மதவாத அரசியலும் - மகளிர் எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:21

மதவாத அரசியல் தலைதூக்கிக் கூத்தாடும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தோழர் பானுமதி அம்மையார் அவர்கள் இந்தத் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறேன். “உலக மகளிர் நாள் நிகழ்ச்சி” உலகெங்கும் கொண்டாடப்படும் வேளையில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுவது சிறப்பானதாகும்.

மதவெறி அரசியலின் விளைவாக பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. பெண்களோடு ஒடுக்கப்பட்ட மக்கள் மிகப்பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரும் மதவெறி அரசியலுக்கு இரையாகிறார்கள். எனவேதான் அறிஞர் அம்பேத்கர், பெரியார், ஈ.வெ.ரா., சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, தலைவர் ஜீவா போன்றவர்கள் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை ஒழிக்கத் தங்களது வாழ்நாள் முழுவதிலும் அயராது பாடுபட்டனர்.

பழந்தமிழ் சமுதாயத்தில் சமயம் என்பது அறவே இல்லை. சமயம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படவில்லை. இறைவன் என்ற சொல்கூட மன்னனை குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. தமிழகம் ஐந்திணைகளாகப் பாகுபடுத்தப்பட்டிருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற இந்தத் திணைகளுக்கு முருகன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்கள் மக்களால் வழிபடப்பட்டனர். இந்தத் தெய்வங்கள் அந்தந்த திணைகளைச் சார்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களாகத் திகழ்ந்தன. ஆனால், இத்தெய்வங்களைத் தலைமையாகக் கொண்ட சமயங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. சமயங்கள் இல்லாததால், அதன் பெயரால் மக்களிடையே சச்சரவுகளும் மூளவில்லை.ஒரு திணையைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ மற்றொரு திணையைச் சார்ந்த ஒருவரை மணந்துகொண்டு திணை மாறி குடியேற நேர்ந்தால் அந்தந்த திணைக்குரிய தெய்வங்களை வழிபட்டனர்.

பழந்தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை படைக்கப்பட்ட காலத்தில் தமிழக மக்களிடையே பால் வேறுபாடில்லாமல் கல்வியறிவு பரவியிருந்தது. மேலேகண்ட நூற்களில் உள்ள 885 பாடல்களை 268 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பெண்பாற் புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 268 புலவர்களில் பெரும்பாலோர் பாடிய ஒவ்வொரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத் தொகுப்பில் காணப்படுகிறது. வாழ்நாள் முழுவதிலும் ஒரு புலவர் ஒரே பாடலை மட்டும்தானா பாடியிருப்பார்? என்ற கேள்வி எழாமல் இல்லை. எனவே, பெண்பாற் புலவர்களும் நிறைய பாடல்களைப் பாடியிருப்பார்கள்? ஆனால் பிற்காலத்தில் இப்பாடல்களைத் தொகுத்துத் தொகை நூல்களை உருவாக்கியவர்கள் சில புலவர்களின் ஒவ்வொரு பாடலை மட்டுமே தேர்ந்தெடுத்து மற்றவற்றை ஒதுக்கியுள்ளனர். ஒதுக்கப்பட்டப் பாடல்கள் காலப்போக்கில் அழிந்திருக்கவேண்டும்.

சங்க காலச் சமுதாயத்தில் ஔவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார் போன்ற 30க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்தனர். சமுதாயத்தில் ஆண்பாற் புலவர்களுக்கு மேலான மதிப்பு ஔவையார் போன்றவர்களுக்கு இருந்தது. சோழர் குலத்தைச் சேர்ந்த பங்காளிகளான இரு மன்னர்கள் மோதிக்கொண்ட வேளையில் “இப்போரில் யார் தோற்றாலும் தோற்பது நும் குடியே” என இடித்துரைத்துப் போரை நிறுத்தினார் ஔவையார். மூவேந்தர்களும் மதித்துப் போற்றிய பெருமாட்டியாக ஔவையார் இருந்தார். இந்த ஏற்றம் அவருக்குக் கிடைத்ததற்குக் காரணம் சமயங்களற்றச் சமுதாயமாகத் தமிழர் சமுதாயம் திகழ்ந்ததையேயாகும்.

