தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2022 10:25

தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்க அணை ஒன்று கட்டப் போவதாக 1982ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அறிவித்தார்.

6-2-1982 அன்று ஆளுநர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது "1961ஆம் ஆண்டிலேயே தமிழகம் திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டம் இதனால் பாதிக்கப்படும். மேக தாது திட்டம் அமைக்கப்பட்டால் ஒகேனக்கல் திட்டத்திற்கு தண்ணீர் வராது. அத்திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் மேட்டூருக்கு வரும் தண்ணீர் அடியோடு தடுக்கப்படும். தமிழகம் மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆனால் கருநாடகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும். தமிழ்நாட்டிற்கு காவிரி ஒன்றே பெரிய ஆறு ஆகும். தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் 34% பகுதி காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது. கருநாடகத்தில் காவிரிப் படுகையின் பரப்பளவு அதன் நிலப்பகுதியில் 17% மட்டுமே. தமிழ்நாட்டு ஆற்றுப்பாசன நிலத்தில் 60% காவிரி ஆற்றின் நீரையே நம்பியுள்ளது. ஆனால், கருநாடகத்தில் காவிரி மட்டுமின்றி, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆற்றின் கிளை ஆறுகள், துங்கபத்திரா கிளை ஆறு மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பலவும் உள்ளன. மேற்கண்ட ஆறுகளில் இருந்து கருநாடகம் 6500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் 1400 மெகாவாட் மின்சாரம்தான் இதுவரை அம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 4100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி வகை இருந்தும்கூட பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்குக் கேடுவிளைவிக்கும் வகையில் மேகதாது அணையைக்கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. தமிழக எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த அணை கட்டப்படுமானால் ஒகேனக்கல் அணையை நாம் கட்ட முடியாது. நமது திட்டத்தைக் கைவிட நேரிடும்'' எனக்கூறினேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர். மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவிப்பதாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதியளித்தார். அதன்படியே எதிர்ப்பைத் தெரிவித்தார். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். இதன் விளைவாக மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

தமிழக மின் திட்டங்கள்

தமிழகத் திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவதாக இராசிமணல் அணை கட்டப்படும். இங்கு அமைக்கப்படும் புனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணைக்குக் கீழே 5 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அணை கட்டப்பட்டு அங்கு 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த இரண்டு அணைகளின் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.

இதையொட்டி மேட்டூர் அணையின் உயரம் மேலும் 10 அடி அதிகரிக்கப்படும். ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் இரண்டு அணைகளின் விளைவாக இப்பகுதியில் பாசன வசதிகள் எதுவும் செய்யப்படாது. மின்சார உற்பத்திக்காக மட்டுமே இந்த அணைகள் கட்டப்படும். இந்த அணைகளிலிருந்து வெளியேறும் நீர் மேட்டுர் அணையில் வந்து நிறையும்.

இந்த இரண்டு அணைகள் கட்டப்படுவதின் மூலம் காவிரிப் பாசனப் பகுதியில் வெள்ளச் சேத அபாயம் நிரந்தரமாக தடுக்கப்படும். தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை இதன் மூலம் தீர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது இந்தியாவின் மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட அதிகமானதாகும். இப்பகுதி வன விலங்கு சரணாலயமாகவும், சுற்றுலா இடமாகவும் மாறி அந்நிய செலாவணி பெருகுவதற்கு வழி ஏற்படும். உள்நாட்டு மீன் உற்பத்தியும் பெருகும். இப்படிப் பலவகையிலும் ஒகேனக்கல், இராசிமணல் சிறந்தத் திட்டங்களாகும்.

தமிழகத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இராசிமணல், ஒகேனக்கல் புனல் மின் திட்டங்களை நிறைவேற்றலாம் என தேசிய புனல் மின்னுற்பத்தி ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கருநாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஆனால், கடந்த 35 ஆண்டு காலத்திற்கு மேலாக இத்திட்டங்களுக்கு கருநாடகம் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் ஒன்றிய அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

