அக்னி வீரர்கள் – ஆர்.எஸ்.எஸ். ஆயுதப் படை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூலை 2022 11:21

இந்திய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதற்குப் புதிய திட்டமாக அக்னி பாதை என ஒன்றினை இந்திய அரசு அறிவித்துள்ளது.

17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இதில் சேரலாம். இவர்களுக்கு வழக்கமான இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு தனிச் சீருடை வழங்கப்படும். அவர்களுக்கான ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 4.72இல் தொடங்கி 6.7இலட்சம் வரை அளிக்கப்படும். இதில் 30% பிடிக்கப்பட்டு அவர்களின் சேவை முடியும்போது ஒவ்வொருவரின் சேமிப்புக்கு இணையான தொகை சேர்க்கப்பட்டு ரூபாய் 11.71இலட்சம் வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகள் பணியாற்றும் இவர்களில் 25% பேர் இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். எஞ்சிய 70% பேர் வெளியேற்றப்படுவார்கள்.

இராணுவத்தில் இருவேறு சீருடைகள் அணிந்த இரு பிரிவுகள் இருப்பது எதற்காக? வழக்கமாக இராணுவத்தில் சேருபவர்கள் 15 ஆண்டுகள் வரை பணியாற்றி பின்னர் ஓய்வு பெறுவார்கள். அவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுவதுடன் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறையின் கீழ் பணியிடங்களும், சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படும். ஆனால் அக்னி பாதைத் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்களில் 25%பேர் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதும், எஞ்சிய 75%பேர் விலக்கப்படுவதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

அக்னி பாதைத் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்றவர்களில் 25%பேர் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்பதும், அவர்களை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதும், அவர்களுக்கு எத்தகைய சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்பதும் புரியாத மர்மங்களாக உள்ளன.

இந்திய இராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இதுவரை இருந்து வருகிறது. ஆனால் இப்போது அக்னி வீரர்கள் என்ற பெயரில் இந்துத்துவா அரசியல் சித்தாந்த பயிற்சிக் கொடுத்து புதிய படை உருவாக்கப்பட போகிறதா? என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது. இதன்மூலம் இந்திய இராணுவத்திலேயே இரு பிரிவுகள் உருவாகிவிடும் அபாயம் உள்ளது.

முன்னாள் இந்திய இராணுவத் தளபதிகள் பலரும் இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். நாடெங்கிலும் குறிப்பாக, வட மாநில இளைஞர்கள் இத்திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள். தென்மாநிலங்களில் பெரும்பகுதி இளைஞர்கள் படித்திருப்பதால் பல்வேறு வேலைகளில் பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. வட மாநில இளைஞர்கள் பெரும்பாலும் பள்ளி கல்வியோடு நிறுத்திவிடுவதாலும்,வடமாநிலங்களில் தொழில் மற்றும் வணிகத் துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லாததாலும், இராணுவத்தில் சேர முன்வருகிறார்கள். இப்போது அதற்கும் முட்டுக்கட்டை போடப்பட்டிருப்பதால் அவர்கள் கொந்தளித்துப் போராடுகிறார்கள்.

ஆனாலும் அக்னி பாதைத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என இந்திய அரசு அறிவித்ததோடு, அதற்கான ஆட்களை சேர்க்கும் பணியையும் தொடங்கிவிட்டது.

இட்லரின் தனிப்படை

1925ஆம் ஆண்டில் செர்மனியில் இட்லரின் நாஜிக் கட்சி தீவிரமாக செயல்படத் தொடங்கியபோது, அக்கட்சியின் கூட்டங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், இட்லருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் தொண்டர் படை (SAAL-SCHUTZ) ஒன்று எஸ்.எஸ். படை என்ற பெயருடன் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தப் படையினர் எதிர்க்கட்சிக் கூட்டங்களில் கலவரம் செய்யவும், எதிர்க்கட்சியினரைத் தாக்கவும் குறிப்பாக, யூதர்களைத் தாக்கவும் பயன்படுத்தப்பட்டது. இப்படையின் தளபதியாக இம்லர் என்பவர் பொறுப்பேற்றார்.

நாஜிக் கட்சியின் சித்தாந்தத்தில் ஊறிய சேனையாக இதை இம்லர் திருத்தியமைத்தார். செர்மானியர்களே மிகத் தூய்மையான ஆரியர்கள். யூதர்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள். அவர்களுடன் செர்மானியர்கள் எத்தகைய உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. செர்மானிய மண்ணிலிருந்து அவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பது போன்ற வெறியினை ஊட்டி அப்படையினர் உருவாக்கப்பட்டனர். இதில் கிட்டத்தட்ட 2இலட்சம் செர்மானிய இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். இட்லர் ஆட்சிக்கு வருவதற்கு இப்படையே பின்னணியாகச் செயல்பட்டது.

1933ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் எஸ்.எஸ். படையை அரசின் ஓர் அங்கமாக இட்லர் அறிவித்தார். செர்மானிய காவல்துறையின் இரகசியப் பிரிவின் தலைமை பொறுப்பும் இம்லரிடம் அளிக்கப்பட்டது. 1936ஆம் ஆண்டில் செர்மானிய காவல்துறையும் இம்லரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. இட்லர் ஒருவருக்கு மட்டுமே எஸ்.எஸ். படையினர் பதில்சொல்ல கடமைப்பட்டவர்கள். வேறு யாருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர். எனவே நாடெங்கிலும் எஸ்.எஸ். படையினரின் அட்டூழியங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. யூதர்களின் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் போன்றவை தாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கதி என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாது.

1939ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை அதிகாரிகளாக எஸ்.எஸ். படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் செர்மன் படையினர் கைப்பற்றிய பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களை எஸ்.எஸ். படையினர் வேட்டையாடினர். ஏறத்தாழ 2கோடிக்கு மேற்பட்ட யூதர்கள், சிலேவியர்கள், ரோமானியர்கள் மற்றும் இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டு உலகமே அதிர்ந்தது.

இட்லரின் எஸ்.எஸ். படை போன்ற வெறியர் படையாக அக்னி வீரர்கள் படையை உருவாக்க திட்டமிடப்படுகிறதா? என்ற கேள்வி மக்களின் உள்ளங்களைக் குடைகிறது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.