பா.ச.க.வை முறியடிக்க மாநிலங்களுக்குத் தன்னாட்சி வழங்குவதே மாற்றுத் திட்டமாகும்! -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 11:15

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2ஆம் முறையாக வெற்றி பெற்று பா.ச.க. ஆட்சி அமைத்தப் பிறகு வெளிப்படையாகவும், துணிந்தும் இந்துத்துவா கோட்பாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

நாடாளுமன்றத்திலும் வலுவான எதிர்க்கட்சி அமையவில்லை. வலிமை குன்றிய காங்கிரசுக் கட்சியும்,பிற கட்சிகளும் இணைந்து செயல்பட்டாலும்கூட எதுவும் செய்யமுடியாத அளவுக்கு பா.ச.க. வலிமை வாய்ந்த கட்சியாகத் திகழ்கிறது.

எனவே, ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே நாடு; ஒரே ஆட்சி என்ற தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள இதுவே தக்கத் தருணம் என பா.ச.க. விரைந்து செயல்படத் தொடங்கிவிட்டது. 2019 ஆகசுடு மாதத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கியதின் மூலம் சம்மு&காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய ஆட்சிக்குட்பட்ட குறு மாநிலங்களாக்கிவிட்டது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அரசியல் சட்டத்தைத் திருத்தி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை இரண்டாகவோ, மூன்றாகவோ எப்படி வேண்டுமானாலும் பிரிப்பதற்கான வலிமையுடன் இந்த அரசு திகழ்கிறது. காசுமீருக்கு நேர்ந்த கதி நாளை தமிழ்நாட்டிற்கும் நேரலாம்.

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து நடுவண் அரசில் குவித்துக்கொள்ளும் சர்வாதிகாரப் போக்கினை காங்கிரசுக் கட்சி தொடக்கி வைத்தது. அதை நிறைவேற்றி முடிக்க பா.ச.க. துடிக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் நேரடியாக ஒன்றிய ஆட்சிக்குட்பட்ட குறு மாநிலங்கள் உட்பட 31 உள்ளன. இவற்றில் 17 மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆட்சி செலுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் தனியொரு கட்சியினால் அடுத்த பொதுத் தேர்தலில் பா.ச.க.வை முறியடிக்க முடியாது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுபடுத்தக்கூடிய வலிமையான தலைமையும் இல்லை. இந்த அப்பட்டமான உண்மையை அனைவரும் உணரவேண்டும்.

கடந்த காலத்தில் தேர்தல் ஆதாயம் ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கொள்கை, கோட்பாடுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டுப் பல மாநிலக் கட்சிகள் பா.ச.க.வுடன் கூட்டுச் சேர்ந்தன. அதன் விளைவாக பா.ச.க. தன்னை வளர்த்துக்கொண்டு வலிமைப் பெற்றது. ஆனால், கூட்டுச் சேர்ந்த மாநிலக் கட்சிகளின் நிலை என்ன? சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சிகள் போன்று அவை ஆயின.

மராட்டியத்தில் பா.ச.க.வுடன் கூட்டுச் சேர்ந்த சிவசேனையும், தெலுங்கானாவில் கூட்டுச் சேர்ந்த கே.சி.ஆர். காங்கிரசும், பஞ்சாபில் கூட்டுச்சேர்ந்த சிரோன்மணி அகாலிதளமும் இன்று கசப்பான அனுபவங்களுடன் பா.ச.க.வுடன் உள்ள கூட்டை முறித்து வெளிவந்துள்ளன. பீகாரில் நிதிஷ்குமார் வலிமை குன்றி பா.ச.க. ஆட்டிப்படைக்கும் பொம்மை முதலமைச்சராக நீடிக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டுச் சேர்ந்த அ.தி.மு.க. ஆட்சியை இழந்துள்ளது. ஆனால், மேற்கண்ட மாநிலங்களில் செல்வாக்கு இல்லாமல் இருந்த பா.ச.க. இப்போது அதே மாநிலங்களில் ஓரளவுக்குக் காலூன்றி உள்ளது. அதனுடன் கூட்டுச் சேர்ந்த மாநிலக் கட்சிகளே இதற்குக் காரணமாகும். ஒட்டுண்ணி செடிகள் மரங்களில் முளைத்து தழைத்து வளர்ந்து தாய் மரத்தையே ஒரு கட்டத்தில் வீழ்த்திவிடும்.

