உலகத் தமிழர் பேரமைப்பு - தலைமைக்குழுக் கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 டிசம்பர் 2021 11:06

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமைக்குழுவின் கூட்டம் 28-11-2021 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

தலைமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிதித் திரட்டுவது குறித்து பலரும் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். பின்னர் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. மறைந்த தமிழறிஞர்கள் மதுரை ஆதீனக் கர்த்தர், இரா. இளங்குமரனார், இராம. சுந்தரம், கி. இராசநாராயணன், பெ.சு. மணி, இறையெழிலன், புலமைப்பித்தன்,  பேரா. கணேசமூர்த்தி, தஞ்சை இராமமூர்த்தி, துரை. பாலகிருட்டிணன், உதயகுமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
  2. 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை, 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை, 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை, வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகளை திரு. கென்னடி வாசித்து அளித்தார். அதற்குத் தலைமைக்குழு ஒப்புதல் அளித்தது.
  3. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமைக்குழு மற்றும் ஆட்சிக்குழு ஆகியவற்றின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால் அவற்றைப் புதுப்பித்து நியமிக்கும் அதிகாரத்தை தலைவருக்கு வழங்குவதென தலைமைக்குழு முடிவு செய்தது.
  4. உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டினை 2022ஆம் ஆண்டு நடத்துவதென தலைமைக்குழு முடிவு செய்தது.
  5. உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கு நிதித் திரட்டும் நோக்குடன் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டணக் கருத்தரங்குகள் நடத்துவதென தலைமைக்குழு முடிவு செய்தது.
  6. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய மொழிப் பேசும் மக்களைக் கொண்ட மாநிலங்கள் அந்தந்த தேசிய இன மக்களின் இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், அவரவர்களுக்கேற்ற கல்வி முறையை வகுப்பது என்பதற்கு முற்றிலும் எதிராக இந்திய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுத்து மாநிலங்கள் மீது திணிக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கிற்கு தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.
  7. தமிழ்நாட்டில் உள்ள வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதன்மை இடம் அளிக்கப்படவேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட ஆணை செயலற்றதாக உள்ளது. பெரும்பாலான பெயர்ப்பலகைகளில் ஆங்கிலமே முதன்மையாக தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு இத்தலைமைக்குழு கடும் எதிர்ப்பினை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ் மட்டுமே பயன்படுத்தப்படும் பெயர்ப்பலகைகளுக்கு வரிவிதிப்பு கிடையாது. ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைப் பயன்படுத்தும் பெயர்ப் பலகைகளுக்கு வரி பலமடங்கு உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தால் பயன்விளையும் என்பதை இத்தலைமைக்குழு சுட்டிக்காட்டி இத்திட்டத்தை நிறைவேற்ற முன்வருமாறு வேண்டிக்கொள்கிறது.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.