வடமொழியின் ஊடுருவலால் ஊறு நேராமல் தடுக்க இலக்கண வேலி அமைத்து தமிழ்மொழியைக் காத்தவர் தொல்காப்பியர். வடவரின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழரின் பண்பாடு அழியாமல் காக்கப் பண்பாட்டு வேலி அமைத்துப் பாதுகாத்தவர் திருவள்ளுவர்.
வள்ளுவரின் நூலுக்குத் தொல்காப்பியமே வழிகாட்டும் இலக்கணமாயிற்று. தொல்காப்பியர் வகுத்த நான்கு வகைப் பாவினங்களும், அறம் முதலிய மூன்று பொருட்கண்ணே இயங்கவேண்டும். அதற்கிணங்க அறம், பொருள், இன்பம் என முப்பாலாகத் தனது நூலை யாத்தவர் வள்ளுவர். தொல்காப்பியமோ, திருக்குறளோ மற்றும் தொகை நூற்களோ வீடு பேற்றை அல்லது மோட்சத்தைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த இலக்கண இலக்கியங்கள் எழுந்த காலத்தில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றுமே தமிழர்களின் நோக்கங்களாகவும், வழிகாட்டும் நெறிகளாகவும் திகழ்ந்தன. வீடு என்று கூறப்படும் நான்காம் உறுதிப் பொருள் பின்னர் புகுத்தப்பட்ட கருத்தேயாகும். பிற்காலத்தில் எழுந்த நூற்களிலேயே நாற்பால் பேசப்படுகிறது.
பல நூறு புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல்களே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவையாகும். ஆனால், தனியொரு புலவரால் முதன்முதல் இயற்றப்பெற்ற முழுமையானதும், முதன்மைவாய்ந்ததுமான ஒரே பெரும் தமிழ் இலக்கியம் திருக்குறளே ஆகும். இத்தகைய சிறப்பு வள்ளுவர் யாத்த நூலுக்கு மட்டுமே உண்டு.
தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளுக்கு எதிராக முதன்முதல் எழுந்த புரட்சிக்குரல் வள்ளுவரின் குரலே ஆகும். எந்தவொரு சமுதாயமாக இருந்தாலும் நாகரிகம் பெற்று வளர வளர சமுதாயக் கேடுகளும் மெல்லமெல்ல அதனுள் பரவுவது இயற்கையே ஆகும். அந்த வகையில் மொழியின் செழுமை, வேளாண்மை மற்றும் வாணிபம் இவற்றால் பெருகிய செல்வச் செழிப்பு போன்றவற்றின் விளைவாக சமுதாயத்தில் சில கேடுகளும் பரவும். அவ்வாறே பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளான பிறனில் விழைதல், கூடா ஒழுக்கம், வரைவின் மகளிர் தொடர்பு, கள் குடித்தல், சூதாடுதல் போன்றவை சமுதாயத்தில் ஊடுருவி நாளடைவில் சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கங்களாக மாறிவிட்டமை கண்டு மனம் கொதித்த வள்ளுவர் இச்சமுதாயக் கேடுகளையும், அவற்றின் வழி ஒழுகுபவர்களையும் மிகக் கடுமையாகச் சாடினார்.
தொகை நூற்களைப் பாடிய பழம் புலவர்கள் பலரும் ஒழுக்க நெறிகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட சமுதாயக் கேடுகளை சுட்டிக்காட்டவோ, கண்டிக்கவோ ஒருவர்கூட முன்வந்து பாடியதில்லை. ஆனால், முதன்முதலாக இவற்றை மிகக் கடுமையாகச் சாடிய நூல் திருக்குறளே ஆகும்.
