எந்த சிங்கள மக்கள் மிகப் பெருவாரியான வாக்குகளை அள்ளிக் குவித்து இராசபக்சே சகோதரர்களையும் அவர்களது கட்சியையும் மாபெரும் வெற்றி பெற வைத்தார்களோ அதே மக்கள் இப்போது இராசபக்சேக்கள் பதவி விலகவேண்டும் எனத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்.
மக்கள் மட்டுமல்ல, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், மாணவர்கள் உட்பட சிங்கள சமுதாயத்தின் பல்வேறு பகுதி மக்களும் கொதித்தெழுந்து போராடுகிறார்கள். இராசபக்சேக்களின் மாளிகைகளை முற்றுகையிட்டும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டும் உணர்ச்சிப் பெருக்கோடு இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
உணவு, மருந்துகள், பால் பவுடர் மற்றும் எரிபொருள் உட்பட வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாதப் பொருட்கள் கிடைக்காமலும், கிடைத்தாலும் பலமடங்கு அதிகமான விலையிலும் விற்கப்படும்போது மக்களுக்கு எட்டாக் கனியாக இப்பொருள்கள் ஆகிவிட்டன.
இப்போதுதான் சிங்கள மக்கள் உண்மைகளை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் கடந்த பல ஆண்டு காலமாகவே உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் பட்டினியாலும், பசியாலும், நோயாலும் கொத்துக் கொத்தாக மடிந்ததை வேடிக்கைப் பார்த்த சிங்கள மக்கள் இப்போது தங்களுக்கே அத்தகைய அவல நிலை உருவாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழர்களுக்கெதிரான இனவெறியைத் தூண்டி சிங்கள மக்களைத் திசைத்திருப்பி ஏமாற்றிய சிங்கள அரசியல் தலைவர்கள் 30 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழர்களுக்கு எதிராக நடத்திய போருக்காக அந்நிய நாடுகளில் வாங்கிக் குவித்த ஆயுதங்களும், அதில் நடைபெற்ற ஊழல்களும் நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே முறித்துவிட்டதின் விளைவே இன்று தாங்கள் பசியால் வாடித் துடிப்பதற்குரிய காரணம் என்பதை மிகத் தாமதமாக அம்மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
தான் ஓட்டுவிக்கிற வழியில் ஓடிய ஆட்டுமந்தைக் கூட்டமாக இருந்த சிங்கள மக்கள் இன்று சிறுத்தைகளாக மாறி தங்கள் மீது பாய்வதைக் கண்டு இராசபக்சேக்கள் திடுக்கிட்டனர். தங்களின் சொந்த இனத்து மக்களே எதிராகப் போராடுவது கனவா? அல்லது நனவா? என்பது புரியாத நிலையில் என்னசெய்வது? எனத் திகைத்துப் போய் உள்ளனர்.
இராணுவமும், காவல் துறையும் அமைதியாக போராடும் மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்ததைக் கண்டு இராசபக்சேக்களுக்கு உதறல் எடுத்தது. எனவே சூழ்ச்சி திட்டம் ஒன்றை வகுத்தனர். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கொடும் குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களை மக்களுக்கெதிராக ஏவினர். மேலும் இந்தியா வழங்கிய நிதியுதவியைப் பயன்படுத்திக் கொரியாவிலிருந்து கொடூரமான கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வரவழைத்து மக்கள் மீது வீசினர்.
அமைதியாக போராடிய மக்களின் கூடாரங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. மக்கள் தாக்கப்பட்டனர். கொரிய கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சின் விளைவாக பலர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள். சிலரின் பார்வைகள் பறி போயின. இதைக்கண்டு ஆத்திரமடைந்த மக்கள் திரண்டு சென்று இராசபக்சேயின் வீடு மற்றும் பல்வேறு அமைச்சர்களின் வீடுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். கொழும்புவில் தொடங்கிய இந்தப் போராட்டம் நாடெங்கும் காட்டுத்தீ போல பரவியது. பல இடங்களில் மக்களின் கோபத்திற்கு இராசபக்சேயின் ஆதரவாளர்கள் ஆளாயினர்.
