தமிழர்களுக்கு எதிராக நீங்கள் ஏவிய வன்முறை- உங்களுக்கு எதிராகவே திரும்பும்- தமிழீழத் தேசியத் தலைவரின் தொலைநோக்குச் சிந்தனை வென்றது- (தமிழீழத்தில் இருந்து காந்தரூபன்) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022 10:51

தமிழர்களின் வீர வரலாறு செறிந்த, செந்நீராலும் கண்ணீராலும் தாய் மண் நனைந்தது குறித்த சிவப்பு மே மாதத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்களுக்காக போராடி வீர காவியமானவர்களையும் தமிழ் இனத்தின் வாழ்விற்காக உயிர்கொடை செய்த இலட்சக்கணக்கான பொது மக்களையும் நினைந்துருகி வணங்கும் மே-18 நாளை தமிழர்கள் ஒருபோதும் மறக்க இயலாது.

2009இல் மனிதாபிமானமற்ற ரீதியாக சிங்கள அரசாங்கம் நடத்திய இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கேட்க யாரும் இன்றி, சாட்சிகள் ஏதுமின்றி அன்று தாங்கள் நினைத்ததை செய்து முடித்தது சிங்கள தேசம். ஆனால், அதற்கான பாவத்தை இன்று தீர்த்திருக்கின்றது. சிங்கள தேசம் மிகப்பெரும் அழிவைச் சந்தித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் செழித்தோங்கியிருந்த காலப் பகுதியில் ஒருமுறை தமிழீழ தேசியத் தலைவர் தமது மாவீரர் தின உரையின் போது, ‘இன்று தமிழ் மக்களுக்கு எதிராக நீங்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற வன்முறைகள் என்றோ ஒருநாள் உங்களை நோக்கித் திரும்பும்’ என்றார். எத்தகைய தொலை நோக்கு மிக்க தலைவனை தமிழினம் பெற்றிருக்கின்றது. தலைவன் கூறியதைப் போன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டு 13 வருடங்கள் நிறைவில் சிங்கள தேசம் பாரிய இன வன்முறைகளைச் சந்தித்திருக்கின்றது. சொந்த இனத்தாலேயே அந்த வன்முறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பாணியில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தை ஆரம்பித்து நடத்தியது சிங்கள தேசம். மகிந்த இராசபக்ச குடியரசுத் தலைவராகவும், அவரது சகோதரர் கோத்தபாய இராசபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இன்னொரு சகோதரர் பசில் இராசபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் சமல் இராசபக்ச என்ற அடுத்த சகோதரர் ஆட்சியில் முக்கிய பங்கிலும் இராசபக்சவின் புதல்வர்கள் முப்படைகளிலும் பணியாற்ற குடும்ப ஆட்சி மூலமாக தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டனர்.

பன்னாடுகளில் பெறப்பட்டதும், யுத்தத்தில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதுமான இரசாயன ஆயுதங்கள் வன்னியில் தமிழ் மக்களின் தலைகளின் மீது கொட்டப்பட்டன. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் சென்று ஒதுங்கிய போது அந்த வளையங்களை நோக்கி எறிகணைகளை ஏவியும் விமானத்தில் இருந்து குண்டுமழை பொழிந்தும் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

உணவின்றி, மருந்தின்றி, மாற்றுடைகள் இன்றி ஏன் குடிப்பதற்கு தண்ணீர்கூட இன்றி தமிழ் மக்கள் தவியாய்த் தவித்தனர். இதன்போது சிங்கள தேசம் வெற்றிக் கொண்டாட்டத்தில் மிதந்தது. பாற்சோறும் பட்டாசு வெடியுமாக அதிர்ந்தது தென்னிலங்கை. தமிழ் மக்கள் ஏளனப்படுத்தப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டதால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக்கேட்க அப்போது யாரும் இருந்திருக்கவில்லை.

