புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2022 15:21

"இந்தியாவின் அரசியல் சட்டம் செயற்பாட்டுக்கு வந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் தோல்வியடைந்து இருக்கிறோம்.

எனவே நமது அரசியல் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இது குறித்து விவாதம் மூண்டெழ வேண்டும்" என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.

அவரின் வேண்டுகோளின்படி இந்த பிரச்சனையை அணுகிப் பார்க்காமல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தேசத்துரோக சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என கூப்பாடு போட தொடங்கியுள்ளனர். இதில் இரு கட்சிகளுக்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இல்லை.

இந்திய அரசின் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியோ, இருக்கும் பாஜக கட்சியோ மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து தங்களிடம் குவித்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன இத்தகைய போக்கின் விளைவாக மாநில அரசுகள் மேலும் மேலும் தங்களது அதிகாரங்களை இழந்து வலிமை குன்றியுள்ளன.

அரசியல் சட்டம் இதுவரை நூறு தடவைகளுக்கு மேல் திருத்தப்பட்டு விட்டது. நாம் அணிந்திருக்கும் ஆடை ஒரு இடத்தில் கிழிந்தால் அதை தைத்து மீண்டும் அணியலாம் 100 இடங்களுக்கு மேல் கிழிந்து போனால் அதை மீண்டும் அணிந்துகொள்வது கேலிக்கூத்தாக்கி விடும். முற்றிலுமாக கிழிந்துபோன இந்த ஆடை எதற்கும் உதவாத கந்தலே தவிர வேறொன்றும் அல்ல.

அரசியல் சட்டத்தின் சிற்பியான அறிஞர் அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்றத்தில் பிற்காலத்தில் பேசும்போது "இச்சட்டத்தை நீங்கள் தானே உருவாக்கினீர்கள் என கேட்பவர்களுக்கு எனது பதில் இதுதான். இந்த அரசியல் சட்டம் குறையுடையது அல்ல இதை செயல்படுத்தியவர்கள்தான் குறையுடையவர்கள். நிர்வாக அமைப்பை பயன்படுத்தி இச்சட்டத்தை விருப்பம் போல வளைத்து விட்டார்கள். எனவே இச்சட்டத்தை கொளுத்த வேண்டும் என்றால் நான் தான் முதல் ஆளாக இருப்பேன்" என கூறினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தது. தலைமை அமைச்சராக வாஜ்பாய் இருந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது கடந்த 50 ஆண்டு காலத்தில் அரசியல் சட்டம் செயல்படுத்தப்பட்ட முறை குறித்து முற்றிலும் ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களையும் பரிந்துரை செய்யுமாறு பணிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக தலைமை அமைச்சராக இந்திரா காந்தி அவர்கள் இருந்த போது முன்னாள் நீதிபதி சர்க்காரியா தலைமையில் இதே காரணத்திற்காக ஆணையம் ஒன்றை அமைத்தார். மேற்கண்ட இரண்டு ஆணையங்களும் அளித்த பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் அவை இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன.

அண்மையில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுகளை கேட்காமல் மாற்றுவதற்கு ஒரு ஆணையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. மாநில அரசுகளின் நிர்வாக அதிகாரத்தை மேலும் மேலும் குறைக்கும் முயற்சிகளில் பாசக அரசு ஈடுபட்டுள்ளது கடந்த காலத்தில் காங்கிரசு அரசும் இதையே தான் செய்தது. அதிகாரத்தைத் தங்களிடம் குவித்துக் கொள்வதில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இல்லை. எனவேதான் தெலுங்கானா முதல்வர் மீது தேசத்துரோக குற்றத்தை இரண்டு கட்சிகளும் சாட்டுகின்றன.

ஒரே நாடு பாரதம், ஒரே மதம் இந்து, ஒரே மொழி சமற்கிருதம் என்ற தனது நோக்கினை எப்படியேனும் நிறைவேற்ற பாசக துடிக்கிறது. ஆனால் அதனை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியும் இந்த நோக்கத்திற்கு எதிரானது அல்ல.

பல்வேறு மொழி பேசும் தேசிய இனமக்களைக் கொண்ட ஒரு நாடு இந்தியா என்பதை இரு கட்சிகளும் ஏற்கவில்லை. இந்தியாவின் கடந்த கால விடுதலைப் போராட்ட வரலாற்றையும், விடுதலை பெற்ற பின் நடைபெற்ற மொழிவழி மாநில அமைப்பு போராட்ட வரலாற்றையும் இந்த கட்சிகளும் வசதியாக மறந்துவிட்டன.