வடக்கேயிருந்து தெற்கே பரவிய சமணமும் – பௌத்தமும் மிகக் கடுமையான துறவு நெறியையும் பெண் ஒடுக்குமுறையையும் கொண்டிருந்தன. குறிப்பாக, சமண சமயத்தில் பெண் பிறவிக்கு வீடுபேறு அதாவது மோட்சம் கிடையாது. ஆணாகப் பிறந்தால் மட்டுமே அவர்கள் வீடுபேறு பெற முடியும். சமண காப்பியமான சீவகசிந்தாமணியில் அரசமாதேவியர் மறுபிறப்பில் ஆணாகப் பிறக்க வேண்டி தவம் இருந்தனர் எனக் கூறப்படுகிறது. அரசமாதேவியராக இருந்து அறம் பல புரிந்திருந்தாலும், அவர்களுக்கு மோட்சக் கதவு ஒருபோதும் திறக்காது.

வேத மதமான வைதீகமும், பெண் பிறப்பை இழி பிறப்பாகக் கருதி ஒதுக்கியது. நான்கு வர்ணங்களை உருவாக்கிய மனுதர்ம சாத்திரம் பின்வருமாறு கூறுகிறது. “ஒரு பெண் பிறந்ததிலிருந்து தனது தந்தையின் பாதுகாப்பிலும், திருமணமான பிறகு தனது கணவனின் பாதுகாப்பிலும், கணவன் மறைந்த பிறகு மகனின் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியவளே தவிர, ஒருபோதும் தனித்து இயங்க முடியாதவள் ஆவாள்” அது மட்டுமல்ல, பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. வேதம் ஓதுவதோ அல்லது சடங்குகள் செய்வதோ கூடாது. இவை போன்று பல்வேறு வகையிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.

சிந்துவெளி நாகரிகம் தொட்டுத் தமிழரிடம் தாய்த் தெய்வ வழிபாடு முதன்மைப் பெற்றிருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் கொற்றவை வழிபாடு சிறப்பான இடம்பெற்றிருந்தது என்பது தாய்வழி சமுதாய அமைப்பின் சிறப்பான கூறாகும். குறிஞ்சிநில தெய்வமான முருகன் கொற்றவை சிறுவன் என சிறப்பிக்கப்பட்டான். பிற்காலத்தில்தான் அவன் சிவகுமாரனாக்கப்பட்டான்.

ஆனால், வேத வழிப்பட்ட வைதிகச் சமயத்தில் பெண் தெய்வங்களே கிடையாது. அக்னி, ருத்ரன், இந்திரன் போன்ற ஆண் தெய்வங்களே வழிபடப்பட்டனர். பிற்பட்ட காலத்தில்தான் பார்வதி, இலட்சுமி, சரசுவதி போன்ற பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டாலும், அவர்கள் ஆண் தெய்வங்களான சிவன், விட்டுணு, பிரம்மா ஆகியோரின் மனைவிகளாகவே கூறப்பட்டனர். அதாவது ஆண் தெய்வங்களுக்கு அடங்கியவர்களே இந்தப் பெண் தெய்வங்கள் என்ற நிலையை ஏற்படுத்தினர்.

தமிழ்நாட்டில் உருவான சைவமும், வைணவமும் பிற்காலச் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் செழித்து வளர்ந்தோங்கிய கட்டத்தில் வைதிகத்தின் தாக்கம் பெற்று பெண்களை இழிவுபடுத்தும் நிலை பெருகியது. பழந்தமிழ்ச் சமுதாயத்தில் ஒருவனும், ஒருத்தியும் மனம்ஒப்பி ஓம்புவதே இல்லற வாழ்வு என்ற நிலை மாற்றப்பட்டு ஒருவன் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளும், பழக்கம் நிலவியது. சோழ மன்னர்களே இதற்கு வழிகாட்டினர். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை சோழர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதன் விளைவாக அவர்களின் கீழிருந்த சிற்றரசர்களும், தளபதிகளும், அதிகாரிகளும் அவ்விதமே பலதாரத் திருமணத்தை மேற்கொண்டனர். சோழர்கள் காலத்தில் சேக்கிழார் படைத்த பெரியபுராணத்தில் நால்வரில் ஒருவரான சுந்தரர் ஏற்கெனவே சங்கிலியாரை மணந்துகொண்டிருந்த நிலையில்,பரவையாரை திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது தனது அடியாரின் விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமானே தூது சென்று அத்திருமணம் இனிது நிறைவேற துணை நின்றார். எனவே, அவர் தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டார். பெரியபுராணம் கூறுகிற இந்த வரலாறு அக்காலச் சமுதாயத்தில் நிலவிய பலதாரத் திருமண முறைக்குச் சான்றாகத் திகழுகிறது.