இதைக் கண்டு அச்சமடைந்த இராசபக்சே தலைமையமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரும், அவருடைய குடும்பத்தினரும் மற்றும் சில அமைச்சர்களும் ஹெலிகாப்டர் விமானம் மூலம் திரிகோண மலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கடற்படைத் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மக்களின் கொதிப்புணர்வு கொஞ்சமும் தணியவில்லை. இராசபக்சே உள்பட அனைத்து அமைச்சர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். அவர்கள் அனைவரும் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என மக்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
ஈழத் தமிழர் பிரச்சனை புதிய வடிவமெடுத்துள்ளது. சிங்கள இனவாத அரசியல் தலைவர்களுக்கெதிராக சிங்கள மக்களே களத்தில் இறங்கி போராடுவது இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்ற நிலை முற்றிலுமாக மாறி இது சர்வதேச பிரச்சனையாக பெரியதொரு வடிவமெடுத்துள்ளது. ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, இந்தியாவையும், தென்னாசியாவையும் பாதிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது.
தமிழருக்கு மறுக்கப்பட்ட சனநாயக உரிமைகள் சிங்கள மக்களுக்கும் இப்போது மறுக்கப்படுகின்றன. தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறி அரசினால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் சிங்கள மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இப்பிரச்சனையில் மற்றொரு அபாயகரமான பரிமாணமும் உள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக இலங்கையில் சீனா தனது காலடித் தடத்தை அழுத்தமாக ஊன்றியுள்ளது. இராணுவ உதவி மட்டுமல்ல, பொருளாதார உதவிகளையும் அள்ளி அள்ளி வழங்குகிறது. சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு சீனா உதவி செய்வதின் நோக்கம் என்ன? சீனாவின் பொருட்களை விற்பதற்கு இலங்கை என்ன பெரிய சந்தையா? இலங்கையினால் சீனாவுக்கு என்ன ஆதாயம்? அடுக்கடுக்காக எழும் இந்த கேள்விகளுக்கு ஒரேயொரு பதில்தான் இருக்க முடியும். இந்தியாவுக்கு எதிராக ஒரு தளமாக இலங்கை நமக்கு பயன்படும் என்பதற்காகத்தான் இலங்கைக்கு சீனா எல்லாவகையிலும் அள்ளித் தருகிறது; உறுதுணையாக உடன் நிற்கிறது.
இந்தியாவின் தென் வாயிலில் பேரபாயம் கதவைத் தட்டுகிறது. இந்த அபாயத்திலிருந்து இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான பாதை, ஈழத் தமிழர்களின் பிரச்சனையோடு பின்னிப் பிணைந்து செல்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமல்ல, இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவிடம் சென்றுவிடக் கூடாது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அபாயகரமானதும் ஆகும்.
இந்த கட்டத்தில் கடந்தகால வரலாற்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். பாகித்தானின் கிழக்குப் பகுதியான வங்காள தேச மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்ட போது அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தை இராணுவ ரீதியில் ஒடுக்குவதற்கு பாகித்தான் அரசு முயன்றது. வங்கத்தில் பாகித்தான் இராணுவம் நடத்திய வெறியாட்டங்களின் விளைவாக எண்ணற்றவர்கள் உயிரிழந்தார்கள். ஏறத்தாழ 1கோடி வங்காளிகள் இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து “இந்திய இராணுவத்தை வங்க மக்களுக்கு உதவுவதற்காக அனுப்பவேண்டும்” என குரல் எழுப்பின.
