தமிழர் ஒன்றுபடுவது எப்போது? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2022 12:47

பழந்தமிழகம் மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. மூவேந்தர்களும் ஒன்றுபட்டு நின்று தமிழ்ப் பகைவர்களை எதிர்த்துப் போராடியதாக வரலாறு இல்லை.

 

மாறாக, தமிழர் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் இம்மூவரும் தம்முள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் போராடிய வரலாற்றைதான் கூறுகின்றன.

இம்மூன்று நாடுகளிலும் பேசப்பட்ட மொழி தமிழே. மூன்று நாட்டினரையும் தமிழ்ப் பண்பாடு இணைத்தது. ஆனாலும், இந்நாடுகள் பிரிந்து கிடந்தன. இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகார காப்பியத்தை இயற்றினார். இக்காப்பியத்தில் உள்ள மூன்று காண்டங்களுக்கும் இம்மூன்று நாடுகளின் தலைநகரங்களான புகார், மதுரை, வஞ்சி என்ற பெயர்களைச் சூட்டினார்.

சோழ நாட்டில் பிறந்த கண்ணகி தனது கணவனுடன் பாண்டிய நாட்டுத் தலைநகரமான மதுரைக்குச் சென்று அங்கு அவனை இழந்து சேர நாடு சென்று மறைந்ததாக காப்பியத்தை அமைக்கிறார். மூன்று நாடுகளைப் பற்றிய சிறப்பும் இக்காப்பியத்தில் சொல்லப்படுகிறது. இளங்கோவடிகள் காலத்திலேயே இம்மூன்று நாடுகளிலும் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் போன்ற சமயங்கள் பரவியிருந்தன. இத்தனை சமயங்களுக்குரிய தெய்வங்களும், அவற்றை வழிபடுவதற்கான கோயில்களும் நிலவின. ஆனாலும் நாட்டுச் சார்பு, சமயச் சார்பு இல்லாமல் அனைத்துத் தமிழர்களும் வழிபடுவதற்குரிய தமிழ்த் தேசியத் தெய்வமாக கண்ணகியை இளங்கோவடிகள் உருவாக்கினார்.

வடநாட்டு மன்னர்களான கனகவிசயர்கள் தமிழர்களை இகழ்ந்துரைத்தார்கள் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே கொதித்தெழுந்து பெரும் படையுடன் பெயர்ந்து சென்று கனகவிசயரைக் களத்தில் புறங்காணச் செய்ததோடு, இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டி கனகவிசயர் தலையில் ஏற்றி சேர நாடு கொண்டுவந்து பத்தினி தெய்வமாம் கண்ணகிக்கு கோவில் எழுப்பினான் சேரன் செங்குட்டுவன். இக்கோயிலின் நாண் மங்கலம் நடைபெற்ற போது அதில் பங்கெடுக்க இலங்கையிலிருந்து கயவாகு மன்னனும் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிற மன்னர்களும் வந்து கலந்து கொண்டனர் என சிலம்பு செப்புகிறது.

அன்று தொடங்கிய கண்ணகி வழிபாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மட்டுமல்ல, கடல் கடந்து இலங்கையிலும் பரவியது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களரும் “பத்தினி தெய்யோ” என்ற பெயரில் இன்றும் கண்ணகியை வழிபடுகின்றனர். கேரளத்தில் கண்ணகி வழிபாடு பகவதி வழிபாடாகவும், தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடாகவும் திரிந்து இன்றளவும் தொடர்கிறது. மற்றும் ஆந்திரம், வங்கம் போன்ற பல மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இந்த வழிபாடு தொடர்கிறது.

இளங்கோவடிகள் ஊட்டிய தமிழ்த் தேசிய எழுச்சி அவருக்குப் பின்னரும் பக்தி இயக்கக் காலத்தில் தொடர்ந்தது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்களின் வழிபடு இறைவர்களை இசைத் தமிழால் பாடிப் பரவினர். அவர்களின் தேவாரப் பாடல்களிலும், பாசுரங்களிலும் தமிழ்! தமிழ்!! என்ற உணர்வுப் பொங்கியது. இவ்வாறு பரவிய தமிழ்த் தேசிய உணர்வின் விளைவாக பிற்காலச் சோழப் பேரரசு எழுந்தது.

இந்தியத் துணைக் கண்டத்தில் அசோகன் முதல் அக்பர் வரை பல பேரரசர்கள் தோன்றினர். ஆனால் இவர்களில் யாருமே கடல்கடந்து தங்களுடைய பேரரசை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் முதன்முதலாக வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் பூண்ட இராசேந்திரச் சோழப் பெருமன்னன் கங்கை முதல் இலங்கை வரையிலும் கடல்கடந்து கடாரம் வரையிலும் தனது பேரரசை விரிவாக்கினான். இவனுக்கு முன்னாலும் பின்னாலும் இத்தகைய பெரும் பேரரசை யாரும் அமைக்கவில்லை.

அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் தெற்கு நோக்கிப் படையெடுத்தபோது கலிங்க நாடு (ஒரியா) கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அந்தப் போரில் பெருக்கெடுத்து ஓடிய இரத்த வெள்ளத்தையும் களத்தில் சாய்ந்து வீழ்ந்த வீரர்களின் உடல்களையும் பார்த்த அசோகன் மனம் மாறி பௌத்தத் தர்மத்தை ஏற்றான் என்பது வரலாறாகும். அசோக மன்னனால் வெல்ல முடியாத கலிங்கத்தை குலோத்துங்கச் சோழனின் தளபதியான கருணாகரத் தொண்டமான் வென்றடக்கினான். அவனது வீரத்தின் பெருமையை “கலிங்கத்துப் பரணி” என்ற இலக்கியமாகப் படைத்தார் சோழரின் அவைக்களப் புலவரான செயங்கொண்டார்.

வடநாட்டின் பேரரசனான ஹர்ஷன் தென்னாட்டையும் வெல்லக் கருதி பெரும் படையுடன் வந்தபோது நர்மதையாற்றங்கரையில் எதிர்கொண்டுப் பின்வாங்கச் செய்தான் சளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி. ஹர்ஷ வர்த்தனரையே தோற்கடித்த இரண்டாம் புலிகேசியை அவனுடைய தலைநகரான வாதாபியிலேயே வென்றடக்கினான் பல்லவ தளபதியான தமிழ்ப் பரஞ்சோதி.

தென்னாட்டை வெல்ல முயன்ற வடவரின் கனவு ஒருபோதும் நனவாக மாறவில்லை. ஆனால் சோழர் – பாண்டியர் பகை ஏறத்தாழ 200 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து இரு நாடுகளிலும் வலிமை குன்றச் செய்தது. கடல்கடந்து சோழர்கள் அமைத்தப் பேரரசு சரிந்தது. பாண்டியப் பேரரசும் உட்பகையால் வீழ்ந்தது. இதன் விளைவாக வடக்கேயிருந்து தில்லி சுல்தானின் தளபதி பெரும் படையுடன் தமிழகம் வந்து சூறையாடிச் சென்றான். தொடர்ந்து நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என பலரும் படையெடுத்து வந்து தமிழகத்தைச் சீரழித்தனர்.

தமிழ் மன்னர்களிடையே ஒற்றுமையின்மையால் நாடு அந்நியர் வசப்பட்டது. இன்று சமயத்தாலும், சாதியாலும் பிளவுப்பட்ட தமிழர்கள் அரசியல் கட்சிகளால் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி அகன்றாலும் ஆங்கிலம் இன்னும் அரசோச்சுகிறது. தமிழன்னை அரியணை ஏற முடியாமல் தவிக்கிறாள். தமிழ் ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக தமிழ்நாட்டில் ஆக முடியவில்லை. தமிழர்களும் அவ்வாறு செய்ய முடியாமல் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர்.

காவிரி, பெரியாறு அணைப் பிரச்சனை, பாலாற்றுப் பிரச்சனை போன்றவை எந்தக் கட்சிப் பிரச்சனைகளுமல்ல. அனைத்துத் தமிழர்களின் தேசியப் பிரச்சனைகளாகும். இப்பிரச்சனைகளில்கூட கட்சி எல்லைக்கோடுகளைத் தாண்டி நம்மால் ஒன்றுபட முடியாமல் கிடக்கிறோம். ஆனால், கர்நாடகத்தில் காங்கிரசு, சனதா, பா.ச.க.. போன்ற கட்சிகள் ஆண்ட காலங்களில் அவர்களுக்குள் மிகக் கடுமையான மோதல்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனாலும், காவிரிப் பிரச்சனையில் அவ்வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கிறார்கள். வெள்ளக் காலங்களில் பெருகி ஓடி தமிழகத்திற்குள் வரும் காவிரி நீரைத் தடுக்க நமது எல்லையில் மேகதாட்டு அணைக் கட்டும் பிரச்சனையிலும் அவர்கள் ஒரே குரலில் பேசுகிறார்கள்.

