ஈழத் தமிழருக்கு விடியல் – மாநாடு (சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2022 13:53

(09-04-22 – சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தியாகு தொடங்கி வைத்தார்.

பழ. நெடுமாறன், வைகோ, பேரா. இராமு மணிவண்ணன், தொல். திருமாவளவன், தி. வேல்முருகன், கே.எஸ். இராதாகிருஷ்ணன், உ. தனியரசு, திருமுருகன் காந்தி, கி. வெங்கட்ராமன், மீ.த. பாண்டியன், சிங்கராயர் ஆகியோர் உரையாற்றினர். மண்டபத்திற்கு உள்ளேயும், வெளியேயும் திரளானவர்கள் கூடியிருந்தனர்.)

1.அறிமுக முற்கூற்று

இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் (தேசிய இனங்கள், Nations) ஆக சிங்களவர்களும், ஈழத்தமிழர்களும் வரலாற்று ரீதியான இறையாண்மைக்குரிய நியாயப்பாடு கொண்டவர்கள்.

வில்சோனிய மற்றும் லெனினிச கோட்பாடுகளின் பிரகாரமும், ஐ.நா. சாசனம் (UN Charter) அத்துடன் குடிசார் அரசியல் சர்வதேச உடன்பாட்டுரை (ICCPR) என்பவற்றின் கோட்பாடுகளின்படியும் ஈழத் தமிழர்கள் எதுவகையிலும் சமரசமற்ற சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

தேசிய சுயநிர்ணய உரிமை (National self-Deternination) தொடர்பாகவும் தேசம் தொடர்பாகவும் ஐ.நா. வரைவிலக்கணத்துக்கு முற்பட்ட வில்சோனிய, லெனினிய வரைவிலக்கணங்கள் அடிப்படையிலும், ஐ.நா.வில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வழக்கில் இருந்த, ஐரோப்பிய காலனித்துவ நீக்கம் (de-Colonisation context) என்ற அடிப்படையிலும் தனித்துவமான இறையாண்மைக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் உரித்துடையவர்கள் என்ற அடிப்படையிலும், பின்னர் யுனெஸ்கோவினால் (UNESCO) மக்கள் (People) என வகுக்கப்பட்ட அனைத்துவிதமான வரைவிலக்கணங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசமாகவும், மக்களாகவும் விளங்குகிறார்கள். (A Nation or a people entitled to the right of self-determination)

அதுமட்டுமல்ல, அளப்பரிய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு ஒரு நடைமுறை அரசை நிறுவியவர்கள் என்ற வகையில் போராடிப் பெற்ற இறைமைக்கும் உரியவர்களாவர். இறுதியில், நீளிய இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் பரிகார நீதியாக இறையாண்மைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமைக்கும், இறையாண்மைக்கும் உரித்துடைய ஒரு தேசிய இனம் (தேசம்) ஆகிறார்கள்.

அதேவேளை, ஈழத்தமிழர் தேசத்தினர் ஏனைய தமிழ்பேசும் மக்களோடும், (People) மக்கட்குழுமங்களோடும் (Communities) தமது பாரம்பரியத்தாயகமான வடக்கு-கிழக்கைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சிங்கள தேசத்தினர் தீவின் தென் பகுதிகளில் கோலோச்சியதற்கு நிகராக, வடக்கிலும், கிழக்கிலும் ஈழத் தமிழ் தேசத்தினர் வழிவழித் தமிழ் மரபு மன்னர்களையும் வன்னிமைகளையும் மட்டுமன்றி, போர்த்துக்கேயர்களால் 1619இல் ஆக்கிரமிக்கப்படும் வரை, நிலத் தொடர்ச்சி கொண்ட ஓர் இராசதானியையும் கொண்டிருந்தார்கள்.

தவிரவும், பிரித்தானிய ஆட்சியாளர்களின் காலத்தில் கோல்புறூக் -கமரூன் ஆணைக்குழுச் சீர்திருத்தம் என்ற பெயரில் தீவு முழுவதற்குமான ஒற்றை நிர்வாகம் ஒன்று பரிந்துரைக்கப்பட்ட 1833ஆம் ஆண்டு வரையான காலனித்துவத்திலும், அவர்களுக்கு முந்திய போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தரின் காலத்திலும், ஈழத் தமிழர்களைத் தனிவேறான ஒரு தேசமாக அனுசரித்து, அவர்களுக்குரிய நிலத் தொடர்ச்சி கொண்ட ஒரு நிர்வாக அலகாக வடக்கு-கிழக்கைப் பேணி வந்தார்கள்.

1833இல் பிரித்தானிய காலனித்துவம் ஈழத் தமிழரின் பாரம்பரிய தாயகத்தை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்று இரண்டாகப் பிரித்தது.

வடக்கு, கிழக்கு என்று பிரித்தாளப்பட்ட தன்மை தமிழ் பேசும் மக்களின் ஆட்சிப் பரப்புச்சார் ஒருமைப்பாட்டைச் சிதைத்துள்ளது. இந்தக் காலனித்துவ வரலாற்று அநீதியைச் சரிசெய்யும் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு உள்ளது என்பதைத் தமிழ்நாட்டு அரசு பிரித்தானிய அரசுக்கு, இந்திய ஒன்றிய அரசு ஊடாக, நேரடியாகவும், புலம்பெயர் ஈழத் தமிழர்களோடு இணைந்தும் எடுத்தியம்பவேண்டும் என்ற ஈழத் தமிழர் தேசம் தமிழகத்தை வேண்டி நிற்கிறது.