24.05.1971 அன்று சனசங்கத் தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்கள் தலைமையில் வங்கதேசப் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் பேரணி ஒன்று தில்லியில் நடைபெற்றது. அந்த மாபெரும் கூட்டத்தில் “வங்கப் பிரச்சனையைத் தீர்க்க போர்தான் வழியென்றால் அதற்கும் இந்தியா தயாராகவேண்டும்” என முழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி போன்றவை வங்க விடுதலை வீரர்களுக்கு இந்தியா ஆயுதங்களை அளிக்கவேண்டும் என வற்புறுத்தின.
மற்றுமுள்ள அகில இந்திய கட்சிகள், மாநிலக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளும் இந்திய இராணுவத்தை உடனடியாக வங்க விடுதலைக்கு உதவ அனுப்ப வேண்டுமென தலைமையமைச்சர் இந்திரா அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
பாகிசுதானிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக கிழக்கு வங்கம் உருவாவதற்கு உதவினால், நாளை இந்தியாவில் மேற்கு வங்கமும் தனி நாடாகிவிடும் என்ற சந்தேகம் எந்த இந்திய அரசியல் கட்சிக்கும் ஏற்படவில்லை. அனைவருமே வங்க விடுதலைக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். ஆனால் இலங்கையிலிருந்து தமிழீழம் பிரிந்தால் நாளைக்கு இந்தியாவிலிருந்து தமிழ்நாடும் பிரிந்து சென்றுவிடும் என்ற ஐயம் இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இருக்கிறது. ஈழத் தமிழர்கள் துயரத்தை இந்தியா துடைக்க முன்வருமானால், தமிழக மக்களுக்கு அது நம்பிக்கையூட்டும். மலேசியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மொரீசியசு போன்ற பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்தால் இந்தியாவின் துணையுடன் அவற்றை போக்க முடியும் என எண்ணுவோம்.
இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வற்புறுத்திய போதிலும் இராணுவத்தை அனுப்ப தலைமையமைச்சர் இந்திரா தயங்கினார். பாகிசுதானுடன் சீனா இராணுவ ரீதியில் மட்டுமல்ல எல்லாவகையிலும் ஆழமான நட்புறவு கொண்டிருந்தது. எனவே இந்திய இராணுவத்தை வங்காளத்திற்கு அனுப்பினால் சீன இராணுவமும் களமிறங்கலாம் என்பதே அவரது தயக்கத்திற்குக் காரணமாகும்.
எனவே, சோவியத் ஒன்றியத்துடன் இந்திரா இராணுவ ரீதியிலான பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதன்முறையாக அந்நிய வல்லரசு ஒன்றுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்டது இதுதான் முதல்முறையாகும். அந்த உடன்பாடு கையெழுத்தான பிறகு இந்திய இராணுவம் வங்க தேசத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு எதிராக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தனது 7ஆவது கடற்படையை விரைந்து அனுப்பியது. அந்தக் கடற்படை வங்காள விரிகுடாவுக்கு வருவதற்கு முன்னாலேயே இந்திய இராணுவம் பாகிசுதான் படையை முறியடித்து வங்க தேசத்தை விடுவித்துவிட்டது.
இந்த கடந்தகால வரலாற்றை நான் உங்களுக்கு நினைவூட்டுவதற்கு காரணம் இப்போது இலங்கையிலும் வங்கதேசத்தில் ஏற்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்துமாக் கடலில் சீனாவின் ஆதிக்கம் பெருகி வருவதைத் தடுப்பதற்காக அமெரிக்கா-சப்பான்-ஆசுதிரேலியா ஆகிய நாடுகள் அமைத்த க்வாட் கூட்டணியில் இந்தியாவும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது.
அன்று வங்கதேசப் பிரச்சனை வெடித்தபோது சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா செய்துகொண்ட உடன்பாடு வங்கதேசப் பிரச்சனையை தீர்ப்பதற்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் வலிமையை இந்தியாவுக்கு அளித்தது.
