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே எங்கெங்கெல்லாமோ சென்று யோகா, இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அக்குபிரசர் முதலிய மருத்துவமுறைகளை கற்றறிந்து வந்து தமிழ்நாட்டில் முதன்முதலாக அம்மருத்துவ முறைகளின் சிறப்பினை மக்களை உணரச் செய்வதற்கு அரும்பாடுபட்டார். அதற்குப் பின் தமிழக அரசும், இம்மருத்துவ முறைகளின் சிறப்பினை உணர்ந்ததற்கும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியை அமைக்க முன்வந்ததற்கும், இவரின் பெரும் முயற்சியே காரணமாகும். அதுமட்டுமல்ல, இங்கு தமிழ்நாட்டில் அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் இத்தகைய மருத்துவக் கல்லூரிகள் பெருகி ஆண்டுதோறும் 1600 மாணவர்களுக்கு மேல் பட்டம் பெற்று வெளிவந்து தமிழகமெங்கும் மக்களின் நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களாக வலம் வருகிறார்கள். இயற்கை முறை மருத்துவத்தை நாடி வந்து குறைந்த செலவிலும், எளிய முறையிலும் தங்களின் நோய்கள் தீர்க்கப்பட்டு மகிழ்ச்சியோடு திரும்பும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இயற்கையோடு இயைந்து வாழ்வதின் மூலம் உடல்நலமுடன் மக்களை வாழ வைக்கவேண்டுமென்று இவர் கண்ட கனவு இன்று நனவாகி தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் விரிந்து பரவியுள்ளது. தனியொரு மனிதன் தனது கனவு திட்டத்தை இடைவிடாத முயற்சியின் மூலம் தமிழக அரசின் உதவியுடன் நனவாக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மரு. மணவாளன் என்றென்றும் மக்களால் நன்றியுடன் நினைவுகூரப்படுவார். |