அவற்றை அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டால் தெலுங்கானா முதல்வர் மீது இவ்வாறு பாய மாட்டார்கள். புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்ப்பது எத்தகைய மடமை வாய்ந்தது என்பதை உணர்வார்கள்.

மொழி உணர்வு

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்வேறு மொழிவழித் தேசிய இன மக்கள் மத்தியில் அவர்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்கள் உருவானார்கள். அந்த தலைவர்களே நாட்டில் விடுதலைப் போராட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினார்கள். அனைத்து மொழிவழித் தேசிய இன மக்களுக்கும் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறுவது என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்ததால் இந்தக் கூட்டுத் தலைமையை ஏற்றுக்கொண்டு அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடினார்கள். சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தத் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாலும்கூட சுதந்திரப் போராட்ட உத்வேகம் அவற்றைப் பின்னுக்குத் தள்ளி அவர்களை ஒற்றுமையுடன் போராட வைத்தது.

இந்தியா பல்வேறுமொழிவழித் தேசிய இன மக்களைக் கொண்ட நாடு என்பதை காந்தியடிகள் முழுமையாக உணர்ந்திருந்ததன் காரணமாகத்தான் காங்கிரசுக் கட்சியை மொழிவழி மாநில ரீதியில் திருத்தியமைத்தார். அவர் அவ்வாறு திருத்தியமைத்த பிறகே பாமர மக்கள் காங்கிரசுக் கட்சியிலும், சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்கத் தொடங்கினார்கள் என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மையாகும்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசுத் தலைமை இந்த உண்மையைப் புறக்கணிக்கத் தொடங்கியது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப்பெற்ற பல்வேறு மொழிவழித் தேசிய இன மக்களும் தத்தமது மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் மொழிவழியாக மாநிலங்கள் பிரித்தமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள். அவ்வாறு செய்வது தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் என காங்கிரசுத் தலைமை கூறி மொழிவழியாக மாநிலங்களைத் திருத்தி அமைக்க மறுத்தது.

இதன் விளைவாக 1950ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் போராட்ட வடிவங்கள் எடுத்தன. ஆந்திர மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று கோரி பொட்டிசிறீராமுலு உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார். ஆந்திர மக்கள் எரிமலையென கொதித்தெழுந்து போராடினார்கள். இதன் விளைவாக தனி ஆந்திர மாநிலத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகம், கேரளம், மகாராட்டிரம், குசராத், பஞ்சாப், அரியானா போன்ற பல மாநில மக்களும் போராடி தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றனர்.

இவ்வளவுக்குப் பிறகும் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களை இணைத்து இந்தியாவை 4 மண்டலங்களாகப் பிரிக்கும் வகையில் அப்போதைய தலைமையமைச்சர் நேரு ஒரு திட்டம் வெளியிட்டார்.

தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் ஒன்றாக இணைத்து அதற்கு “தட்சிணப் பிரதேசம்” என்ற பெயரைச் சூட்டி ஒரு மண்டலமாகவும், மேற்குவங்கம், பீகார், அசாம், ஒரிசா ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரு மண்டலமாகவும், மராட்டியம், குசராத், ஆந்திரம் ஆகியவற்றை இணைத்து இன்னொரு மண்டலமாகவும், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசசுதான் ஆகியவற்றை மற்றொரு மண்டலமாகவும் ஆக்கும் திட்டத்தை நிறைவேற்ற தலைமையமைச்சர் நேரு செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவருடைய சொந்த கட்சியிலேயே இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வராக இருந்த காமராசர் இத்திட்டத்தை எதிர்த்தார். உருவாகப் போகும் தட்சிணப் பிரதேசத்தின் முதல்வராக காமராசரே இருக்கலாம் என்ற வலை விரிக்கப்பட்டது. ஆனால் அவர் தட்சிணப் பிரதேச எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இறுதிவரை நின்றார். பெரியார், தமிழவேள் பி.டி. இராசன், அறிஞர் அண்ணா, ஜீவா, ம.பொ.சி. போன்ற தமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இயற்கை வழியான மொழிவழித் தேசிய உணர்வினை செயற்கையான இணைப்புகளின் மூலம் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்த நேரு இத்திட்டத்தைக் கைவிட்டார்.