தட்டிக் கேட்க நாதியற்ற தமிழர்களை சிங்கள தேசம் இனப்படுகொலை செய்தது. வன்னியில் ஆறு இலட்சத்து ஐம்பது ஆயிரம் வரையான தமிழ் மக்கள் வசித்து வந்த நிலையில் வெறும் மூன்று இலட்சம் மக்களே வசிக்கின்றனர் என சிங்கள தேசம் உலகத்திற்கு கணக்குக் காட்டிக்கொண்டிருந்தது. இறுதியில் ஐந்து இலட்சம் வரையான மக்கள் சிங்களப் படைகளால் வவுனியாவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஓர் இலட்சம் வரையான தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமற் போயினர்.

கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குமாறு தமிழினம் உலகின் பல மூலைகளுக்கும் சென்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தது. போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தமிழ் மக்கள் அலைந்தனர். அங்கு எதுவும் நடக்கவில்லை. மகிந்த அரசு தப்பித்துக்கொண்டதாக மார்தட்டிக் கொண்டது. யுத்த வெற்றியைக் காட்டி சிங்கள மக்களை ஏமாற்றிக்கொண்ட மகிந்த இராசபக்ச மீண்டும் குடியரசுத் தலைவராக வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து தமது தம்பியாகிய கோத்தபாய இராசபக்சவை குடியரசுத் தலைவராக்கினார்.

வெற்றி மமதையில் திளைத்த இராசபக்ச குடும்பத்தை கர்ம வினை துரத்தத் தொடங்கியது. கொரோனாவை அடுத்து வந்த காலத்தில் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராசபக்ச, தலைமையமைச்சர் மகிந்த இராசபக்ச, நிதி அமைச்சர் பசில் இராசபக்ச ஆகியோரின் திட்டமிடல் இல்லாத செயற்பாடுகளால் சிறீலங்கா பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. மக்களுக்கு எரிபொருளை வழங்க முடியவில்லை. சமையல் எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. குழந்தைகளுக்கு பால்மா இல்லை. இதர அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. பொருட்களின் விலை உயர்வு என்பவற்றால் திக்குமுக்காடியது சிங்கள தேசம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த யுத்த காலத்தில் சிங்கள அரசாங்கங்களால் தமிழர் தாயகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக இவர்கள் தமது வாழ்வைப் புடம்போட்டுக்கொண்டனர். கையில் கிடைப்பவற்றைக் கொண்டு வாழப்பழகிக் கொண்டவர்கள். மின்சாரமோ, எரிபொருளோ இல்லாமல் தமிழர்களால் வாழ முடியும். எரிவாயு இல்லாமல் விறகில் வருடக் கணக்காக சமைக்க முடியும். இதனால் சிங்கள தேசத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பெரிதளவாக தமிழர் பிரதேசத்தை பாதிக்கவில்லை.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். குடும்ப ஆட்சிக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர். கோத்தபாயவும் மகிந்தவும் பசிலும் உடனடியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர். இப்போராட்டம் பின்னர் தொழிற்சங்கப் போராட்டமாக பரிணமித்தது. சிங்கள தேசத்தில் உள்ள அத்தனை தொழிற் சங்கங்களும் இணைந்து பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால் மகிந்த இராசபக்சவோ, கோத்தபாயவோ போராட்டங்களை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. தாம் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என வீறாப்புடன் இருந்தனர். இறுதியில் மகிந்த இராசபக்ச தமது பதவியை விலகல் செய்துவிட்டு போராட்டக்காரர்களை நோக்கி தமது குண்டர்களை ஏவிவிட்டார். அது தமக்கு சாதகமாக மாறும் என அவர் கனவு கண்டார்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மகிந்த இராசபக்சவின் குண்டர்களை தவிடுபொடியாக்கினர். அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர்களைக் கட்டி வைத்து தாக்கினர். வாவிக்குள் தூக்கி வீசினர். ஆடைகளைக் கிழித்து முழு நிர்வாணமாக வீதிகளில் அலைய வைத்தனர். குண்டர்கள் சென்ற அனைத்து வாகனங்களையும் தீக்கிரையாக்கினர். இறுதியில் கோத்தபாய இராசபக்ச, மகிந்த இராசபக்ச, பசில் இராசபக்ச என இராசபக்ச குடும்பத்தினரையும் அவர்களுக்கு முண்டு கொடுத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேடி அவர்களின் வீடுகளுக்குச் சென்றனர். இதனால் இராசபக்ச குடும்பம் சொந்த மக்களுக்கு பயந்து சொந்த இடங்களை விட்டுத் தப்பியோடியது.