பிரித்தானியக் காலனித்துவத்தின் முடிவுக் காலத்தில் ஆட்சிப்பரப்புச்சார் ஒருமைப்பாடுடைய வடக்கு-கிழக்கில் ஈழத்தமிழர் ஒரு தேசம் என்பதைச் சிங்கள அமைப்பான கண்டித் தேசிய சபை அங்கீகரித்து, 1927இல் பின்-காலனித்துவ அரச உருவாக்கத்துக்குரிய கூட்டாட்சித் தீர்வாகத் தனது திட்ட மாதிரியை முன்வைத்திருந்தது.

இதைப்போல, இலங்கைக் கம்யூனிசக் கட்சி 1944இல் வடக்கு-கிழக்குத் தமிழ்த் தாயகம் ஒரு தேசமாகப் பிரிந்து செல்லும் உரிமை கொண்டது என்பதைக்கூட அங்கீகரித்திருந்தது.

1948இல் பிரித்தானியா சிங்கள ஆட்சியாளர்களிடம் தீவைக் கையளித்து ‘சுதந்திரம்’ வழங்கியிருந்தாலும், ஐ.நா. உறுப்புரிமையைப் பெறுவதில் இலங்கை அரசு உலகளாவிய இடதுசாரி நாடுகளின் அணியிலிருந்து நெருக்கடிகளைச் சந்தித்து, பின்னர் 1955இலேயே உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது.

1948இல் பிரித்தானியர் வெளியேறியதன் பின்னர், சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர் மக்களாணை இன்றி, தமிழ்பேசும் அனைத்து மக்களின் ஏகோபித்த எதிர்ப்புக்கும் மத்தியில், சிங்கள மொழிக்கும், பௌத்தத்துக்கும் முன்னுரிமை கொடுத்து, இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்குரிய வகையில், ஒற்றையாட்சியை மேலும் கெட்டியாக்கி, ஒரு குடியரசு அரசியலமைப்பை 1972இலும், அதன் பின்னர் ஜனாதிபதி ஆட்சி முறையோடு மேலும் வலுப்பெற்ற ஒற்றையாட்சியை 1978 இலும் நிறைவேற்றியுள்ளனர். சோல்பரி அரசியலமைப்பைப் போலவே இந்த இரு அரசியலமைப்புகளும், தமிழ் மக்களின் பங்கு பெறலோடு மேற்கொள்ளப்படவில்லை.

ஈழத் தமிழரின் மக்களாணை இன்றி உருவாகிய ஒற்றையாட்சி அரசியலமைப்புகளும் அவற்றின்பாற்பட்ட அரசும் சட்டவிரோதமானவை என்பதோடு, 1972இல் அதைத் தட்டிக் கேட்கத் தவறியதால் காலனித்துவ, பின் – காலனித்துவப் பிரித்தானியா ஈழத் தமிழர் தேசியச் சிக்கலின் முதன்மைப் பொறுப்புக்கூறலுக்குரிய அரச தரப்பாகிவிட்டது. இது குறித்து தந்தை செல்வா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி 1951 ஏப்ரல் மாதம் தனது முதலாவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானத்தில் பின்வருமாறு விவரித்துள்ளது.

“சோல்பரி அரசியலமைப்புத் திட்டம் அறிவுக் கொவ்வாததெனவும், தமிழ் பேசும் மக்களை அடிமை கொள்வதற்கேதுவானதெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது”

ஈழத் தமிழர்களின் வரலாற்று மற்றும் பாரம்பரியத் தாயகமான வடக்கு-கிழக்கின், ஏற்கெனவே 1619இல் போர்த்துக்கேயரிடம் இழந்துவிட்டிருந்த இறைமை, 1833ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் இலங்கையர் தேசப் பரிசோதனையின் ஒற்றை நிர்வாகத்துக்குள் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுச் சிதைவுக்குள்ளானது. இரண்டாம் உலக யுத்தத்தில் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தைக் கையாண்ட பிரித்தானியர், ஒற்றையாட்சி முறைக்குள் தமிழர்களது இறைமையைக் கட்டிப் போட்டு, அதைச் சாட்டாக வைத்துத் தீவின் நில ஒருமைப்பாட்டை தாமே உறுதி செய்து தருவதான வாக்குறுதியை இராணுவரீதியாக சிங்கள ஆட்சியாளருக்கு வழங்கி, தாங்கள் ஏற்கெனவே சிங்களவர் மத்தியில் மேலும் கூர்மைப்படுத்தியிருந்த மகாவம்ச மனநிலையைப் பயன்படுத்தி, புதிய புவிசார் அரசியலில் முழுத் தீவையும் மேற்கின் நேசப்படைகளுக்குச் சார்பாகப் பேணும் உத்தியோடு, ஈழத் தமிழரின் ஐம்பதிற்கு ஐம்பது எனும் சம அந்தஸ்துக் கோரிக்கையையும் நிராகரித்து, சிங்கள ஆட்சியாளரிடம் தமிழ் இறைமையின் தலைவிதியைக் காவு கொடுத்தனர்.