1950களில் தொடங்கின மொழிவழித் தேசிய இன மக்களின் போராட்டம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. அசாமிலிருந்து நாகாலாந்து, மிசோரம், மேகாலாந்து, மணிப்புரி, அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

கூர்க்கா மக்கள், போடோ மக்கள் ஆகியோர் தங்களுக்குத் தனி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று இன்னமும் போராடி வருகிறார்கள். பீகாரில் மைதிலி மொழி பேசும் மக்கள் மைதிலி மாநிலம் அமைக்கப்பட வேண்டுமென்று போராடி வருகிறார்கள். உ.பி., பீகார் மாநிலங்களில் வாழும் போச்புரி மொழி பேசுவோர் தங்களுக்கென தனிமாநிலம் அமைக்கப்பட வேண்டுமென போராடி வருகிறார்கள். மலைவாழ் மக்கள் தங்களுக்காக சார்கண்ட, உத்தராஞ்சல், சத்தீசுகர் மாநிலங்கள் அமைக்கப்படவேண்டும் எனப் போராடி வெற்றிப்பெற்றனர்.

இப்படி இந்தியாபூராவிலும் மொழிவழித் தேசிய இன மக்களின் போராட்டங்கள் ஓய்ந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மொழிவழியாக மாநிலங்கள் பிரித்து அமைக்கப்படவேண்டுமென்று போராடி வெற்றிகண்ட தேசிய இனங்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளன. இந்தியப் பெருநாட்டில் வாழும் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களுக்குரிய நாட்டினையும், அதன் எல்லைகளையும் வகுத்துவிட்ட பிறகு அம்மக்களுக்குரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்க மறுப்பது என்பது வரலாற்றைத் திருப்புவதற்கு நடைபெறும் முயற்சிகளாகும். மொழிவழித் தேசிய இனங்களை ஒப்புக்கொண்டு அந்த இனங்கள் வாழும் நாடுகளையும் ஏற்றுக் கொண்ட பின்னால் அவைகளுக்குத் தன்னுரிமை தர மறுப்பது என்பது அடாத செயலாகும். ஏக இந்தியவாதிகள் இதில் படுதோல்வியடைவார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே இப்போராட்டங்கள் மொழிவழித் தேசிய இனங்களின் தன்னுரிமைப் போராட்டங்களே என்ற மகத்தான உண்மையை உணராமல் இப்போராட்டங்களுக்குப் பிரிவினைப் போராட்டங்கள் என்ற பட்டத்தைச் சூட்டி இவற்றை ஒடுக்க அகில இந்தியக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. இதன்விளைவாக காசுமீர், பஞ்சாப், அசாம், நாகாலாந்து, மிசோரம் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கின்றன. தன்னுரிமை பெறுவதற்காக இம்மக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இராணுவத்தை ஏவி செய்யப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை என்பதை காலம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

இரட்டை வேடதாரிகள்

மொழிவழித் தேசிய இனங்கள் தன்னுரிமை பெறுவது என்பது யாராலும் தடுக்க முடியாததாகும். அவர்கள் இவ்வாறு தன்னுரிமை பெறுவதைத் தடுப்பதற்கு முயன்றால் பஞ்சாப் நிலைமையும், காசுமீர் நிலைமையும் இந்தியப் பெருநாடு முழுவதிலும் பரவும். இந்த மகத்தான உண்மையை அகில இந்திய வாதம் பேசுபவர்கள் உணரவேண்டும்.

பல்வேறு மொழிவழித் தேசிய இனமக்களுக்குத் தன்னுரிமை கொடுத்து, இவ்வாறு உரிமைபெற்ற மொழிவழித் தேசிய இனமக்கள் தாமாகவே விரும்பி இணைந்த ஒரு கூட்டாட்சி நாடாக இந்தியா விளங்க வேண்டுமா? அல்லது மத்தியில் அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு பல்வேறு மொழிவழித் தேசிய இனமக்களையும் தங்களுக்கு அடிமைப்பட்ட மக்களாகக் கருதும் ஏகாதிபத்திய நாடாக இந்தியா விளங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யவேண்டிய கட்டம் பிறந்தாகிவிட்டது.

தேசிய இனப்பிரச்சனையில் அகில இந்தியவாதிகள் எத்தகைய இரட்டைவேடம் போடுகிறார்கள் என்பதற்கு மற்றொரு சான்றினைக் காட்ட விரும்புகிறேன்.

முசுலீம்கள் என்ற மத உணர்வின் அடிப்படையில் பாகிசுதானுடன் இணைந்த கிழக்குவங்க மக்கள் தாங்கள் தனித் தேசிய இனம் என்பதை உணர்ந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயன்றபோது அவர்களை ஒடுக்குவதற்கு பாகிசுதான் இராணுவம் முயன்றது. வங்க மக்கள் தங்களின் உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மறைந்த தலைமையமைச்சர் இந்திரா உதவினார். இந்திய இராணுவம் பாகிசுதான் இராணுவத்தை முறியடித்து வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. அதைப்போலவே எல்லைகாந்தி அப்துல்சாபர்கான் தலைமையில் பட்டாணிய இனமக்கள் தாங்கள் தனித் தேசிய இனம் என்பதை வலியுறுத்தி பட்டாணிசுதான் வேண்டுமென்று போராடியபோது அதற்கு தலைமையமைச்சர் இந்திரா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். அதைப்போலவே பாகிசுதானிலுள்ள சிந்தி தேசிய இனமக்கள் நடத்திவரும் போராட்டத்திற்குத் தலைமையமைச்சர் இந்திரா ஆதரவு தெரிவித்தார்.