இந்துத்துவாவாதிகள் மேற்கே ஆப்கானிசுதானத்திலிருந்து கிழக்கே மியான்மர் வரையிலும், வடக்கே நேபாளத்திலிருந்து தெற்கே இலங்கை வரையிலும் அகண்ட இந்துத்தான் அமைக்கவேண்டும் என்பதையே தங்களது குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். “மொழிவழி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்ததே மிகப் பெரிய தவறு. மாறாக, மாநில எல்லைக்கோடுகளை அழித்துவிட்டு இந்தியா முழுவதையும் 100 சனபாதங்களாகப் பிரிக்கவேண்டும். இவை அனைத்தும் ஒரே அரசின் ஆட்சியின் கீழ் அமையக் கூடிய அகண்ட பாரதத்தை அமைக்கவேண்டும்” என ஆர்.எசு.எசு. தலைவர் கோல்வால்கர் அழுத்தந் திருத்தமாகக் கூறியதே பா.ச.க.வின் குறிக்கோளாகும். அதை நோக்கியே நாட்டை நகர்த்த பா.ச.க. முயலுகிறது.

பா.ச.க.வின் இந்தத் திட்டத்திற்கு சரியான மாற்றுத் திட்டம் கொடுப்பதுதான் அதை வீழ்த்துவதற்கான வழியாக இருக்க முடியும். மொழிவழி மாநிலங்களுக்குத் தன்னாட்சி உரிமைக் கொடுத்து இந்திய அரசுக்கு வெளியுறவுத்துறை, இராணுவம், செய்திப் போக்குவரத்து போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கும் வகையிலான ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டாலொழிய பா.ச.க.வை முறியடிக்க இயலாது.

இதற்கு மாறாக, பதவிப் பங்கீடு அடிப்படையில் கூட்டணி அமைப்பது என்பது ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது.

பல்வேறு மொழிவழித் தேசிய இன மக்களுக்குத் தன்னுரிமை கொடுத்து, இவ்வாறு உரிமைபெற்ற மொழிவழித் தேசிய இனமக்கள் தாமாகவே விரும்பி இணைந்த ஒரு கூட்டாட்சி நாடாக இந்தியா விளங்க வேண்டுமா? அல்லது மத்தியில் அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு பல்வேறு மொழிவழித் தேசிய இனமக்களையும் தங்களுக்கு அடிமைப்பட்ட மக்களாகக் கருதும் ஏகாதிபத்திய நாடாக இந்தியா விளங்கவேண்டுமா? என்பதை முடிவு செய்யவேண்டிய கட்டம் பிறந்தாகிவிட்டது.

தேசிய இனப்பிரச்சனையில் அகில இந்தியவாதிகள் எத்தகைய இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதற்கு மற்றொரு சான்றினைக் காட்ட விரும்புகிறேன்.

முசுலீம்கள் என்ற மத உணர்வின் அடிப்படையில் பாகிசுதானுடன் இணைந்த கிழக்கு வங்க மக்கள் தாங்கள் தனித் தேசிய இனம் என்பதை உணர்ந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயன்றபோது அவர்களை ஒடுக்குவதற்கு பாகிசுதான் இராணுவம் முயன்றது. வங்க மக்கள் தங்களின் உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மறைந்த தலைமையமைச்சர் இந்திரா உதவினார். இந்திய ராணுவம் பாகிசுதான் இராணுவத்தை முறியடித்து வங்க தேசம் உருவாக வழி வகுத்தது. அதைப்போலவே எல்லைகாந்தி, அப்துல்காபர்கான், தலைமையில் பட்டாணிய இனமக்கள் தங்கள் தனித் தேசிய இனம் என்பதை வலியுறுத்தி பட்டாணிசுதான் வேண்டுமென்று பேராடியபோது அதற்கு தலைமையமைச்சர் இந்திரா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். அதைப்போலவே பாகிசுதானிலுள்ள சிந்தி தேசிய இனமக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு தலைமையமைச்சர் இந்திரா ஆதரவு தெரிவித்தார்.

பாகிசுதானிலுள்ள வங்காளிகள், பட்டாணியர்கள், சிந்திகள் ஆகியோர் தங்களின் தனித் தன்மையைப் பாதுகாக்கவும், தாங்கள் தனித் தேசிய இனம் என்பதை நிலை நிறுத்தவும் நடத்திவரும் தன்னுரிமைப் போராட்டங்களுக்கு காங்கிரசுக் கட்சி, பாரதிய சனதாக் கட்சி போன்ற அகில இந்தியக் கட்சிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தன. தெரிவித்து வருகின்றன. ஆனால், இதே அகில இந்தியக் கட்சிகள் இந்தியாவில் எந்த மொழிவழித் தேசிய இன மக்களாவது உரிமைகளை வலியுறுத்திப் போராடத் தொடங்கினால் அதற்குப் பிரிவினைவாதம் என்ற பட்டம்சூட்டி அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சிகள் செய்கின்றன.