பிறனில் விழையாமை
வள்ளுவர் சாடிய சமுதாயக் கேடுகளில் முதன்மை வாய்ந்ததாக பிறனில் விழைதலைக் குறிக்கிறார். ஆனால், இந்தக் கருத்து அவருக்கு முன் எழுந்த தொகை நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை என்பது சிந்திக்கத்தக்கதாகும். ஆடவர் தமது காமக் கிழத்தியரோடும், பரத்தையரோடும் கொண்ட தொடர்பு பழந்தமிழ் இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், பிறன் ஒருவனின் மனையாளோடு பிறிதொருவன் கொள்ளும் தகாத தொடர்பு குறித்து தொகை இலக்கியங்கள் எவற்றிலும் குறிப்புகள் இல்லை. முதன்முதலாக வள்ளுவர்தான் இந்தச் சீர்கேட்டினை வன்மையாகக் கண்டிக்கிறார். அவருக்குப் பின் தோன்றிய இலக்கியங்களான நாலடியார், அறநெறிச்சாரம் ஆகிய நூல்களில் பிறனில் விழையாமை கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
பழம் உரையாசிரியர்களான இளம்பூரணர், மணக்குடவர், பரிமேலழகர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் போன்றவர்களும் அதற்குப் பின்னர் தற்காலம் வரை நூற்றுக்கணக்கானவர்களும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். இவர்களில் இளம்பூரணர் உரையை மேற்கோளாகச் சுட்டிக்காட்டி முனைவர் சா. கிருட்டின மூர்த்தி அவர்கள் எழுதியுள்ளதாவது-
“சமுதாயத்தில் அகவாழ்வுக் குறைபாடுகள் இருந்தன என்பதையும் காண முடிகின்றது. “பிறனில் விழையாமை பேதைமை என்பர் வள்ளுவர்! பிறன்மனை நயத்தல் கடியப்பட வேண்டும் என்பது அவரது கொள்கை. “அறன்கடை நின்று பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும், இழிகுல மகளிரோடுங் கூடி இன்பநுகர்வாரும் போல, அறமும் பொருளும் இழத்தலேயன்றிப் பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாங்கருதிய இன்பமும் இழக்கின்றார்?” என்பர் பரிமேலழகர். இதனால், பிறன்மனை நயத்தலால் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் இல்லையாகின்றன என்பது புலனாகின்றது.
ஆனால் இளம்பூரணர் இதனின்றும் வேறுபட்ட நிலையைக் காட்டுவர். பிறன்மனைக் கூட்டத்தை அவர் கடிந்திடினும் அதற்கு அவர் தரும் விளக்கம் ஓர் உண்மைநிலையைச் சுட்டுகின்றது. அக்காலச் சமுதாயத்தில் நிலவிய இழிசெயலைப் படம்பிடித்துக் காட்டுகின்றது என்று கூறலாம். “அறத்திற்குக் கழிவு வரும் அகப்பொருளாவது பிறன்மனைக் கூட்டம்; பொருட்பயன் வருதலாவது அவராலேயே பொருள் பெறுதல். அவ்விடத்து இன்பமும் பொருளும் பயப்பினும் அதனை வழங்குதலும் பழிக்கப்பட்டது” என்பர் இளம்பூரணர். பரிமேலழகர் கூறியவாறு அல்லாமல் இவர் ‘பிறன்மனைக் கூட்டம் இன்பமும் பொருளும் பயக்கும்’ என்று கூறுதல் நோக்கத்தக்கது. இதனால் பிறன்மனை நயத்தலில் அவரால் பொருள் பெற்றுப் போகம் துய்க்கும் நிலை இருந்தது என்றும், அது சான்றோர்களால் கடியப்பட்டு வந்தது என்றும் தோன்றுகிறது”.1
பேராண்மை
பிறனில் விழையாமை என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளான
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறன்ஒன்றொ ஆன்ற ஒழுக்கு (148)
என்பதில் வரும் பேராண்மை என்னும் சொல்லிற்கு உரை எழுதிய பரிமேலழகர் “புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குவதற்கு அருமையின், அதனையடக்கிய ஆண்மையைப் பேராண்மை” என்றார். ‘ஒன்றோ’ என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்” என விளக்கம் தந்திருப்பது சிறப்பானதாகும்.
ஆரியர் வருகையின் விளைவு
குறளின் உரையாசிரியர்கள் பலரும் “பிறனில் விழையாமை” என்னும் அதிகாரத்திற்கு சிறப்பாக உரை எழுதியுள்ளனர். ஆனாலும், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய திருக்குறள் மெய்பொருளுரையில் விரிவாகவும், ஆழமாகவும் எழுதியுள்ளது வருமாறு:
“திருமணம், வரைவு, வரைதல் எனப்பெற்றது. வரைதல் – ஆண், பெண் ஒழுக்கத்திற்கு வரை – எல்லை – இடல். திருமணம் செய்யாது, தம் விருப்பம் போல் ஒழுகும் பெண்டிர் ‘வரைவின் (வரைவு + இல்) மகளிர்’ எனப் பெற்றனர். அவர்கள் பொன்னுக்கோ, பொருளுக்கோ தங்களிடம் தொடர்பு கொள்ள வரும் ஆடவர்களிடம் தங்களின் கற்பை விற்றனர். அவர்களுக்கு முல்லைமாறிகள் என்றும் குமுகாய நிலையில் இழித்துரைக்கப் பெற்றனர். (முல்லை – கற்பு; மாறுதல் – விற்றல்), அவர்களுக்கு பரத்தை (பரத்துபட்டு ஒழுகுபவள்) என்னும் பெயர் இலக்கிய வழக்காக வேரூன்றியது. பிற்காலத்து அவர்கள் விலை மகளிர், பொருட்பெண்டிர் என்றும் அழைக்கப் பெற்றனர்.