பாகிசுதானிலுள்ள வங்காளிகள், பட்டாணியர்கள், சிந்திகள் ஆகியோர் தங்களின் தனித் தன்மையைப் பாதுகாக்கவும், தாங்கள் தனித் தேசிய இனம் என்பதை நிலைநிறுத்தவும் நடத்திவரும் தன்னுரிமைப் போராட்டங்களுக்கு காங்கிரசுக் கட்சி, பாரதிய சனதாக் கட்சி போன்ற அகில இந்திய கட்சிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தன; தெரிவித்து வருகின்றன. ஆனால் இதே அகில இந்திய கட்சிகள் இந்தியாவில் எந்த மொழிவழித் தேசிய இனமக்களாவது உரிமைகளை வலியுறுத்திப் போராடத் தொடங்கினால் அதற்குப் பிரிவினைவாதம் என்ற பட்டம் சூட்டி அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சிகள் செய்கின்றன.

பாகிசுதானிலுள்ள வங்க மக்கள் உரிமைக்காகப் போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்கள் விடுதலை பெற இந்தியா உதவி செய்தது. ஆனால், இலங்கையிலுள்ள தமிழர்கள் அதே காரணத்திற்காகப் போராடும்போது அவர்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தை அனுப்பியது இந்திய அரசு. அது மட்டுமல்ல, வங்க மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய கட்சிகள் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பழக்கப்பட்ட இந்த அகில இந்திய கட்சிகள் எதார்த்த உண்மைகளைப் புரிந்துகொள்ள பிடிவாதமாக மறுக்கின்றன.

அதேநேரத்தில் இன்னொன்றையும் நான் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மொழிவழித் தேசிய இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு தோன்றி வளர்ந்த பல மாநிலக் கட்சிகள் பதவி ஆசையின் காரணமாக இந்த மகத்தான இலட்சியத்திற்குத் துரோகம் செய்துவிட்டன. மாநில சுயாட்சி என்ற போலி கூக்குரலை எழுப்பிக்கொண்டு அதேவேளையில் அந்தக் கோரிக்கையைக்கூட தொடர்ந்து வற்புறுத்தாமல் இக்கட்சிகள் இரட்டைவேடம் போடுகின்றன. பதவியில் இல்லாதபோது மாநில சுயாட்சி முழக்கம், பதவியில் அமர்ந்த பிறகு ஒன்றிய ஆட்சிக்கு வெண்சாமரம் வீசும் வேடம். இத்தகையவர்களின் தகாத போக்கின் விளைவாக மாநிலங்களின் உரிமைப் போராட்டம் சற்றுப் பின்னடைந்திருந்தாலும் மக்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறியும் காலம் நெருங்கிவிட்டது. “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” என்று இவர்கள் எழுப்பும் முழக்கம் வெறும் வெற்று முழக்கம். “உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கைகொடுப்போம்” என இவர்கள் போடும் அர்த்தமற்ற முழக்கம். இவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்றால் ஊழல் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் தேர்தல் உறவுக்கு கைநீட்டவும்தான் செய்திருக்கிறது.

தற்போதைய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான சட்டமாகும். இச்சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மாநிலங்கள் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. This is not a Federal Constitution. This is a Unitary Constitution. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு முன்னால் வைக்க விரும்புகிறேன்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில்

கூட்டாட்சி முறைக்கு எதிராகவுள்ள பகுதிகள்

1.ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியலில் 97 பொருட்களும் மாநில அரசுகளுக்கான பட்டியலில் 66 பொருட்களும் ஒன்றிய – மாநில அரசுகளுக்குப் பொதுவான பட்டியலில் 47 பொருட்களும் சேர்க்கப்பட்டன.

பொதுப் பட்டியலில் ஒதுக்கப்பட்ட ஒரு பொருளைப் பற்றி ஒன்றிய அரசு தனியாகவும், மாநில அரசு தனியாகவும் சட்டங்கள் இயற்றுமேயானால் ஒன்றிய அரசின் சட்டமே மேலோங்கி நிற்கும்.

