தாய்த் தெய்வங்களை வழிபடுபவர்கள் தாய்மார்களை அவமதிப்பது ஏன்? பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022 14:35

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுகுட்பட்ட பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்தத் தீர்ப்பு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இத்தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களும் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் “ஐயப்பன் கோயில் பொது வழிபடும் இடம்; தனியாருக்குச் சொந்தமான கோயில் அல்ல. குடிமக்கள் அனைவரும் தத்தமது விருப்பத்திற்கேற்ற சமய நெறிகளையும் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை அரசியல் சட்டப்பூர்வமானது” என கூறப்பட்டுள்ளது.

இறைவனும், இறை வழிபாடும் சகல உயிர்களுக்கும் பொதுவானவை. யாராக இருந்தாலும் இறைவனின் அருளைப் பெற முடியும். இறைவனை வணங்குவதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. கோயில்   அல்லது வழிபடும் இடங்களில் இறைவனை சிறைப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. இறைவன் எவரின் தனிப்பட்ட சொத்தும் அல்ல, அவன் அனைவருக்கும் பொதுவானவன். கோயிலுக்குள் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நீக்கமற் நிறைந்திருப்பவன். அவனை வழிபடுவதைக் கட்டுப்படுத்த எந்த தனிநபருக்கோ அல்லது சமூகங்களுக்கோ உரிமை கிடையாது. அங்கிங் கெனாதுபடி எங்கும் நிறைந்திருக்கிற இறைவனை தங்களுக்கும் மட்டுமே சொந்தமாக்கிக்கொண்டு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

சபரிமலையில் மட்டுமல்ல, நாடெங்கிலும் ஏராளமான ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலையைத் தவிர மற்ற எல்லா ஐயப்பன் கோயில்களிலும் அனைத்து வயது பெண்களும் தங்குதடையில்லாமல் சென்று வழிபட்டு வருகிறார்கள். ஆனால், சபரிமலை கோயிலில் மட்டுமே பெண்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இப்படி மறுப்பவர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

முதலாவதாக, ஐயப்பன் நைட்டீக பிரம்மச்சாரி. அதாவது கடும் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பவன். ஆகவே பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள். அப்படியானால், மற்ற இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பெண்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகிறார்கள். அது ஏன்? ஐயப்பனை போலவே அனுமானும் நைட்டீக பிரம்மச்சாரிதான். நாடெங்கிலும் அனுமான் கோயில்களுக்குச் சென்று ஏராளமான பெண்கள் எவ்விதத் தடையில்லாமலும் வழிபட்டு வருகிறார்களே, அது எப்படி?

இரண்டாவதாக, மாதவிலக்கு அமைந்திருப்பதால் பெண்கள் தீட்டானவர்கள். 41 நாள் விரதம் இருக்க இயலாதவர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல இயலாது என கூறப்படுகிறது. ஆண் ஐயப்ப பக்தர்களில் 40 நாள் விரதமிருப்பவர்களைவிட 10 நாள் விரதம் இருந்து செல்பவர்களே அதிகம். அதைபோல, பெண்களும் 10 நாள் விரதம் இருந்து செல்ல இயலுமே. குறிப்பாக, மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோயில்களுக்கோ, திருவிழாக்களுக்கோ அல்லது தங்கள் வீட்டில் நடக்கும் மங்கல நிகழ்ச்சிகளிலோ அறவே கலந்துகொள்வதில்லை. இது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அப்படியிருக்கும்போது இந்தக் காரணம் பொருத்தமற்றதாகும்.

மூன்றாவதாக, அடர்ந்த காட்டுக்குள் ஐயப்பன் கோயில் அமைந்திருக்கிறது. ஆகவே, பெண்கள் போவது மிகக் கடினமானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சதுரகிரியில் மலைக் கோயில் போன்ற பல கோயில்கள் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான பெண்கள் உள்பட ஏராளமான மக்கள் இந்தக் கோயில்களுக்குச் சென்று வருகிறார்கள். அங்கெல்லாம் பெண்களுக்குத் தடை கிடையாது.

நான்காவதாக, 41 நாட்கள் கடும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான ஆண் பக்தர்கள் கூடும் சபரிமலையில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்ற காரணம் கூறப்படுகிறது. பெண்களை இழிவுபடுத்துவதைவிட ஆண் பக்தர்களையே இந்தக் காரணம் அதிகமாக இழிவுபடுத்துகிறது. 41 நாள் கடும் விரதம் காத்த ஆண்கள், பெண்கள் வந்தால் தவறிழைத்துவிடுவார்கள் என்று கூறுவது ஒட்டுமொத்த சமுதாயத்தையே அவமதிப்பதாகும்.