இல்லற வாழ்வு கொண்டவர்கள் இத்தகு பேணா ஒழுக்கத்திற்கு நாணினர். (தொல்: 1096: 15). ‘பெரியோர் ஒழுக்கம் பெரிது’ எனப் பேணினர். (தொல்:1096: 17). ‘பெரியோர் சென்ற அறவழிப் பிழையாது’ (மதுரைக்: 192) இல்லறம் ஒழுகினர். ‘ஆன்றோர் சென்ற நெறிவழிச் செல்பவனையே மக்கள் மதித்தனர்’.
‘ஆன்றோர் செல்வழி வழாஅச்
சான்றோன்’Â (நற்:223)
அன்றைய ஆடவரின் பரத்தையர் தொடர்பு மறுக்கப் பெற்றது. இகழப் பெற்றது. அதனால் இல்லறத்துப் பல பூசல்கள் விளைந்தன.
மனைவி, இல்லக் கிழத்தி எனப் பெற்றாள். மனைவி தவிர, வரைவில் பெண் ஒருத்தியுடன், திருமணமானவன் தொடர்ந்து தொடர்பு கொண்டால், அவள் அவனின் காமக் கிழத்தி எனப்பெற்றாள்.
ஆடவர் தம் காமக் கிழத்தியரொடும், சிலகால் பரத்தையரொடும் கொண்ட தொடர்பு பழந்தமிழ் இலக்கியங்களுள் காணப் பெறுகிறதே தவிர, பிறனொருவன் மனைவியொடு கொள்ளும் தொடர்பு, யாமறிந்த வரையில் அவற்றுள் யாண்டும் காணப் பெறல் இல்லை. தமிழியல் மரபில் அத்தீயவொழுக்கம் பேணப் பெறுவதும் காணப் பெறுவதும் இல்லை. ஓரிரண்டு நிகழ்வுகள் உலகியலில் காணப் பெறினும், இலக்கியங்களுள் காட்டப் பெறுவது இல்லை.
ஆனால், ஆசிரியர் காலத்து அவ்வழுவொழுக்கமாம் பிறனில் விழைதல் கண்டிக்கவும் இகழவும் பெறுதல், அக்கால், அது தலையெடுத்திருந்தது என்பதையே காட்டுகின்றது என்க. அதற்கு ஆரியர் வரவே காரணமாயிருத்தல் வேண்டும் என உய்த்துணரப் பெறுகின்றது. அவர்தம் ஊடுருவலால் கெட்ட தமிழியல், பண்பாட்டுக் கூறுகளுள் இதுவும் ஒன்றாயிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஏனெனில், ஆரியர் வழியில் அவர்தம் மனைவியர் வேறு பிறரிடம் மேவுதல், அவர்தம் அதர்வன வேதத்துள்ளும் அவ்வாரிய இலக்கியங்களுள்ளும், அவர்தம் இதிகாச, புராணங்களுள்ளும் மிகவும் பரவலாகக் காணப்பெறுகின்ற செய்தியாகும். அவர்தம் காம நூல்களுள்ளும் இவ்வழுவொழுக்கம் ‘பரடகீயம்’ அல்லது ‘பாரதிகம்’ என்னும் பெயர்களால் விளக்கப்பெறுவது, நோக்கத்தக்கது. வாத்சாயனாரின் காமசூத்திரம், கொக்கோக முனிவரின் ‘கொக்கோகம்’, காமாந்தகரின் காமசாத்திரம் ஆகிய நூல்களுள் அதனைக் கண்டு கொள்க.
இத்தகைவிலா அவ்வொழுக்கத்திற்கு, வான்மீகியார் இராமாயணமும் வியாசரது மகாபாரதமும் அவற்றுள் வரும் இந்திரன், சூரியன், சோமன், வருணன், அக்னி, விஷ்ணு, பிரம்மன், தாருகா கானகத்து இருடிகள் போன்றவர்களின் பிறன்மனை விழைந்த ‘களவொழுக்கக் கதைகளுமே சான்றுகளாக நிற்கின்றன. அவர்தம் தேவியரும் அத்தீயவொழுக்கினரே”.