மூன்று பட்டியலிலும் சேராத பொருள் ஏதேனும் இருக்குமானால் அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை அதாவது எஞ்சிய அதிகாரம் Residuary Power ஒன்றிய அரசுக்கே உண்டு.

அரசமைப்புச் சட்டப்படி அதிகாரப் பங்கீடு என்பது ஒன்றிய அரசைச் சார்ந்ததாகவே அமைந்துவிட்டது.

2. அமெரிக்கா போன்ற கூட்டாட்சி நாடுகளில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது என்பது எளிதான காரியமல்ல.

1789ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி அமெரிக்க அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. அதற்குப் பிறகு கடந்த 211 ஆண்டுக் காலத்தில் 27 முறைகள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன.

மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் பல நாடுகளில் அரசமைப்புச் சட்டங்கள் திருத்தப்படுவதில்லை. ஆசுதிரேலியா நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் அரசமைப்புச் சட்டத்திற்கு 32 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் 5 திருத்தங்களுக்கு மட்டுமே மக்கள் ஆதரவளித்தனர்.

ஆனால் 1950ஆம் ஆண்டு சனவரி 26ஆம் தேதி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நமது அரசமைப்புச் சட்டம் கடந்த 70 ஆண்டுகளில் 100 தடவைக்குமேல் திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்றத்தில் வருகை தந்துள்ள உறுப்பினர்கள் 2/3பங்கு பெரும்பான்மை மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம்.

மாநிலச் சட்டமன்றங்கள் இதை அங்கீகரிக்கவேண்டிய அவசியமில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் சில பகுதிகளுக்கான திருத்தங்களை மட்டுமே மாநிலச் சட்டமன்றங்கள் அங்கீகரிக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எந்தத் திருத்தத்தையும் கொண்டுவர மாநிலச் சட்டமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.

3. இந்திய அரசமைப்புச் சட்டபடி மாநிலங்களுக்குத் தனியான அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொள்ளும் அதிகாரம் கிடையாது.

காசுமீர் மாநிலம் மட்டுமே இதற்கு விதிவிலக்காகும். அதுவும் தற்போது பறிக்கப்பட்டுவிட்டது.

இந்திய அரசியல் அமைப்பிலிருந்து மாநிலங்கள் வெளியேறிச் செல்ல முடியாது. இந்த அரசியல் அமைப்புக்குட்பட்டே மாநிலங்கள் இயங்கவேண்டும்.

4. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சம பிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மக்கள் தொகையின் அடிப்படையிலே மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

5. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொருவருக்கும் இரட்டைக் குடியுரிமை உண்டு. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரே ஒரு குடியுரிமை மட்டுமே வழங்கியுள்ளது.

6. மற்ற கூட்டாட்சி நாடுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் ஒன்றிய அரசினால் நேரடியாக ஆளப்படுகிற பகுதிகள் உண்டு (Union Territories)

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களும் தகுதியும் இந்தப் பகுதிகளுக்குக் கிடையாது.

7. கூட்டாட்சி நாடுகளில் அந்த நாடுகளின் அமைப்பினை தலைகீழாக மாற்றுவதற்குச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இத்தகைய மாற்றத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்பிலுள்ள கூட்டாட்சி முறையைப் போர்க்காலத்திலோ அல்லது வேறு அவசர காலங்களிலோ முற்றிலுமாக மாற்றி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்கலாம்.

அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டால் மாநிலங்களின் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள எந்த விஷயத்தைப் பற்றியும் ஒன்றிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்.

மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிட்டு நெறிமுறைகளைக் காட்டி உத்தரவிடுவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உண்டு.

எந்த மாநிலத்திலாவது நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அந்த மாநிலத்தில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசக் கடமையை நிறைவேற்றவேண்டிய அவசியம் நேர்ந்தால் மாநிலப் பட்டியலிலுள்ள எந்தப் பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். மாநிலத் துறைகளில் ஒன்றிய அரசு எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்யலாம்.

IAS, IPS, IFS போன்ற அகில இந்திய பணிகளை அரசியல் சட்டம் உருவாக்கியுள்ளது. இந்த பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை ஒன்றிய அரசே நியமிக்கிறது. அவர்களை பல மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசின்கீழ் வேலை பார்த்தாலும் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டவர்களேயாவர்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநிலப் பணிகள் வேறாகவும், ஒன்றியப் பணிகள் வேறாகவும் உள்ளன.

10. ஒன்றிய அரசின் பரிந்துரையின்படி மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் விரும்புகிற காலம்வரை அவர் இந்தப் பதவியை வகிக்கலாம்.

