சீனாவுக்கு எதிராக க்வாட் – நாற்கரக் கூட்டமைப்பு உருவாகிறது -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:21

இந்துமாக்கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் சீன அபாயத்தைத் தடுத்து நிறுத்த நான்கு நாடுகள் கைகோர்த்து இணைந்துள்ளன. இந்தியா, சப்பான், ஆசுதிரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாற்கர கூட்டமைப்பாக க்வாட் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி உலக அரசியலில் மாபெரும் திருப்பத்தினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் தலைமையமைச்சர் மோடி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடன், ஆசுதிரேலிய தலைமையமைச்சர் ஸ்காட் மோரிசன், சப்பானிய தலைமையமைச்சர் யோசிகைட் சுகா ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

“இந்துமாக்கடல்-பசிபிக் கடல் பகுதியிலும், அதற்கு அப்பாலும் பாதுகாப்பையும், வளத்தையும், மேலும் வலிமைப்படுத்தும் வகையில் சர்வதேசச் சட்டங்களில் உள்ள விதிகளைக் கடைப்பிடித்து வெளிப்படையாகச் செயல்படுவோம் என உறுதி பூணுகிறோம்.

பிற நாடுகளின் எல்லைகளை மதிப்பது, சனநாயகப் பண்புகளைப் போற்றுவது, பிரச்சனைகளுக்குச் சுமூகமாகத் தீர்வு காண்பது, கடல் பரப்பில் கப்பல்களும், வான்வெளியில் விமானங்களும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பது, சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுவது ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் “ஆப்கானித்தானத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தரமான அமைதி உருவாக்கப்படவேண்டும். பயங்கரவாதத்தின் தளமாக அந்நாடு மாற்றப்படக் கூடாது” என்று நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் நாங்கள் மனித உரிமைகளைக் காக்கச் செயல்படுவோம். ஆப்கானித்தான் மண்ணைப் பயன்படுத்தி எந்தவொரு நாட்டையும் தாக்குவதற்கோ அல்லது அந்நாட்டினை பயங்கரவாதிகளின் புகலிடமாகப் பயன்படுத்தவோ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்”

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கும் வகையிலும், தூண்டும் வகையிலும் செயல்படும் நாடுகளைக் கண்டிக்கிறோம்”

“அணு ஆயுதங்களுக்கு எதிராக உருப்படியான பேச்சுவார்த்தைகளை நடத்த வடகொரியா முன்வரவேண்டும். மியான்மர் தனது நாட்டில் நிலவும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவேண்டும்” என வலியுறுத்துகிறோம்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்புக்கு எங்களின் முழுமையான ஆதரவு உண்டு. அந்நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்”என அக்கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது”.

தென்கிழக்காசியப் பகுதிகளில் உள்ள பல நாடுகள் சீன அபாயத்திற்குள்ளாகியுள்ள இக்காலகட்டத்தில் க்வாட் அமைப்பின் தோற்றமும், நோக்கமும் கூர்ந்து கவனிக்கத்தக்கவையாகும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கமுடன் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் க்வாட் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இதுவரை காணொளி மூலம் மட்டுமே நடைபெற்று வந்த இந்நாடுகளின் அதிபர்களின் மாநாடு, முதன்முறையாக அமெரிக்காவின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நான்கு நாடுகளின் இந்த கூட்டமைப்பு திடீரென்று உருவாகிவிடவில்லை. 2006ஆம் ஆண்டில் இதற்கான முயற்சி தொடங்கி 2021ஆம் ஆண்டில் வெற்றியடைந்துள்ளது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தயங்கி, சிந்தித்து இறுதியாக துணிந்து க்வாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்க வெறிப் போக்குக்கு எதிராக அமெரிக்கா, சப்பான், ஆசுதிரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் 2006ஆம் ஆண்டில் கூடி ஆலோசித்தன. மறுபடியும் 2007ஆம் ஆண்டில் மீண்டும் கூடிப் பேசினர். ஆனாலும், திட்டவட்டமாக எத்தகைய முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் இமயமலைப் பகுதியில் இந்திய எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலும், ஆசுதிரேலியாவுக்கு எதிராக சீனா மேற்கொண்ட பொருளாதார புறக்கணிப்பு நடவடிக்கைகளும், சப்பானுக்குச் சொந்தமான செங்கார்கு தீவுக்கருகில் சீன கடற்படைக் கப்பல்களின் நடமாட்டமும், ஒட்டுமொத்தத்தில் அருகேயுள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு சீனா கொடுத்த நெருக்கடிகளும், இந்நாடுகளின் மறு சிந்தனைக்கு வழிவகுத்தன.