பழந்தமிழர் சமுதாய மரபில் காணப்பெறாத பிறன் மனைவியோடு கொள்ளும் தொடர்பு என்னும் கேடு ஆரியரின் வரவுக்குப் பின்னரே பரவியிருக்க வேண்டும் என அறிஞர் பெருஞ்சித்திரனார் திட்டவட்டமாகக் கூறியிருப்பதோடு, அதற்கான ஆரிய இலக்கிய, இதிகாச, புராணங்களிலிருந்து சான்றாதாரங்கள் காட்டி நன்கு நிறுவியுள்ளார்.
பெருஞ்சித்திரனார் அவர்களின் உரையில் மற்றொரு புதுமையான கருத்தையும் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பானதாகும். “பலர் தொடர்புடைய பெண் பரத்தை எனப் பெற்றது போல், பலர் தொடர்புடைய ஆண் பரத்தன் என இழித்துரைக்கப் பெற்றான்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பின் கண்ட குறளையே சான்றாக எடுத்துக்காட்டுகிறார்.
பெண்இயலார் எல்லாரும் கண்ணில் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
“பெண்கள் உன்னைக் கண்டால் தமது கண்களால் உன்னைத் தழுவுவர்; ஆகவே நீ பரத்தமை உடையவன். உன்னை நான் கூடிடேன்” (பரத்தமை உடையவன் பரத்தன்)2
துறவியர் ஒழுக்கக் கேடு
“தமிழறிஞர் க.ப. அறவாணன் அவர்கள் எழுதிய திருவள்ளுவம் என்னும் நூலில் பிறனில் விழைதல் என்னும் கேட்டினைக் குறித்துப் புதியதோர் கண்ணோட்டத்தில் அணுகியுள்ளார். பழந்தமிழ் சமுதாயத்தில் பரவிய பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவியர்களில் சிலர் இத்தகைய ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டிருந்திருக்கவேண்டும். அதன் காரணமாகவே வள்ளுவர் இக்கேட்டினைக் கண்டித்துள்ளார் எனக் கருதுகிறார். அந்தக் கருத்தின் அடிப்படையில் பின்வருமாறு எழுதுகிறார்:
திருவள்ளுவர் புதுவதாகச் சேர்த்த ஓர் அதிகாரம் ‘பிறனில் விழையாமை’ (15) ஆகும். முன்பு இக்கருத்து தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. திருவள்ளுவர் முன் எடுத்துப் பேசுவதற்குத் தனிக் காரணம் இருத்தல்வேண்டும்.
திருக்குறளில் புதுவதாக இடம் பெற்ற கருத்துருக்களுள் ‘பிறனில் விழையாமை’ என்பது மிக முதன்மையானது. திருவள்ளுவத்துக்கு முன்பு இக்கருத்துச் சங்க இலக்கியத்துள் எங்கும் இடம் பெறவில்லை என்பது வினாவுக்கு உரியதாகவும், வியப்புக்கு உரியதாகவும் இருக்கின்றது. முதன்முதலில் இக்கருத்து ஏன் எடுத்து ஓதப்பெற்றது என்பது வினவத் தக்கது. கிறித்தவம், பௌத்தம் ஆகிய சமயங்களின் வரலாறு இதற்கு விடையளிக்கிறது. செர்மனியைச் சார்ந்த மார்ட்டின் லூதரால் (1483-1546) அதுவரை நடைமுறையில் இருந்த கிறித்தவத்துக்கு எதிர்க்குரல் எழுப்பப்பட்டது. அப்போதைய கிறித்தவம் திருமணம் செய்துகொள்ளாத துறவியரைக் கொண்டும், இத்தாலி ரோம் நகரில் உள்ள போப்பைத் தலைமையாகவும் கொண்டும் இயங்கியது. துறவியருடைய ஒழுக்க நெறி பற்றிக் கடுமையாகச் சாடப்பட்டது. பிறரின் மனைவியரோடும், ஆங்காங்கே துறவியர் கள்ள உறவு கொண்டிருந்தனர். இது கண்டுபிடிக்கப்பட்டது. பிறனில் விழைதல் பற்றிய பேச்சும் பைபிளில் இடம் பெற்றிருந்தது. பௌத்த சமயத் துறவியரிடமும் இதுபோன்ற போக்கு காணப்பட்டது. ஆரிய புராணக் கதைகளிலும் துறவியர்களின் ஒழுக்கக் கேடு இடம் பெற்றுள்ளது. கௌதம முனிவரின் மனைவியைத் தேவேந்திரன் பெண்டாடியது முதலாயவற்றைச் சுட்டலாம்.