ஆளுநர்கள் ஒன்றிய அரசின் கைப்பாவைகளாகவே இருக்கிறார்கள்.

11. தேர்தல் ஆணையத்திற்குரிய அதிகாரிகளைக் குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். மாநில அரசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் நியமனத்திலோ, நிர்வாகத்திலோ எவ்விதப் பங்குமில்லை.

12. அமெரிக்கா போன்ற நாடுகளில் இரட்டை நீதிமன்ற முறைகள் உள்ளன. மாநிலச் சட்டங்களை அமுல் நடத்துவதற்கு மாநில அரசு தனி நீதிமன்றங்களையும், ஒன்றிய சட்டங்களை அமுல் நடத்த ஒன்றிய அரசு தனி நீதிமன்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் ஒரே ஒரு உச்சநீதிமன்றமும் அதன்கீழ் மாநில உயர்நீதிமன்றங்களும் இயங்குகின்றன.

13. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி ஒரு மாநிலத்தின் எல்லைகளை விரிவாக்கவோ அல்லது குறைக்கவோ ஒன்றிய அரசினால் முடியும்.

மாநிலத்தின் பெயரையே மாற்றியமைக்கலாம்.

ஒரு மாநிலமே இல்லாமல் செய்துவிடலாம்.

14. கூட்டாட்சி அமைப்பின் முக்கியமான அம்சம் நிதிப்பங்கீடாகும். ஒன்றிய – மாநில அரசுகள் சுதந்திரமாக இயங்குவதற்குத் தேவையான நிதி அதிகாரங்கள் அளிக்கப்படவேண்டும். ஆனால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு ஏற்ற நிதி வருவாய் வழிமுறைகளோ அவற்றை உருவாக்கும் அதிகாரங்களோ மாநிலங்களுக்கு இல்லை.

மாநிலங்கள் நிதிக்காக ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலைமை நீடிக்கிறது.

15. மாநிலச் சட்டமன்றங்களினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான் அமுலாக முடியும்.

மாநிலச் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் நிறுத்தி வைக்கும் உரிமை மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். இதற்குக் காலவரையறை கிடையாது.

எனவேதான் இந்த அரசியல் சட்டத்திற்கு சில திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் மாநில உரிமைகளை முழுவதுமாகப் பெற்றுவிட முடியாது. இது திருத்தப்பட்டாலும் உருப்படியாக முடியாத சட்டம். முற்றிலுமாக இதைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கினாலொழிய மாநிலங்கள் தங்கள் உரிமைகளைப் பெறவே முடியாது. இது அரசியல் சட்டத்தை ஏன் ஏற்க மறுக்கிறோம் என்பதற்கு வலுவான நியாயமான பல காரணங்கள் உள்ளன. எனவே புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கப்பட்டு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.

புதிய அரசியல் யாப்பு அவை ஏன் வேண்டும்?

புதிய அரசினால் யாப்பு அவை ஏன் வேண்டும் என்பதற்குக் கீழ்கண்ட வலுவான, நியாயமான காரணங்கள் உள்ளன. அவையாவன:

1.தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் யாப்பு அவை இந்திய மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அவையாகும். வெள்ளையர் காலத்தில் சொத்துரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமையளிக்கப்பட்டிருந்தது. 1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர்கள் வாக்களித்து 1946ஆம் ஆண்டில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சட்டமன்றங்களிலிருந்து அரசியல் யாப்பு அவைக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2.இந்திய மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் சுதேச சமசுதானங்களில் வாழ்ந்தனர். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலாக சுதேச மன்னர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அரசியல் யாப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

3.மொத்தத்தில் அரசியல் யாப்பு அவை சொத்துரிமை கொண்டவர்கள், சுதேச மன்னர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாக இருந்தது. இந்திய மக்களில் பெரும்பாலோரின் உண்மையான பிரதிநிதிகள் இச்சபையில் இடம்பெறவில்லை.

4.1950 சனவரி 26ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1954ஆம் ஆண்டிலிருந்து மொழிவழியாக இந்திய மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டன. பிரிட்டிசு ஆட்சி காலத்தில் இருந்த மாநிலங்களின் அமைப்பு வேறு. தற்போதுள்ள மாநிலங்களின் அமைப்பு வேறு. நிலவியல், அரசியல், பொருளாதாரம், சமுதாய அடிப்படையிலும் மாநிலங்களின் உருவங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்தப் புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் அமையவில்லை. மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவதற்கு இவை முட்டுக்கட்டையாய் உள்ளன. இதன்விளைவாக ஒன்றிய – மாநில மோதல்கள் உருவாகியுள்ளன. மொழிவழி மாநிலங்கள் அரசமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டம் மொழிவழியாக மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட பிறகு பொருந்தி வரவில்லை.

