சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஊழல் பேர்வழிகள் போட்டியிடத் தடை? சோழர் கால நடைமுறையை உச்சநீதிமன்றம் கடைபிடிக்குமா? -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 10:51

“குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதிலும் எந்தத் தேர்தலிலும் பங்கெடுக்க முடியாது” என்பதற்கான சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி இந்திய அரசின் கருத்தைத் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியுள்ளார்.

நாடெங்கிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் தொடுக்கப்பட்டு சிறப்பு நீதிமன்றங்களின் மூலம் அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 1951ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின்படி இத்தகையவர்கள் தண்டிக்கப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு மட்டுமே இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. என்ற நிலை தற்போது உள்ளது. இந்த வழக்குகள் பல ஆண்டு காலமாக நீடித்து நடத்தப்படுகின்றன. இவற்றில் தீர்ப்புக் கூறுவது என்பது பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எழுப்பியுள்ள இந்த கேள்விக்கு விரைவில் விடை காண்பது சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும் குற்றவாளிகளின் கூடாரங்களாக மாறுவதைத் தடுக்கும் என்பதில் ஐயமில்லை.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் எத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை. கி.பி. 919 மற்றும் 921ஆம் ஆண்டுகளில் முதல் பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட உத்தரமேரூர் கல்வெட்டுகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. ஊர்தோறும் அமைக்கப்பட்ட தோட்ட வாரியம், ஏரி வாரியம் போன்ற பஞ்ச வாரியங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கிராமங்களில் உள்ள வாரியங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமைப்படைத்த வாக்காளர்கள் யார்? யார்? என்பதையும் இக்கல்வெட்டு தெளிவுபட எடுத்துக்கூறுகிறது.

உறுப்பினராதற் குரிமையுடையோர்:

கிராம சபையால் வாரியப் பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பெறும் உரிமையுடையவர்கள், தம் சொந்த மனையில் வீடு கட்டிக் குடியிருப்பவர்களாகவும், காணிக்கடன் செலுத்தற்குரிய கால் வேலி நிலமுடையவர்களாகவும், சிறந்த கல்வியறியுடைவர்களாய் அறநெறி பிழையாமல் நடப்பவர்களாகவும், தூயவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவர்களாகவும், காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவர்களாகவும், முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குட்பட்ட வயதினர்களாகவும், மூவாண்டிற்குள் எந்த வாரியத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறாதவர்களாகவும் இருத்தல்வேண்டும். பெருங் கல்விமான்களாயிருப்போர் அரைக்கால் வேலி நிலமுடையவர்களாயிருப்பினும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெறும் உரிமையுடையவராவர்.

வாரியங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியற்றவர்கள் யார்? என்பதையும், எதனால் அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்பதையும் இக்கல்வெட்டு வரையறுத்துக் கூறுகிறது.

உரிமை இழந்தவர்கள்:

நிறைவேற்றுக் கழகத்தில் உறுப்பினராயிருந்து இறுதியில் கணக்கு காட்டாமல் இருந்தவர்களும், இவர்களுடைய நெருங்கிய உறவினர்களும் கூடத்தகாதவர்களோடு கூடியவர்களும், ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கும் புரிந்தவர்களும், இவ்விரு வகையாருடைய நெருங்கிய சுற்றத்தினர்களும் தீயோர்கள் கூட்டுறவினால் கெட்டுப்போனவர்களும், கொண்டது விடாத கொடியோர்களும், பிறர் பொருளைக் கவர்ந்தவர்களும், எத்தகைய கையூட்டு (இலஞ்சம்) வாங்கிப் பிறகு பிராயச்சித்தம் செய்து தூய்மை அடைந்தவர்களும்; மாபாதகஞ் செய்து பிராயச்சித்தம் புரிந்தவர்களும், ஊர்க்குத் துரோகஞ் செய்து பிராயச்சித்தம் செய்தவர்களும், கூடத் தகாதவர்களோடு கூடிப் பிராயச்சித்தஞ் செய்தவர்களும், குற்றம் காரணமாகக் கழுதைமேல் ஏற்றப்பட்டவர்களும், கள்ளக் கையெழுத்திடலாகிய கூடலேகை செய்தவர்களும் ஆகிய இன்னோர் கிராம காரியஞ் செய்யும் வாரியப் பெரு மக்களாகத் தெரிந்தெடுக்கப்பெறும் உரிமையினைத் தம் வாழ்நாள் முழுவதும் இழந்தவராவர். தீயோர்களின் கூட்டுறவால் கெட்டுப் போனவர்கள் மாத்திரம் பிராயச்சித்தஞ் செய்த பின்னர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையை மீண்டும் பெறுவர்.

பராந்தகன் சோழன் காலத்தில் ஊர்ச் சபைகளில் அங்கம் வகித்து ஊழல் செய்தோர் எதிர்காலத்தில் அத்தகைய பொறுப்புகளுக்கு வருவதற்குத் தகுதியற்றவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டதை இப்போது உச்சநீதிமன்றமும் பின்பற்ற விரும்புகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலை இந்திய அரசு ஏற்குமானால், இப்போது சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பெரும்பாலோர் எதிர்காலத்தில் இந்தப் பதவிகளுக்கு வரும் தகுதிகளை இழப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நிலை உருவாக்கப்பட்டால்தான் நாடெங்கும் மண்டிக்கிடக்கும் ஊழலை ஒழிக்கவும், ஊழல் பேர்வழிகளை பொதுவாழ்வில் ஈடுபடாமல் தடுக்கவும் முடியும். இப்போதுகூட இதை செய்வதற்கு இந்திய அரசு தயங்குமேயானால் எதிர்காலத்தில் ஊழல் பெருகும். அதன் விளைவாக சனநாயகம் பணநாயகமாகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.