அதுபோலவே, கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கம் இருந்தது என்பதை கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. இராசராச சோழனின் தந்தையான சுந்தர சோழன் மறைந்தபோது அவனுடைய பட்டத்தரசி வானவன்மாதேவி தன் இளங்குழந்தையைப் பிரிந்து கணவனோடு உடன்கட்டை ஏறிய செய்தியைக் கூறும் கல்வெட்டு “கரந்த, முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவனுந்-தலைமகற் பிரியாத்தையல்’ என்ற பகுதி படிப்போர் உள்ளத்தை உருக்குந் தன்மையது. அரசமாதேவியே உடன்கட்டை ஏறும் நிலை இருந்தது என்று சொன்னால், சாதாரண மக்களிடமும் இக்கொடியப் பழக்கம் எந்தளவு பரவியிருந்தது என்பது தெரிகிறது.

அதைப்போலவே பக்தி இயக்கக் காலத்தில் பின்பற்றப்பட்ட புராணங்களும், வைதிகப் பண்பாடும் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இறைத் தொண்டிற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்வதே முக்தி பெறுவதற்கான வழி என பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இக்கருத்தையே வழியுறுத்தினார்கள். அரசர்களும், புரோகிதர்களும், மக்களும் இதை விரும்பி ஏற்றுக்கொண்டனர்.

தமிழ் இலக்கிய மரபில் வரைவின் மகளிர், விறலியர், பரத்தையர், கணிகையர், காமக்கிழத்தியர், காதல் பரத்தையர், விலை மகளிர், கொண்டி மகளிர் என பல்வேறு பெயர்களில் இப்பெண்கள் குறிக்கப்பட்டுள்ளனர். ஆணாதிக்கச் சமுதாயத்தின் காம இச்சையைத் தணித்துக்கொள்ளவே இத்தகைய பெண்கள் உருவாக்கப்பட்டனர். இத்தகைய இரங்கத்தக்க பெண்கள் நிலை குறித்து ஆணாதிக்க நோக்கிலான பல பாடல்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

பிற்காலச் சோழர்கள் காலத்தில் தளிச்சேரிப் பெண்டுகள் என்ற பெயரில் கோவில்களில் பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு அரசர் மானியங்களும் வழங்கப்பட்டிருப்பதை கல்வெட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன. தென்னிந்திய கோவில்களில் பார்ப்பனர் முழுமையான ஆதிக்கம் பெற்றப் பிறகு பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் பழக்கமும் உருவாக்கப்பட்டது. 7வயதான சிறுமியாக இருக்கும்போதே அவளுக்குக் கோயில் புரோகிதர் தாலிக் கட்டி இறைவனுக்கு அர்ப்பணிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தகைய பெண்கள் தேவதாசிகள் என அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