திருவள்ளுவர் முதன்முதலாகப் பிறனில் விழைதலைப் பற்றிப் பேசுதற்குத் துறவியரால் ஏற்பட்ட அக்கால நிலைமையும் காரணமாக இருந்திருக்கவேண்டும். பெண்மை நயத்தலே ஆண்மை என்று தவறாகக் கருதப்பெற்றது. ஆனால் பெண்மை நயவாமையே ஆண்மையில் சிறந்த பேராண்மை என வள்ளுவரால் குறிக்கப்பெற்றது” என்று அறிஞர் அறவாணன் கருதுகிறார்.3
கூடா ஒழுக்கம்
தவக்கோலம் பூண்டு தவநெறியை மேற்கொண்டுள்ள துறவி ஒருவனுக்கு மனதை அடக்கும் வல்லமை இல்லாமல் பொய்யொழுக்கத்தை மேற்கொள்ளுதல் பெரும் சமுதாயக் கேடாகும் என வள்ளுவர் சாடுகிறார். அதாவது, போலித் துறவிகளின் முகமூடிகளைக் கிழித்து அவர்களை அம்பலப்படுத்தும் வகையில் இந்த அதிகாரத்தை வள்ளுவர் படைத்தார். இதற்கு முந்திய அதிகாரத்தில் தவம் செய்யும் நெறியைச் சொல்லும் வகையில் அதற்கு தவம் என்னும் பெயரிட்டார். அதற்கடுத்த அதிகாரத்தில் தவநெறியை மேற்கொள்ளவேண்டிய ஒருவன் அவநெறியில் செல்லுவதைக் கண்டிக்கிறார்.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று. (273)
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொள்ளும் தவக்கோலமானது பசு ஒன்று புலியின் தோலை போர்த்திக்கொண்டு பயிரை மேய்வதற்கு ஒப்பாகும் என்பது இதன் பொருளாகும். இக்குறளுக்கு விளக்கம் தந்த மணக்குடவர் “வலியில்லாத நிலைமையை உடையவன் வலிதாகிய தவ உருவம் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து என்றவாறு” என்று கூறுகிறார்.
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். (279)
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ளவேண்டும். இதற்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் “கணைக்குச் செயல் கொலை; யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல்; அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவும் கொள்க என்பதாகும்.
ஐம்புலன்களையும் அடக்கி உலக இன்பங்களைத் துறந்து தவக்கோலம் பூண்டுள்ளதாகக் கூறி சமுதாயத்தில் நடமாடிய போலித்துறவிகளை வள்ளுவர் தோலுரித்துக் காட்டுகிறார்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் (280)
இக்குறளுக்கு விளக்கம் தர வந்த மணக்குடவர், தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா. உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமும் கடிந்து விடுவாராயின் என்றவாறு,
இது, வேடத்தால் பயனில்லை. நல்லொழுக்கமே வேண்டும் என்றார். 4
சமுதாயத்தில் நடமாடும் போலித் துறவிகளால் ஒழுக்கக் கேடுகள் பரவும். அதன் விளைவாக சமுதாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை உணர்ந்து அத்தகையவர்களை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடியிருப்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமுதாயத்தில் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்ட போலித் துறவிகளும் உலவினர் என்பது தெரிகிறது. அவ்வாறு இல்லையெனில் அத்தகையவர்களை மிகக் கடுமையாகச் சாடும் வகையில் பத்து குறட்பாக்களை வள்ளுவர் இயற்றிருக்கமாட்டார்.
வரைவின் மகளிர்
தொல்காப்பியம் மற்றும் பழந்தமிழ் இலக்கிய நூற்களில் பரத்தையர் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. பழந்தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாகரிக சமுதாயங்கள் அனைத்திலும் பரத்தமை நிலவியது. இன்றுவரையிலும் உலகம் முழுவதிலும் இந்தக் கேடு நிலவுகிறது.
தமிழ்ச் சமுதாயத்தில் காமக் கிழத்தியர், விலை மகளிர், பரத்தையர், கணிகையர் என்ற பெயர்களால் இவர்கள் அழைக்கப்பட்டனர். வள்ளுவர் வாழ்ந்த காலம் மன்னராட்சிக் காலமாகும். இலக்கிய வளமும், செல்வ வளமும் ஓங்கியிருந்த காலம். ஆனாலும்கூட சமுதாயக் கேடான இந்தத் தீமை பரவியிருந்தது. மன்னர்களும், இதை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முன்வரவில்லை. சமுதாயமும் இக்கேட்டினை புறந்தள்ள முன்வராமல் ஏற்றுக்கொண்டே ஒழுகியது. அதனால்தான் நமது இலக்கியங்களில் இவை பதிவு பெற்றுள்ளன.