எனவே, 2017ஆம் ஆண்டில் மேற்கண்ட 4 நாடுகளும் கூடி இந்திய – பசிபிக் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், உலகளவில் நாடுகளுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும் தேசியப் பாதுகாப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டன.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் நியூயார்க் நகரிலும், 2020ஆம் ஆண்டு அக்டோபரில் டோக்கியோவிலும் இந்த 4 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஒன்றுகூடி பேசினர்.

இறுதியாக தற்போது வாசிங்டனில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அவர்களின் இல்லத்தில் 4 நாடுகளின் அதிபர்கள் கூடி இறுதி முடிவு எடுத்துள்ளனர்.

க்வாட் அமைப்பு உருவாகவேண்டிய அவசியம் என்ன? யாருக்கு எதிராக? இந்த வினாக்களுக்குரிய விடையை அல்லது பின்னணியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

1990ஆம் ஆண்டுகளிலிருந்து சீனா இராணுவ ரீதியாக தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாகவும் அதன் வலிமை பலமடங்குப் பெருகி உள்ளது. இந்தப் பின்புலத்துடன் கிழக்காசிய நாடுகளுடன் பொருளாதார – இராணுவ அடிப்படையிலான உறவுகளை மேற்கொண்டு அந்நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அதேவேளையில் சப்பான், இந்தியா போன்ற நாடுகளுடன் எல்லைப் பிரச்சனைகளில் மோதல் கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளுக்குப் பொருளாதார ரீதியான உதவிகள் அளித்தும் இராணுவ ரீதியான உறவுகள் கொண்டும் இந்தியாவை அந்நியப்படுத்தி வருகிறது.

அண்மையில் தென்சீனக் கடலில் பெரும்பகுதியை தனக்குச் சொந்தமானதாகக் காட்டும் புதிய வரைபடம் ஒன்றினை சீனா வெளியிட்டுள்ளது. இதற்கு புரூனி, மலேசியா, பிலிப்பைன்சு, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் கடுங் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகளின் கடற்பகுதிகளையும் சேர்த்துத் தனக்குச் சொந்தமானதாக சீனா உரிமை கொண்டாடுகிறது. இக்கடல் பகுதியின் அடிமட்டத்தில் பெட்ரோலிய எண்ணெய் வளம் நிறைந்திருப்பதால் அவற்றை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள சீனா திட்டமிட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.

இப்பகுதியில் உள்ள ஆசுதிரேலியாவிலிருந்து நிலக்கரி, பார்லி, இறைச்சி, ஒயின், கோதுமை, பஞ்சு, மூங்கில், சர்க்கரை, செம்பு படிவங்கள் போன்றவற்றைப் பெருமளவில் சீனா வாங்கிக்கொண்டிருந்தது. ஆனால், இந்த இறக்குமதியை நிறுத்துவதாக சீனா அறிவித்தது. இதன்மூலம் ஆசுதிரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்துத் தனக்குப் பணிய வைப்பதற்கு சீனா முயற்சி செய்கிறது.

தனக்கு மிக அருகில் உள்ள வியட்நாமுடனும் சீனா மோதல் போக்கினைக் கடைப்பிடித்து வருகிறது. இவ்வளவுக்கும் வியட்நாம் ஒரு கம்யூனிஸ்டு நாடாகும். தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு வியட்நாம் நாட்டைத்தான் பெரிதும் பாதிக்கும். சர்வதேச கடல் சட்டப்படி தென்சீனக் கடலில் அதிக உரிமை வியட்நாமுக்குத்தான் உண்டு. ஆனால், சீனா அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் செயல்படுகிறது.

மேற்கு பிலிப்பைன்சு கடல் பகுதி மீதும் சீனா உரிமை கொண்டாடுவதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் பிலிப்பைன்சு அரசு வழக்குத் தொடுத்தது.

1982ஆம் ஆண்டில் ஐ.நா.வின் சார்பில் கடல் சட்ட மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் சீனா, பிலிப்பைன்சு உள்பட 163 நாடுகள் பங்கெடுத்துக்கொண்டு அம்மாநாட்டில் வகுக்கப்பட்ட கடல் சட்ட - திட்டத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளன.

இந்த சட்ட வரைவுக்கு எதிராக சீனா நடந்துகொள்வதாக சர்வதேச நீதிமன்றம் கண்டித்தது. தென்சீன கடல் பகுதி மீது சீனா உரிமை கொண்டாடுவது சர்வதேசக் கடல் சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு சொந்தம் கொண்டாட எத்தகைய உரிமையும் சீனாவுக்கு அறவே கிடையாது என அத்தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அத்தீர்ப்பை ஏற்கப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.