அதைப்போல இப்போதும் இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பதின் விளைவாக இந்தியாவுக்கு நேர்ந்திருக்கும் அபாயத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஈழத் தமிழர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கும் க்வாட் அமைப்பின் மூலம் இந்திய அரசு உடனடியாக தலையிடவேண்டும். இத்தகைய இராச தந்திர நடவடிக்கையின் மூலம் மட்டுமே நம்மையும் நம்மை நம்பியிருக்கிற ஈழத் தமிழர்களையும் சர்வாதிகார கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போராடுகிற சிங்கள மக்களையும் காப்பாற்ற முடியும் என்பதை தலைமையமைச்சர் மோடி அவர்கள் உணரவேண்டும். அதற்கு தமிழக பா.ச.க. தலைவர் அண்ணாமலை உதவவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
இந்தியாவின் தலைமையமைச்சராக வாஜ்பாய் அவர்கள் இருந்தபோது பாதுகாப்புத் துறை அமைச்சராக சமதாக் கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் பொறுப்பேற்றார். இந்தியக் கடற்படையின் பணி நமது கடற்கரையைப் பாதுகாப்பதுதான் இலங்கை கடற்கரையையும் பாதுகாப்பதல்ல என கடற்படை தளபதிக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதற்கு செவி சாய்க்கவில்லை. உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்தார். இந்திய வரலாற்றிலேயே கடற்படைத் தளபதியாக இருந்த ஒருவர் நீக்கப்பட்ட நிகழ்ச்சி அதற்கு முன்னாலும் இல்லை, அதற்குப் பின்னாலும் இல்லை. இந்த நடவடிக்கையை பெர்னாண்டஸ் அவர்கள் தன்னிச்சையாக செய்திருக்க முடியாது. தலைமையமைச்சரின் ஒப்புதலோடுதான் அவர் செய்திருக்கவேண்டும்.
இன்னொரு நிகழ்ச்சியையும் இப்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன் – வங்காள விரிகுடாவில் சென்றுகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றினை இந்தியக் கடற்படை தடுத்து நிறுத்தியிருப்பதாக புலிகளின் தரப்பிலிருந்து எனக்கு செய்தி கிடைத்தது. உடனடியாக தில்லிக்குச் சென்று பெர்னாண்டஸ் அவர்களை சந்தித்து விவரம் தெரிவித்தேன். அரை மணி நேரத்திற்குள் புலிகளின் கப்பல் விடுவிக்கப்பட்டது. அந்தக் கப்பலில் யார் இருந்தார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. அதற்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து கனடாவிற்கு நான் சென்றிருந்துவிட்டு திரும்பும் வழியில் இலண்டனில் இறங்கி மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிட்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்த நண்பர் பாலசிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றேன். அவரும் அவருடைய துணைவியாரும் என்னை அன்புடன் வரவேற்றனர். அப்போது பாலசிங்கம் “எனது உயிரைக் காப்பாற்ற உதவிய உங்களுக்கும், பெர்னாண்டஸ் அவர்களுக்கும், வாஜ்பாய் அவர்களுக்கும் எனது நன்றி” என்று கூறியபோது ஒன்றும் புரியாமல் திகைத்தேன். பிறகு அவர் நடந்தவற்றை விளக்கிக் கூறினார். இந்தியக் கடற்படையால் வழிமறிக்கப்பட்ட புலிகளின் கப்பலில் தான் சென்றுகொண்டிருந்ததாகவும், பிறகு பத்திரமாக நார்வே சென்று அறுவை சிகிட்சை செய்துகொண்டு திரும்பியதாகவும் அவர் கூறினார். இப்படி எத்தனையோ வகைகளில் விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் உதவிய பெருமை ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களையே சாரும்.