இராசிமணல், ஒகேனக்கல் திட்டங்களை தமிழகம் தயாரித்து மத்திய அரசிடமும், தேசிய புனல் மின் உற்பத்தி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதலுக்காக 25-8-1961இல் அனுப்பிய காலக்கட்டத்தில் கருநாடக அரசு மேகதாது திட்டம் குறித்துச் சிந்திக்கவும் இல்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. ஆனால், 1982ஆம் ஆண்டில் அதாவது 21 ஆண்டுகள் கழித்து மேகதாது திட்டத்தை கருநாடகம் அறிவித்தது. ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடனும், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிறைந்து வழிந்தோடி வரும் நீர். இடையில் எவ்வித தடையும் இல்லாமல் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் மேகதாது அணையைக் கட்டுவதில் முனைந்து நிற்கிறது. மின்உற்பத்தி மட்டுமே அதன் நோக்கம் என்று சொன்னால் கருநாடகத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் ஆறுகளில் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி உண்டு. அதைச் செய்யாமல் மேகதாது திட்டத்தை கருநாடகம் முன்னிறுத்தி ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 35 ஆண்டு காலமாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது என்ற உண்மையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு தவறிவிட்டது.

மேலும், மின் உற்பத்திக்கான திட்டம் என 1982இல் கூறிய கருநாடகம், 2017ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பெங்களூர் மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்காகத்தான் மேகதாது திட்டம் என வாதாடியது. பெங்களூரிலிருந்து தொலைதூரத்தில் தமிழக எல்லையில் உள்ள மேகதாதில் அணைக் கட்டி குடிநீர் கொண்டுபோவதைவிட, பெங்களூருக்கு அருகிலேயே பல ஆறுகள் உள்ளன. அவற்றிலிருந்து தேவையான குடிநீரைப் பெற முடியும் என்பது போன்ற உண்மைகள் தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துக்கூறப்படாததின் விளைவாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உண்மை நிலையை உணரத் தவறியதாலோ தமிழகத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

தமிழகம் இராசிமணல், ஒகேனக்கல் ஆகிய இடங்களில் அமைக்க இருந்த புனல் மின் திட்டங்கள் குறித்து, கடந்த காலத்தில் என்னென்ன நடைபெற்றது? என்ற வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். எப்படியெல்லாம் கருநாடகம் ஒன்றிய அரசை ஏமாற்றியது? அதைப்போலவே தமிழகத்தை எப்படி வஞ்சித்தது? என்பவையெல்லாம் சோக வரலாறாகும்.

வஞ்சக வரலாறு

1996ஆம் ஆண்டிலிருந்து தமிழகமும் கருநாடகமும் புனல் மின் நிலையங்கள் அமைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தின. தமிழகத்தில் இராசிமணல் புனல் மின் திட்டம், ஒகேனக்கல் புனல் மின் திட்டம், கருநாடகத்தில் சிவசமுத்திரம் திட்டம், மேகதாது திட்டம் ஆகிய நான்கு திட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

2009ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில் இரு மாநில அதிகாரிகளும் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஒகேனக்கல் இராசிமணல் திட்டங்களை மத்திய அரசே நிறைவேற்றி இரு மாநிலங்களும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என தமிழகம் கூறிய யோசனையையும் கருநாடகம் ஏற்கவில்லை. தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன்தான் மேகதாது திட்டத்தைக் கருநாடகம் வலியுறுத்துகிறது.

2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் மேற்கண்ட நான்கு புனல் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூறுகையில் "புனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதன் மூலம் அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை வேளாண்மைப் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடுவது குறித்து நாங்கள் ஏற்கெனவே இட்டுள்ள ஆணைகள் எக்காரணம் கொண்டும் மீறப்படலாகாது'' என்று திட்டவட்டமாகக் கூறியது. அதாவது தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டிய நீர் குறித்தக் காலங்களில் குறித்தபடி அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பொருளாகும்.

ஆனால், புனல் மின் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கருநாடகம் தவறாகப் பொருள் கூறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முற்படுகிறது. மேலும் காவிரிப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இன்னும் உள்ளது. தனது முடிவினை உச்சநீதிமன்றம் அறிவிக்காத வகையில் மேகதாது அணைத்திட்டம் உள்பட எத்தகையத் திட்டத்தையும் மேற்கொள்ளுவதற்கு கருநாடகத்திற்கு உரிமை கிடையாது.

