இந்து வெறியர்கள் 11பேர் 14 ஆண்டில் விடுதலை - 6 தமிழர்கள் 32 ஆண்டுகளாக சிறையில் தவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 செப்டம்பர் 2022 14:19

2002ஆம் ஆண்டில் குசராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக இந்து வெறியர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் போது சிறு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முசுலீம்கள் பதறப்பதறப் படுகொலை செய்யப்பட்டனர்.

முசுலீம்களுக்குச் சொந்தமான 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட முசுலீம்கள் அகதிகளாக வெளியேறினர். இக்கலவரத்தில் அகமதாபாத் அருகில் உள்ள ரன்தீக்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பில்கிசு பானு என்னும் 21வயது இளம்பெண் 11 வெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானார். அப்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மூன்று வயது குழந்தை உள்பட அவர் குடும்பத்தினரைச் சேர்ந்த 14பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளையே இச்செய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. உலகெங்கும் எழுந்த கண்டனத்தின் விளைவாக சிலர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. பில்கிசு பானு வழக்கில் 11பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்பதால் உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கை மும்பைக்கு மாற்றியது. 2008ஆம் ஆண்டு குற்றவாளிகள் 11பேருக்கும் மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

14 ஆண்டுகள் மட்டுமே சிறையிலிருந்த இக்கொலைகாரர்கள் இவ்வாண்டு ஆகசுடு 15 சுதந்திர நாளில் குசராத் பா.ச.க. அரசு விடுதலை செய்துவிட்டது. இவர்களை விடுதலை செய்யும் பிரச்சனையில் பா.ச.க. அரசு எவ்வளவு வஞ்சகமாகவும், விரைவாகவும் செயல்பட்டிருக்கிறது என்பதை கீழே தரப்பட்ட விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

1.13.05.22 - இந்த 11 பேரின் விடுதலைக்கான மனுவில் உச்சநீதிமன்றம் “குசராத் சிறைத்துறையின் தலைமை அதிகாரி சிறை ஆலோசனைக் குழுவின் கருத்தை அறிந்து முடிவெடுக்கலாம்” எனத் தீர்ப்பளித்தது.

2. 04.06.22 - கோத்ரா சிறை அதிகாரி அகமதாபாத் சிறையின் அதிகாரிக்கு இந்த 11பேர் விடுதலை குறித்த அறிக்கையை அனுப்பினார்.

3.09.06.22 - அகமதாபாத் சிறை அதிகாரி இந்த அறிக்கையை குசராத் உள்துறைக்கு அனுப்பிவைத்தார். சிறை ஆலோசனைக்குழுவிற்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டது. இக்குழுவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், பா.ச.க.வைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோத்ரா சிறையின் அதிகாரி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட நீதிபதி ஆகியோர் உறுப்பினர்கள். அதிகாரிகளையும், பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்ட இந்த ஆலோசனைக் குழு 11பேரையும் விடுதலை செய்யவேண்டும் என மாநில உள்துறைக்கு அறிக்கை அனுப்பியது.

4.12.07.22-11பேரையும் விடுதலை செய்வதற்கான ஆணையை குசராத் அரசு பிறப்பித்தது.

5.15.08.22 – 11பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

குசராத் அரசு எவ்வளவு விரைவாக செயல்பட்டிருக்கிறது என்பதை மேலே கூறப்பட்டுள்ள செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால், 2018ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு பாலியல் வன்கொடுமை, மிகக்கொடூரமான படுகொலைகள் செய்பவர்கள் உட்பட யாரையும் தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்யக் கூடாது என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியுள்ளது. இந்த உண்மையை அடியோடு மறைத்து இந்த 11பேர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அறுவர் விடுதலை

இராசீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற ஆறு பேர் 32 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தும், அதை மாதக் கணக்கில் ஆளுநர் கிடப்பில் போட்டு, பின்னர் இப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இராசீவ் படுகொலையில் இந்த 6பேருக்கும் நேரிடையான எந்தத் தொடர்பும் இல்லை என்பது உச்சநீதிமன்றத்தில் நிலைநிறுத்தப்பட்ட பிறகும் நாடெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் மக்களும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தும்கூட, செவிசாய்க்க மறுக்கும் பா.ச.க. அரசு தனது கட்சியை சேர்ந்தவர்கள் என்பதினால் குசராத் மாநில குற்றவாளிகளை உடனடியாக விடுதலை செய்துள்ளது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.