காலனித்துவத்தின் ஆரம்பத்தில் இழக்கப்பட்ட தமிழ் இறைமை காலனித்துவ முடிவில் மீண்டும் ஈழத் தமிழருக்குக் கிட்டாதபடி, பின்னாளில், குறிப்பாகப் பனிப்போர்க் காலத்தில், சோவியத் நட்பு இந்தியாவால் மேலும் அது பலிக்கடா ஆக்கப்படவும் பிரித்தானியரே வழிகோலினர். பிரித்தானியாவின் இலங்கையர் தேசப் பரிசோதனை தோற்று, சிங்கள இறைமை தமிழர் மீதான ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசு மலையகத் தமிழரின் குடியுரிமையை இரத்துச் செய்தபோதும் மேற்கு நாடுகள் சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சி அரசுக்கு ஐ.நா. அங்கத்துவத்தை 1955இல் பெற்றுக் கொடுத்தன. ஐ.நா. உறுப்புரிமை பெற்ற அடுத்த வருடமே ஈழத் தமிழர் இன அழிப்புத் திட்டம் தீவிரமாக்கப்பட்டது.

பிரித்தானியக் கோமறை மன்றின் தீர்ப்புக்கு விரோதமாகவும், தமிழரின் மக்களாணை இன்றியும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை சிங்கள மேலாதிக்கம் 1972ஆம் ஆண்டு முன் வைத்தபோது, பிரித்தானிய அரசு தனது காலனித்துவத் தவறைத் திருத்த மீண்டும் ஒரு வாய்ப்பு இருந்தும் அதிலிருந்து தெரிந்தே தவறியது. இதனால், ஈழத் தமிழ் இறைமை மீட்புக் குறித்த பெரும் பொறுப்புக்கூறல் பிரித்தானிய அரசுக்கு உண்டு.

ஐ.நா.வில் உறுப்புரிமை பெற்று ஒன்பது மாதங்களுக்குள் தனிச் சிங்களச் சட்டம் என்று அழைக்கப்படும் சட்டத்தை இலங்கை அரசின் சிங்கள ஆட்சியாளர் 1956 சூலையில் நிறைவேற்றியதும், இன அழிப்புக்கான திட்டமிடலை இலங்கை ஒற்றையாட்சி அரசு மேற்கொள்கிறது என்பதை தமிழரசுக் கட்சி 1956 ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் நடைபெற்ற தனது நான்காவது மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெளிவாக அடையாளங்கண்டு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் பேசும் மக்கள் வாழும் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒருமித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாது பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றியதும், சிங்களத்தைப் பூரணமாக நிராகரிக்கும் தமிழ் மக்கள் மீது அதனைத் திணிக்க முயல்வதும், செம்மை சான்ற பேரிலக்கியச் செல்வத்தையும் நவீன வளர்ச்சியையும் கொண்டதும் – கீழைத் தேசத்து மொழிகளில் முன்னேற்றமடைந்ததும் – முற்போக்குடையதுமான தமிழை அழித்தொழிப்பதும், சிங்கள மக்களின் வரலாற்றையொத்த பழைமையும் பெருமையும் மிக்க வரலாற்றை உடையவர்களான தமிழர்களை – இனக் கொலைக்குட்படுத்துவதுமே அரசின் நோக்கம் என்பதை ஐயத்துக்கிடமின்றித் தெளிவுபடுத்துவதாகும்”.

இலங்கை அரசு 12 அக்டோபர் 1950இல் இன அழிப்புக்கெதிரான சாசனத்தை (Genocide Convention) ஏற்றுக்கொண்டுள்ள நாடாக இருப்பதனால், அதற்கொப்ப சட்டரீதியான, சர்வதேச புலனாய்வு விசாரணைகளை, அந்த நாளில் இருந்து இன்று வரையான காலப்பகுதி வரை மேற்கொள்ளவேண்டும். 2002இல் இருந்து 2009 வரை என்றோ அல்லது 2011 வரை என்றோ மட்டுப்படுத்துவது பொருத்தமற்றது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

60 ஆண்டு காலத்திற்கு மேலாக அறவழியிலும், மறவழியிலும் ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து இம்மாநாட்டில் வழங்கப்பட்ட ஆவணம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1948இன் பின்னர் சிங்கள இனத்-தேசிய மேலாதிக்கம் வலுப்பெற ஆரம்பித்ததும் ஈழத் தமிழர்கள் தமது தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தி, அமைதி வழியில் கூட்டாட்சித் தீர்வு (Federal solution) கோரி, ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். அமைதிவழிப் போராட்டம் பலனளிக்காது போய், எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் இலங்கை ஆட்சியாளர் புறக்கணித்து, திட்டமிட்ட அரச வன்முறையையும் பண்பாட்டு இன அழிப்பையும் தமிழ்த் தேசம் மீது கட்டவிழ்த்து விடவே, வேறு வகையற்ற இறுதி வழியாகச் சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற தமிழீழம் என்ற நாட்டை அமைப்பதே தீர்வென்ற முடிவு 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக மேற்கொள்ளப்படலாயிற்று.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரப்பட்டிருந்ததற்கமைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை வழங்கப்பட்டது. இதிலே ஆயுதப் போராட்டத்திற்கான ஆணையும் இறுதி வழியாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

1983இல் இலங்கை ஒற்றையாட்சி அரசால் கொண்டு வரப்பட்ட ஆறாம் திருத்தச் சட்டத்தின் நிர்ப்பந்தத்தினால் வடக்கு-கிழக்கில் தெரிவான தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகச் சத்தியப்பிரமாணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டபோது, அவர்கள் பதவி துறந்து, கடல் கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் புகலிடம் தேடவும், மறுபுறம் இலங்கை அரச ஆதரவோடு கறுப்பு சூலை இனப்படுகொலை தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படவும், ஈழத் தமிழர்கள் தமிழீழம் நோக்கிய ஆயுதப் போராட்டம் ஒன்றே இறுதி வழி என்ற நிலையில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முன் வந்தார்கள்.