ஆனால் இதை ஒரு சமுதாயக் கேடாக உணர்ந்த வள்ளுவர் மிகக் கடுமையாகச் சாடி மக்களை இக்கேட்டிலிருந்து மீட்பதற்கு முயற்சி செய்தார்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. (913)
தன்னை விரும்பித் தழுவாது பொருளுக்காக தழுவும் மகளிரோடு முயங்குதல், இருட்டறையில் பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என மிகக் கடுமையாக இடித்துரைக்கிறார் வள்ளுவர்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920)
இருவகைப்பட்ட மனமுடைய பொது மகளிரும் கள்ளும், சூதும் ஆகிய மூன்றும் நீக்கப்படவேண்டிய உறவுகளாகும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
மேற்கண்ட மூன்றுமே தனி மனிதர்களை மட்டுமல்ல, சமுதாயத்தையே கெடுக்கும் கேடுகளாகும் என இந்த அதிகாரத்தின் மூலம் வள்ளுவர் இடித்துரைக்கிறார்.
கள்ளுண்ணாமை
பழந்தமிழ் மன்னர்களும், புலவர்களும் கள்ளும், கறியும் உண்டு களித்த குறிப்புகள் பழந்தமிழ் பாடல்களில் காணப்படுகின்றன. கபிலர், ஏணிச்சேரி முடமோசியார், ஔவையார், நக்கீரர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதி விலக்கல்லர். நமது நாட்டுப் பனங்கள்ளும், தென்னங்கள்ளும் போதாது என்று ரோமாபுரியிலிருந்து சாடி சாடியாக மதுவை வரவழைத்துக் குடித்து மகிழ்ந்தனர் என்பது அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், இலக்கியச் சான்றுகளின் மூலமும் தெரியவருகிறது. அரசோச்சிய மன்னர்களும், அறிவு சான்றப் புலவர்களும் கள் குடித்து களித்தபோது மக்களும் அவ்வாறே செய்தனர் என்பதில் வியப்பதற்கொன்றுமில்லை.
ஆனால், சமுதாயப் பெருங்கேடான கள் குடித்தலை முதன்முதலாகச் சாடிய பெருமைக்குரியவர் வள்ளுவரே.
“ஒழுக்கமும், உணர்வும் அழித்தற்கண் பரத்தையர் உறவுடன் ஒத்த தீங்கினை உடையது ‘கள் உண்ணல்’ என்னும் மது அருந்தும் பழக்கம். சங்ககாலத் தமிழர்களிடம் இப்பழக்கம் மிகவாகப் பரவியிருந்தது. சங்க காலத்தை அடுத்துத் தமிழ் அரசரும், மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒரு பெரும் காரணம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுகின்றனர். மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அவர், உடல் நலமும் கெடுகிறது; உள்ள நலமும் கெடுகிறது; அவர் வைத்திருக்கும் பொருள் நலனும் கெடுகிறது; இவ் அனைத்தும் கெடுவதால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது. இதனைச் சமூக மேதையாகிய திருவள்ளுவர் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் இந்த ஒழுக்கத்தைக் கண்டித்துக் கூறியுள்ளார்” என விளக்கம் தருகிறார் அறிஞர் க.ப. அறவாணன்.5
கள் குடியர்கள் பிறரால் மதிக்கவும் படார் மற்றும் தங்கள் புகழையும் இழப்பர்; தோற்றத்தையும் இழப்பர் என எச்சரிக்கும் வகையில் வள்ளுவர்
உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். (921)
பத்து மாதம் சுமந்துப் பெற்றத் தாய்கூட கள் குடித்துக் களித்திருப்பவனைக் கண்டால் வெறுப்படைவாள் எனில், சான்றோர்கள் எத்தகைய வெறுப்புக்கொள்வார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி இடித்துரைக்கிறார் வள்ளுவர்.
தாய் ஒருத்திக் கருக்கொள்ளும்போது ஏற்படும் மயக்கை, கருவை சுமந்ததனால் உண்டாகும் உடல் துன்பம், குழந்தையை ஈனும்போது உண்டாகும் நோவு ஆகிய அத்தனையும் பெற்றப் பிள்ளையை மடியில் ஏந்தும்போது உண்டாகும் மகிழ்ச்சியில் மறந்து போகும் என கீழ்க்கண்ட நாலடியார் பாடல் கூறுகிறது.
