பழ. நெடுமாறனுக்குப் பிரபாகரன் எழுதிய கடிதங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022 15:09

திரு. பிரபாகரன் அவர்கள் குறித்தும், விடுதலைப் புலிகளின் போராட்டங்கள் குறித்தும் இதுவரை வெளிவராத செய்திகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

நண்பர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழீழம் சென்று பிரபாகரன் அவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு 16-1-90 அன்று தமிழகம் திரும்பினார். அவர் மூலம் ஒரு கடிதத்தை எனக்குப் பிரபாகரன் கொடுத்து அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்தபோது எனது கண்கள் கசிந்தன. கடிதம் வருமாறு:

தமிழீழம்,

22-12-89

அன்பின் அண்ணாவிற்கு,

நீண்ட நாட்களுக்குப்பின் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன் அண்ணா. உங்களுக்குக் கடிதம் எழுதுவதைவிட உங்களுடன் நேரில் மனம் விட்டுப் பேசவே நான் விரும்புகிறேன் அண்ணா. அதே வேளை கடலில் நீங்கள் அபாயத்திற்குள்ளாக வர வேண்டி ஏற்படுமே என்று தான் யோசிக்கிறேன். இப்போதுதான் நாங்கள் இலங்கையுடன் பேசுகிறோம். ஆதலால் நீங்கள் ஒரு தடவை இலங்கை வருவதற்கு நேரடியாக விசா கேட்டுப் பாருங்கள் அண்ணா. என்னவோ தெரியவில்லை உங்களை நேரில் சந்திக்க ஆசையாய் உள்ளது. மற்றும் உமா எப்படி சுகமாய் இருக்கிறா? அவளுக்கு எனது அன்பைத் தெரிவிக்கவும். அக்கா, இனியன் எல்லோரையும் நான் விசாரித்ததாகச் சொல்லவும். ஆறுமுகம் அண்ணாவை நான் கேட்டதாகச் சொல்லவும். இக்கடிதம் கொண்டு வருபவரிடம் விவரமாக நேரில் சொல்லியிருக்கிறேன் அண்ணா. வேறு விடயமில்லை.

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தம்பி,

வே.பிரபாகரன்

பிரபாகரனின் அழைப்பிற்கிணங்க உடனடியாகத் தமிழீழம் செல்ல நான் துடித்தேன். ஆனாலும் முன்புபோல நான் படகுப் பயணம் செய்வதை அவர் விரும்பவில்லை. எனவே முறைப்படி விசா பெற்று விமானம் மூலம் செல்வதற்காகக் காத்திருந்தேன்.

பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த பாலசிங்கம் அவர்கள் எனக்கு விசா கிடைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தார். அதன்மூலம் எனக்கு விசா கிடைத்து 19-2-90 அன்று தமிழீழம் புறப்பட்டுச் சென்றேன்.

கவிஞருக்கு அழைப்பு

1996ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2ஆம் தேதியன்று அன்பு என்ற தோழர் என்னைச் சந்தித்துப் பிரபாகரன் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். இனி இவர் மூலமே என்னுடன் தொடர்பு கொள்வதாக அக்கடிதத்தில் எழுதியிருந்தார். அக்கடிதம் வருமாறு:

 

தமிழீழம்

அன்பின் அண்ணாவிற்கு,

நீங்கள் 29-1-96ஆம் திகதி எழுதிய கடிதம் கிடைத்தது. நீண்ட நாட்கள் இடைவெளிக்குப்பின் உங்களை நேரில் சந்தித்தது போன்ற எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா, நீண்ட நாட்களாகவே எங்களுக்கும் அங்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. இப்போது அந்தக் குறையையும் நீக்கிவிட்டோம். இனி இங்கிருந்து உடனடியாகவே இங்குள்ள நிலைமைகளை நாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் அண்ணா. மற்றும் இனி இக்கடிதம் கொண்டுவரும் முத்து என்பவர் மூலம் நீங்கள் என்னுடன் தொடர்பு கொள்வது நல்லது அண்ணா. இவரைத் தவிர வேறு யாரும் எமது சார்பாகத் தொடர்பு கொள்ள வந்தால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது அண்ணா. மற்றும் திலகர் மூலம் நீங்கள் அனுப்பும் செய்திகள் எனக்கு உடனுக்குடன் கிடைக்கின்றன. எனக்கும் உங்களைப் பார்க்க ஆவல்தான். ஆனால் இப்போதைக்கு நீங்கள் இங்கு வருவது அவ்வளவு நல்லது இல்லை அண்ணா. இப்போதுதான் தமிழகத்தில் உள்ள சில பத்திரிகைகளும் காங்கிரஸ்காரர்களும் எங்கள் விசயத்தில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையில் நீங்கள் இங்குள்ள உண்மை நிலைமைகளைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டுத் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்பை ஏற்படுத்திவிட்டு இங்கே எங்களிடம் வரும்போது எமக்கு எதிரான சக்திகளினால் ஒன்றும் செய்ய முடியாது அண்ணா. மற்றும் இக்கடிதம் கொண்டுவரும் முத்துவிடம் சில விடயங்கள் நேரில் சொல்லிவிடுகிறேன் அண்ணா. அங்கு காசிஆனந்தன் அண்ணாவைச் சந்திக்கும் போது இங்கு எங்களிடம் வரக்கூடிய ஒழுங்குகள் இருக்கின்றன என்றும் வரவிருப்பமா? என்றும் என்னைக் கேட்டுச் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள் அண்ணா. அவரும் யாரை நம்பித் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இருப்பார். மற்றும் அங்கு நீங்கள் தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் எமக்கு ஆதரவான கூட்டங்கள் இந்த இக்கட்டான வேளையில் எமது மக்களிடையே ஒரு உத்வேகத்தை அளிக்கின்றன அண்ணா. இங்கு மக்கள் எவ்வளவு கஷ்டங்களைப்பட்டாலும் நம்பிக்கையுடன் உள்ளார்கள் அண்ணா. நாமும் திரும்ப யாழ்ப்பாணத்தைப் பிடிப்பது மட்டுமல்ல விரைவில் தமிழீழத்தையும் மீட்பது உறுதி அண்ணா. இத்துடன் எனது மடலை முடித்துக் கொள்கிறேன் அண்ணா.

