சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி ஆட்சி அமைத்தது.
ஆனால் சில மாதங்களிலேயே அக்கட்சியிலிருந்து பலரை விலக வைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆட்சியை இம்மாநிலங்களில் பா.ச.க. அமைத்துவிட்டது. இப்போது மகாராட்டிர மாநிலத்திலும் அமைந்திருந்த சிவசேனையின் கூட்டாட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலக வைத்து ஆட்சியைக் கவிழ்த்து பா.ச.க.வின் கூட்டணியின் ஆட்சி அமைக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய சனநாயகக் கேலிக்கூத்துகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லாமல் பணம், பதவி ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சி மாறுபவர்கள் நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சனநாயகக் கோட்பாடுகள் சந்திச் சிரிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் யாருக்கும் வெட்கமில்லை.
மக்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள். சட்டமன்றத்தில் எந்த கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ, அந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது. வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி அல்லது கட்சிகள் எதிர்க்கட்சிகளாக சனநாயகக் கடமைகளை ஆற்றவேண்டும். இதுதான் சனநாயகத்தின் அடிப்படை கோட்பாடாகும். ஆனால், ஆளுங்கட்சியிலிருந்து பதவிக்காகவோ, பணத்திற்காகவோ கட்சி மாறுபவர்கள் அவர்களுக்கு வாக்களித்த மக்களை ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை. மக்கள் அளித்தத் தீர்ப்புக்கு மாறாக, தாங்கள் செயல்படுவதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. பதவி வெறியும், பணத்தின் மீது கொண்ட பற்றும் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன.
இத்தகைய சனநாயகத்திற்கு எதிரான போக்குகள் பெருகி வந்தபோது 1985ஆம் ஆண்டில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகக் கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் 10ஆவது தொகுப்பின் கீழ் இயற்றப்பட்ட இச்சட்டத்தின்படி ஒருவர் கட்சி மாறினால் சட்டமன்ற பேரவைத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்ற விதி சேர்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்சியின் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கூட்டாக விலகினாலோ அல்லது வேறு கட்சிக்கு மாறினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்ற ஒரு விதியும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த விதி கட்சித் தாவுபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இப்படி பல ஓட்டைகள் இந்தச் சட்டத்தில் இருப்பதால்தான் கட்சியை தாவுதல் அதிகமாகிக் கொண்டே போய்கிறது.
இத்தகைய போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். ஒரு கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெறுகிற உறுப்பினர் எக்காரணத்தைக் காட்டி அக்கட்சியிலிருந்து விலகினாலும் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பது சட்டமாக்கப்படவேண்டும். இல்லையேல் இத்தகைய வேண்டாதப் போக்கை ஒழிக்க முடியாது; சனநாயகமும் நிலைக்காது. |