1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் கட்டுவதற்கு திட்டமிட்ட இராசிமணல், ஒகேனக்கல் திட்டங்கள் கருநாடக மாநிலத்தின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கருநாடகத்தின் மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலும் நடுவர் மன்றத்தின் ஆணையை மீறியும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைனையில் இப்பிரச்சினை இருப்பதைப் பொருட்படுத்தாமலும் கருநாடகம் அடாவடித்தனமாக செயல்படுகிறது என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. அதன் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்லத் தவறியதே இதற்குக் காரணமாகும்.

"பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்ய வேண்டும்'' என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகக் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களின் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச்சொல்லவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.

தகைமையற்றத் தலைவர்கள்

இந்தியா ஒரு நாடு. இந்திய மக்கள் அனைவரும் அதன் புதல்வர்கள் என வாய்கிழிய தேசிய ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை குறித்து உபதேசிக்கும் தலைவர்கள் பலரும் நாட்டின் தலைமையமைச்சர்களாகவோ அல்லது அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களாகவோ பதவி வகித்த காலங்களில் கட்சி கண்ணோட்டத்துடனும், தங்கள் பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற தன்னலத்துடனும், தமிழகத்தை எப்படியெல்லாம் வஞ்சித்தார்கள் என்ற வரலாற்றினை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள கரும்புள்ளிகள் அவையாகும்.

செந்தமிழ் அகராதியில் தகைமை என்ற சொல்லுக்கு தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுக்கம் என பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பொருள்களில் எது ஒன்றுக்காவது தங்களைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாத தலைவர்கள் தலைமையமைச்சர் பொறுப்பிலும், அகில இந்தியக் கட்சிகளின் தலைமை பொறுப்புகளிலும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மிக்கத் துயரத்துடனும், அளவில்லாத ஆற்றாமையுடன் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.

காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதியான தீர்ப்பின்படி செயல்படவேண்டிய தலைமையமைச்சர் மோடியின் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வாறு செய்யத் தவறியதோடு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையைச் செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்ட சொல்லுக்குப் பொருள் விளங்கவில்லை என குறித்த காலம் கடந்து முறையிட்டபோது இது திட்டமிட்ட காலம் கடத்தும் வேலை என்பதைப் புரிந்துகொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான் அடைந்த வியப்பையும், ஏமாற்றத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்ததோடு, தனது ஆணையின் வண்ணம் அமைக்கப்படவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்திற்கான திட்டத்தை அளிக்காமல் ஒன்றிய அரசு தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பதாகக் கடிந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, மேலும் 3 மாத கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என கேட்டபோது அதன் பின்னணியையும் உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டது. மே-12ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை காலங்கடத்துவதே கர்நாடகத்தின் நோக்கம் என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம் மே-3ஆம் தேதி வரை மட்டுமே கால நீட்டிப்புக் கொடுத்தது. காவிரி சமவெளிப் பகுதியில் வேளாண்மை வேலைகளைத் தொடங்குவதற்கு ஏற்றபடி ஆண்டுதோறும் சூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். எனவே, மே-3ஆம் தேதிக்குள் தனது தீர்ப்புக்கு ஏற்ற திட்ட வடிவத்தை அளிக்கவேண்டுமென ஆணைப் பிறப்பித்தது.

விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு அளித்த முறையீட்டு மனுவினை ஏன் முன்னதாகவே அளிக்காமல் 6 வார காலம் கடந்த பிறகு அளிப்பதின் நோக்கம் என்ன? என்ற தலைமை நீதிபதியின் கேள்விக்கு அரசின் வழக்கறிஞர் பதில் கூற முடியாமல் தலைகவிழ்ந்து நின்றார். அவருக்கு இத்தகைய தலைக்குனிவு ஏற்படவில்லை. மாறாக, தலைமையமைச்சர் மோடிதான் அவமதிக்கப்பட்டு தலைக்குனிந்து நின்றார்.