இப்படிக்கு,

உங்கள் தம்பி,

வே.பிரபாகரன்

அன்பின் அண்ணாவிற்கு,

இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முத்து என்பவர் தங்களைச் சந்திக்கும்போது அன்பு என்ற பெயரில் உங்களுடன் அறிமுகமாகி உள்ளதாக அறிந்தேன். அதனால் நீங்கள் குழப்பமடையாதிருக்க இப்பின்குறிப்பை எழுதியுள்ளேன்.

இப்படிக்கு,

வே.பிரபாகரன்

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டபடிக் கவிஞர் காசிஆனந்தனைத் தாயகத்திற்கு வரவழைத்துக் கொள்வது என அனைத்து ஏற்பாடுகளையும் பிரபாகரன் செய்தார். ஆனாலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரை இங்கிருந்து செல்ல அனுமதிக்கவில்லை. எனவே, அவர் தாயகம் திரும்பமுடியவில்லை.

அவருடைய தாயார் தமிழீழத்தில் காலமானபோதுகூட அங்குச் சென்று தன்னைப் பெற்ற தாயின் முகத்தை இறுதியாகப் பார்ப்பதற்குக்கூட அவரை இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

மருந்துப் பொருட்கள்

தமிழகத்தில் மக்களிடமும் மருத்துவர்களிடமும் மருந்துக் கடைகளிடமும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மூலம் திரட்டி மருந்துகள் இங்கிருந்து புலிகள் மூலமாகத் தமிழீழத்திற்கு இரகசியமாக அனுப்பப்பட்டு வந்தன. மேலும் அவர்கள் மருந்துகளை விலைக்கு வாங்கியும் அனுப்பினார்கள். ஆனால் காவல்துறை மிகக் கடுமையாகச் செயல்பட்டு அந்த மருந்துகளைப் பறிமுதல் செய்தது. தோழர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டன.

இதுகுறித்து 23.7.1997 அன்று பிரபாகரன் அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு:

தமிழீழம்

23.7.97

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணாவிற்கு,

நான் நலமேயுள்ளேன். அதுபோல் நீங்களும் நலமேயிருக்கத் தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இங்கு இப்போது மருந்துப் பொருட்களுக்குத் தான் பெரிய தட்டுப்பாடு அண்ணா. நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன. நான் அதற்குரிய ஒரு நன்றிக் கடிதம் அவருக்குக் கொடுத்துள்ளேன் அண்ணா. அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள். மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் பொலீசாரிடம் பிடிபட்டுள்ளது. எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ் தமிழ் என முழங்கும் ஆட்சியிலேயே பறிக்கப்படுவது தான் வேதனையைத் தருகிறது. ஆனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. எங்களுக்கு இங்கு இப்போதைக்குத் தேவையானது மருந்துப் பொருட்கள்தான். தொடர்ந்தும் இதுபோல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா. அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.

இப்படிக்கு,

வே.பிரபாகரன்.

ஆனாலும் இந்தக் கெடுபிடிகளுக்கு நடுவிலும் மருந்துகளை அனுப்புவதை நாங்கள் நிறுத்தவில்லை. உணர்வுள்ள தோழர்கள், மருத்துவர்களின் இல்லங்களைத் தேடிச் சென்றும் மருந்துக் கடைகடையாக ஏறிச் சென்றும் தமிழகமெங்கும் மருந்துகளைச் சேகரித்தார்கள். அவற்றைத் தமிழீழத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். சில நேரங்களில் நமது தோழர்கள் பலர் இதற்காகக் கைது செய்யப்பட்டார்கள். சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். ஆனாலும் இந்தப் பணியைப் பெருமிதத்துடன் தோழர்கள் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் “தமிழர் எழுச்சியின் வடிவம்” நூலில்

 இடம்பெற்றுள்ள திரு. பிரபாகரன் அவர்கள் தனது கைப்பட எழுதிய கடிதங்கள்

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.