மிக நவீனமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை அம்பாதோட்டை துறைமுகத்திற்கு வரவிருப்பதற்கு இந்திய அரசு மிகக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது.
ஆனாலும் ஆகசுடு 16ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் திட்டமிட்டபடி இலங்கை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
அதே காலகட்டத்தில் இதுபோன்ற உளவுக் கப்பலை சீனாவிடமிருந்து பெற்ற பாகித்தான் அந்தக் கப்பலை இலங்கையில் உள்ள கொழும்புத் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இரு உளவுக் கப்பல்களின் மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள படைத் தளங்கள், விமானத் தளங்கள், ஏவுகணைத் தளங்கள் உள்பட இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த அத்தனையும் குறித்து உளவறிய முடியும். இந்தியாவின் பாதுகாப்பிற்கே பேரபாயமாக விளங்கும் இந்த இரு கப்பல்களையும் தனது நாட்டுத் துறைமுகங்களுக்கு வர அனுமதித்ததின் மூலம் இலங்கை அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து அனைத்துவிதமான உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகச் செயல்பட ஒருபோதும் தவறியதில்லை. 1972ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது இந்திய வான்வெளியில் பாகித்தான் விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் பாகித்தான் விமானங்கள் அரபிக்கடலுக்கு மேலாக பறந்துவந்து கொழும்பில் இறங்கி பின்னர் வங்காள தேசம் சென்று இந்தியப் படைகளின் மீது குண்டுவீசித் தாக்கவும் அனுமதித்தது.
சிங்கள இராணுவ வீரர்கள் இந்தியப் படை முகாம்களில் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு இந்தியா இன்னமும் அனுமதித்து வருகிறது. இலங்கைக்கு அருகே இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது. சிங்கள இராணுவ வீரர்களுக்கு இந்தியா அளிக்கும் பயிற்சி என்பது இலங்கையில் வாழும் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கவே என்பது தெரிந்தும் இந்தியா இதை தொடர்ந்து செய்து வருகிறது..
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பல்களை தனது நாட்டுத் துறைமுகங்களில் அனுமதித்துள்ள இலங்கைக்கு ஆகசுடு 15ஆம் நாளில் கடல் சார் கண்காணிப்பை வலுப்படுத்தும் விமானத்தை இலங்கை கடற்படைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதைவிட பேதமை வேறு இருக்க முடியாது. |