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும். (201)
மகனை ஈன்ற போது தனது நோவையும் மறந்து மகிழ்ந்த தாய்கூட கள் அருந்தி மதி மயங்கிக் கிடக்கும் அதே மகனைக் கண்டால் வெறுப்பாள் என்னும் போது மற்றவர்கள் எந்தளவுக்குப் புறக்கணித்து ஒதுக்குவார்கள் எனச் சாடுகிறார் வள்ளுவர்.
அதே அதிகாரத்தில் மற்றொரு இடத்தில்,
கள் உண்பவர்கள் நஞ்சுண்பவர்களுக்குச் சமமானவர்கள். தங்கள் உடலுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்பவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் வள்ளுவர்,
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்டார் கள்ளுண் பவர். (926)
இக்குறளுக்கு மணக்குடவரும், பரிப்பெருமாளும் “உறங்கினார் செத்தாரோடு ஒப்பர் அறிவிழத்தலான்; அதுபோல எல்லா நாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர். மயங்குதலான் என்றவாறு,
இஃது அறிவிழப்பர் என்றது” 6 என உரைத்தனர்.
தமது காலத்தில் மன்னர் முதல் மக்கள் வரை நிலவிய கள் குடித்தல் எனும் பெரும் சமுதாயக் கேட்டிலிருந்து மக்களை விடுவிக்க வள்ளுவர் விரும்பினார். அறிவிற் சிறந்தப் புலவர் பெருமக்கள் உள்பட சான்றோர்களும் இப்பழக்கத்திற்கு இரையாகியிருப்பதைக் கண்டு வருந்திய வள்ளுவர் அனைவருக்கும் அறிவுறுத்தும் வகையில் ‘கள்ளுண்ணாமை’ என்னும் அதிகாரத்தைப் படைத்தார்.
சூது
மிகப் பழமையான உலக நாகரிகங்களில் சூதாடுதல் என்பது பரவியிருந்திருக்கிறது. இந்தியாவின் மிகத்தொன்மையான சிந்துவெளி நாகரிகக் காலத்திலும் பகடையாட்டம் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக அகழ்வாராய்ச்சியின் போது பகடைக் காய்கள் கிடைத்துள்ளன. சிந்துவெளியில் எலும்பு, சுடுமண், தந்தம் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பகடைக் காய்களை வைத்து மக்கள் பகடையாட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் வைகைக்கரைக் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் சுடுமண், தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பகடைக் காய்கள் கிடைத்துள்ளன. சூதாட்டக் காய்களை பகடை நாய்கள் என்றும், சூதாட்டப் பலகையினை பகடைப் பலகை என்றும் நமது இலக்கியங்கள் கூறுகின்றன.
மிகத் தொன்மையான சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்தே தமிழர்களிடையே சூதாட்டம் நிலவி வந்திருக்கிறது என்பது அகழ்வாராய்ச்சியின் சான்றுகளாலும், இலக்கியக் குறிப்புகளிலாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழரோடு ஒன்றிவிட்ட சூதாட்டப் பழக்கத்தினை மிகக் கடுமையாகச் சாடி அதைப் போக்குவதற்கு வள்ளுவர் பெரும் முயற்சி செய்துள்ளார் என்பதை சூது என்னும் அதிகாரம் எடுத்துக்காட்டுகிறது.
வெல்லும் திறன்வாய்ந்தவனாயினும் சூதினை விரும்பக் கூடாது. சூதில் வென்ற பொருள் தூண்டிலில் வைக்கப்பட்டுள்ள இரைக்கு ஒப்பாகும். அதைக் கவ்வும் மீன் உயிரை இழக்கும். அதைப்போல பொருள் மீது விருப்பம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவன் நிலையும் ஆகும் என்கிறார் வள்ளுவர்.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. (931)
மேலும், சூதாட்டக் களத்தை நோக்கிச் செல்பவன் தனது பொருளையும், பண்பினையும் இழப்பான் என எச்சரிக்கும் வகையில் வள்ளுவர்,
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். (937)
இக்குறளுக்கு உரை எழுதப் புகுந்த பரிமேலழகர் “அறம், பொருள், இன்பங்கட்கு அடைத்த காலம் சூதாடு களத்தின் கண் களியுமாயின் தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும் என்று கூறுகிறார். அதாவது வரம்பற்ற செல்வமும், அதிகாரமும் படைத்த அரசனாக இருந்தாலும் சூதாடினால் தனது அழிவினைத் தானே தேடிக்கொள்வான்” என்று கூறுகிறார்.7
பாரதத்தில் தர்மவான் என அனைவராலும் போற்றப்பட்ட தர்மன் சூதாட்டக்களத்தில் புகுந்து தன் அரசையும் இழந்ததோடு நிற்கவி்ல்லை. “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்ற ஆன்றோர் வாக்கினையும் மறந்து தன்னையும் பெறற்கரிய தனது தம்பிகளையும் ஒருவர்பின் ஒருவராகப் பணயம் வைத்து அனைவரையும் இழந்து அடிமைகளாக்கியதோடு நிற்காமல், தங்களது மனைவியும், பாஞ்சால நாட்டு மன்னன் மகளுமான பாஞ்சாலியையும் பணயம் வைத்துச் சூதாடி அவளையும் இழக்கிறான், அவை நடுவே அவள் மானபங்கப்பட்டதற்கும் அவனே காரணமாகிறான். சூதாட்ட வெறியின் விளைவாக 12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் மேற்கொள்ள நேர்ந்து சொல்லொண்ணா துன்பங்களுக்கிடையே தானும், பாஞ்சாலியும், தம்பிகளுமாக உழன்றான் தருமன் என்பது பாரதக் கதையாகும்.