அண்டை நாடுகளுடன் அடாவடியானப் போக்கினை சீனா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. சர்வதேசச் சட்டங்களையோ, நாடுகளுக்கிடையே நிலவவேண்டிய நல்லுறவை மதிப்பதற்கு மறுக்கிறது. ஐ.நா. பேரவை மற்றும் அமைப்புகள், சர்வதேச நீதிமன்றம் போன்ற உலக அமைப்புகள் எதையுமே ஒரு பொருட்டாகக் கருத சீனா மறுக்கிறது.

உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக சீனா உருவெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்தவே க்வாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாடுகள் மட்டுமல்ல, இதனுடன் பிற நாடுகளும் இணைந்துகொள்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

க்வாட் நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இணைந்து செயல்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரான்சு, செர்மனி, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

2020ஆம் ஆண்டு நவம்பரில் வங்காள விரிகுடா கடலில் இந்தியா, அமெரிக்கா,சப்பான், ஆசுதிரேலியா ஆகிய நாடுகள் நடத்திய கடல் போர்ப் பயிற்சியில் பிரான்சு நாட்டின் போர்க் கப்பல்களும் பங்கேற்றன.

இந்த ஆண்டு இறுதியில் அரபிக் கடலில் 4 நாடுகளும் கடல் போர்ப் பயிற்சியை நடத்தவிருக்கின்றன. அதில் மேலும் பல நாடுகள் பங்கேற்கும் என்று தெரிகிறது.

தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் சீனா. ஆசியாவின் மற்றொரு பெரிய நாடான இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்திலும் கடற்படைத் தளங்களை சீனா அமைத்துள்ளது. பொருளாதார ரீதியில் அந்நாடுகளுக்கு உதவி அவற்றைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் கடந்தகால இந்தியாவின் நடவடிக்கைகளை நாம் எண்ணிப்பார்த்தால் இப்போது நேர் எதிர்மறையான நிலையில் இந்தியா இருப்பது புலனாகும்.

சோவியத் ஒன்றியம் இருந்தபோது இந்தியா அதனுடன் மிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தது. அதேவேளையில் அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் ஆகிய வல்லரசுகளுக்கிடையேயுள்ள போட்டியில் கலந்துகொள்ளாமல் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஒன்றுபடுத்தி நடுநிலை முகாம் ஒன்றினை இந்தியா உருவாக்கியது.

கொரியா பிரச்சனை, வியட்நாம் விடுதலைப் போராட்டம், சூயஸ்கால்வாய் பிரச்சனை போன்றவற்றில் நடுநிலை நாடுகளின் துணையுடன் அமெரிக்கா மற்றும் மேற்கு வல்லரசுகளின் போக்குக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட பல நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டின. அதன் காரணமாக இந்தியாவின் அண்டை நாடான பாகித்தானுடன் அமெரிக்கா மிக நெருங்கி உறவாடியது. பொருளாதார உதவிகளும், இராணுவ உதவிகளும் தாராளமாக வழங்கப்பட்டன. அப்படியிருந்தும் வங்கதேசப் போரில் பாகித்தான் தோல்வியடைந்தது. வங்கதேசம் தனி நாடாகப் பிரிந்தது.

பின்னர் மாறிய உலக சூழ்நிலையில் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி உறவாடத் தொடங்கியது. தற்போது தலைமையமைச்சர் மோடியின் ஆட்சியில் அமெரிக்க – இந்திய நட்புறவு மேலும் வலுப்பட்டுள்ளது.

தற்போது பாகித்தான் – சீனா நட்புறவு மிக நெருக்கமாக உள்ளது. பாகித்தானுக்கு சொந்தமான ஆசாத் காசுமீர் பகுதியில் உள்ள லடாக் வழியாக சீனா – பாகித்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் புதிய பட்டுப்பாதையை அமைத்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக லடாக் பகுதியில் விமானத் தளங்களை அமைத்ததோடு, தனது இராணுவத்தையும் சீனா குவித்து வைத்திருக்கிறது.