தென்னிலங்கை முழவதும் இராசபக்ச குடும்பத்தினரைத் தேடி அலைந்த போராட்டக்காரர்கள் இறுதியில் வன்முறைகளை ஏவிவிட்டனர். மகிந்த இராசபக்சவின் குருநாகல், அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் அமைந்திருந்த இரு வீடுகளும் அவர்களின் வாகனங்கள் சொத்துக்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. மகிந்த இராசபக்சவின் பிள்ளைகளின் சொத்துக்களும், வீடுகள், வாகனங்களும் எரித்து அழிக்கப்பட்டன. பசில் இராசபக்சவின் வீடுகளும் தீக்கிரையானது. இதுபோன்று அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த குடும்பத்தின் ஆதரவாளர்கள் என அத்தனை பேரின் வீடுகளும் தேடித் தேடி எரித்து அழிக்கப்பட்டன.

சிங்களப் படையினரும் சிங்களக் காவல்துறையினரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க இந்த வன்முறைகள் அரங்கேறின. அதுவும், தமிழ் மக்கள் வன்னியில், எத்தகைய வேதனைகளை அனுபவித்தார்களோ அத்தகைய வேதனையை தமிழ் மக்களின் கண்ணுக்கு முன்னாலேயே சிங்கள தேசமும் தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்களும் அனுபவித்தனர். 12 ஆண்டுகள் கழித்து, அதே மே மாதத்தில், அதே இனப்படுகொலை நாட்களில் சிங்கள தேசம் இத்தகைய வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது.

தமிழ் மக்களின் ஆத்மாக்களின் வலி சிங்கள மக்களையும் சிங்கள ஆட்சியாளர்களையும் தமிழ் மக்களின் கண்ணுக்கு முன்னால் வருத்தியது. உணவின்றியும் பால்மா இன்றியும் அழுது அரற்றி இறுதியில் இறந்துபோன தமிழ்க் குழந்தைகளின் ஆத்மா சிங்கள ஆட்சியாளர்களை வதைத்தது.

தேசியத் தலைவர் கூறியதைப் போன்று, இன்று தமிழ் மக்களுக்கு எதிராக நீங்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற வன்முறைகள் என்றோ ஒருநாள் உங்களை நோக்கித் திரும்பும் என்ற தொலைநோக்குச் சிந்தனை மெய்ப்பிக்கப்பட்டது. சிங்கள தேசம் எங்கும் போர்க்களமாகவே காட்சி அளித்தது. இறுதியில் இராசபக்ச குடும்பம் தமிழர் தாயகத்தின் தலைநகர் திருகோணமலைக்குச் சென்று அங்கு பாதுகாப்பாக தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என தமிழ் மக்கள் தங்கள் மனங்களைத் தேற்றிக் கொள்ளும் அளவிற்கு நிலையை சென்றிருந்தது.

இவ்வாறான நிலையில்தான் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை தமிழ் மக்கள் கடைப்பிடித்தனர். தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது உறவுகளை நினைவேந்தல் செலுத்தி வருகின்றனர். நல்லூரில், தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், இனப்படுகொலைக்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இம்முறை தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடித்தனர்.

தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி, பன்னாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் இழப்புகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை, தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி கிடைக்கும் வரை தமிழர் மக்களின் போராட்டங்கள் ஓயக்கூடாது. தமிழர்களுக்காக மடிந்த அத்தனை உறவுகளையும் நினைவுகூரவேண்டும். அவர்களை நினைவுகூரும் உரிமையை யாரும் தடுக்க முடியாது.

-நன்றி – ஈழமுரசு - 14-06-2022

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.