அவர் மட்டுமல்ல, இவருக்கு முன்னதாக தலைமையமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த பலரும் காவிரிப் பிரச்சினையில் தங்களின் தகைமையைக் காக்கத் தவறிவிட்டனர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாத நிலையில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தபோது அப்போதைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் அவ்வாறு செய்ய முன்வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்துள்ள வழக்கினைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முடிவு காண உதவுவதாக அவர் அளித்த வாக்குறுதியை நம்பி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கினைத் திரும்பப் பெற்றது. 1972ஆம் ஆண்டில் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்களின் பேச்சு மீண்டும் தொடங்கியது. காவிரிப் பிரச்சினை தொடர்பான புள்ளி விவரங்களை தொகுத்துத் தருவதற்கு உண்மை அறியும் குழு ஒன்றிணை அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைகளை முடிக்கும் வரை எந்த மாநிலமும் புதிய பாசனப் பயன் முறைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் மூன்று மாநில முதல்வர்களும் இந்திய அமைச்சரும் கையெழுத்திட்டார்கள். ஆனால், கர்நாடகம் இந்த உடன்பாட்டையும் மீறி புதிய பாசனத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றத் தொடங்கியது. ஆனால் இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய தலைமையமைச்சர் இந்திராகாந்தி தனது தகைமையைக் காக்கத் தவறினார்.

1973ஆம் ஆண்டு இறுதியில் டெல்லியில் மூன்று மாநிலங்களின் முதல்வர்களும் இந்தியப் பாசன அமைச்சரும் கூடி காவிரி உண்மையறியும் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அந்தப் புள்ளி விவரங்கள் சரியானவை என ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் மேலும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று 1974ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் “காவிரி சமவெளி அதிகார அமைப்பு” ஏற்படுத்தும் திட்டத்தை மூன்று மாநில முதல்வர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதன்படி அந்த அமைப்பினை ஏற்படுத்த இந்திய அரசு தவறியதோடு தனது தகைமையையும் இழந்தது.

1976ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய அரசு ஒரு நகல் உடன்பாட்டினை உருவாக்கியது. அதற்கிணங்க தமிழகம் பெற்று வந்த 489 டி.எம்.சி. நீரில் 100 டி.எம்.சி.யை குறைத்துக் கொள்ளவேண்டும். கர்நாடகம் பெற்றுவந்த 177 டி.எம்.சி. நீரில் 25 டி.எம்.சியை குறைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு குறைத்துக்கொள்ளப்படும் 125 டி.எம்.சி. நீரில் தமிழ்நாட்டிற்கு 4 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட்டு மொத்தம் 393 டி.எம்.சி. நீர் அளிக்கப்படும். கர்நாடகத்திற்கு கூடுதலாக 87 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட்டு மொத்தம் 239 டி.எம்.சி. நீர் பெறும். கேரளத்திற்கு 39 டி.எம்.சி. நீர் அளிக்கப்படும். முதலில் இதை ஏற்றுக்கொண்ட கர்நாடகம், பின்னர் அதை ஏற்க மறுத்துவிட்டது.

எனவே, 1990ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என ஒன்றிய அரசை தமிழகம் வற்புறுத்தியது. ஆனாலும், சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டிய ஒன்றிய அரசு காலம் கடத்தியது. அப்போது தலைமையமைச்சராக இருந்த வி.பி. சிங் தனது தகைமையைக் காக்கத் தவறினார். உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இந்தப் பிரச்சினையை விட்டுவிடுவதாக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே, உச்சநீதிமன்றம் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடுவர் மன்றத்தை அமைத்து அரசிதழிலும் வெளியிடவேண்டுமென ஆணைப் பிறப்பித்தது. அவ்வாறே சித்தாதோஷ் முகர்ஜியை தலைவராகக் கொண்ட நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 21ஆம் தேதி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீர் அளிக்கவேண்டும் இடைக்கால ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால், இந்த ஆணையை ஏற்க மறுத்து கர்நாடக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இச்சட்டமன்றத்தில் அங்கம் வகித்த அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து தங்களது தகைமையைக் காக்கத் தவறின.

நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் கடத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டு அரசிதழில் வெளியிடுமாறு ஆணைப் பிறப்பித்தப் பிறகே அந்த ஆணை வெளியிடப்பட்டது. அப்போது தலைமையமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ் தனது தகைமையைக் காக்கத் தவறினார்.