ஐந்தாவதாக, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் சடங்குகளை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றும் கூறப்படுகிறது. கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறவேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றிய வழக்கத்தை ஆங்கிலேயர் ஆட்சி சட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது. அப்போதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இருந்தார்கள். காலங்காலமாக கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுத்தே வந்தார்கள். இதற்கு எதிராக காந்தியடிகள் ஆலயப் பிரவேச இயக்கங்களை நடத்தினார். அதற்குப் பிறகு அரசியல் சட்டரீதியாக தீண்டாமை என்னும் தீமை ஒழித்துக்கட்டப்பட்டது. ஆனாலும், சாதி ஆணவம் காரணமாக இன்னும் பலர் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். அதைபோல, கணவனை இழந்து விதவையான பெண் மறுமணத்தடை, குழந்தைத் திருமணம் செய்தல் போன்றவை சட்டப்பூர்வமாக அகற்றப்பட்டுவிட்டன.

2006ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைவரும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராகலாம் என அரசு முடிவு எடுத்தபோது, இது தொடர்பான பிற அம்சங்கள் குறித்து முடிவெடுக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக நீதியரசர் ஏ.கே. இராசன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்தப் பரிந்துரையில் கீழ்க்கண்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. “சைவ, வைணவ கோவில் கட்டும் இடம், அதன் அமைப்பு, விழாக்கள், நாள்தோறும் பூசைகள், நிவேதனங்கள், சிறப்பு பூசைகள், குடமுழுக்குகள் போன்ற முக்கியமான செயற்பாடுகள் குறித்த நடைமுறைகள் அனைத்தும் ஆகமங்கள் என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. விஷ்ணு, கணபதி, முருகன், அம்மன் கோவில்களின் நடைமுறைகள் ஆகமங்கள் அல்ல, எனினும் அந்த நடைமுறைகளும் ஆகமங்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன. அனைத்துக் கோயில்களிலும் ஆகமங்களைப் பின்பற்றியே பூசை முதலான செயல்கள் நடைபெறவேண்டும். இல்லையென்றால் தெய்வங்கள் தங்கள் சக்தியை இழந்துவிடுவார்கள் என நம்பப்பட்டது. ஆனாலும், காலப்போக்கில் பல காரணங்களினால் இந்த ஆகமங்கள் அனைத்தும் எல்லா கோவில்களிலும் முழுமையாகப் பின்பற்றப்பட இயலாத நிலை ஏற்பட்டது. ஆகம விதிகள், நடைமுறைகள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. பிற மாநிலங்களிலோ, வட இந்தியாவிலோ இந்த ஆகமங்கள் பின்பற்றப்படவில்லை. பெரும்பாலான கோயில்களில் ஆகம விதிமுறை மீறல்கள், முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான முரண்பாடுகள் அனைத்தும் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த மன்னர்களின் விருப்பத்திற்கேற்பவும், பக்தர்களின் விருப்பத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் மாற்றப்பட்டன. இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு உருவாகாததின் காரணம் ஆகமங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியாததே ஆகும்.

ஆகம விதிமுறைகளுக்கு மாறாக பக்தர்கள் அளிக்கும் மாலைகள், பட்டு ஆடைகள், கார் சாவி, கடைச்சாவி, திருமணப் பத்திரிகைகள் போன்ற பல பொருட்களையும் மூலவரின் கால்களில் வைத்தும், அணிவித்தும் எடுத்துத் தருவது எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதெல்லாம் ஆகம விதி மீறல்களாகும். ஆனாலும், அனுமதிக்கப்படுகின்றன. எல்லா கோயில் களிலும் பக்தர்களின் குலம், கோத்திரம், நட்சத்திரம் சொல்லி அவர்களுக்காக தனித்தனியே அர்ச்சனை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வது பற்றி எந்த ஆகமத்திலும் சொல்லப்படவில்லை. இவை ஆகம மீறல்கள் ஆகும்.