சமுதாயத்தில் சரிபாதியளவுக்கு இருக்கும் பெண்களை அடிமைப்படுத்தும் கொடிய முறைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும், இன்னமும் பெண்கள் மீது ஏதாவது ஒருவகையில் ஆணாதிக்கம் தொடரவே செய்கிறது. அதைப்போலவே ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டப் பிறகும் நடைமுறையில் அந்த இழிவு தொடர்கிறது. அண்மையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செயசீலா என்னும் பெண் சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி தொழுவதற்கு முயன்றபோது, தீட்சிதர்கள் சாதிவெறியோடு அவரைத் தாக்கி கோவிலுக்கு வெளியே விரட்டினார்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தில்லைக் கோவிலுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத தீட்சிதர்கள் அங்கே அந்தக் கோவிலின் மீதே உரிமை கொண்டாடி ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு மன்னர்கள் இக்கோவிலைக் கட்டுவதிலும் அதற்கு ஏராளமான மானியங்களை வழங்குவதிலும் முன்னின்றார்கள். இந்தக் கோவிலில் ஒரு கல்லைக்கூட எடுத்து வைக்காத தீட்சிதர்கள் இக்கோவிலைக் கட்டிய தமிழர்களின் பரம்பரையில் வந்த ஒரு பெண்ணை இழிவுபடுத்தி வெளியே தள்ளியது என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும். அன்று நந்தனாருக்கு இந்தக் கொடுமையை இழைத்தார்கள். இன்று செயசீலாவுக்கும் இழைக்கிறார்கள். இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவேண்டும். தில்லைக்கோவிலை அரசுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டப் பிறகு அதை ஏற்று சில கோவில்களில் அர்ச்சகர்களாகத் தமிழர்களை நியமிக்க முன்வந்த தமிழக அரசு தில்லைக் கோவிலில் நந்தனார் வழிவந்த தமிழர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

இன்றைய இந்துத்துவா ஆட்சி பழமைவாதப் போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆட்சியில் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு இழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இந்து வெறியர்கள் மதவெறியைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசுகிறார்கள். மதக் கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். இந்த மதவெறியர்களின் மனப்போக்குக்கு ஒரு சான்றினைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“2001ஆம் ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்கத் தலைநகரமான டர்பனில் ஐ.நா. பேரவையின் சார்பில் இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாடு” நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற ஒடுக்கப்பட்ட சமுதாய அமைப்புகள் கீழ்க்கண்ட தீர்மானத்தைக் கொண்டுவந்தன. “இனவேறுபாடுகளுக்குச் சமமானதாக இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு முறையை அங்கீகரிக்கவேண்டும்” என வற்புறுத்தியபோது, விசுவஇந்து பரிசத் தலைவராக இருந்த கிரிராசு கிசோர் என்பவர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். “சாதி வேறுபாடுகளை மனித உரிமைகளுக்கு எதிரானது என சித்தரிக்கும் உரிமை ஐ.நா. பேரவைக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ கிடையாது. ஒரு மனிதன் செய்யவேண்டிய தொழிலை அவனது சாதிதான் முடிவு செய்கிறது. இது காலங்காலமாகத் தொடர்ந்து இருந்துவருகிற நடைமுறையாகும். பழங்கால நடைமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் எந்த நீதிமன்றத்தாலும் ஒழித்துவிட முடியாது. சாதி ஒழிப்பது மனித உரிமைக்கு எதிரானது” எனக் கூறினார்.

மண்ணிலிருந்து விண்ணோக்கிப் பறந்து சந்திர மண்டலத்தில் இறங்கும் இந்த காலகட்டத்தில் இத்தகைய சாதி-மதவெறியர்களும் நாட்டில் நடமாடுகிறார்கள். கூரையின் மீது கொள்ளிக்கட்டையை ஏந்திய குரங்கு போல இவர்கள் கையில் ஆட்சியும் சிக்கித் தவிக்கிறது.

ஆண்களோடு சரிநிகர் சமானமாகப் பெண்களும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என எண்ணிய பாரதி

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்

செம்மை மாதர் திறம்புல தில்லையாம்

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உதய கன்னி யுரைப்பது கேட்டிரே!”

எனப் பாடினான். இதற்கு எடுத்துக்காட்டான வகையில் முற்போக்குப் பெண் வழக்கறிஞர்களை குறிப்பாக இளம் பெண்களை ஒன்று திரட்டியதோடு, அவர்களை மேடையில் ஏற்றி உரிமை முழக்கம் செய்ய வைத்த மூத்த வழக்கறிஞரும், இந்த அமைப்பின் தலைவருமான திருமதி. பானுமதி அம்மையார் அவர்களையும், அவர்களுக்குத் துணை நின்று இக்கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(12-03-2022 – சனிக்கிழமை – காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திருச்சி சுமங்கலி மகாலில் நடைபெற்ற உலக மகளிர் நாள் நிகழ்ச்சிக் கருத்தரங்கில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையின் சுருக்கம்)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.