1993ஆம் ஆண்டு சூலை மாதம் வரை நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்கவோ, அதற்கிணங்க தண்ணீர் தரவோ கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. ஒன்றிய அரசு பாராமுகமாக இருந்தது. அப்போதை முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக ஒன்றிய அரசு தலையிட்டு தண்ணீர் அளவைக் கண்காணிக்க குழு அமைப்பதாக உறுதி கூறியது. ஆனால், அதை ஏற்க கர்நாடகம் பிடிவாதமாக மறுத்துவிட்டது. எனவே மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது. அதன் விளைவாக இப்பிரச்சினையில் 11 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்கு அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமையமைச்சருக்கு நடுவர் மன்றம் ஆணைப் பிறப்பித்தது. ஆனால், அந்த ஆணையை நிறைவேற்ற தலைமையமைச்சர் பி.வி. நரசிம்மராவ் தவறினார். பிரச்சனையை ஆறப்போடுவதற்காக சவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஒய்.கே. அலாக் என்பவர் தலைமையில் 3பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தார். இக்குழு தமிழ்நாட்டில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமும், கார் மூலமும் விரிவாகப் பயணம் செய்து பார்வையிட்டது. ஆனால், கர்நாடக பாசனப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் மேலோட்டமாகப் பார்வையிட்டதே தவிர, விரிவாகப் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் குழு 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிற்கு அளித்தால் போதும் என பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட தலைமையமைச்சர் அவ்வாறே செய்தார்.

பிற்காலத்தில் தலைமையமைச்சராக தேவேகெளடே பதவி ஏற்றப் பிறகு மத்திய திட்ட அமைச்சராக ஒய்.கே. அலாக் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திட்டக் குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டுவந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடனேயே அவர் திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவ்வாறே அவர் அனுமதியும் வழங்கினார்.

இதற்கிடையில் காவிரிப் பிரச்சனையில் தீர்வுகாணும் முயற்சியில் தலைமையமைச்சர் ஈடுபட்டிருப்பதால் நடுவர் மன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென கர்நாடக அரசு நடுவர் மன்றத்தில் முறையிட்டது. ஆனால், அக்கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்க மறுத்தது. இந்திய அரசியல் சட்டத்தின் 262ஆவது பிரிவின்படி நடுவர் மன்றத்தின் அதிகார வரம்பு சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. தலைமையமைச்சரின் நிர்வாக ஆணைகள் எதுவும் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எக்கட்டத்திலும் மீற முடியாது என தமிழக வழக்கறிஞர் வாதமிட்டதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து அதனுடன் ஒத்துழைக்கவோ, அதனுடைய ஆணைகளை நிறைவேற்றவோ கர்நாடகம் தவறியது. அதுமட்டுமல்ல, அப்போது கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேகெளடே காவிரி நடுவர் மன்றத் தலைவர் சித்தாதோஷ் முகர்ஜி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றிருப்பதாகக் குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தமிழகக் கோவில்களுக்கு நடுவர் மன்ற நீதிபதிகள் சென்றபோது அவர்களுக்குப் பரிவட்டம் போன்ற மரியாதைகள் செய்யப்பட்டன. இதையே பரிசுகள் என திசைத்திருப்ப தேவேகெளடா முயன்றார். அவர் கர்நாடக முதலமைச்சரான பிறகும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. பிறகு இந்தியாவின் தலைமையமைச்சர் பொறுப்பையும் அவர் ஏற்றார். தலைமையமைச்சராக உள்ளவர் தன்மீது வழக்குத் தொடர்ந்திருப்பதால் நடுவர் மன்றத் தலைவருக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற விசாரணையில் 75% முடிவடைந்துவிட்ட நிலையில் அதன் தலைவர் பதவி விலகவேண்டிய நிலையை ஏற்படுத்தியதின் மூலம் தலைமையமைச்சர் தேவேகெளடே தனது தகைமையை முற்றிலுமாக இழந்துவிட்டார்.

தேவேகெளடே அவர்களுக்குப் பின் தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்ற குஜ்ரால் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக வரைவுத் திட்டமும், ஆணையமும் உருவாக்குவதற்காக வழி வகுக்கப்பட்டது. சராசரி மழைக் காலங்களில் காவிரி நீரை முற்றாக கர்நாடகம் தடுத்துவிடாமல் காப்பதற்கு இத்திட்டத்தில் வழிவகுக்கப்பட்டிருந்தது. ஆனால், சில மாதங்கள் மட்டுமே குஜ்ரால் அரசு பதவியில் இருந்ததால் இத்திட்டத்தை செயற்படுத்தவில்லை.