ஆறாம் சட்டத்திருத்தத்தக்கேற்ப, தற்போதைய சட்டநியாயாதிக்கமற்ற அரசின் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு (அட்டவணை 7, உறுப்புரை 157 ஆ (7) ஆம், உறுப்புரை 161(ஈ) (iii) பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கீழ்வரும் உரைப் பகுதியை வாசித்து சத்தியப் பிரமாணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறது.

“……………………… ஆகிய நான், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை உறுதியாகப் போற்றிக் காப்பேன் என்றும், இலங்கையின் ஆள்புலத்துக்குள்ளாகத் தனி அரசு ஒன்று தாபிக்கப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ, ஆக்கமளிக்கவோ, ஊக்குவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்திச் சத்தியஞ் செய்கின்றேன்”.

1977இற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இடம் பெற்ற எந்தத் தேர்தலும் ஈழத் தமிழர்களின் அரசியல் வேணவாவை (Political aspiration) வெளிப்படுத்தும் மக்களாட்சி உரிமை மறுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருபவை என்பதாலும், குறிப்பாக, மக்களாட்சி ஆணை வழங்கப்பட்ட வேணவாவுக்கு (Democratically mandated aspiration) எதிராக அவர்கள் உறுதிமொழி (சத்தியப்பிரமாணம்) எடுக்க வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாலும், இலங்கைத் தேர்தல் அரசியலுக்கு உட்பட்ட எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது வேறு தெரிவான உறுப்பினர்களோ ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவைப் பிரதி நிதித்துவம் செய்து பேசுவதற்கு இயலாதவர்கள்.

இந்த நிலைப்பாட்டையே, தமிழீழ விடுதலைப் புலிகளும் கடைப்பிடித்தார்கள். அதாவது, ஆறாம் சட்டத்திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, “விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி” (PFLT) என்ற ஒரு கட்சியை அவர்கள் பதிந்துகொண்டிருந்த போதும், அதனூடாகத் தேர்தல் அரசியலில் பங்குபற்றாது, அதற்கு அப்பாற்பட்ட அரசியல் வெளி (political space) ஒன்றை உருவாக்கி, அதாவது தமிழ்த் தேசியக் ஊட்டமைப்பை (TNA) உருவாக்கி, அந்தப் பதலீட்டு ஒழுங்கு (proxy) மூலம், கோரிக்கை, பேச்சுவார்த்தை மற்றும் வெளியுறவு உள்ளிட்டவற்றுக்கான ஏக பிரதிநிதித்துவத்துக்கான (sole representation) மக்களாணையைப் பெற்றுக்கொண்டார்கள்.

கூட்டமைப்பினர் எந்த ஒரு பேச்சுக்களிலும் கலந்து கொள்ளாதிருந்தமையும், அதை விடுதலைப் புலிகளும் தவிர்த்தமைக்குமான காரணம் தேர்தலில் தெரிவான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட உறுதிமொழியை மேற்கொண்டவர்களாக இருந்தமையே.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர் தேசத்தால் நிராகரிக்கப்பட்டு, அதன் சனநாயக ஆணை இல்லாது ஒருதலைப் பட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியலமைப்புகளின் வழிவந்த ஒற்றையாட்சி அரசானது, தமிழர்களின் பார்வையில் முறைகேடானதும் (illegitimate), மக்களாட்சி முறையிலான மக்களாணை (democratic mandate) பெறப்படாத ஒன்றுமாகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு தேசம் (occupied nation) என்ற வகையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பினால் திணிக்கப்படும் ஆட்சி முறைமையில் பங்குபற்றுமாறு ஈழத் தமிழர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆக்கிரமித்துள்ள ஒற்றையாட்சித் தேர்தல் முறைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் அரசியற் தமிழ்ப் பிரதிநிதிகள் ஈழத்தமிழர்களின் வேணவாவைப் பிரதிநிதித்துவம் ஏகபிரதிநிதிகள் எனக் கொள்ளப்பட முடியாதவர்களாவர். எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் தேசம் தனக்குரிய வெளியுறவுக் கொள்கை ஒன்றைக் கடைப்பிடிக்க வேண்டுமாயின், அது பாரம்பரியத் தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத் தமிழர்களையும், தமிழ் பேசும் மக்களையும், கடல்கடந்து இந்தியாவுக்குள் வாழும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆகிய அனைத்துப் பரிமாணங்களையும் ஒருசேர உள்ளடக்கி, ஈழத்தமிழ்த் தேசம் என்பதாகக் கணித்துக் கையாளுவதே சாலச் சிறந்தது.