தமிழீழ மக்கள் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிங்கள இராணுவத்தின் இனவெறிப் படுகொலைக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். இந்தப் பேரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டவேண்டிய கடமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உண்டு. நமக்குள் எத்தனை கட்சிகள் வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வரவேண்டும். ஒரு வீடு பற்றி எரியும் போது அந்தத் தீயை அணைப்பதற்காக வாளியில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றவேண்டியது மனிதநேய கடமையாகும். அதற்காக முன்வருபவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டுமே தவிர, நீ வந்தால் நான் வரமாட்டேன் என்று கூறுவது மிகத் தவறாகும்.
இறுதியாக இங்கு திரளாக கூடியிருக்கிற உங்கள் மூலம் தமிழக மக்களுக்கு எனது ஆதங்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த தலைமுறையை சேர்ந்த பெரியார், இராஜாஜி, காமராசர், பி.டி. இராசன், அண்ணா, ம.பொ.சி, ஜீவா போன்ற பெருந் தலைவர்கள் தங்களுக்குள் இருந்த பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கப்பால் தமிழக பிரச்சனை என்று வரும்போது ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முடிந்தது. அதனால் பல பிரச்சனைகளில் நமக்கு வெற்றி கிடைத்தது. ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூற விரும்புகிறேன்: 1954ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்து செல்லும் வேளையில் சென்னை நகரத்தின் மீது அவர்கள் உரிமை கொண்டாடினார்கள். அன்றைய தலைமையமைச்சர் நேரு அவர்கள் “ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக சென்னையே இருக்கட்டும்” என ஒரு யோசனையைக் கூறினார்.
அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள் நேரு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் “வரலாற்றின்படியும் எல்லா வகையான நீதியின்படியும் சென்னை நகரம் தமிழ்நாட்டுக்கே உரியதாகும். இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக சென்னை இருக்கட்டும் என நீங்கள் கூறுவீர்களானால் எனது இந்தக் கடிதத்தையே பதவி விலகல் கடிதமாக வைத்துக்கொள்ளலாம்” என எழுதும் துணிவு அவருக்கு இருந்தது. உடனடியாக பெரியார் அவர்கள் அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு காங்கிரசுக் குழுவை கூட்டி காமராசர், சென்னை நகரம் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என தீர்மானம் நிறைவேற்றினார். பி.டி. இராசன், அண்ணா, ம.பொ.சி., ஜீவா போன்ற தலைவர்களும் இதற்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். தமிழகம் கொந்தளித்தது. இதன் விளைவாக நேரு தனது முடிவை மாற்றிக்கொண்டார். சென்னை நகரத்தின் மீது நமது உரிமை நிலைநாட்டப்பட்டது.
கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் “தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் கட்சிக் கடந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டிய இன்றியமையாமையை உணர்ந்து தொலைநோக்குப் பார்வையோடு ஒன்றிணைந்து செயல்பட்டது அப்பிரச்சனைகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்தன. அந்த மாபெரும் தலைவர்களின் பெயர்களை இப்போது சொல்லிக்கொண்டிருக்கிற நம்மால் ஏன் அவர்களைப் போல கட்சி எல்லைகளுக்கப்பால் ஒன்றுபட்டு நிற்க முடியவில்லை? நம்முடைய ஒற்றுமைக் குறைவின் விளைவாக ஈழத் தமிழர்கள் வரலாறு கண்டறியாத இனப்படுகொலைக்கு ஆளாயினர். காவிரி, பெரியாறு அணைப் பிரச்சனை போன்றவற்றில் கர்நாடகத்திலும், கேரளத்திலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் நமக்குத் தண்ணீர் தர மறுப்பதில் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஆனால் இப்பிரச்சனைகளில்கூட நம்மிடையே ஒற்றுமையில்லை என்பதால் நமது உழவர்கள் பெருந் துன்பத்திற்கும், இழப்பிற்கும் ஆளாகித் தவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலாவது கட்சிகளை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என்பதுதான் எனது ஆதங்கமும் வேண்டுகோளுமாகும்.
(14.05.2022 அன்று மாலை சென்னை பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கருத்தரங்கில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை) |