அவரைத் தொடர்ந்து தலைமையமைச்சர் பதவியை ஏற்ற வாஜ்பாய் காலத்தில் தமிழகத்தின் நலன்களை முழுமையாகப் பாதிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுத்தார். தலைமையமைச்சரும் 4 மாநில முதல்வர்களும் அடங்கிய ஒரு உயர் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவுக்கு உதவியாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களையும், மத்திய நீர்ப்பாசனத் துறை செயலாளரையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். எனவே, இக்குழுவினால் எத்தகைய முடிவும் எடுக்க முடியவில்லை.      

காவிரிப் பிரச்சனை தொடங்கிய 1968ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை ஐம்பதாண்டு காலமாக பத்து தலைமையமைச்சர்கள் பதவி வகித்துள்ளார்கள். இவர்கள் யாருமே நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றங்களின் தீர்ப்பையோ மதிக்காத கர்நாடக அரசின் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முன்வராமலும், தமிழகத்திற்கு நீதி வழங்காமலும் தங்களின் தகைமையை அடியோடு சிதைத்துவிட்டனர்.

கருநாடகத்தில் காங்கிரசு, சனதா, பா.ச.க. போன்ற அகில இந்தியக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இதில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதன் முதலமைச்சர் காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிப்பதையே குறியாகக் கொண்டு ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர். கருநாடகம்-தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்த கட்டங்களில் இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் இதில் தலையிடாமல் இருந்தது வேறு. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து இப்பிரச்சனைக்கு நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்குச் சென்று அவைகள் அளித்தத் தீர்ப்புகளை ஏற்க மறுத்து கருநாடகத் தலைவர்கள் செயற்பட்டபோது, அவர்களைக் கண்டித்துத் திருத்த எந்த அகில இந்தியக் கட்சித் தலைவரும் முன்வரவில்லை. தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேடும் நோக்கத்துடன் மட்டுமே அவர்கள் செயல்பட்டார்கள். தேசிய ஒருமைப்பாட்டில் இந்தத் தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்குமானால், கருநாடகத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து திருத்தியிருக்கவேண்டும். ஆனால், இன்றுவரை அத்தகைய நடவடிக்கைகளில் எந்த அகில இந்தியக் கட்சித் தலைவரும் எள்ளளவு முயற்சிகூட செய்யவில்லை.

இந்தத் தலைவர்களுக்கு தங்கள் தகைமையைக் காப்பாற்றுவதைவிட கர்நாடகத் தேர்தலில் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது. தங்களின் தகைமையைக் காக்கத் தலைமையமைச்சர்களும், அகில இந்தியத் தலைவர்களும் தவறும்போது தமிழர்கள் அரசியல் சட்டத்தின் மாண்பை மதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், தேசிய ஒருமைப்பாட்டினைக் காக்கவேண்டும் என முழங்குவதும் வீண்! வீண்! வீணே.

பன்னாட்டுப் பெரு முதலாளிகள் சதி!

காவிரிச் சமவெளிப் பகுதி முழுவதிலும் பெட்ரோல் எண்ணெய், எரிவாயு, மீத்தேன் இன்னும் பல இயற்கை வளங்கள் புதைந்து கிடக்கின்றன. பல கோடானகோடி ரூபாய் மதிப்புபெறும் இவற்றை சுரண்டியெடுத்து கொள்ளையடிக்க பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் பல ஆண்டுகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், காவிரிச் சமவெளிப் பகுதி உழவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக இந்த முயற்சிகள் வெற்றிபெற வில்லை. காவிரிச் சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது என்பது நாடறிந்த ஒன்றாகும்.

இந்தப் பின்னடைவை ஏற்றுக்கொள்ள முடியாத பெரு முதலாளி வர்க்கம் காவிரிப் பிரச்சனையின் பின்புலத்தில் மறைவாகச் செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. தொடக்கத்திலிருந்து காவிரிப் பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அந்தத் தீர்ப்பை நிறைவேற்றவும், காவிரிப் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கும் ஒன்றிய அரசு முன்வராததற்கு பெரு முதலாளி வர்க்கத்தின் அழுத்தமே காரணமாக இருக்கவேண்டும்.