இத்தகைய நிலை தமிழர்கள் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் சூதாட்டத்தை மிகக் கடுமையாகச் சாடுகிறார் வள்ளுவர்.
“பிறனில் விழைதல், கூடா ஒழுக்கம், வரைவின் மகளிர் தொடர்பு, கள்ளுண்ணுதல், சூதாடுதல்” ஆகியவற்றை சமுதாயக் கேடுகளாகக் கருதி வள்ளுவர் மிகக் கடுமையாகச் சாடினார். இக்கேடுகள் அனைத்தும் தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள நாகரிக சமுதாயங்கள் அனைத்திலும் அன்று முதல் இன்றுவரை நீடித்து வருகின்றன. இக்கேடுகளை அறவே களைய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், இக்கேடுகளைக் குறித்து மிக வருந்தி அவற்றை சமுதாயத்திலிருந்து அறவே களையவேண்டும் எனக் கருதி அதற்காக உலக மொழி அறிஞர்களில் முதன்முதலாக குரல் எழுப்பிய பெருமை வள்ளுவருக்கு மட்டுமே உரியதாகும்.
திருக்குறளுக்கு “அறம்” என்னும் பெயர் பண்டைத் தமிழர்களிடம் நிலவி வந்தது. அறம் என்பது அற நூலான தனது நூலில் மக்கள் பின்பற்றி ஒழுக வேண்டிய ஒழுக்க நெறிகளாக அன்புடைமை, ஒழுக்கம் உடைமை, அழுக்காறாமை, புறங் கூறாமை, கள்ளாமை, சிற்றினம் சேராமை, புல்லறிவாண்மை, சான்றாண்மை, கயமை போன்றப் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தாலும் சமுதாயக் கேடுகளாக இக்கட்டுரையில் முதலில் சுட்டிக்காட்டப்பட்ட ஐந்தை மட்டுமே குறிப்பிட்டுச் சாடுகிறார்.
மக்கள் பின்பற்றவேண்டிய ஒழுக்க நெறிகள் வேறு; சமுதாயக் கேடுகள் வேறு எனப் பிரித்துக் காண்கிறார் வள்ளுவர். ஒழுக்க நெறிகள் என்பது ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டியவை. ஆனால், சமுதாயக் கேடுகள் என்பவை சமுதாயத்தைச் சீரழிக்கும் கேடுகளாகும். இக்கேடுகளைத் தவிர்க்காமல் அவற்றைப் பின்பற்றி ஒழுகும் ஒருவன் தன்னுடைய குடும்பத்தை மட்டுமல்ல, சமுதாயச் சீரழிவுக்கே காரணமாகிறான். கொடிய தொற்று நோய்க்கு ஒருவன் ஆளாக நேர்ந்தால் அவன் மூலம் அந்த நோய் அவனுடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே பரவிக் கேட்டினை விளைவிக்கும்.
திருவள்ளுவர் ஆழ்ந்து சிந்தித்துத் தொலைநோக்குப் பார்வையோடு சுட்டிக்காட்டிய இந்தப் பெருங்கேடுகள் இன்னமும் மானிட சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக களைந்தெறியப்படவில்லை. வள்ளுவரின் நெறியை முற்றிலுமாக உணர்ந்தோர் இக்கேடுகளை அகற்றுவதற்குத் தொடர்ந்து தொண்டாற்றவேண்டும். |