தில்லை தீட்சிதர்களைக் கைது செய்! - சிதம்பரத்தில் தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 13:57 |
சிதம்பரம் நடராசர் கோயிலில் செயசீலா என்னும் பெண் பக்தர் மீது சாதிய அடிப்படையில் தாக்குதல் நடத்திய தீட்சிதர்களையும், தில்லைக் கோவில் திருவிழாவின் போது த.தே.மு. மாவட்டச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களையும் உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் தில்லைக் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் வலியுறுத்தி 10.03.2022 வியாழக்கிழமை சிதம்பரம் காந்தி சிலை அருகே மாலை 4 மணி முதல் 6 மணிவரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த திரளான தோழர்களும், மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.மு. பொதுச்செயலாளர் தோழர் ந.மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் வீ. கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் ஏ. வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தே.மு. பொதுச்செயலாளர் மரு. இலரா பாரதிசெல்வன் தொடக்கவுரையாற்றினார்.
மூத்த தோழர் அயனாபுரம் சி. முருகேசன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பேரா. இரா. முரளிதரன், திருவாரூர் மாவட்டத் தலைவர் தோழர் ச. கலைச்செல்வம், மாநில மாணவரணி அமைப்பாளர் தோழர் செ. செயப்பிரகாசு உட்பட பலர் உரையாற்றினர். தோழர் பழ. நெடுமாறன் நிறைவுரையாற்றினார். அனைவருக்கும் கடலூர் நகரத்தலைவர் தோழர் வீ. முத்து நன்றி கூறினார்.
சுமார் 2 மணிநேரத்திற்கு மேற்பட்டு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டு தில்லை தீட்சிதர்களுக்கு எதிராகவும், தில்லைக் கோவிலை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியது மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஏராளமானவர்கள் கூடிநின்று ஆதரவுத் தெரிவித்தனர். |