தமிழக மீனவர்கள் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 02 பெப்ரவரி 2022 14:34

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 102-க்கும் மேற்பட்ட படகுகளை ஏலமிடப் போவதாக சிங்கள அரசு அறிவித்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

உலகம் முழுவதிலும் எந்த நாடும் தனது கடல் எல்லையைத் தெரியாமல் தாண்டி வந்த அண்டை நாட்டு மீனவர்களை சுட்டுக் கொலை செய்வதோ, தாக்குவதோ, அவர்களின் படகுகளையும் வலைகளையும் இதர சாதனங்களையும் பறிமுதல் செய்வதோ வழக்கமில்லை. எச்சரித்துத் திருப்பி அனுப்புவதே நடைமுறைப் பழக்கமாகும்.

ஆனால் சிங்களக் கடற்படை வீரர்களுக்கு இந்திய அரசு பயிற்சி அளிக்கிறது. அந்த நாட்டுக் கடற்படைக்குத் தேவையான பீரங்கிப் படகுகளை இலவசமாக அளித்து உதவுகிறது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி இந்திய நாட்டின் குடிமக்களான தமிழக மீனவர்களில் நூற்றுக்கணக்கானவர்களைச் சுட்டுத் தள்ளியும், படகுகளைப் பறிமுதல் செய்தும் அடாவடித்தனம் செய்வதில் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 1983-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக இக்கொடுமைகளை பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தை மீறி சிங்கள வெறியர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.

உலகின் ஐந்தாவது பெரிய கடற்படை எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியக் கடற்படையோ கரையோரக் காவல் படையோ ஒரு தடவை கூட இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவோ, தமிழக மீனவர்களைக் காப்பாற்றவோ முன் வரவில்லை. அது மட்டுமல்ல, படுகொலையான மீனவர்களுக்கும் அவர்களின் படகுகளுக்கும் உரிய இழப்பீட்டை சிங்கள அரசிடமிருந்து கேட்க கூட முன் வரவில்லை. தமிழக மீனவர்களை இந்திய அரசு தனது குடிமக்களாகவே கருதவில்லை என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசு தமிழக மீனவர்களைக் கொன்றுக் குவிப்பதும் தமிழர்களுக்கு எதிரான அதே சிங்கள இன வெறியுடன் நடத்தப்படுவதேயாகும். இது திட்டமிட்ட இனப்படுகொலையாகக் கருதப்பட வேண்டும்.

1948-ஆம் ஆண்டு ஐ. நா. பேரவையில் இனப்படுகொலைக்கு எதிரான கொள்கைப் பட்டயம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இனப்படுகொலையைத் தடுப்பதும் அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதும் ஐ. நா. வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி தமிழக மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தில் முறையிட இந்திய அரசு முன் வருமா?

சிங்கள கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவோ, குறைந்த பட்சம் எச்சரிக்கவோ கூட முன் வராத இந்திய அரசு அனைத்துலக நீதிமன்றத்தில் முன் வரும் என எதிர்பார்க்க முடியாது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.