பாகிசுதானிலுள்ள வங்க மக்கள் உரிமைக்காகப் போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்தது இந்தியா. ஆனால், இலங்கையிலுள்ள தமிழர்கள் அதே காரணத்திற்காகப் போராடும்போது அவர்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தை அனுப்பியது இந்திய அரசு. அதுமட்டுமல்ல, வங்க மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அகில இந்தியக் கட்சிகள் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பழக்கப்பட்ட இந்த அகில இந்தியக் கட்சிகள் யதார்த்த உண்மைகளைப் புரிந்துகொள்ள பிடிவாதமாக மறுக்கின்றன.

அதேநேரத்தில் இன்னொன்றையும் நான் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மொழிவழித்தேசிய இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு தோன்றி வளர்ந்த பல மாநிலக் கட்சிகள் பதவி வெறியின் காரணமாக இந்த மகத்தான இலட்சியத்திற்குத் துரோகம் செய்துவிட்டன. மாநில சுயாட்சி என்ற போலி கூக்குரலை எழுப்பிக்கொண்டு அதேவேளையில் அந்தக் கோரிக்கையைக்கூட தொடர்ந்து வற்புறுத்தாமல் இக்கட்சிகள் இரட்டைவேடம் போடுகின்றன. பதவியில் இல்லாதபோது மாநில சுயாட்சி முழக்கம், பதவியில் அமர்ந்த பிறகு மத்திய ஆட்சிக்கு வெண்சாமரம் வீசும் வேடம். இத்தகையவர்களின் தகாத போக்கின் விளைவாக மாநிலங்களின் உரிமைப் போராட்டம் சற்றுப் பின்னடைந்திருந்தாலும் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறியும் காலம் நெருங்கிவிட்டது. “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” என்று இவர்கள் எழுப்பும் முழக்கம் வெறும் வெற்று முழக்கம். “உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கைகொடுப்போம்” என இவர்கள் போடும் அர்த்தமற்ற முழக்கம் இவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்றால் ஊழல் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் தேர்தல் உறவுக்கு கைநீட்டவும்தான் செய்திருக்கிறது.

தற்போதைய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான சட்டமாகும். இச்சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மாநிலங்கள் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. This is not a Federal Constitution. This is a Unitary Constitution. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

72ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேற்றப்பட்டது நமது அரசியல் சட்டமாகும். மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னால் வகுக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டம் இன்றைய மக்களின் தேவைகளையோ, எதிர்ப்பார்ப்புகளையோ நிறைவேற்ற முடியாத ஒன்றாகத் திகழுகிறது. கால மாறுதல்களுக்கேற்ப ஈடுகொடுக்க இச்சட்டத்தினால் இயலவில்லை. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்து மாற்ற முடியாத அளவுக்குச் சீர்கெட்டுவிட்டது. எனவே, மாநிலங்களுக்குத் தன்னாட்சி உரிமை அளிக்கும் வகையில் உண்மையான கூட்டாட்சி சட்டம் வகுக்கப்பட புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கப்படவேண்டும்.

புதிய அரசியல் யாப்பு அவை ஏன் வேண்டும்?

புதிய அரசியல் யாப்பு அவை ஏன் வேண்டும் என்பதற்குக் கீழ்க்கண்ட வலுவான, நியாயமான காரணங்கள் உள்ளன. அவையாவன:

  1. தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் யாப்பு அவை இந்திய மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அவையாகும். வெள்ளையர் காலத்தில் சொத்துரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமையளிக்கப்பட்டிருந்தது. 1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர்கள் வாக்களித்து 1946ஆம் ஆண்டில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சட்டமன்றங்களிலிருந்து அரசியல் அரசியல் யாப்பு அவைக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  2. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சுதேச சமசுதானங்களில் வாழ்ந்தனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக சுதேச மன்னர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அரசியல் யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  3. மொத்தத்தில் அரசியல் யாப்பு அவை சொத்துரிமை கொண்டவர்கள், சுதேச மன்னர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாக இருந்தது. இந்திய மக்களில் பெரும்பாலோரின் உண்மையான பிரதிநிதிகள் இந்த அவையில் இடம்பெறவில்லை.
  4. 1950 சனவரி 26ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1954ஆம் ஆண்டிலிருந்து மொழிவழியாக இந்திய மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டன. பிரிட்டிசு ஆட்சிக் காலத்தில் இருந்த மாநிலங்களின் அமைப்பு வேறு. தற்போதுள்ள மாநிலங்களின் அமைப்பு வேறு. நிலவியல், அரசியல், பொருளாதாரம், சமுதாய அடிப்படையிலும், நிருவாக அடிப்படையிலும் மாநிலங்களின் உருவங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்தப் புதிய மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் அமையவில்லை. மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு இவை முட்டுக்கட்டையாக உள்ளன. இதன் விளைவாக மத்திய – மாநில மோதல்கள் உருவாகியுள்ளன. மொழிவழி மாநிலங்கள் அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் மொழிவழியாக மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட பிறகு பொருந்தி வரவில்லை.
  5. இந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்ட போது மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியிருந்தது. எனவே Federal அம்சங்கள் கொண்ட அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் Unitary அம்சங்கள் நிறைந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிவிட்டார்கள். தற்போது பல மாநிலங்களில் மாநில உரிமைகளை வலியுறுத்தும் கட்சிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டன. இந்தியா முழுவதிலும் ஒரே கட்சி ஆட்சி என்பது இனி எக்காலத்திலும் சாத்தியமற்றது. எனவே மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு கட்சிகள் ஆட்சி நடத்துவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தற்போதைய அரசமைப்புச் சட்டம் அமைந்திருக்கவில்லை.
  6. “பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியே இந்தியா” என்பதை தற்போதைய அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இந்திய தேசியம் என்னும் இல்லாத ஒரு தேசியத்தை வற்புறுத்தும் அரசமைப்புச் சட்டமாக இது விளங்குகிறது.
  7. தமது அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 72 ஆண்டுக் காலத்தில் மத்திய – மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுவதுமாக மனதில்கொண்டு பார்த்தால் மத்திய – மாநில உறவுகள் முழுமையாகச் சீர்கேடு அடைந்திருப்பதையே நம்மால் உணர முடிகிறது. காலத்திற்கேற்றதாக நமது அரசமைப்புச் சட்டம் இல்லை என்ற உண்மையையே இது காட்டுகிறது.
  8. தற்போதைய அரசமைப்புச் சட்ட வரம்புக்குட்பட்டு மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குவது என்பது இயலாத ஒன்று.
  9. அரசமைப்புச் சட்டத்திலுள்ள குறைபாடுகளைப் போக்குவதற்கு நமது அரசமைப்புச் சட்டத்தில் சில பிரிவுகளைத் திருத்துவதன் மூலமோ அல்லது நீக்குவது மூலமோ செய்துவிட முடியாது.
  10. சோசலிசச் சமுதாயம் அமைப்பதை குறிக்கோளாக ஏற்கும் திருத்தம் 1976ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடும் பல பிரிவுகள் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளன.

புதிய அரசியல் யாப்பு அவை கூட்டப்பட்டு அதன் மூலம் மட்டுமே அரசமைப்புச் சட்டம் பற்றிய ஆய்வு நடைபெற வேண்டும். அமெரிக்க நாட்டு குடியரசுத் தலைவராக இருந்த செபர்சன் கூறியபடி, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அவரவர்கள் விருப்பப்படி அரசை அமைத்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே பல தலைமுறைகளைக் கடந்துவிட்ட நமது அரசமைப்புச் சட்டமும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், எவ்வளவு சிறந்தவர்களாக இருந்தாலும் 10 அல்லது 12 பேர்களைக் கொண்ட குழுவை நியமித்து அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது என்பது தவறானது ஆகும். ஏனென்றால் இவர்கள் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் அல்லர். இவர்களை நியமித்த ஆளுங்கட்சிக்கு மட்டுமே பதில்கூற வேண்டியவர்கள்.

எனவே சகல தேசிய இனங்களுக்கும் சம பிரதிநிதித்துவம் உள்ள வகையில் புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கப்படவேண்டும்.

இந்தக் கோரிக்கை புதியது அல்ல. அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரசு அரசுகள் புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை தங்கள் சட்டமன்றங்களில் நிறைவேற்றி உள்ளன.

தேசிய இனங்களின் தன்னுரிமையையும், உண்மையான கூட்டாட்சி முறையினையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும். இந்த குறிக்கோளை ஏற்றுக்கொண்டுள்ள அனைவரும் தோளோடு தோள் நின்று ஒன்றுபட்டுப் போராட வேண்டிய காலகட்டம் பிறந்துவிட்டது.

ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே நாடு; ஒரே அரசு என்ற திட்டத்துடன் செயல்படும் பா.ச.க. அரசுக்கு எதிரான மாற்றுத் திட்டம் என்பது தன்னாட்சி உரிமைக் கொண்ட மாநிலங்களும், மாநிலங்கள் விரும்பி இணைந்த கூட்டாட்சி என்பதேயாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் இணையும் கட்சிகளே பா.ச.க.வுக்கு எதிரான வலிமை வாய்ந்த அணியாகத் திகழும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.