1985இல் தேசிய விடுதலைக்கான ஆயுத இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து பூட்டான் தலைநகர் திம்புவில் முன்வைத்த தீர்மானத்திலும் ஈழத் தமிழர் ஒரு தேசம் என்பதும் அவர்களுக்கான அடையாளப்படுத்தப்படக்கூடிய தாயகத்திற்கான அங்கீகாரமும் குறைந்த பட்சக் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, பிரதான ஆயுதப் போராட்ட இயக்கமாக முன்னெழுந்து, தமிழர் தாயகம் எங்கணும் பல்லாயிரக்கணக்கான அளப்பரிய தற்கொடைகளோடு, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து மெய் நடப்புத் தமிழீழ அரசை உருவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், 2002ஆம் ஆண்டு இராணுவப் பலச் சமநிலையை அடைந்து இலங்கை அரசுடன் சர்வதேச அனுசரணையுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தை மேசையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக பேச்சு நடத்தும் நிலை வரை சென்று, இலங்கை அரசினால் முன் வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லாதிருந்த நிலையில், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவு ஒன்றை 2003ஆம் அண்டு முன் வைத்தது.

இவ்வாறான ஒரு சர்வதேச அங்கீகாரத்துடனான பேச்சுவார்த்தை நடைபெறும்போது, அது ஈழத்தமிழர்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை ஈட்டிவிடும் என்பதைப் புரிந்துகொண்ட இலங்கை அரசில் மாறி மாறி ஆட்சிக்குவரும் சிங்கள ஆட்சியாளர்கள், உலகின் பல முனைகளில் இருக்கும் நாடுகளுடன், தமது இந்து சமுத்திரத்திலான புவிசார் கேந்திர முக்கியத்துவத்தைப் பேரம்பேசலுக்கு உள்ளாக்கி, ஒரு சர்வதேச வலைப்பின்னலை ஈழத் தமிழர் நடைமுறை அரசுக்கு எதிராகக் கொண்டுவந்து, பயங்கரவாதம் என்று சித்தரித்து, ஒரு போரையே, இனப்படுகொலைப் போராக மாற்றி, இன அழிப்பின் உச்சத்துக்கு 2009இல் சென்றனர்.

எந்தக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் இறுதி வழியாக, மக்களாணையின் பாற்பட்டு, சுயநிர்ணய உரிமையின் பேரில் போராட நிர்ப்பந்திக்கப் பட்டார்களோ, அந்தக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, 2009இன் பின்னர் அவர்கள் ஒரு தேசமாக மீண்டு எழ முடியாத வகையில், அத்தேசத்தின் தொன்மைத் தமிழ் மரபுரிமையை, அடையாளத்தை, நிலத் தொடர்ச்சியை, கடல் உரிமையை, மற்றும் மொழி, பண்பாட்டு, பொருண்மிய வாழ்வுரிமையைத் துண்டாடும் நிகழ்ச்சி நிரலை வேகமாகச் செயற்படுத்தி வருகின்றார்கள்.

இன அழிப்புப் போரின் 12 ஆண்டுகளின் முடிவில், 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தற்போது மீண்டும் ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவந்து, இன அழிப்பின் அடுத்த கட்டத்தை நிறைவேற்ற இலங்கை அரசு முனைப்படைந்துள்ளது.

இதற்கு ஏதுவாக, மீண்டும் தனது கேந்திர முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு வல்லரசுகளோடு பேரம் பேசல்களில் ஈடுபட்டிருக்கிறது. சீனாவுடன் மட்டுமல்ல, சமாந்தரமாக வேறு வல்லரசுகளோடும் இலங்கை அரசு தனது கேந்திரப் பேரம் பேசலை ஏற்படுத்தி வருகிறது.

உலக ஒழுங்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடிய இந்தக் காலகட்டத்தில், தமிழ் நாட்டின் பேருதவியோடு ஈழத் தமிழர்கள் தம் கோரிக்கைகளைச் செதுக்கி, பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்திய ஒன்றிய அரசிடம் முன் வைக்கவேண்டிய தேவை இருக்கிறது.

இதற்கு அரசியல் வேணவா மறுக்கப்பட்ட நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு-கிழக்கின் தேர்தல் அரசியல்வாதிகளை எதிர்பார்த்திருக்காது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஈழத் தமிழர் விடயத்தில் செயற்பட்டு வரும் பட்டறிவும் முதிர்ச்சியும் மிக்க தோழமையுடைய அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கட்சிகளாகவும் மக்கள் இயக்கங்களாகவும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்.

அதுமட்டுமல்ல, ஒற்றுமையாக ஈழத்தமிழர் கட்சிகள் இணைந்து வாருங்கள் என்று எதிர்பார்க்காது இந்த முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும். சிங்கள அரசின், அதன் அரசியற் புலனாய்வின் ஊடுருவல் தமிழ்க் கட்சிகளிடையே கடுமையாக அதிகரித்துள்ள இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து தோன்றும் ஒற்றுமை முயற்சியே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தேசத்துக்கான கலங்கரை விளக்கு.

2009இல் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதனால், தோற்றுவிட்ட நிலை ஏற்பட்டுவிட்டதான சிந்தனைக்கு ஆட்பட்டு அரசியற் போராட்டத்தையோ, அரசியல் வேணவாவையோ “கிட்டாதாயின் வெட்டென மற” என்ற மறுதலித்துவிடல் ஆகாது.

தேச விடுதலைக்கான அறத்தையும் நியாயப்பாட்டையும் தோல்விநிலை வயப்பட்டுத் தொலைத்துவிட்டால், இன அழிப்புக்கான சர்வதேச நீதி என்ற அறமும், புவிசார் அரசியல் சார்ந்த சர்வதேச அரசியலும் வாய்ப்புகளை உருவாக்கினாற்கூட ஈழத் தமிழர் தேசத்தால் இறையாண்மை சார்ந்த பாதுகாப்புடனான அரசியற் தீர்வை அடைய முடியாது போய்விடும்.

