பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிப்பது அந்நிய ஆட்சி அவலத்தின் நீட்சியே! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2022 10:23

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் ஆளுநர்கள் பதவி குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது தலைமையமைச்சராக இருந்த நேரு அவர்கள், குறுக்கிட்டு “ஆளுநர்களாக அரசியல்வாதிகளை நியமிக்காமல் கல்வித்துறை அறிஞர்கள் அல்லது வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் நியமிக்கப்பட்டால் அரசியல் ரீதியான தலையீடு இருக்காது. அரசின் கொள்கைத் திட்டங்களை செயல்படுத்த எல்லா வகையிலும் துணை நிற்பதுடன், மாநில அரசுக்குத் தேவைப்படும் நேரங்களில் அறிவுரையும் வழங்குவர்” என்று கூறினார்.

ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் நியமிப்பதற்கு முன் அம்மாநில முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நியமிக்கவேண்டும் என்பதை நேரு, அம்பேத்கர் போன்றவர்கள் ஏற்றுக்கொண்டனர். காலம் செல்லச் செல்ல இந்த மரபு சீர்குலைக்கப்பட்டு ஒன்றிய அரசில் ஆளுங்கட்சி எதுவோ, அக்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கும் போக்கு வளர்ந்தது. இதன் விளைவாக மாற்றுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இன்றுவரையிலும் அந்த மோதல்கள் தொடர்கின்றன. இப்பிரச்சனைக் குறித்து அரசியல் சட்ட அறிஞர்களும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கூறியுள்ள கருத்துகளை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை.

தற்போது பா.ச.க. ஆட்சியில் அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களாகத் தனது கட்சியை சேர்ந்தவர்களையே எத்தகைய தயக்கமுமின்றி நியமித்துள்ளனர். ஆளுநர்களாக நியமிக்கப்பட்டப் பிறகாவது அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்கியிருக்கவேண்டும். ஆனால், இன்னமும் தீவிரமான இந்துத்துவாதிகளாகவே திகழ்கிறார்கள். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தில் தலையிடுவதும், முதலமைச்சர்களுடன் மோதுவதையுமே தங்களின் தலையாய கடமைகளாகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, ஆளுநர் என்ற தகுதியின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாகவும் அவர்கள் பொறுப்பு வகிக்கின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு உயர் கல்வியையும், ஆய்வுகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சுதந்திரமாக பல்கலைக்கழகங்கள் இயங்கினால்தான், நாட்டில் அறிவு வளர்ச்சிப் பெருக முடியும். கல்வி நீரோடை தூய்மையாகப் பாய்ந்தால்தான் அனைவரும் அந்நீரைப் பருகி இன்புற முடியும். ஆனால், அதில் சாக்கடை நீர் கலக்குமேயானால் அந்த நீர் பருகுவதற்கே தகுதியற்றதாகிவிடும்.

இந்த உண்மையை எண்ணிப்பாராமல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக இந்துத்துவா கொள்கையில் ஊறித் திளைத்தவர்களை ஆளுநர்கள் நியமித்து வருகிறார்கள். மாநில மக்களின் மொழி எதுவோ, அம்மொழியிலேயே உயர் கல்விக் கற்பிக்கப்படவேண்டும் என்ற குறிக்கோளை எட்டும் திசை நோக்கிப் பல்வேறு மாநில அரசுகள் திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றன. ஆனால், தமிழ் மொழியே தெரியாதவரும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட அத்துமீறலும் தமிழ்நாட்டில் நடந்தது.

இந்தப் பிரச்சனைக் குறித்து விரிவாக ஆராய்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.எஸ். இரவீந்திரன் அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். “பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்களை நியமிக்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கியது என்பதையும், சுதந்திர நாட்டில் இந்த வேண்டாத மரபு இன்னமும் தொடர்கிறது என்பதையும், சுட்டிக்காட்டும் வகையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“1854ஆம் ஆண்டில் இந்திய மக்களுக்கு ஆங்கிலக் கல்வி புகட்டப்பட வேண்டியதற்கான இன்றியமையாமையைக் குறித்து சர். சார்லஸ் வுட் என்பவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எழுதிய ஒரு கடிதமே இதற்கான அடித்தளமாக அமைந்தது.

அதற்கிணங்க இயக்குநர்கள்கூடி “இலண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய பல்கலைக்கழகங்களை அமைக்கத் திட்டமிட்டு 1857ஆம் ஆண்டு அவைகள் நிறுவப்பட்டன. கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக கவர்னர் -செனரலும், பம்பாய், சென்னை பல்கலைக்கழக வேந்தர்களாக அம்மாநிலங்களின் ஆளுநர்களும் நியமிக்கப்படும் வழக்கம் சட்டபூர்வமாகத் தொடங்கியது”.

நாடு விடுதலை பெற்ற பிறகு புதிதாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்களில்கூட ஆளுநர்களை வேந்தர்களாக நியமிக்கும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ஆளுநர்கள் அரசியல் சட்டப்படி இயங்க வேண்டியவர்களே. அரசியல் சட்டத்தின் 163(1)பிரிவின்படி மாநில அமைச்சரவை வழங்கும் அறிவுரைகளுக்கிணங்க செயல்படவேண்டியதை தனது கடமையாகக் கொண்டவர். தனது விருப்புரிமையைகூட, அரசியல் சட்டத்திற்குட்பட்டுத் செலுத்த வேண்டியவர்.

ஆனால், அவர் தனது உரிமைப்படி செயல்படுவதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்கவில்லை. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் அரசியல் சட்டத்தைச் சிறிதும் மதிக்காமல் தங்கள் விருப்பம் போல இந்துத்துவாவாதிகளை துணைவேந்தர்களாகத் திணிக்கிறார்கள். தில்லியில் உள்ள உலகப் புகழ்பெற்ற சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகக்கூட இந்துத்துவாவாதியான ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களில் இவ்வாறு துணைவேந்தர்களாகவும், பேராசிரியர்களாகவும் இந்துத்துவாவாதிகள் நியமிக்கப்படும் போக்கும் புதிய கல்வித் திட்டம் என்ற பெயரால் வேதக் கல்வியையும், சமற்கிருதத்தையும் திணிக்கும் போக்கும் எதிர்காலத்தில் வலுக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிரான கொந்தளிப்புகள் எழுந்துள்ளன.

“2019ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசு வேந்தரின் அதிகாரங்களை ஒழிக்கும் / குறைக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. மராட்டிய மாநில சட்டமன்றமும் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய சட்ட முன் வடிவை நிறைவேற்றியுள்ளது. மேலும் பல மாநிலங்கள் இதைப்போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் முனைந்துள்ளன”

பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரத்துடனும், உயர்கல்வியை ஓங்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனும், எவ்விதமான தலையீடுமின்றி செயல்படுவதற்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்கு ஒன்றிய அரசு நியமித்தப் பல்வேறு குழுக்களும், ஆணையங்களும் அளித்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.

ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்கள் என்ற முறையில் தன்னிச்சையாக செயல்படுவதைக் கண்டிக்கும் வகையில் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. ஆனால், எதையும் மதிக்காமல் ஆளுநர்கள் செயல்படுவது அரசியல் சட்டரீதியாகப் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

உயர்கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்குப் பதில் வேதக் கல்வி நிலைக்குத் தாழ்த்த முற்படுவது நமது மாணவர்களின் கல்வியை அடியோடு அழிப்பதாகும். தமிழக அரசும், அனைத்துக்கட்சிகளும் இந்த சீரழிவு நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட முன்வரவேண்டும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.