குறிப்பாக, இந்துமாக் கடல் பகுதியில் இலங்கை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேந்திரமாகத் திகழ்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் பிரிட்டனின் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு அக்கடலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றப் பிறகு இந்தியாவின் கட்டுப்பாடு இயற்கையாக நிலவியது. ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாக இந்தியக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விலகிச் செல்வதையே தங்களது நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

1980களில் தொடங்கி இன்றுவரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், இந்துமாக்கடலின் கடல், வான் பாதைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்றுவந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியாவிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் ஆட்சியாளர்கள் “இந்தியாவின் மேலாதிக்கத்திலிருந்து விடுபடவேண்டுமானால், அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும்” எனக் கருதிச் செயல்பட்டனர். .இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டது. இதற்குப் பதிலாக சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983ஆம் ஆண்டிற்குப் பிறகு விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க உதவியுடன் இசுரேல் உளவுப்படையான மொசாட் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள இராணுவத்திற்குப் பயிற்சியளித்தனர். பிரித்தானிய விமானப் படை நிபுணர்கள் சிங்கள விமானிகளுக்குப் பயிற்சியளித்தனர். மேலும், பிரிட்டனின் தனியார் நிறுவனமான கீனி-மீனி அமைப்பு சிங்கள இராணுவ சிறப்பு அதிரடிப்படைக்குப் பயிற்சியளித்தது. இலங்கையின் இயற்கைத் துறைமுகமான திரிகோண மலையில் கடற்படைத் தளம் அமைப்பதற்காக அமெரிக்காவுடன் இலங்கை அரசு இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், இந்தியத் தலைமையமைச்சரான இந்திராகாந்தி இம்முயற்சிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தப்பிறகு இலங்கை அரசு பின்வாங்கியது.

ஆனால், தலைமையமைச்சராக இராசீவ்காந்தி இருந்த காலத்தில் இலங்கை அரசை திருப்தி செய்து தனது பக்கம் வைத்துக்கொள்ளும் முயற்சி தொடங்கப்பட்டது. இந்திய – இலங்கை உடன்பாட்டின் மூலம் விடுதலைப் புலிகளை ஒடுக்கி ஆயுதங்களைக் களைவதற்காக இந்திய இராணுவத்தை இலங்கைக்கு இராசீவ் அனுப்பினார். தனது தாய் தலைமையமைச்சராக இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எத்தகைய அணுகுமுறையை கடைப்பிடித்தார் என்பதை சிறிதளவுகூட உணர்ந்துகொள்ளாமல் இலங்கையை திருப்தி செய்யும் கொள்கையை இராசீவ்காந்தியும், அவருக்குப் பின்னர் வந்த காங்கிரசு அரசுகளும் கடைப்பிடித்ததின் விளைவாக இந்தியாவின் இராச தந்திரம் முற்றிலுமாக தோற்றது. இலங்கை இந்தியாவுக்கு எதிரானப் பாதையில் திரும்பியது.

இந்தியாவின் அழுத்தம் தன்மீது படியாமல் இருக்கவேண்டுமானால், மேற்கு நாடுகளை நம்பி பயனில்லை. மாறாக, இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா, பாகித்தான் ஆகிய நாடுகளின் உதவியைப் பெறுவதே இந்தியாவை மிரட்டுவதற்கான வழி என்பதை உணர்ந்த இலங்கை அதிபர் இராசபட்சே அதை பின்பற்றினார்.

இதன்படி இலங்கையில் 1993ஆம் ஆண்டில் கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றினை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது, சிங்கள அரசு தனக்குத் தேவையான இராணுவத் தளவாடங்கள் அனைத்தையும் இந்த ஆயுதக்கிடங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதம் வாங்கக் கூடாது என்பதுதான் இந்த உடன்பாட்டின் முக்கியமான அம்சமாகும்.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவதென்பது இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, தென்னாசிய நாடுகளுக்கே ஆபத்தானதாகும். தென்னாசிய நாடுகளுக்குப் பேரபாயம் விளைவிக்கும் வெடி மருந்து கிடங்காக இது அமைந்துள்ளது என்பதை இந்திய அரசு உணரவில்லை.

தென் இலங்கையில் உள்ள அம்பன் தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும், பெரும் எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும், கடற்படைத் தளம் உருவாக்குவதற்கும் சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதித்தது. இதன்மூலம் இந்துமாக்கடல்வழி மார்க்கத்தைக் கண்காணிக்கும் வசதியை சீனா பெற்றது.

வான்புலிகளின் விமானத் தாக்குதலை கண்டறிய இந்தியா அளித்த ராடர்களினால் இயலவில்லை என்று கூறி சீனாவின் ராடர்களை இலங்கைப் பெற்றுக்கொண்டது. அதிக சக்திப் படைத்த இந்த ராடர்களின் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது. இவைபோன்ற இந்தியாவுக்கு எதிரான மேலும் ஏராளமான இராணுவ, பொருளாதார உடன்பாடுகளை சீனாவும், இலங்கையும் செய்துகொண்டுள்ளன.