மேகதாது அணையைக் கட்டும் பிரச்சனையிலும், ஒன்றிய அரசு எந்த முடிவுக்கும் வராமல் வேடிக்கைப் பார்ப்பதற்கும் அதுவே காரணமாகும். மேகதாது அணை கட்டி முடிக்கப்பட்டுவிடுமேயானால் ஒரு சொட்டு நீர்கூட, தமிழகத்திற்கு வராது. காவிரி சமவெளிப் பகுதி பாலைவனமாகும். வேளாண்மையை கைவிட்டு உழவர்கள் வேறு பிழைப்புத்தேடி வெளியேறவேண்டிய நிலை உருவாகும். உழவர்கள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டுச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இந்த நிலை உருவாகிவிட்டால், பின்னர் காவிரி சமவெளியில் புதைந்து கிடக்கும் இயற்கை வளங்கள் அத்தனையும் கொள்ளையடிப்பது எளிதாகும் என பெரு முதலாளி வர்க்கம் வகுத்த வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றவே காவிரிப் பிரச்சனை தீர்க்கப்படாமல் கிடப்பதற்குக் காரணமாகும்.

தமிழ் மறவர்களின் புகழ் மணக்குமாக!

கருநாடக மண்ணில் உற்பத்தியாகும் காவிரியின் நீர் தங்களுக்கே சொந்தமானதாகும் என கொக்கரித்து இயற்கை நீதியின்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரைத் தராமல் கருநாடகம் வஞ்சிக்கிறது.

இந்த வாதப்படிப் பார்த்தால், நெய்வேலியில் தமிழ் மண்ணில் புதையுண்டுக் கிடக்கும் நிலக்கரியை வெட்டியெடுத்து தமிழ்த் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழகத்திற்கே சொந்தமானது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 20% கருநாடகத்திற்கும், 20% ஆந்திரத்திற்கும், 20% கேரளத்திற்கும் மற்றும் ஒன்றிய அரசின் மின் தொகுப்பிற்கு 20%மும் போக எஞ்சிய 20%தான் தமிழகத்திற்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கருநாடகத்திற்குத் தமிழக மின்சாரத்தை வழங்கக் கூடாது என பல்வேறு கட்சிகளும் போராடின. தமிழக திரையுலகைச் சேர்ந்த நடிகர்களும், பிறரும் போராடினார்கள்.

இந்த கோரிக்கையை முன் வைத்து காவிரி மீட்புப் படையின் தளபதி சுபா. இளவரசன் தலைமையில் தோழர்கள் மணிவண்ணன், பாக்யராசு, அருள், அருச்சுனன் ஆகிய ஐந்து பேரும் பெரும் ஈகத்திற்குத் தயாராகி இரகசியத் திட்டம் ஒன்றை வகுத்தனர். நெய்வேலியிலிருந்து கருநாடகத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டிருக்கும் மின் கோபுரம் ஒன்றைத் தகர்த்துவிட்டால், மின்சாரம் செல்வது தடைப்பட்டுப் போகும்.இந்தத் திட்டத்துடன் திருநாவலூர் அருகே இருந்த மின் கோபுரத்தை வெடி வைத்துத் தகர்த்தனர்.

இதன் விளைவாக ஐந்து பேரும் 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இரண்டாண்டுகள் நடந்த இந்த வழக்கில் அவர்களுக்கு 2004ஆம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்முகத்துடன் அத்தண்டனையை ஏற்றுச் சிறையில் வாடிய போதிலும் அவர்கள் கொஞ்சமும் மனம் தளரவில்லை.

காவிரிப் பிரச்சனைக்காக எத்தனையோ பேர் போராடினாலும், அதற்காக 7 ஆண்டு காலம் சிறையில் கழித்த இவர்களுக்கு ஈடு இணை இல்லை. காவிரிப் பாசன உழவர்கள் தீரமிக்க இந்த இளைஞர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். இவர்களின் ஈகத்தை மதித்துப் போற்றுவது அனைத்துத் தமிழர்களின் கடமையாகும். தமிழன்னைப் பெற்றெடுத்த “வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் பூண்ட இந்தத் தமிழ் மறவர்களின் புகழ் கன்னித் தமிழ்க் காவிரிக் கரையோரம் நெடுகிலும் மணக்குமாக.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.