இதனால், தமிழ்நாட்டு அரச மற்றும் குடிசார் அரசியல் வெளிகளில் ஈழத்தமிழர் தேசம் சார் வெளியுறவுக் கொள்கை ஒன்றாக அந்தக் கலங்கரை விளக்கு ஒளிரவேண்டும்.

தமிழ்நாட்டின் வெளியுறவுக் கொள்கை ஊடாக, ஈழத்தமிழர் தேசம் இந்திய ஒன்றிய அரசுடன் ஊடாட வேண்டுமே ஒழிய, நேரடியாக ஈடுபட்டு பிரித்தாளும் தந்திரத்துக்குப் பலியாகிவிடக்கூடாது. இது தொடர்பாக, ஈழத்தமிழர் தரப்புகளுக்கும் ஆழமான இந்திய அரசியல் மற்றும் வரலாற்று அறிவைத் தமிழ்நாட்டுத் தரப்பினர் வழங்கவேண்டும்.

வெளியுறவுக் கொள்கை, இன அழிப்புக்கெதிரான சர்வதேச நீதிப் பயணம் என்ற பார்வையில் இந்திய ஒன்றிய அரசு பற்றிய நம்பிக்கையீனங்கள் இருந்தாற்கூட, அதற்கப்பால் அரசியற் கோரிக்கைகளைத் தெளிவாக முன் வைக்கவேண்டிய தேவை இருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசிடம் ஈழத்தமிழர் தேசம் தன்னை நோக்கித் தனிவேறான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்குமாறும், அதிலும் குறிப்பாக, முறைகேடான ஒற்றையாட்சி இனவழிப்பு அரசான இலங்கை அரசில் இருந்து தம்மை வேறுபடுத்திப் பார்க்கும் வெளியுறவு அணுகுமுறையைத் தழுவிக் கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கிறது. இதைத் தமிழ் நாட்டுடன் இணைந்தே மேற்கொள்ளவேண்டும் என்ற புரிதலை அனைத்து மட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கம் துணை-வெளியுறவு (para diplomacy/constituent diplomacy) என்ற கோட்பாட்டைக் கூட்டாட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லி வந்துள்ளது (federalisation of foreign policy). ஏற்கெனவே, 2014இல் மாநிலங்களுக்கான பிரிவு (states division in MEA) ஒன்றை அமைத்துள்ளது. இதிலே தமிழ்நாட்டின் வகிபாகம் எவ்வாறு இருக்கிறது. அதை ஈழத் தமிழர் விடயத்தில் மேலும் செழுமைப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்த கருத்துப் பகிர்வு எமக்குத் தேவையாகிறது.

இந்த அடிப்படையில் இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சின் கீழ் தமிழ்நாட்டு மாநிலத்துக்கான சிறப்பு வெளியுறவுச் செயலகம் ஒன்றைத் தனது பங்கேற்போடு அமைக்குமாறு தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசிடம் அழுத்தமான ஒரு வேண்டுகோளை முன்வைக்க இயலுமா என்பதையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

தமிழ்நாட்டு அரசு வெளியுறவுக் கொள்கையில் தனது வகிபாகத்தைப் பலப்படுத்துவது அதற்குப் பல வழிகளிலும் பலமும் நலமும் சேர்க்கும் என்பது ஈழத்தமிழர் தேசக் கருத்துருவாக்கிகளின் ஆழ்ந்த துணிபு.

இந்திய ஒன்றிய அரசு அண்மைக்காலமாகக் குறிப்பிட்டுவரும் கூட்டுறவுச் சமஷ்டி எனும் கோட்பாடு அர்த்தமுள்ள முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமாயின் இலங்கைத் தீவு தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழ்நாட்டு அரசின் நேரடிப் பங்கை அந்தக் கோட்பாட்டை மேற்கோள் காட்டி உரிமையோடு அணுகிப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதற்கு ஆவன செய்யுமாறு தமிழ்நாட்டு உறவுகளை ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசத்தின் வேணவாவைச் சட்டரீதியாக வெளிப்படுத்த முடியாத பிரதிநிதிகளும், புலம் பெயர் ஈழத் தமிழர் சமூகமும் இணைந்து வேண்டிக்கொள்கின்றனர்.

இந்த வகையில், பின்வரும் கோரிக்கைகள் தமிழ்நாட்டு மாநில அரசை நோக்கியும், இந்திய ஒன்றிய அரசை நோக்கியும் முன் வைக்கப்படுகின்றன. இக்கோரிக்கைகளை மேலும் செதுக்கி அவற்றை இறுதிப்படுத்தும் நோக்கோடு தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் வேணவா மாநாடு ஒன்று ஒழுங்கு செய்யப்படவேண்டும் என்றும் இம்மாநாட்டில் பங்கேற்று கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன் வைக்கவேண்டும் என்பதும் இம் முயற்சியிலே ஈழ விடுதலைப் போராட்டத்துடன் 2009 வரை ஒன்றித்துப் பயணித்து அதன் பின்னரும் மானசீகமாக அந்தப் பயணத்தின் பாற்பட்ட நட்புணர்வுடனும் புரிந்துணர்வுடனும் உள்ள அனைத்து அன்புள்ளங்களின் கரங்களையும் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

1.கோரிக்கைகளுக்கான வரைபு

1.இலங்கைத் தீவில், குறிப்பாக வடக்கு-கிழக்கில், தமிழ்ப் பாரம்பரியத்தின் நாகரிகத்துவப் பூர்வீகமும், தொன்மையும் சிங்களப் பாரம்பரியத்தின் தோற்றத்தக்கும் முற்பட்டது என்பதை இந்திய அரசு அங்கீகரிக்கவேண்டும் என்று ஈழத் தமிழர்களும், தமிழ் தமிழ்நாட்டு மக்களும் இந்திய ஒன்றிய அரசைக் கோருகின்றார்கள்.