5.இந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்ட போது ஒன்றியத்திலும், மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சியிருந்தது. எனவே Federal அம்சங்கள் கொண்ட அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் Unitary அம்சங்கள் நிறைந்த அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிவிட்டார்கள். தற்போது பல மாநிலங்களில் மாநில உரிமைகளை வலியுறுத்தும் கட்சிகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டன. இந்தியா முழுவதும் ஒரே கட்சி ஆட்சி என்பது இனி எக்காலத்திலும் சாத்தியமற்றது. எனவே மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு கட்சிகள் ஆட்சி நடத்துவதை சகித்துக் கொள்ளக் கூடியதாக தற்போதைய அரசமைப்புச் சட்டம் அமைந்திருக்கவில்லை.

6.“பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியே இந்தியா” என்பதை தற்போதைய அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இந்திய தேசியம் என்னும் இல்லாத ஒரு தேசியத்தை வற்புறுத்தும் அரசமைப்புச் சட்டமாக இது விளங்குகிறது.

7.நமது அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு கடந்த 50 ஆண்டுக் காலத்தில் ஒன்றிய – மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுவதுமாக மனதில்கொண்டு பார்த்தால் ஒன்றிய – மாநில உறவுகள் முழுமையாகச் சீர்கேடு அடைந்திருப்பதையே நம்மால் உணர முடிகிறது. காலத்திற்கேற்றதாக நமது அரசமைப்புச் சட்டம் இல்லை என்ற உண்மையையே இது காட்டுகிறது.

8.தற்போதைய அரசமைப்புச் சட்ட வரம்புக்குட்பட்டு மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குவது என்பது இயலாத ஒன்று.

9.அரசமைப்புச் சட்டத்திலுள்ள குறைபாடுகளைப் போக்குவதற்கு நமது அரசமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்துவதன் மூலமோ அல்லது நீக்குவது மூலமோ செய்துவிட முடியாது.

10.சோசலிசச் சமுதாயம் அமைப்பதை குறிக்கோளாக ஏற்கும் திருத்தம் 1976ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடும் பல பிரிவுகள் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளன.

11.இப்போது உள்ள அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட போது இந்தியாவின் மக்கள் தொகை வெறும் 30 கோடி ஆகும். இப்போது மக்கள் தொகை 130 கோடி ஆகும். மக்கள் தொகை குறைவாக இருந்த போது எழுந்த பிரச்சினைகளை விட மக்கள் தொகை பல மடங்கு பெருகி இருக்கும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகின்றன. இவற்றுக்கு பரிகாரம் காணும் வல்லமை இந்த சட்டத்திற்கோ அல்லது இந்த அரசிற்கோ அறவே இல்லை.

புதிய அரசியல் யாப்பு அவை கூட்டப்பட்டு அதன் மூலம் மட்டுமே அரசமைப்புச் சட்டம் பற்றிய ஆய்வு நடைபெறவேண்டும். அமெரிக்க நாட்டு குடியரசுத் தலைவராக இருந்த செபர்சன் கூறியபடி ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அவரவர்கள் விருப்பப்படி அரசை அமைத்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே பல தலைமுறைகளைக் கடந்துவிட்ட நமது அரசமைப்புச் சட்டமும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் எவ்வளவு சிறந்தவர்களாக இருந்தாலும் 10 அல்லது 12 பேர்களைக் கொண்ட குழுவை நியமித்து அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது என்பது தவறானது ஆகும். ஏனென்றால் இவர்கள் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் அல்லர். இவர்களை நியமித்த ஆளுங்கட்சிக்கு மட்டுமே பதில் கூற வேண்டியவர்கள்.

எனவே சகல தேசிய இனங்களுக்கும் சம பிரதிநிதித்துவம் உள்ள வகையில் புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கப்படவேண்டும்.

இந்தக் கோரிக்கை புதியது அல்ல. அவசர நிலைப்பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரசு அரசுகள் புதிய அரசியல் யாப்பு அவை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை தங்கள் சட்டமன்றங்களில் நிறைவேற்றி உள்ளன.

தேசிய இனங்களின் தன்னுரிமையையும், உண்மையான கூட்டாட்சி முறையினையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய புதிய அரசியல் சட்டம் வகுக்கப்படவேண்டும். இந்த குறிக்கோளை ஏற்றுக்கொண்டுள்ள அனைவரும் தோளோடு தோள் நின்று ஒன்றுபட்டுப் போராட வேண்டிய காலக்கட்டம் பிறந்துவிட்டது.