கேரளத்திலும் எதிரும்புதிருமாக இருக்கக் கூடிய காங்கிரசுக் கூட்டணியும், அதைக் கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுக் கூட்டணியும் ஒன்றுடன் ஒன்று அனைத்துப் பிரச்சனைகளிலும் வேறுபட்டு நின்று மோதிக்கொள்கிறார்கள். இரு கூட்டணிகளைச் சேர்ந்தவர்களில் மோதலில் கொலைகளும் நடக்கின்றன. அவர்களுக்குள் பகைமை உச்சக்கட்டத்திலும் இருந்தபோதிலும் பெரியாறு அணை பிரச்சனையில் அவர்கள் நமக்குத் தண்ணீர் தர பிடிவாதமாக மறுப்பதில் இணைந்து நிற்கிறார்கள். கேரளத்தில் மேற்குத் திசையில் ஓடும் நதிகளில் ஏறத்தாழ 2000த்திற்கும் மேற்பட்ட டி.எம்.சி. நீர் வீணாக அரபிக் கடலில் போய் விழுகிறது. கேரள மாநிலத்தில் விவசாயத்திற்கு அந்த நீரைப் பயன்படுத்த நிலம் இல்லை. வீணாகக் கடலில் கலக்கும் நீரில் பத்தில் ஒரு பங்கான 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் தர அவர்களுக்கு மனமில்லை. ஆனால் கேரள மக்களுக்குத் தேவையான அரிசி மற்றும் தானியங்கள் காய்கறி, கனிகள், ஆடு, மாடு, கோழி போன்றவை தமிழ்நாட்டிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. ஆனாலும் நமக்குத் தண்ணீர் தர மறுப்பதில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதை ஏற்றுச் செயல்படவும் மறுக்கின்றனர். நமது ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய அரசு நியாயம் வழங்க மறுக்கிறது.

தேசிய ஒருமைப்பாடு என வாய்கிழியக் கூப்பாடு போடும் காங்கிரசு, கம்யூனிஸ்டு, பா.ச.க. கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் கர்நாடகத்திலும், கேரளத்திலும் உள்ள தங்கள் கட்சிகளின் கிளைகள் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பதைக் கண்டிக்கவோ, திருத்தவோ இதுவரை முன்வரவில்லை. வாய்மூடி மௌனம் சாதிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள இக்கட்சிகளின் கிளைகள் தங்கள் தலைமையின் செயலற்றத் தன்மையை கண்டிக்க முன்வருவதில்லை.

ஈழத் தமிழர் பிரச்சனையில் 2009ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்கள் பதறப் பதற சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டு கட்சிகள் ஒன்றுபட்டுச் செயலாற்றத் தவறின. தமிழர் வரலாற்றில் ஈழத் தமிழர் படுகொலை போல ஓர் பேரவலம் இதுவரை நடைபெற்றதே இல்லை. தமிழ்நாட்டில் 8கோடிக்கும் மேற்பட்ட தமிழர் வாழ்கிறோம். நாம் பொங்கியெழுந்தால் என்ன ஆகும் என்ற அச்சம் ஒரு கோடி சிங்களவருக்கு இல்லை. இருபது கல் தொலைவில் நமது குருதி உறவுகளான மக்கள், குழந்தைகள் உட்பட கொன்றுக் குவிக்கப்பட்ட நேரத்தில்கூட கட்சிகளாகப் பிரிந்து கிடந்தோம். நாம் ஒன்றுபட்டுப் போராடியிருந்தோமானால், முள்ளிவாய்க்காலில் கொலையுண்ட நமது மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும். நமது ஒற்றுமை குறைவினால் ஈழத் தமிழர்கள் பேரழிவுக்கு ஆளானார்கள்.

மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கணிசமாகவும் மற்றும் பல நாடுகளிலும் வாழுகிற தமிழர்கள் நடுவில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் குறித்த அவநம்பிக்கை ஆழமாகப் பதிந்துள்ளது. மிக அருகில் வாழும் ஈழத் தமிழர்களையே காக்க முன்வராத தமிழ்நாட்டுத் தமிழர்கள், பல ஆயிரம் மைல்களுக்கப்பால் வாழுகிற நம்மையா காக்கப் போகிறார்கள்? எனக் கருதுகிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைப்பது தவறு என்றுகூற முடியாது. கட்சி ரீதியாகப் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டு நலன்களை மட்டும் காவு கொடுக்கவில்லை. மாறாக, நம்மையே நம்பியிருக்கும் உலகத் தமிழர்களையும் நம்பிக்கை இழக்க வைத்திருக்றார்கள்.

“விதியே விதியே தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்கு உரையாயோ”

என மனம் நொந்து பாடினான் பாரதி. இன்னும் இந்த அவல நிலை மாறவில்லை. சமயத்தாலும், சாதியாலும் பிளவுப்பட்டத் தமிழன், கட்சிகளாலும் ஆழமாகப் பிளவுப்பட்டுக் கிடக்கிறான். தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதிக்கும் பிரச்சனைகளில்கூட கட்சிக் கடந்து சிந்திக்கவும், செயல்படவும் பிடிவாதமாக மறுக்கிறான். இதன் விளைவு எதிர்காலத் தலைமுறையை மாற்றாருக்கு அடிமையாக்கும் என்பதை அனைத்துத் தமிழரும் உணரவேண்டும்.

(20.07.22 சென்னையில் நடைபெற்ற தமிழர் ஒற்றுமை மாநாட்டில் பழ. நெடுமாறன் ஆற்றிய ஊரை)

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.