2.ஈழத் தமிழர், ஒரு மக்களாகவும் தேசமாகவும், தீவின் வடக்கு-கிழக்குக்குரிய வரலாற்று மற்றும் போராடிப் பெற்ற இறைமைக்குரியவர்கள் என்பதோடு, தெளிவாக அடையாளப்படுத்தக்கூடிய வரலாற்று (Historical waters) மற்றும் பிராந்தியக் கடல் (Territorial waters) உள்ளடங்கிய, நில-நீர்த் தொடர்ச்சி கொண்ட தமது பாரம்பரியத் தாயகமாகவும், அதை வரித்துக்கொண்டுள்ளார்கள். பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு ஈழத்தமிழர் தேசத்துக்கும் அங்கு வாழும் இதர வடக்கு-கிழக்கிலான பாரம்பரியத் தமிழர் தாயகத்தின் ஆட்சிப் பரப்புச்சார் ஒருமைப்பாட்டை (territorial integrity), இந்திய ஒன்றிய அரசு அங்கீகரிக்கவேண்டும் என்று ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும் கோருகின்றார்கள்.

3.தனித்துவமான பாரம்பரியத்தையும் காலனித்துவ காலத்துக்கு முற்பட்ட வரலாற்று ரீதியான சுய ஆட்சியையும் கொண்டிருந்த ஒரு மக்களான ஈழத் தமிழர் ஒரு தேசம் ஆவர். அதேவேளை, வடக்கு-கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் தமிழ் பேசும் முசுலீம் மக்கள் தமக்குரிய தனித்துவ மக்களாட்சிக்குரிய உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்ட ஒரு மக்களாக விளங்குவர். ஒரு தேசமாக ஈழத் தமிழர் தனித்துவமான இறைமைக்கும் வெளியக சுயநிர்ணய உரிமைக்கும் உரித்துடையவர்கள் என்பதைத் தமிழ்நாட்டு அரசு ஏற்கெனவே தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பைக் கோரித் தீர்மானம் நிறைவேற்றியதன் ஊடாக அங்கீகரித்துள்ளது. இதை மேலும் தெளிவாக வலியுறுத்தும் அதேவேளை, ஒன்றிய அரச மட்டத்திலும் தீர்மானமாக இயற்றி அங்கீகரிக்க ஆவன செய்யுமாறு ஈழத்தமிழர் தேசத்தினர் கோருகின்றனர்.

4.இன அழிப்புச் சாசனத்தின் இலங்கை தொடர்பான கால எல்லையான 12 ஒக்ரோபர் 1950இல் இருந்து இற்றைவரை இலங்கை ஒற்றையாட்சி அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நீளிய இன அழிப்புக்கான அரச பொறுப்பு உலக நீதிமன்றில் அச்சாசனத்துக்குட்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்படல் வேண்டும். அதேவேளை, ஐ.நா. முறைமையூடாக இலங்கை தொடர்பான ஒரு சர்வதேசச் சிறப்புக் குற்றவியல் நீதிமன்றம் அதே சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு குற்றம் புரிந்தோர் மீதான புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுத் தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

5.சர்வதேசச் சட்டங்களின் பிரகாரம், ஏற்கெனவே தமது உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான பயணத்தை மேற்கொண்டு, அது எவ்வித பலனையும் தரவில்லை. இனிமேலும் தரப்போவதில்லை என்ற நிலையிலேயே தந்தை செல்வா தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்தார். ஆனால், மாற்றாக சுயநிர்ணய உரிமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடிய கூட்டாட்சி (சமஷ்டி) ஆட்சி முறையை சர்வதேச மத்தியஸ்தத்தினரோ அன்றேல் சிங்கள தேசத்தினரோ முன்வைத்தால், அதைப் பரீட்சார்த்தபூர்வமாக அணுக ஈழத்தமிழர் தேசம் என்றும் தயாராகவே இருந்திருக்கிறது. அதற்கான கடப்பாடு சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசையும் சார்ந்ததென்ற வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர் கட்சிகள் அனைத்தும் சமஷ்டி முறையைப் பரிசீலிக்கவும் அவற்றுக்கான மாதிரிகளை முன்வைத்தும் வந்துள்ளார்கள். அவ்வாறான ஒரு வெற்றிகரமான பரிசோதனை நடைபெற வேண்டுமாயின் தமிழ்நாட்டு அரசு தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற இரண்டு கோரிக்கைகளில் இருந்தும் இம்மியளவும் வழுவாத ஒரு நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் பயணிக்கவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த நிலைப்பாடுகளுக்குக் குறைவான எந்த அரசியல் மாதிரிகளையும் வலியுறுத்துவதாகவோ ஆதரிப்பதாகவோ நிலைப்பாடு எதையும் மேற்கொள்ளாது சுயநிர்ணய உரிமைக்கான தனது திட்பமான ஆதரவைத் தமிழ்நாட்டு அரசு அடிக்கடி வெளிப்படுத்திவரவேண்டும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