எனவே, சர்வதிகாரம், மதவெறி ஆகிய பாசிச வல்லாண்மையை எதிர்த்துப் போராடி வீழ்த்தவேண்டுமானால், சனநாயகம், மத நல்லிணக்கம், மொழிவழித் தேசிய இனங்களின் உரிமைகள் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முன்வரவேண்டும். இல்லையேல் பாசிச காட்டாட்சியை வீழ்த்த முடியாது.

தமிழகத்தில் மதக்கலவரத்தை மூட்ட முயலும் வெறியர்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகேதூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆற்றொணா துயரத்தையும் அளித்துள்ளது.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு மதவெறி சாயம் பூசிக் கலவரத்தை மூட்டுவதற்கு இந்துத்துவா சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 160 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி இப்பகுதி மக்களின் குறிப்பாக பெண்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் தொண்டாற்றி உள்ளது.

ஒடுக்கப்பட்ட பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒளியை தந்து மறுமலர்ச்சியை ஊட்டியது.

கடந்த 160 ஆண்டு காலத்தில் எந்த ஒரு மாணவரையும் மதம் மாற்றுவதில் ஈடுபட்டதாக அப்பள்ளி நிர்வாகத்தின் மீது இதுவரை யாரும் குற்றம் சாட்டியது இல்லை.

இறந்து போன மாணவி பள்ளி விடுதியிலேயே தங்கி பயின்றவர். விடுமுறையில் கூடஅருட்சகோதரிகளுடன் விடுதியிலேயே தங்கி அவர்களின் அன்பைப் பெற்றவர். பெற்ற தாயை இழந்த அவருக்கு இப்பள்ளியை சார்ந்த அருட் சகோதரிகள் தாய்மார்களாக விளங்கினார்கள். கடந்த 9.1.22 அன்று பொதுமுடக்கத்தின் போது இம்மாணவி திடீரென்று நோய் வாய்ப்பட்டுள்ளார்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்குதான் தான் நஞ்சு அருந்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளது. பிறகு அவரிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் மதமாற்ற முயற்சி குறித்து அந்த மாணவி எதுவும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில் இந்துத்துவா வாதியான ஒருவரால் ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்சியில் "மதமாற்றத்திற்காக துன்புறுத்தப்பட்டீர்களா?" என்ற கேள்விக்கு அவர் இருக்கலாம் என பதில் சொன்னதாக பொய்யான செய்தி ஒன்று பரப்பப்பட்டது.

இதனடிப்படையில் கிருத்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் நிகழ்வதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு மேலும் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. மிக்கேல் பட்டி என்ற அந்த ஊரின் பெயரே மதமாற்றத்தின் குறியீடு என அந்த தீர்ப்பில் மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. மேற்கண்ட வழக்கில் எத்தகைய தொடர்பும் இல்லாமல் பல நூல்கள், திரைப்படங்கள், பத்திரிகை செய்திகள் ஆகியவற்றை தீர்ப்பு சுட்டிக்காட்டுவது சற்றும் பொருத்தமில்லாததும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

தமிழ்நாட்டில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்க சமய கல்வி நிறுவனங்கள் உள்ளன. 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். எந்த ஒரு பள்ளியிலும் மதமாற்ற முயற்சி நடந்ததாக இதுவரை எத்தகைய குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது இல்லை.

கிருத்தவர்கள் அந்நியர்கள் அல்ல. இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்து வாழ்பவர்கள். தமிழ் மொழிக்கு கிருத்துவ துறவிகள் அருந் தொண்டாற்றியுள்ளனர். பல்வேறு இலக்கியங்களைப் படைத்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.

கிருத்துவர்களான ஆங்கிலேயர்கள் 200 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனாலும் இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 2.3 சதவீதத்திற்கு மேல் உயரவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டாய மதமாற்றம் செய்திருந்தால் கிருத்துவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி இருந்திருக்கும். ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெறாத மதமாற்ற முயற்சி இப்போது நடைபெறுவதாக குற்றம்சாட்டுவது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும்.

அமைதி தவழும் தமிழ் நாட்டில் மத கலவரங்களை மூட்டி தமிழர்களை மதத்தால் பிளவுபடுத்தும் திட்டத்துடனேயேஇந்துத்துவவாதிகள் இவ்வாறு செயல்படுகின்றனர். இந்த போக்கை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்" எனக் கூறிய வள்ளுவரின் வழிவந்தவர்கள் மதவெறியர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லாமல் செய்ய வேண்டும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.