சிங்கள அரசு மேற்கொண்ட இந்த நிலைப்பாடு என்பது சீன அபாயத்தை இந்தியாவின் தென்வாயிலுக்கு அருகே கொண்டுவந்து நிறுத்திவிட்டது. எத்தகைய பேரபாயத்தில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தக் கட்டத்திலாவது சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இராசீவ் காலத்திலிருந்து மன்மோகன் சிங் காலம் வரை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது சிங்கள ஆட்சியாளரைத் திருப்தி செய்யும் கொள்கையாகவே அமைந்தது. ஆசியாவின் மிகப்பெரிய நாடான இந்தியா சின்னஞ்சிறிய இலங்கையின் இராசதந்திரப் பிடிக்குள் தானாகவே கட்டுண்டது.

ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசினால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் நலனுக்கே எதிர்காலத்தில் பாதிப்பாக மாறும் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இன்னமும் உணரவில்லை. ஈழத் தமிழர்களை முற்றிலுமாக அடக்கி ஒடுக்கி சிங்களருக்கு மட்டுமே சொந்தமான தீவாக இலங்கையை ஆக்கிவிடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசு செயல்படுகிறது. இந்தத் தீய நோக்கத்தை இந்தியா புரிந்துகொள்ள மறுக்கிறது.

ஈழத் தமிழர்கள் வலிமையாக இருக்கும்வரை இலங்கையின் மூலம் இந்தியாவுக்கு ஆபத்து வரமுடியாது என்ற உண்மையை இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் கொஞ்சமும் உணரவில்லை. ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பாதுகாவலர்களாக விளங்காமல் இந்துமாக்கடலில் இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாவலர்களாக விளங்கிய விடுதலைப்புலிகளை வீழ்த்துவதற்கு சிங்கள இனவாத அரசுக்கு இராணுவ ரீதியான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்தது.

“இலங்கை கேட்கும் உதவிகளை நாம் செய்யாவிட்டால், அவர்கள் சீனாவை நாடிச் சென்றுவிடுவார்கள்” என இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி பகிரங்கமாகக் கூறினார். ஆனால், நடந்தது என்ன? இந்தியாவிடம் வேண்டிய இராணுவ உதவிகளைத் தேவைக்கும் அதிகமான அளவுக்குப் பெற்றுக்கொண்ட இலங்கை, சீனாவிடமும், அதன் ஆதரவு நாடுகளிடமும் இராணுவ உதவிகளைப் பெறுவதற்கும், இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன்   கைகோர்க்கவும் கொஞ்சமும் தயங்கவில்லை.

கடந்த கால வரலாற்று உண்மைகள்

“சார்க் அமைப்பில் இலங்கையும் இருப்பதினால் சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆயுதம் வழங்கப்படுகிறது என இச்செயலை நியாயப்படுத்தி மன்மோகன் சிங் அரசு” பேசியது. ஆனால், சார்க் நாடுகளில் ஒன்றான பாகித்தானின் இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியோ, ஆயுதமோ அளிக்கப்படவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்வது இந்தியாவுக்கு ஆபத்து என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்திருந்த காரணத்தினால் அதை செய்யவில்லை.

இலங்கைக்கு அருகே இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது. எந்த நாட்டிடமிருந்தும் இலங்கைக்கு அபாயம் நேரிடப்போவதில்லை. ஆனால், இலங்கை இராணுவத்திற்கு இந்தியா அளிக்கிற பயிற்சியும், ஆயுதங்களும் அந்நாட்டில் வாழும் தமிழர்களைக் கொன்று குவிக்கவே பயன்படும் என்பதை தலைமையமைச்சர் வாஜ்பாய் அரசு உணர்ந்திருந்த காரணத்தினால், அவ்வாறு செய்ய மறுத்தது.

இலங்கையைச் சுற்றி இந்தியக் கடற்படை காவல்காத்தபோது, பா.ச.க. அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் “இந்தியக் கடற்கரையை காவல் காப்பதுதான் நமது கடற்படையின் கடமை. மற்றொரு நாட்டின் கடற்கரையை காப்பது அல்ல. என்று கூறி நமது கடற்படையைத் திரும்ப அழைத்தார். இவற்றையெல்லாம் வரலாறு பதிவு செய்துள்ளது. இன்றைய பா.ச.க. அரசு இந்த வரலாற்று உண்மையை உணரவேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.