6.ஈழத் தமிழர் தேசியச் சிக்கலுக்கான தீர்வை நோக்கிய எந்தப் பயணமும், அது ஆரம்பப் புள்ளியாயினும் சரி, இடைக்காலத் தீர்வாயினும் சரி, அர்த்தமுள்ளதாய் அமைய வேண்டுமானால், ஈழத் தமிழர்களுக்குச் சார்பாக அமையக்கூடிய எந்த ஒரு மெய் நடப்பு நிலையையும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்ட ஒரு பொறி முறையைச் சட்டபூர்வமாகக் கொணர்வதற்குப் பயன்படுத்துவதே உசிதமானது.

7.2009இன் பின்னர் ஈழத் தமிழர் தேசத்தினர் மீதும், மக்களான தமிழ் பேசும் முசுலிம்கள், மலையகத் தமிழர் ஆகியோரையும் குறி வைத்து நடத்தப்படும் மக்கட் பரம்பல் மாற்றங்கள், எல்லை மாற்றங்கள், பண்பாட்டு இன அழிப்பு, நினைவேந்தல் மறுப்பு, நிர்வாகம் தொடக்கம், கல்வி வரையான சிங்கள மயமாக்கல், பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற ஒற்றையாட்சியால் வழங்கப்படும் சிறப்புரிமையைப் பயன்படுத்தி மரபியற் சின்னங்களை சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ள தொல்லியல் திணைக் களத்தின் ஊடாக ஆக்கிரமித்தல், புத்தர் சிலைகளை வலிந்து ஏனைய மத நிலையங்களில் எழுப்புதல், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பாரியச் சிங்களக் குடியேற்றங்களுக்கான நிலப் பறிப்பு, இயற்கை, வனவளம் மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய ஒற்றையாட்சி நிலச் சுவீகரிப்பு என்பதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தவேண்டுமாயின் வடக்கு-கிழக்கில் ஒற்றையாட்சியின் வீச்சு கணிசமாக மட்டுப்படுத்தப்படவேண்டும். எனவே, அதிகாரப்பரவலாக்கம் போன்ற இலங்கைச் சிங்கள மேலாதிக்க ஒற்றையாட்சி அகராதியில் அர்த்தமிழந்துள்ள கோட்பாடுகளையும், சட்டங்களையும், முறைமைகளையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பலன் ஏதும் இல்லை. ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட மெய் நடப்புச் சூழ்நிலை (de-facto situation) ஒன்றை வடக்கு-கிழக்கில் உருவாக்கித் தரவேண்டும். இதைச் சாதிப்பதற்கு ஏற்கெனவே இருக்கும் பதின்மூன்றாம் சட்டத்திருத்தம் போன்றவை பலனற்றவை என்பதாலும், பனிப்போர் காலத்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் வலுவற்றதாகிக், காலாவதியாகிப் போயுள்ளதாலும், முற்றிலும் புதிய ஒரு நிலைமை தோற்றுவிக்கப்படவேண்டும்.

8.மலையக மக்களை தக்க அங்கீகாரத்துடன் வடக்கு-கிழக்கில் நிலங்கள் வழங்கிக் குடியேற்றுவதற்கு ஏதுவான ஒத்துழைப்பையும், தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களை மீளக்குடியேற்றி வடக்கு-கிழக்கில் வழங்களுக்கு ஏற்ற நிறைவான மக்கட் பரம்பலை உறுதிசெய்ய ஆவன செய்தல்.

9.வடக்கு-கிழக்கு ஈழத்தமிழ் மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கிடையேயும் நிலவும் முரண்பாடுகளை இரு பகுதியினரும் சமூக மட்டத்தில், இராணுவத் தலையீடு இன்றித் தீர்த்து வைப்பதற்கான பொறி முறை ஒன்றை உருவாக்குதல்.

10.மேற்குறித்த கோரிக்கைகளை வெளியுறவுக் கொள்கை யூடாகப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசுடன் ஈழத்தமிழர்கள் தனி வேறாகப் பேச்சுக்களில் ஈடுபடாது. தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து, கட்சி பேதமற்ற ஒரு பொறி முறை யூடாக இந்திய ஒன்றிய அரசை அணுகுவதற்கான ஒரு பொறி முறையை வகுத்தல் அதேவேளை, தமிழ்நாட்டு அரசானது ஒன்றிய அரசுக்கு தொடர்ச்சியாக மேற் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் அவற்றை இந்திய வெளியுறவுக் கொள்கையின் இணைபிரியா அங்கமாக மாற்றுவதற்குமான பொறி முறையைக் கோருதல்.

11.இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் தறுவாயில், ஒரு குறித்த காலக்கெடுவை விதித்து, அதன்பின்னர், ஈழத் தமிழர் சேதம் மீதான இன அழிப்பில் இந்திய ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு ஒத்துழைத்துள்ளதா என்பது குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் ஒன்றை தமிழ்நாட்டு அரசு, தனது குடிசார் சமூகத்தின் ஆதரவோடு முன்னெடுத்தல்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் இலயோலா மணி வரவேற்புரை நிகழ்த்த அரவிந்த் நன்றியுரை கூறினார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.