உடல் குறைபாடு உள்ளவர்களும், திருமணம் ஆகாதவர்களும், மனைவியை இழந்தவர்களும் பூசை செய்வது ஆகமத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், பல கோவில்களில் மேற்கண்டவர்கள் பூசை செய்கிறார்கள். சைவ, வைணவ சமயங்களில் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சில வழிபாடுகளை செய்ய இயலும், ஒருவர் மட்டும் தனியே செய்ய இயலாது. திருப்பதி கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் சில பூசைகளை செய்விப்பவர்கள் கணவன்&மனைவி இருவரும் இணைந்தே செய்யவேண்டும்".

எனவே, ஆகம விதிமுறைகள் என்பவை பல காலகட்டங்களில் தேவைக்கேற்ப மாற்றப்பட்டுள்ளன என்பதை நீதியரசர் ஏ.கே. இராசன் ஆணையம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் கருவறைக்குள் சென்று பெண்கள் உள்பட அனைவரும் வழிபாடு செய்கிறார்கள் என்பதை இப்போதும் பார்க்கலாம். “தாய்த் தெய்வ வழிபாட்டில் இருந்துதான் தெய்வ வழிபாட்டு முறையே தொடங்கியது. அதன் எச்சம் இன்றும் உள்ளது. இன்றைக்கும் சிவன் கோயில்களில் அம்மனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கன்னியாகுமரி குமரி அம்மன், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன் போன்றவை தாய்த் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே ஆகும். நாட்டார் தெய்வங்களில் மிகப்பெரும்பாலானவை பெண் தெய்வங்களே ஆகும். நாட்டார் தெய்வக் கோயில்களில் சாமி ஆடவும், அருள்வாக்கு சொல்லவும், அடியவர்களுக்கு திருநீறு வழங்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கிறது” என்பதை அறிஞர் தொ. பரமசிவம் எடுத்துக்காட்டியுள்ளார்.

அவர் மேலும், எழுதுகையில் “சுத்த அசுத்தக் கோட்பாடுகளை உடைத்தெறியும் சிறீ வசந பூஷணம் என்னும் வைஷ்ணவ தத்துவ நூலில் கூறப்பட்டுள்ளதை மேற்கோளாகக் காட்டியுள்ளார். திரெளபதி தீட்டுக்குரியவளாக இருந்த காலத்தில் துச்சாதனன் அவளை அரசவைக்கு இழுத்து வந்து துகிலுறிய முயன்ற போது அவள் கண்ணனை வேண்டி முறையிட்டாள். கண்ணன் அருளாள் அவள் மானம் காக்கப்பட்டது. இரத்த வாடையும், பிண வாடையும் வீசுகின்ற போர்க் களத்தில் அர்ச்சுனனுக்கு கண்ணனால் கீதை சொல்லப்பட்டதையும், அந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

கற்பின் தெய்வம் கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கோயிலில் அவளின் தோழி தேவந்தி பூசாரியாகத் திகழ்ந்தாள் என சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த சேர நாடான இன்றைய கேரளம் பெண்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறது.

பிறந்த பொன் நாட்டை தாய்நாடு, தாயகம் எனப் போற்றுகிறோம். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்றார் வள்ளுவர். ஆனால், பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற போக்கு தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. ஐயப்பன் கோயில்களில் மட்டுமல்ல, 1984ஆம் ஆண்டில் பூரி ஜெகநாதர் கோயிலுக்குச் சென்ற தலைமையமைச்சர் இந்திராகாந்தியை உள்ளே அனுமதிக்க கோவில் பூசாரிகள் மறுத்தார்கள். பார்சி இனத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக அவரை அனுமதிக்கவில்லை. அதற்கு முன்னர் அதே கோயிலுக்கு காந்தியடிகள் சென்றபோது தாழ்த்தப்பட்ட மக்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றார் என்பதற்காக அவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களும், அவருடைய துணைவியாரும் பூரி கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக அவமதிக்கப்பட்டார்கள்.

அரசியல் சட்டரீதியாக சாதி உயர்வு தாழ்வு, ஆண்-பெண் வேறுபாடு போன்றவை ஒழிக்கப்பட்டாலும்கூட இன்னும் அவைகள் ஆங்காங்கே தலைதூக்கி நிற்கின்றன. இவற்றிற்கெதிராகப் போராடுவது என்பது நம்முடைய உயர் பண்பாட்டை நிலை நிறுத்துவதற்கான போராட்டமாகும்.

(2018 அக்டோபர் – 16-31 -தென்செய்தி இதழில் வெளியான கட்டுரை)

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.