தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம் என்ற சிற்றூரில் பிறந்து இசைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர் இளையராசா என்றால் மிகையாகாது. இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 7ஆயிரம் பாடல்களுக்கு இசையின் மூலம் புது மெருகூட்டியவர் இவரே. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகள் பலவற்றிலும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமை இவருக்கு உண்டு.
இலண்டனில் இராயல் பில்ஹார்மோனிக் இசைக் குழுவில் ஒரு சிம்பொனிக்கு இசை அமைத்ததின் மூலம் “மேஸ்ட்ரோ“ என பாராட்டப் பெற்றார்.
இளையராசாவுக்கு இதுவரை 5 தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டில் நூறாண்டு இந்திய திரைப்படத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட இசை இயக்குநராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்தியப் பிரதேச அரசின் லதா மங்கேஸ்கர் விருது, கேரள அரசின் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன.
இசைத்துறையில் இவர் புரிந்த சாதனையைப் பாராட்டும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு முனைவர் பட்டம் வழங்கின.
இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கியது. 2022 சூலை 6ஆம் நாள் இவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய குடியரசுத் தலைவர் நியமித்தார்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருமைப்படத் தக்க வகையில் இசைத்துறையில் அரிய சாதனைகள் பல புரிந்து அரசுகளாலும் மற்றும் அமைப்புகளாலும் பாராட்டப் பட்ட இளையராசா அவர்களை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமித்த குடியரசுத் தலைவருக்கு நன்றியும், இளையராசா அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறோம். |